Monday, November 30, 2009

காமன்மேன் – 25

ந்தக் காமன்மேனுக்கும், கமலஹாசனின் காமன்மேனுக்கும் சம்பந்தமில்லை. இவர் சம்பளத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாமான்யன். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஹீரோவாக ஆகிவிடுவார். அரசியல், சினிமா, விளையாட்டு, வாணிகம் என்று எந்த டாபிக் எடுத்தாலும், தெரிந்ததையோ தெரியாததையோ தைரியமாகப் பேசி எதிராளியை சமாளிப்பதில் வல்லவர்.

இந்த வாரம் இவரைப் பற்றிய 25 விஷயங்கள்...

************************

ந்த ஒரு அவசர வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும் சரி, ஐந்துபேரைக் கொண்ட - ‘கூட்டம்’ மாதிரியாக - ஏதாவது சாலையில் தென்பட்டால் நின்று வேடிக்கை பார்த்துப் போவது இவரின் தலையாய பழக்கம். என்னவென்று தெரிந்துகொண்டு ஒரு ***ம் **ங்கப் போவதில்லையென்றாலும், வேடிக்கைப் பார்ப்பதில் இவருக்கிருக்கும் சுதந்திரத்தை என்றுமே விட்டுத் தரமாட்டார்.

ல்லா நாளுமே, அடுத்தநாள் பள்ளிக்கு/கல்லூரிக்கு/ஆஃபீஸுக்கு நேரமாகக் கிளம்பி, ரிலாக்ஸாகப் போகவேண்டுமென்று நினைப்பார். ஆனாலும் அந்த அடுத்தநாளும் அப்படியேதான் தொடரும் இவருக்கு.

ணமான ஆண்களுக்கு மனைவியைக் குறை சொல்லிப் பேசுவதில் ஒரு சிற்றின்பம். என்னதான் தன் திருமணவாழ்க்கை வெற்றிகரமாய்ப் போய்க் கொண்டிருந்தாலும், திருமணம் செய்துகொள்வதாய் சொல்பவர்களிடம் ‘மாட்டிக்கிட்டியா?’ என்று பயமுறுத்துவதில் ஆண் பெண் இருவருமே சரிசமம்தான்.

நாடு, அரசியல் தலைவர்கள், தன் குடும்ப மூதாதையர் பற்றித் தெரிந்து கொள்வதை விட, தனக்குப் பிடித்த நடிகரின் படங்கள், சாதனைகள்., பிடித்த விளையாட்டு வீரரின் ரெகார்டுகளை மனனம் செய்து வைத்திருப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.

கிரிக்கெட்டில் தன் நாடு தோற்றால் கேவலமான ஒரு கமெண்ட்டும், ஜெயித்தால் அவர்களைக் கடவுளாக்கி ஒரு கமெண்ட்டும் கொடுக்கத் தவறமாட்டார். இது மாறி மாறி நடந்து கொண்டிருந்தாலும், இவர் மாறுவதில்லை.

ன் பிரச்சினைக்கு யாரும் வரவில்லையென்ற ஏக்கம் இவருக்கு எப்போதுமே இருக்கும். ஆனால் பிறருக்கொரு பிரச்சினையென்றால் 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்குவதை நியாயம் கற்பிப்பார்.

ந்தக் கெட்ட பழக்கமுமில்லாமல் எந்தத் தவறும் செய்யாமல் நேர்மையாக, ஒழுங்காக வரி கட்டிக் கொண்டு உதாரணமனிதனாய் வாழ்ந்து வருபவர்கூட, காக்கிச் சட்டையைக் கண்டால் எட்ட ஒதுங்கிவிடும் பயந்தாங்கொள்ளி ஆகிவிடுவார். இந்த காமன்மேனுக்கு மட்டும், காவல்துறை என்றாலே ஆகாது.

ருடாவருடம் காலண்டர் வாங்கினால் விடுமுறை தினங்கள் எந்தக் கிழமையில் வருகிறதென்பதைப் பார்ப்பது இவரது தவறாத பழக்கம்.

‘எதற்காகவும் கவலைப்படமாட்டேன் நான்’ என்பவர் இவர். ஆனால் தன்னைப் பற்றிய கவலை உள்ளூர இருந்து கொண்டேயிருக்கும் இவருக்கு.

ந்தக் கணினி யுகத்தில் டைரி எழுதும் பழக்கத்தை விட்டவர். இருந்தாலும் ஓசி டைரி வராதா என வருடத் துவக்கத்தில் எதிர்ப்பார்க்கும் வழக்கத்தை இன்னும் கைவிடவில்லை.

