மணிசார் கொஞ்சம் ஏமாற்றி விட்டதால் கொஞ்ச நாளைக்கு தியேட்டர்கள் இருக்கும் வீதி வழிகூடப் போகாமல் சுற்றித்தான் போய்வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு களவாணி ஹிட் என்று நண்பர்களிடமிருந்து தகவல். போகலாம் என்றால் போகிற மாதிரி பக்கத்து தியேட்டர் ஒன்றிலும் அது திரையிடப்படவில்லை. அப்பறம் பார்த்துக்கலாம் என்று இருந்து விட்டேன்.
அதற்கடுத்த வாரம் ஆனந்தபுரத்துவீடும், மதராசப்பட்டினமும் ரிலீஸ். ஷங்கர் தயாரிப்பென்றால் கண்ணை மூடிக்கொண்டு போய், கண்ணைத் திறந்து கொண்டு பார்க்கலாமே என்று நினைத்தேன். ஆனாலும் மதராசபட்டிணம் மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. காரணம் ஒன்று: அதன் பீரியட் ஃபிலிம் என்ற அட்ராக்ஷன். இரண்டாவது: விஜய். அவரது கிரீடம் பார்க்கவில்லை. ஆனாலும் அவரது இரண்டாம் படமான பொய் சொல்லப்போறோம் அவ்வளவு பிடித்திருந்தது. மூன்றாவது காரணம்: அதன் விளம்பரங்கள். ரொம்பவும் எளிதான தீம். ஆனால் எஃபெக்டீக்வாக செய்திருந்தார்கள்.
முதலில் ஆனந்தபுரத்து வீடு என்று முடிவாகி ரிலீஸான வெள்ளி போக நினைத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக வயிற்றுவலி அந்த எண்ணத்தில் மண்ணைப் போட்டதால் மகாலட்சுமி நகர் வீட்டுக்குப் போனேன். (அட.. எங்க வீட்டுக்குத்தாங்க..) சமீபகாலங்களில் – அதாவது ஓரிரு வருடங்களில்- வெள்ளி அல்லது சனிக்கிழமை மிஸ் ஆனால் பிறகு அந்தப் படத்துக்கே போவதில்லை. ஆக இவை இரண்டையும் களவாணி லிஸ்டில் விடுபட்டவைகளில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தமிழக ஏமி ரசிகர் மன்றத் தலைவர் சங்கரநாராயண் அழைத்து ‘படத்தை மிஸ் பண்ணாதீங்க தல’ என்று செல்லமாக மிரட்டி படத்தை சிலாகித்து இரண்டொரு வார்த்தைகள் அரைமணி நேரம் பேசினார். ஆகவே என்னுள் இருந்த சினிமனப்புயல் ஆ.வீ-யிலிருந்து மதராசபட்டிணத்தின் மீது மையம்கொண்டது.
இந்த நிலையில் சென்ற வாரம் சொந்த ஊரான உடுமலை விஜயம் செய்யவேண்டி இருந்தது. போன இடத்தில் ஒரு நாள் ஃப்ரீயாக இருக்கிற சூழல்.
தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து டாக் (TALK Not DOG!) நன்றாக இருப்பதால் மீண்டும் வேறொரு தியேட்டரில் களவாணி போடப்பட்டிருந்தது. ஆக காலை ஷோ களவாணி, இரவு ஷோ மதராசபட்டிணம் என்று நானே என்னிடம் பேசி முடிவு பண்ணி கிட்டத்தட்ட நினைவு தெரிந்து ஒரே நாளில் இரண்டு படம்!
