Thursday, March 26, 2020

இந்த நாள் இப்படி விடிந்தது

26 ஜுலை 2016

’அந்த புத்தகத்தை எப்ப வாங்கிக்கலாம்?’ - சுரேகா நேற்றிரவு அழைத்தபோது எப்படிக் குடுக்கலாம் என்று பேசி இன்று காலை மெரினாவில் வந்து வாங்கிக் கொள்வதாக முடிவெடுத்தோம். காலை அவனே அழைத்தான். நான் மேன்ஷனை விட்டு இறங்கினேன். கையில் அவருக்குக் கொடுக்க வேண்டிய புத்தகமும், சி.ஏ.பாலனின் தூக்குமர நிழலில் - ம் இருந்தது.

வெளியே வானம் மெதுவாக தன் தூறலைத் துவங்கியிருந்தது. புத்தகத்தை மறைத்துக் கொண்டே நடந்தேன். மேன்ஷனிலிருந்து இறங்கி வலது புறம் திரும்பி, இடது வலதாய் திரும்பினால் சேப்பாக்கம் ஸ்டேடியம் சாலை வந்தது. இப்போது தூறல் இன்னும் வலுவாக ஆரம்பிக்கவே ‘நீ ஸ்டேடியம் முன்னாடி வந்துடு’ என்றேன் சுரேகாவிடம்.

நான் நடக்கவும் அவன் வரவும்.. இருவருமாய் அவன் பைக்கில் ரத்னா கஃபே வந்தோம்.

காஃபி. அரட்டை. பகிர்தல்.

‘இங்கதான் பிரபஞ்சன் அடிக்கடி வருவாராம். காலச்சுவடுல தேவிபாரதி ஒரு கதை எழுதிருப்பார்.. கழைக்கூத்தாடியின் இசை-ன்னு. அதுல படிச்சேன்’ என்றேன்.

காஃபியை முடித்துவிட்டு வெளியே வந்து நின்றும் அரட்டை தொடர்ந்தது. இந்த நாடகங்களிலெல்லாம் வருமே.. ‘அதோ.. அவரே வந்துட்டாரே’ என்று. அதுபோல இருந்தது கொஞ்ச நேரத்தில் தோளில் தொங்கும் பையுடன் பிரபஞ்சன் வந்தபோது.

’அடேய்! இப்பத்தாண்டா சொன்ன?’ என்றான் சுரேகா.

பிரபஞ்சன் நேராக உள்ளே சென்றார்.

‘இன்னொரு காஃபி அவர்கூட குடிப்போமா?’

உற்சாகமாக உள்ளே போனோம்.

‘சார்.. நான் பரிசல்.. இவர் சுரேகா’

அறிமுகமும் அதைத் தொடர்ந்து பல பகிர்தல்களும் நடந்தன. பெயர்களைப் பற்றிய பேச்சு வந்தது.

‘இது வானம்பாடிகள்ல எனக்கு வெச்ச பேரு. பாலசுப்ரமணியத்துக்கு சிற்பி. இன்னொருத்தருக்கு புவியரசு. எனக்கு பிரபஞ்சன்’

தற்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகவும், அதற்காகவே பீட்டர்ஸ் காலனி வீட்டில் இருந்து வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் சொன்னார்.

‘மித்தலாஜிக்கல் நாவல்தான்.  ஒரு ராஜா திடீர்னு பெண்ணா மாறிடறான். அங்க அவனுக்கு - அதாவது - அவளுக்கு ஒரு காதலன் செட் ஆகறான்.. அவனே மறுபடி ஆணா ஆகறப்ப அரண்மனைல ராணிகூட இருக்கான். இப்டி ஒரு மாசம்.. அப்டி ஒரு மாசம்.. அப்டி போகுது கதை. ப்ளாட்ஃபார்ம்ல 50 காசு புக்ல ஒருவரிய படிச்சப்ப தோணின கரு’

வெளியே வந்தோம்.

’எழுத்தாளனா இருக்கறதுல இப்ப பொருளாதாரம் ரொம்ப முக்கியத்துவம் வகிக்குது. என் வீட்ல என்னைக் கேள்வி கேட்காம இருக்கறதால போய்ட்டிருக்கு.. ‘

‘ஆமா சார்.. நாமெல்லாம் செல்லம்மாக்களால்தான் வாழறோம்’

’உண்மைதான்.. நான் வேலைக்குன்னு போகல. இப்டியே படிப்பு, எழுத்துன்னு இருந்துட்டேன். குமுதம், விகடன்ல எல்லாம் கொஞ்சநாள் வேலை பார்த்தேன். ஆனா அது எனக்கு ஒத்துவரலை’

‘விகடன்ல வேலை பார்த்தீங்களா?’