ண்ணீர் பாட்டிலை குடித்துவிட்டு க்ரஷ் செய்ய வேண்டுமென்பதுதான் முறையென்றாலும், இதுவரை என்றுமே அப்படிச் செய்யாமல் மறக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்.


துணிக்கடைகளில் பிக்‌ஷாப்பர் பைகளுக்கு சண்டை போடுவார். கொடுக்காத கடைகளுக்கு அடுத்த வருடம் போகவும் மாட்டாத ரோஷக்காரர் இவர்.

டம் பார்த்துவிட்டு, மீண்டும் பார்க்க வந்து முன்பின் இருக்கைகளுக்கு கேட்கும் வண்ணம் கதை சொல்லி கழுத்தறுப்பது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.செல்ஃபோன் வைத்திருப்பது இவருக்கு பெருமையான ஒன்று. அதை அடுத்தவருக்குத் தெரியும்வண்ணம் வைத்திருப்பதும், உரக்கப் பேசுவதும் இவரது உடன்பிறந்த பழக்கம்.

ட்ராஃபிக் சென்ஸ் என்பது இவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது. அடுத்தவரைப் பற்றிய கவலையின்றி வாகனத்தைப் பார்க் செய்வதில் தொடங்கி, போக்குவரத்தின் போது இவர் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இருப்பதில்லை. வைத்திருப்பது பைக், கார், சைக்கிள் என்று எதுவாகவிருப்பினும் இதில் மாற்றமில்லை.

பொதுக் கழிவறைகளைச் சுற்றி சிறுநீர் கழிப்பது, குப்பைத் தொட்டிகளின் வெளியே குப்பைகளைக் கொட்டுவது என்று துவங்கி, செய்யாதே என்றறிவிக்கப்பட்டவற்றை செய்து பார்ப்பதில் இவருக்கு த்ரில் அதிகம்.

முன்னே செல்லும் பெண்ணை, பின்னாலிலிருந்து பார்த்தபிறகு அவரை முந்திச் சென்று முகம்பார்ப்பதில் இவருக்கிருக்கும் ஆர்வம் ஆண்டாண்டு காலமாய் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுவே பெண்களுக்கோ ஆணைப் பார்த்துவிட்டாலும், பார்க்காதமாதிரி போவதில் ஒரு இன்பம்.

ஞ்சம் என்பதை ஏறக்குறைய அங்கீகரித்துவிட்டார் இந்தக் காமன்மேன்.

தான்போகும் பேருந்து மெதுவாகச் செல்வதாய்க் குறை பட்டுக் கொள்வார். அதுவே, ஏதாவது பேருந்து வேகமான தாண்டிச் சென்றால், ‘ஓவர்ஸ்பீடுப்பா’ என்று சபிப்பார்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவது இவரது நெடுநாளைய பலவீனம்.

க்தி என்பது இவருக்கு சீஸனுக்கு மட்டும்தான் வரும். அப்போதெல்லாம் தன் தேவைக்குத் தகுந்த மாதிரி, ஆன்மிக விதிகளைத் தளர்த்திக் கொள்வார் இவர்.

வரது சமீபத்திய பழக்கம், ‘ஓட்டுப் போட எவ்வளவு கிடைக்கும்?’ என்று எதிர்ப்பார்ப்பது. ஆனால், வாங்கிய காசுக்கு சொன்னமாதிரி ஓட்டுப் போட்டு, தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதால் அரசியல் கட்சியினரிடையே இவருக்கு டிமாண்ட் அதிகம்.

வாரிசுகள் பிறந்த உடனே ‘தன் மகன்/மகள் இப்படி ஆகவேண்டும்’ என்று ஏதாவதொரு கனவையும் கூடவே வளர்த்துக் கொள்வார். அதற்கு மாறாக நடந்துவிட்டாலும், ‘அவர்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்று விட்டுக் கொடுப்பதில் இவருக்கு எப்போதுமே நற்பெயர்.

றிவுரை சொல்வதும் இவருக்குப் பிடித்தமாதிரி பொழுதுபோக்குகளில் ஒன்று. ‘அதுபோல நீ நடந்து கொள்கிறாயா’ என்று கேட்டால் மட்டும் இவருக்குப் பிடிக்காது.

சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று நெருங்கியவர்களாலும், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று தனக்குப் பிடித்தமானவர்களாலும் ஏமாற்றப்படும்போது மிகவும் உடைந்துபோய்விடுவார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணுவார். ஆனாலும், அவர்களை மன்னித்து மீண்டும் அவர்கள் பக்கம் நிற்பார்...உதவி செய்வார். இந்த விஷயத்தில் மனிதத்தை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த ‘சோ கால்ட்’ காமன்மேன்தான்.