களவாணியில் ஹீரோயின் ஓவியாவின் அண்ணனாக வரும் திருமுருகன் என்னை ரொம்பவும் கவர்ந்தார். அலட்டாத இயல்பான நடிப்பு. செமையான பாடி லாங்குவேஜ். அதேபோல எந்தப் பிரச்சினையையும் வழக்கமான பதிலுக்கு பதில் அடிதடி என்பதுபோல இல்லாமல் எல்லா சண்டையையுமே விட்டுப் பிடிக்கிறார்கள். பிராக்டிகலாக இருந்தது. பார் சண்டை, எதிரி கிராமத்துப் பெண்ணைக் கடத்துவது என்று ஒவ்வொரு பிரச்சினையின் போதும் உடனே பதிலுக்கு ஓடாமல் ரியலாக என்ன நடக்குமோ அப்படி திரைக்கதை அமைத்துக் கொண்டுபோன விதத்துக்காக இயக்குனருக்கு ஷொட்டு!
விமல் கனகச்சிதம். அதுவும் அந்த யமஹா அவரைப்போன்ற இளைஞர்களின் கனவு பைக்! அதில் விமல் வெள்ளுடையில் சாய்ந்து வரும் ஸ்டைல் நன்றாகவே பொருந்தியிருக்கிறது அவருக்கு!
கடைசியில் மச்சானும் மாப்பிள்ளையும் ஒன்றாக பீர் அடித்தபடி இரண்டு ஊர்களுக்கும் நெடுநாள் இருக்கும் கோயில் சிலை பிரச்சினைக்கு போகிற போக்கில் தீர்வு காண்கிறார்கள். ‘வெரிகுட்ரா’ என்றபடி வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்.
மதராசபட்டிணம் – ஆகஸ்ட் 15 –தாய்மண் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அழகான காதலையும் ஆங்கிலேயர் காலத்தையும் மிக்ஸிங் செய்து அசத்தலாகக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவாக சீரியஸ் தனமும் இல்லாமல் நடுநடுவே இயல்பான நகைச்சுவை வேறு. வெற்றிக்கு கேட்கவா வேண்டும். எனக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது. ஆகஸ்ட் 15ல் ஆர்யா-ஏமியை போலீஸ் துரத்துவது ரொம்ப லெங்க்த்! அதேமாதிரி கடைசியில் துரையம்மா காலேஜ், துரையம்மா அறக்கட்டளை, துரையம்மா இஸ்திரிக்கடை என்று விக்ரமனையும், தமிழ்ப்படத்தையும் ஞாபகப்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். என்ன ஆனாலும் க்ளைமாக்ஸில் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.
ஜீவி ப்ரகாஷின் இசை – டாப் க்ளாஸ். அதேபோல ஆர்ட் டைரக்ஷன்.
தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் படம் விட்டதும் நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு போவது அவசியம்.
இசை:
யுவனின் இசையில் பாணாகாத்தாடி, தில்லாலங்கடி, காதல் சொல்ல வந்தேன். நான் மகான் அல்ல என்று சென்ற வாரம் யுவன் வாரம்.
காதல் சொல்ல வந்தேனின் ஓ ஷலா பிடித்தது. பாணாகாத்தாடியில் யுவன் பாடிய தாக்குதே கண் தாக்குதே அருமையான மெட்டு. மெட்டுக்கேத்த வரிகள். (வாலி!) ரசிக்க வைத்தது. தில்லாலங்கடியில் சொல்பேச்சு கேட்காத (சித்ரா-ஷ்ரேயா கோஷல்) பாடலில் யுவனின் குரலில் வரும் ‘நம்தும்னா தும்தரே’ சூப்பர். அதேபோல கைலாஷ்கேர், ரஞ்சித் குரலில் மெமரி லாஸ் பாடலும் கவர்கிறது. ஹிட்டாகிவிடும். நான் மகான் அல்ல ராகுல் நம்பியாரின் ‘வாவா நிலவைப்பிடிச்சு’ - பிடிச்சு.
இவை முதல்கட்ட கவனஈர்ப்புத் தீர்மானங்களே. கேட்கக் கேட்க என்ன ஆகுமெனத் தெரியவில்லை.
ஒரு விஷயம்: தில்லாலங்கடிக்கு ‘திருதிரு துருதுரு’ ஆடியோ சிடியை இலவசமாகத் தந்தார்கள். ‘நான் மகான் அல்ல’வுக்கு... ‘ஜக்குபாய்’.
.