‘ஆமாமா.. பாலசுப்ரமணியம் எனக்கு பழக்கம். அவர் 7.30க்க்கு வந்தார்னா.. நான் 7.45க்கு உள்ள இருப்பேன். நாந்தான் மொதலா போவேன். கதைகளைப் படிச்சு அதைப் பத்தி பேசிப்போம். அதான் எனக்கு முக்கியமான வேலை. அவர் மொதல்லயே சொன்னார்.. ‘பிரபஞ்சன்.. நீங்க வெளில இருந்தே வேலை பார்க்கலாமே.. உள்ள இருந்தா உங்களுக்கு சில சங்கடங்கள் வரக்கூடும். உங்களுக்கும் - இன்னொருத்தர் பேர் சொல்லி - அவருக்கும் பிரச்னை வரும்.. அப்டி வந்தா நான் அவங்க பக்கம்தான் நிப்பேன். ஏன்னா அவங்க என்னை நம்பி இருக்காங்க’ன்னார்.”

நாங்கள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். ‘யார் அவர்’ என்கிற கேள்விக்கு விடைகிடைக்காமல் எங்களால் அவர் சொல்கிற அடுத்த எந்த விஷயத்துக்கும் மனம் கொடுத்துக் கேட்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

மெதுவாக சிரித்தவர் அந்த ‘அவர்’ பெயர் சொன்னார்: ‘......... ஆனா கடைசில பாலு சொன்ன மாதிரிதான் ஆச்சு’

‘சினிமா பார்த்தா டிக்கெட் குடுத்து காசு வாங்கிக்கணும். ஒரு சினிமா பார்த்துட்டு டிக்கெட்டை தொலைச்சுட்டேன். நானும் விட்டுட்டேன். வீயெஸ்வி எனக்கு சிறந்த நண்பர். அவர் டெஸ்க்ல இருந்து சத்தமா டிக்கெட் கேட்டார். நான் தொலைச்சுட்டதா சொல்லி.., விடுங்கன்னுட்டேன். வீயெஸ்வி எனக்கு நல்லது பண்ண, ’அவர்’கிட்ட போய் ‘டிக்கெட்டை தொலைச்சுட்டார்.. பணம் குடுத்துடலாமான்னு கேட்டிருக்கார். உடனே ’அவர்’ அதெல்லாம் முடியாதுன்னு, அவர் கேபின்லேர்ந்து என் டெஸ்குக்கு வந்து அதெப்படி தொலைக்கலாம்னு ஆரம்பிச்சு..’

‘நீங்கதான் கேட்கவேல்லியே..’

‘ஆமா.. ஆனா அவங்க அப்டித்தானே ஆரம்பிப்பாங்க. அது எங்கங்கயோ போய்.. ப்ச். விடுங்க’
அப்போது அங்கு கவின்மலர் வந்தார்.

அவருடன் மீண்டும் ஒரு காஃபிக்கு பிரபஞ்சன் உள்ளே போக, ‘நாங்க ஏற்கனவே ரெண்டு ஆச்சு சார். கிளம்பறோம்’ என்று நின்றுகொண்டிருந்தோம்.

பேசிக்கொண்டிருக்கையில், ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் வந்தார். பைக்கை கடைக்கு நேராக நிறுத்தி இறங்கினார். முன்னே வந்த ஒரு மினிடோர் லோடு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தச்சொன்னார்.

அந்த வண்டி, இடதுபுறம் திரும்பி ஜாம்பஜார் ரோட்டில் நின்றது. இவர் பின்னாடியே போனார்.

’சரி.. போலாம்’ என்று சுரேகா சொல்லி, நடக்க.. நான் தொடர்ந்தேன். டிராஃபிக் கான்ஸ்டபிள் பைக்கை ஒட்டி நடந்தபோது கீழே என்னமோ கிடந்ததைப் பார்த்தேன்.

நூறு ரூபாய்.

அதன் மடிப்பே அது டிராஃபிக் கான்ஸ்டபிளின் பாக்கெட்டில் இருந்ததைச் சொன்னது. சரியாக இல்லாமல், வாங்கியதும் உள்ளங்கைக்குள் மடக்கிச் சுருட்டி யாரோ நீட்ட, வாங்கி அவசரத்தில் உள்ளே வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவரிடம் இருக்கப் பிடிக்காமல் அது வெளியே வந்து விழுந்திருக்கிறது.

‘இன்னைக்கு இது உனக்குக் கெடைக்கணும்னு இருந்திருக்கு’ என்றான் சுரேகா.

அதை எடுத்து.. கொஞ்ச நேரம் கையில் வைத்துக்கொண்டிருந்த நான் கடைக்குள்ளே பார்த்தேன்.
ஹோட்டலின் யூனிஃபார்முடன் இருந்த ஒரு சிறுமி கடையில் போர்டை வைத்து ‘இன்றைய ஸ்பெஷல்’ என்று முத்துமுத்தாக எழுதிக்கொண்டிருந்தார்.

நேரே போய் அவரிடம் கொடுத்தேன். ‘என்னுதெல்லாம் இல்லைம்மா. கீழ கெடந்தது. நீ வெச்சுக்கோ’

வெளியே வந்தபோது சுரேகா என்னைக் கட்டிப்பிடித்து ‘நல்ல காரியம் பண்ணடா’ என்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்க ‘என்ன யோசனை’ என்றான்.

‘இல்லடா... அந்த நோட்டோட டிராவலை நெனைச்சேன்’

வெளியே வந்து பிரபஞ்சனும், கவின்மலரும் ‘இன்னும் போலயா’ என்றார்கள். அவர்களின் இந்தச் சம்பவத்தைச் சொன்னதும் ‘அந்தப் பணத்துக்கே கான்ஸ்டபிள்கிட்ட இருக்கறது பிடிக்கலை. அந்தக் கோணத்துல எழுதுங்க’ என்றார்.

எழுதணும் என்று நினைத்தேன். சொன்னேன். எழுதுவேனா என்று தெரியவில்லை :-)



Thursday, April 11, 2019

ஆகவே மகாஜனங்களே....

உடுமலைப்பேட்டையில் தளிரோடு நூலகத்துக்கு அருகே உள்ள குட்டை விநாயகர் கோயிலுக்கு எதிரே உள்ள செட்டியார் மசால் பொரிக்கடை இப்பொழுதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. பள்ளி நாட்களில் அங்கு செல்வதென்றால் அலாதி ப்ரியம். சினிமாப் பாட்டுப்புத்தகங்கள் பலவும் அங்கு வாங்கியவைதான். பொரி அத்தனை காரசாரமாக இருக்கும். இதை எழுதும்போதே அந்த மசால்பொரியின் நெடி உணர்கிற அளவுக்குப் பிடிக்கும். பள்ளி முடிந்து நண்பர்களோடு கிட்டத்தட்ட தினமும் செல்வதுண்டு. இரண்டு தட்டவடைக்கு நடுவே மசாலை வைத்துத் தருவார். பொரிக்குப் பிறகு அதையும் ஒன்றிரண்டு சாப்பிட்டுவிட்டு, ஒரு தேங்காய் பருபியும் சாப்பிட்டால்... வ்வாவ் என்றிருக்கும். மசால் பொரி, பூண்டுப்பொரி, காரப்பொரி என்று விதவிதமாக இருக்கும்.
அதேபோல, திருப்பூரில் சின்னக்கரை லீஷார்க்கில் பணிபுரிகையில் பல்லடம் ரோடு - சின்னக்கரை கார்னரில் ஒரு வடைக் கடை. மனைவி, குழந்தைகளோடு தள்ளுவண்டியில் வடை போட்டு விற்பார். பருப்பு வடை 50 காசு. 50 ரூவாய்க்கெல்லாம் வாங்கிக்கொண்டு ஆஃபீஸ் முழுக்க சாப்பிடுவோம். பின்னொரு நாள் அவர் ‘நாளைல இருந்து இருக்க மாட்டேன் தம்பி. சொந்த ஊருக்குப் போறேன்’ என்றார். அப்போது அவர் சொன்ன அவரின் கதை, எனக்கு பெரியதொரு வாழ்க்கைப் பாடம். அதை இன்னொரு நாள் பார்ப்போம்.
பிறகு கொஞ்ச கொஞ்சமாய் வடநாட்டவர்களின் புழக்கம் அதிகரிக்க, இவையெல்லாம் அருகிவிட்டன. அந்த மசால்பொரி என்கிற சமாச்சாரம் அன்றைய சுவையில் இல்லாமல் கேரட், அது இது என்று போட்டு சவசவ என்று ஏதோ தருகிறார்கள். வடை என்கிற ஐட்டம் ஏதோ பெரிய பெரிய ஹோட்டல்களில் ஒண்ணு 20 ருவா, 30 ரூவா என்று அலங்கரித்துத் தருகிறார்கள். எங்கு பார்த்தாலும் பானிபூரி, பேல்பூரிதான். எங்காவது தேடித்தேடித்தான் வடை, பொரி சமாச்சாரங்கள் கிடைக்கின்றன.
`எக்ஸ்பிரஸ் அவென்யூ’வில் ‘Goodness Of Arokya’ என்று ஆரோக்யாவின் ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட் ஒன்று உள்ளது. காபி இருக்கா என்றால் ‘காபச்சீனோ’ என்று போர்டைக் காட்டுகிறார்கள். ‘ஏன்யா உங்க டேக் லைனே ‘நலம் அன்புடன் நமது கிராமங்களிலிருந்து..’ கிராமங்களிலிருந்து எங்கடா காபச்சீனோலாம் வருது?” என்று கேட்டால் நஹி மாலும் நஹி மாலும் என்றுதான் பதில் வரும்.
சென்னையில் திருவல்லிக்கேணி மசூதிக்கு எதிரே ஒரு தள்ளுவண்டியில் மசால் வடை, போண்டா எல்லாம் குட்டிக்குட்டி சைஸில் கிடைக்கிறது. சரக்குக்கு செம சைடிஷ். மற்றபடி தெருவுக்குத் தெரு பானிபூரி, சமோசாக்கள்தான்.
சினிமா தியேட்டர்களிலும் இந்த வடக்கத்திய உணவு நொறுக்குகள் எல்லாம் கிடைக்கும். வடையோ பஜ்ஜியோ கிடைக்காது. வடை பஜ்ஜியே இல்லை என்ற பிறகு, மசால் பொரியெல்லாம்.. ம்ஹும்!
வடக்கத்தியர்கள் இந்த பானிபூரி, பேல்பூரியெல்லாம் விற்றது ஓகே. அவர்கள் வந்ததும் நம்ம ஆட்களின் விற்பனை குறைந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் அவர்கள் ஆக்ரமித்துக்கொண்டதும்தான் கொடுமை.
ஆகவே, தயவு செய்து பிஜேபிக்கு ஓட்டுப்போடாதீர்கள்!

Sunday, November 4, 2018

கதை... திரை(மறை)கதை... டைரக்‌ஷன்!


"இந்த இடத்துல இண்டர்வெல் விடறோம் சார்”

பிரபல தயாரிப்பாளர் வேணுவிடம் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அஷோக் ராஜாவின் அலைபேசி ஒலித்தது. அதை சைலண்ட்   செய்துவிட்டுத் தொடர்ந்தான்.

“நீங்க சொன்ன மாதிரி, ஸ்டார்ட்டிங்ல வெச்சிருந்த சீனை, இப்ப இண்டர்வெல்லுக்கு அப்பறம் மாத்திட்டேன். அதுபடி, ஹீரோ இப்ப என்ன பண்றார்னா...”

மறுபடியும் அலைபேசி அழைப்பு.

“அட்டெண்ட் பண்ணுங்க. ரெண்டு மூணு வாட்டி கூப்டறாங்க. எதும் அவசரமா இருக்கப்போவுது” தயாரிப்பாளர் வேணு சொன்னதும் அவரிடம் ஸாரி சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டுத் தள்ளி வந்தான்.

“டேய்.. எடுக்கலைன்னா புரிஞ்சுக்கடா. பத்து வருஷ கனவு. இவ்ளோ பெரிய தயாரிப்பாளர். ராக் ஸ்டார் ரமேஷ் டேட்ஸ்  இவருகிட்டதான் இருக்கு. அவர் சொன்ன சில மாற்றங்களோட ஃபைனலா கதை சொல்ல வந்திருக்கேன். உனக்கும் தெரியும். எத்தன வாட்டி கூப்பிடுவ?”

எதிர்முனையில், அழைத்த நண்பனின் குரலில் பதற்றம். “அது தெரிஞ்சுதான் கூப்டறேன். உடனே யூ ட்யூப் பாரு.  தீபாவளிக்கு வர்ற ராக் ஸ்டார் ரமேஷோட ‘மாணிக்’ பட டிரெய்லர் ரிலீஸாகிருக்கு”

“சரி. அதுக்கென்ன அவசரம்? இவர்கூட டிஸ்கஷன் முடிஞ்சு பார்த்துக்கறேன்.”
”சொன்னாக் கேளுடா. உடனே பாரு. ப்ளீஸ். நான் அங்க வந்துட்டிருக்கேன். அடுத்து என்ன பண்றதுனு பேசிக்கலாம்” சொல்லிவிட்டு உடனே போனைக் கட் செய்தான்  நண்பன்.

அஷோக் ராஜா, குழப்பத்துடனே தயாரிப்பாளர் வேணு அருகில் வந்தான். மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருந்த  வேணு, கண்ணாடியைக் கழற்றியபடி “அஷோக் ராஜா, இதக் கொஞ்சம் பாருங்க” என்று நீட்டினார்.  அது, இயக்குநர் விகேஷ் இயக்கத்தில் ராக் ஸ்டார் ரமேஷ் நடித்து வெளிவர இருக்கும் ’மாணிக்’ படத்தின் டிரெய்லர். ப்ளே பட்டனை அழுத்தி ஓடவிட்ட அஷோக் ராஜாவுக்குக் கொஞ்ச நேரத்தில் உடலெங்கும் கெமிக்கல் ரியாக்‌ஷன்கள் நிகழ, கையிலிருந்த செல்ஃபோன் நழுவுவது போல உணர்ந்தான்.

“என்னய்யாது.. நீங்க மூணு மாசமா என்கிட்ட சொல்லிட்டிருக்கற கதையைப் படமா எடுத்து வெச்சிருக்கான். நீ என்னடான்னா ஏதோ புது கதை மாதிரி அதை என்கிட்ட சொல்லிட்டிருக்க?” - அவர் வார்த்தைகளில் இருந்த மரியாதை குறைந்ததை கவனித்தான் அஷோக் ராஜா.

“சார்... இல்ல சார். இது என் கதை. 10 வருஷம் முந்தியே ரெஜிஸ்டர் பண்ணி வெச்ச  கதை. அந்த ஒன்லைன் மட்டும் சின்க் ஆகுது சார். மொத்தமா இப்படியானு தெரியல. நான் பேசிட்டு சொல்றேன் சார்.”

“மொத்தமா எப்படியோ... டிரெய்லர்ல இருக்கற எல்லாமே உன் கதைலயும் இருக்கு. அதெல்லாம் அப்பறம் உன்  கதைல ஒண்ணுமே இல்லையே? இப்ப என்ன பண்ணப்போற?”

“எழுத்தாளர் சங்கத்துல பேசணும் சார். கணேசமூர்த்தி சார்தான் இப்ப தலைவர். அவரு வந்தப்பறம் இந்த மாதிரி பிரச்னைக்கெல்லாம் ஒரு தீர்வு வரும்னு நாங்க எல்லாருமே நம்பிட்டிருக்கோம். மொதல்ல அவரைப் பார்த்துட்டு என்ன பண்றதுன்னு சொல்றேன் சார்”

---

ணேசமூர்த்தி பெருமூச்சு விட்டார்: “நல்லா புரியுதுய்யா. நீயும் ஃபீல்டுலதான இருக்க? டைரக்டர் விகேஷ், ராக்ஸ்டார் ரமேஷ்கூட இந்தப் படம் எப்போ அறிவிப்பு வந்துச்சு. ஆறேழு மாசமா ’மாணிக்’ பட வேலைலாம் நடந்துட்டிருக்கு. இதான் கதைன்னு உனக்குக் கொஞ்சம்கூடவா தகவல் வர்ல?”

“இல்ல சார்... நெஜம்மா எனக்குத் தெரியாது.”

“ அட.... போனவாரம் ‘பொறுக்குமா உலகமே... கனவெல்லாம் கலகமே... ’ பாட்டு வந்து கன்னா பின்னானு ஹிட்டாய்டுச்சு. அந்த வரிகளைக் கேட்டுமா உனக்கு டவுட் வர்ல? ரெண்டு வாரத்துல ரிலீஸை வெச்சுக்கிட்டு இப்பப் போய் என் கதைன்னா என்ன அர்த்தம்னு வேண்டாமா?”

“சார் .. நான்  ரெண்டு மூணு வருஷமா தெலுங்கு ஃபீல்ட்ல வொர்க் பண்ணிட்டிருக்கேன். இங்க இருக்கற அப்டேட்ஸலாம் நியூஸ், வெப்சைட்ஸ்ல பார்க்கறதோட சரி. பாட்டெல்லாம் நானும் கேட்டேன் சார். ஆனாலும் டிரெய்லர் பார்த்தப்பதான் இவ்ளோ ஒற்றுமை இருக்குனு தெரியும் சார்.  செயற்குழு கூட்டி,  சீல் பண்ணி வெச்சிருக்கற என் பவுண்டட் ஸ்கிரிப்ட் படிங்க சார். நான் ஏன் இவ்ளோ பேசறேன்னு உங்களுக்கே புரியும்.”

“சரி... புகாருக்கு உண்டான தொகையைக் கட்டிட்டு, புகாரை சங்கத்துல சப்மிட் பண்ணிடு. நான் ஈ.சி. மெம்பர்ஸ்கூட கலந்துகிட்டு என்ன பண்றதுனு சொல்றேன்.”
--
ன்னும் இரண்டு வாரங்களில் ‘மாணிக்’ ரிலீஸ். அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வேலைகளில் இருந்த விகேஷ், கணேசமூர்த்தியின் அழைப்பை மறுக்க முடியாமல், எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் அவரது அறைக்கு வந்தான்.

“உன்னோட  ஹீரோவுக்காக, இந்தக் கதையை சொல்லிட்டிருக்கான்யா அஷோக் ராஜா.  அவன் பத்து வருஷமா இந்தக் கதைய வெச்சுட்டுப் போராடிட்டிருக்கான். இப்ப தெலுங்குல கொண்டயராஜுகிட்ட அசோஷியேட்டா இருக்கான். தயாரிப்பாளர் வேணுகிட்டயும் பேசினேன்.   பையன் நல்ல பையன். க்ளீன். காசெல்லாம் அவனுக்கு மேட்டரே இல்லை. செழிப்பாதான் இருக்கான்.  அவனோட ஸ்கிரிப்ட்டை எக்ஸிக்யூட்டிவ் மெம்பர்ஸ் முன்னாடிதான் சீலையே ஒடைச்சுப் படிச்சோம்.”

“சார்.. ‘மாணிக்’ என்னோட கொழந்தை சார்.  ஒன்னரை வருஷமா, இஞ்ச் இஞ்ச்சா நானும் அசிஸ்டெண்ட்ஸும் உருவாக்கின கொழந்தை. இப்ப வந்து ஒருத்தன் அப்படிச்சொன்னா கேட்டுருவீங்களா சார்?”

“விகேஷ்... உனக்கு இது பத்தாவது படம். நீயும் ராக் ஸ்டாரும் அல்ரெடி மூணு ஹிட் கொடுத்தவங்க. தயாரிப்பு கருடா பிக்சர்ஸ் வேற. இதையெல்லாம் தெரியாம, உன் டைமை வேஸ்ட் பண்ண இங்க கூப்பிடலை. என் மேல உனக்கு மரியாதை இருக்கா இல்லையா?”

“நிச்சயமா இருக்கு சார்”

“அப்ப நீ மொதல்ல, அஷோக் ராஜாவோட இந்த பவுண்டட் ஸ்கிரிப்ட்டைப் படி. அப்பறம் பேசலாம்.”

சொல்லிவிட்டு இரண்டு காஃபி ஆர்டர் செய்தார்.  இரண்டு காஃபி, நான்கு ஆனபோனது விகேஷ் ஸ்கிரிப்ட்டை முடித்திருந்தான்.

தலைக்கு மேல் ஸ்டைலாக இருந்த கூலிங் க்ளாஸை, எடுத்து டேபிள் மேல் வைத்தான் விகேஷ். எழுந்தான். முகம் களையிழந்திருந்தது. டேபிள் மேலிருந்த ஏ.சி ரிமோட்டை எடுத்து டெம்ப்ரேச்சரைக் குறைத்தான். கணேசமூர்த்தி, ஓரக்கண்ணால் அவனை கவனித்தாலும், கவனிக்காதது போல செல்ஃபோனில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

“சார்..” கணேசமூர்த்தியை அழைத்துக் கொண்டே அவரருகில் வந்தான்
விகேஷ்.
---
டுத்தநாள் சமூக ஊடகங்களில் கணேச மூர்த்தி கையெழுத்துடன் எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளிவந்த கடிதம் வைரலானது. ` ‘மாணிக்’ படம் யாரோ அஷோக் ராஜா- அப்டின்றவர் கதையாமே?’, ‘யாரிந்த அஷோக் ராஜா?’ என்று ஆன் லைனில் ஆரூடங்கள் பறந்தன. இரண்டு மணி நேரத்தில் மொத்த யூ ட்யூப் சேனல்களும் கணேச மூர்த்தியின் வீடு, ஆஃபீஸ் என்று படையெடுத்தன. இரண்டு நாட்களுக்கு இணையம் முழுவதும் அவரது பேட்டிகள்.

“அஷோக் ராஜா கதையும், விகேஷின் கதையும் ஒன்றுதான். ஆனால் அதற்குப் பிறகான காட்சிகளில் வேறு சில சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த அடிப்படைக் கதையில் ஒற்றுமை இருக்கிறது.  அஷோக் ராஜா அதே ராக் ஸ்டார் ரமேஷை வைத்து இதை இயக்க தயாரிப்பாளரை ஃபிக்ஸ் செய்ததெல்லாமும் உண்மை. ஆனால் இப்போது அது முடியாது என்பதால், டைட்டிலில் அவருக்கு ஒரு கிரெடிட் கொடுக்க மட்டுமே சொன்னேன். அதற்கு விகேஷ் ஒப்புக்கொள்ளாததால், அஷோக் ராஜாவுக்கு எங்களால் உதவ முடியவில்லை. இப்போது அஷோக் ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 31ம் தேதி கோர்ட்டில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது.” - இதையே வேறு வேறு விதமான எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் கணேச மூர்த்தி.

இன்னொரு புறம் விகேஷ் பொங்கிக்கொண்டிருந்தான். “கணேச மூர்த்தி சொல்வதை ஏற்க முடியாது. இருவது வருடங்களுக்கு முன் அவர் இயக்கிய பல படங்களும் வேறு சில படங்களை ஒத்திருந்தவைதான். இப்போது நியாயவான் போல பேசும் அவர், அதையெல்லாமும் கருத்தில் கொண்டிருக்கலாம்” என்கிற ரீதியில் கணேச மூர்த்திக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

சமூக ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் அல்வா போல இந்தச் செய்திகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டிருந்தன. ராக் ஸ்டார் ரமேஷின் ரசிகர்கள், விகேஷுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் களமிறங்கினர். இன்னொரு பக்கம், விகேஷ் அதற்கு முன் இயக்கிய திரைப்படங்களெல்லாமே காப்பியடிக்கப்பட்டவை என்று ஆரம்பித்து அவனை வறுத்துக் கொண்டிருந்தனர்.

மீடியாவின் இன்னொரு டீம் யார் அந்த அஷோக் ராஜா என்று தேடிக் கொண்டிருந்தனர். ‘கோர்ட்டில் வழக்கு இருப்பதால் பேச மாட்டார்’ என்று அஷோக் ராஜாவின் வழக்கறிஞர் பேட்டி கொடுத்தார். அவனது முகம் கூட எதிலும் காட்டப்படவில்லை. ஆனால் பத்திரிகைகள் மோப்பம் பிடித்து தெலுங்கு  டைரக்டர்  கொண்டயராஜுவைப் பிடித்தார்கள். ஏர்போட்டில் மீடியாவிடம் ‘ஹி ஈஸ் டெஃபனட்லி டேலண்டட்.. என்னோட கடைசி மூணு படம் ஹிட்டடிச்சதுல அஷோக் ராஜாவுக்கு பங்குண்டு. மத்தபடி மாணிக் பிரச்னை பத்தி நான் ஒண்ணும் சொல்லமுடியாது’ என்று பேட்டி கொடுத்தார். 
--

செல்ஃபோனை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்த விகேஷ், ஒரு கட்டத்தில் தாங்காமல் ட்விட்டரிலிருந்து வெளிவந்தான். கணேச மூர்த்தியை அழைத்தான்.

“சார்... இதெல்லாம் எனக்குத் தேவையா சார்? இந்த ஒரு படம் மட்டுமில்லாம, எல்லாப் படமும் இப்படித்தான் அப்டிங்கற ரேஞ்சுக்குப் பேசறாங்க சார். என்கூட ஃப்ரெண்ட்ஸா இருந்தவங்களே எனக்கெதிரா இதை எடுத்துட்டுப் போறாங்க சார்.  நாம ப்ளான் பண்ணினது இப்படியெல்லாம் போகும்னு நான் எதிர்பார்க்கல சார்..”

எதிர்முனையில் கணேசமூர்த்தி மௌனமாய் இருந்தார். “ஸாரி விகேஷ். இதெல்லாம் நானும் எதிர்பார்க்காததுதான். எனக்கு மட்டும் என்ன? கூடவே இருக்கற எத்தனை பேர் எனக்கெதிரா பேசிட்டு இருக்காங்கன்னு பார்க்கறப்ப ஆச்சர்யமாவும் வெறுப்பாவும் இருக்கு. ஆனா ஒரு நல்ல விஷயத்துக்காக ஆரம்பிச்சது இது. நம்மளைச் சுத்தி இருக்கறவங்களைப் புரிஞ்சுக்கற வாய்ப்பா மட்டும் இதைப் பார்க்கலாம் விகேஷ்.”

“ஓகே சார். நாளைக்கு 31ம் தேதி. கோர்ட்டுக்கு நான் வர்ல சார். நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு ஈவ்னிங், உங்களுக்கு ஒரு லெட்டர் குடுத்துடறேன். நாளைக்கு கோர்ட்ல வெச்சு அதை ரிலீஸ் பண்ணிக்கோங்க.”
--

டுத்தநாள். ஒட்டுமொத்த மீடியாவும் கோர்ட் முன் கூடியிருந்தன. விகேஷ் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதை, அஷோக்ராஜாவின் வழக்கறிஞர் சொல்லிக் கொண்டிருந்தார். அருகில் கணேச மூர்த்தி நின்று கொண்டிருக்க, அவரை நோக்கி நீண்டன மைக்குகள்.

“டைட்டிலில் அஷோக் ராஜாவின் பெயரை போடுவதாக விகேஷ் ஒப்புக்கொண்டு கடிதம் கொடுத்துவிட்டார். ஆகவே...” அவரைத் தொடரவிடாமல்  எல்லா நிருபர்களும் கூச்சலாக ஒரே கேள்வியைக் கேட்டனர். “சார்... அதெல்லாமே வக்கீல் சொல்லிட்டார்.. அஷோக் ராஜா எங்கே? அவர் என்ன சொல்கிறார்?”

சிறு புன்னகை இடைவெளி விட்டார் கணேச மூர்த்தி. பிறகு,  “இதோ இவர்தான் அஷோக் ராஜா.” கொஞ்சம் விலகி, பின்னால் நின்று கொண்டிருந்த அஷோக் ராஜாவை முன்னே தள்ளி நிறுத்தினார். “நீ பேசுப்பா” என்றார். ஒட்டுமொத்த மீடியாவும் அஷோக் ராஜாவை ஃபோகஸ் செய்தது. அடுத்தநாள் எல்லா நாளிதழ்களிலும் முன்பக்கத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் அஷோஜ் ராஜா.
---

தீபாவளி களை கட்டிக்கொண்டிருந்தது. `மாணிக்’  இரண்டு ஷோக்கள் முடிந்ததும் சோஷியல் மீடியா படத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. ஆன்லைனில் ரெட் ஷர்ட் ரெமொ முதல் தட்டீஸ் தருண் வரை எல்லாரும் ஒருமித்தவகையில் ‘விகேஷ் - ரமேஷ் காம்போவில் இதுதான் ஆகச் சிறந்த படம். ப்ளாக் பஸ்டர்’ என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருந்தனர். நான்கு மணிக்கு, அஷோக் ராஜா, சத்யம் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் நிருபர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

“தேங்க்ஸ் கார்டுல உங்க பேருக்குக்கூட தியேட்டர்ல அவ்ளோ ரெஸ்பான்ஸ். படம் விஷுவலா எப்படி இருக்கு?”

“விகேஷ் சார் அவரோட சீனியாரிட்டியை நிரூபிச்சிருக்கார். ராக் ஸ்டார் ரமேஷுக்காக அவர் எழுதிருக்கற சில காட்சிகள், எனக்கு பாடம் மாதிரி இருந்தது. அதே பேஸ் லைன்லதான் நானும் யோசிச்சிருந்தேன்னாலும், அவர் மாதிரி சீன்ஸ் யோசிச்சிருக்கவே மாட்டேன். படம் வேற லெவல்ல இருக்கு” - அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே டைரக்டர் விகேஷிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. 

“உடனே கணேசமூர்த்தி சார் வீட்டுக்கு வா.”

---
ஷோக் ராஜா, கணேச மூர்த்தியின் அறைக்குள் நுழைந்தபோது அங்கே விகேஷ் அமர்ந்திருந்தான். விகேஷைப் பார்த்ததும் கைகூப்பியபடி “இப்ப்பதான் படம் பார்த்துட்டு வரேன் சார். என்ன சொல்றதுனு தெரியல. அடிப்படை ஒண்ணுதான் அப்டின்னாலும் உங்க ஸ்கிரீன் ப்ளேவும், காட்சியமைப்புகளும் தனியா தெரியுது சார். உங்களுக்கு எதிரா கேஸ் போட்டதுக்கு சாரி சார். எனக்கு அந்தச் சூழ்நிலைல....”

கணேச மூர்த்தி அவனைக் கையமர்த்தினார்.

“நான் சொல்லித்தானே கேஸ் போட்ட? உனக்கொண்ணு சொல்லவா? அன்னைக்கு ஸ்கிரிப்ட் படிச்சப்பவே விகேஷ், உன் பேரை டைட்டில்ல போடறேன்னு ஒத்துகிட்டார். உன் பவுண்டட் ஸ்கிரிப்ட்டைப் படிச்சுட்டு அவர் அவ்ளோ ஆச்சர்யப்பட்டார். இன்ஃபாக்ட், உன் ஸ்கிரிப்ட்ல இருந்த ஒண்ணு ரெண்டு சீன்ஸை, அச்சு அசலா அவர் படத்துல ஷுட் கூட பண்ணிருந்தார். ஆனா உன் ஸ்கிரிப்ட் படிச்சுட்டு அதையெல்லாம் எடுத்துட்டார்.”

”சார்.. என்ன சொல்றீங்க? அப்ப அவர் பேர் போட ஒத்துகிட்டார்னா எதுக்கு கேஸ் போடச் சொன்னீங்க. எத்தன பேர் வாய்ல பேச்சு வாங்கி, ஏன் இதுல்லாம்?”

“ஓகே.. சொல்றேன். அன்னைக்கு நீ என்கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டப்ப நீ காசு கேட்கல. அங்கீகாரம்தான் கேட்ட. கார்டுல பேர் போடறதால உனக்கு அங்கீகாரம் கிடைக்கும்தான். ஆனா எத்தனை பேருக்கு அதுனால உன்னைத் தெரியும்? நானும் விகேஷும், அதையெல்லாம் தாண்டி உன் பேர் ரசிகர்களுக்குப் போகணும்னு ஆசைப்பட்டோம். எந்த டைரக்டரும் முதல் ஸ்கிரிப்ட் இப்படி ஆச்சுன்னா, அவனை நிரூபிக்கறது ரொம்பவே கஷ்டம். ஃபீல்டுல தெரியலாம். பப்ளிக்குக்கு உன்னைத் தெரியணும்னா என்ன பண்ணலாம்னு யோசிச்சோம்”

இப்போது விகேஷ் குறுக்கிட்டான்.  “நம்ம மீடியாக்கு எப்பவுமே ஒரு விஷயம் கிடைச்சதுன்னா அதைப் பரபரப்பாக்கிடணும். அதை யோசிச்சுதான் கணேச மூர்த்தி சார்தான் இப்படி  ரியலா ஸ்கிரீன் ப்ளே பண்ணினாரு. அதுனாலதான் உன்கிட்டகூட சொல்லல. இப்ப நீ யார்னு தமிழ்நாட்ல எல்லாருக்குமே தெரியும். செயற்குழுவுக்குத் தெரியாம இதெல்லாம் பண்ணினதால, மனசாட்சி கேட்கலைன்னு ரிசைன் பண்றேன்னு சொல்றாரு...” - விகேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனது அலைபேசி ஒலித்தது. எதிர்முனையில் ராக் ஸ்டார் ரமேஷ்.

“என்னா டைரக்டரே... நம்ம காம்போவுல, நாலாவது படத்துலயும் சிக்ஸரே அடிச்சுட்டீங்களே..  இது ஹிட்டாச்சுன்னா அடுத்த படமும் உங்ககூடதான்னு ஏற்கெனவே சொன்னேன். இப்ப அஃபிஷியலாவே சொல்றேன். அடுத்த படமும் உங்ககூடதான். எப்ப கதை சொல்ல வர்றீங்க?”

“தேங்க்ஸ் ரமேஷ். அடுத்து உங்ககூட இயக்குநரா இணையல. தயாரிப்பாளரா இணையறேன். கதை சொல்ல நாளைக்கு டைரக்டர் வருவாரு”

“யாரு?”

“அஷோக் ராஜா” என்றான் விகேஷ்.
__

டிஸ்கி: இந்தக் கதை, டாபிகல் ஸ்டோரி என்ற ஜானரில் சமகால சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனைக் கதையே.