.

Friday, November 27, 2009

இது அவியலா???

ஏன் இத்தனை நாள் இடைவெளி என்பதை, எப்படியெப்படியெல்லாமோ கேட்ட நண்பர்களுக்கு, தனியஞ்சலில் பதிலனுப்பியாயிற்று. நான் எழுதாமல் இருந்த இந்தக் காலகட்டத்தில் வலையுலகில் என்னென்ன நடந்தது என்று க்ளிக்கிப் பார்க்காமல் நேரடியாக எழுத உட்கார்ந்து விட்டேன்.

எதுவும் நிகழாமலும், ஏதாவது நிகழ்ந்து கொண்டும் அதனதன் போக்கில் அதது...

********************************

வாரிசுகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களின் கமெண்டுகளை ரசிப்பது, ரசனையான ஒன்றாக இருக்கிறது.

குடும்பத்தோடு சாப்பிடப் போனபோது, மீராவிடம் என்ன சாப்பிடுகிறாயெனக் கேட்டபோது ‘நான் மீன் சாப்பிடுகிறேன். அதுதானே அம்மாவிற்கு நல்லது’ என்றாள். ‘மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அம்மாவுக்கு நல்லதா?’ என்று கேட்டேன்... மீரா சொன்னாள்: ‘அம்மாதாம்ப்பா என் கண்ணு...”

அதேபோல,

'Which is the Longest Wall' என்று மீரா படித்துக் கொண்டிருக்கும் போது, மேகா சொன்னாள் ‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’

*************

சமீபத்தில், கேட்டுக் கொண்டேயிருக்கும் பாடல் ‘பையா’வில் ‘என் காதல் சொல்ல நேரமில்லை’. டிபிகல் யுவன் சாங். அவரே பாடியிருக்கிறார். இதுபோன்ற பாடலில், அவர் உயிர்ப்போடு அடிவயிற்றிலிருந்து பாடும்போது நமக்கு கிடைக்கும் உணர்வு, ப்பா...!

***************

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போயிருந்தபோது, நண்பனொருவன் கேட்டான்.. ‘ரயிலில் எக்ஸ் சர்வீஸ் மேன், ஆர்மிக்காரர்கள் ஆகியோர்கள் வீட்டு ஜன்னல்களைத் தூக்கிப் போக எதற்காக சலுகை அறிவிக்கிறார்கள்?’ என்றொரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டான். ஒன்றுமே புரியாமல் மரியாதையாக முழித்துக் கொண்டிருந்தபோது (திரு திரு ன்னு) அருகிலிருந்த போர்டைக் காட்டினான்..

"Concessions Details" என்ற தலைப்பில் பயணக் கட்டணத்தில் யார் யாருக்கு என்னென்ன சலுகைகள் என்றறிவிக்கப்பட்டிருந்த போர்டில் 'Windows of Ex-Serviceman' 'Windows of Policeman' என்று Widowவுக்கு பதில் எல்லா இடங்களிலும் windows இருந்தது.

கொடுமைடா சாமி!

*****************************

திருப்பூர் வலைப்பதிவர் சங்கத் தலைவர் வெயிலான், பொருளாளர் சாமிநாதனுடன் லவ்டேல் மேடியின் திருமணத்திற்கு சென்று வந்தேன். காரில் சென்று கொண்டிருக்கும்போது சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்து நிறையபேரின் விண்ணப்பங்கள் நிலுவையிலிருப்பதாகச் சொன்னார். சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, ஏஞ்சல் ஹோட்டலில் ஞாயிறன்று கூட்டம் நடத்தவிருப்பதாகவும் சொன்னார்.

அதுபோக, எஸ்.ராவை சங்கத்தின் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதாகவும் ஜனவரியில் அவர் கலந்து கொள்ளச் சம்மதித்திருப்பதாகவும் சொன்னார்.

வெயிலான் போல செயல்திறமிக்க தலைவரைப் பெற, திருப்பூர் வலைப்பதிவர் பேரவை என்ன தவம் செய்ததோ....

.........................

Thursday, November 12, 2009

இளைஞர்களின் இதயக்கனிஇன்று பிறந்த நாள் காணும் “இளைஞர்களின் இதயக்கனிக்கு” வாழ்த்துகள். தன் பேரை வெளியே சொல்லும் எந்த கொண்டாட்டங்களும் வேண்டாமென்று கேட்டுக் கொண்டதால் பெயர் போடவில்லை. யாரென்று தெரிந்தவர்கள் வாழ்த்திக்கோங்கப்பா.

பசங்களுக்கு ஆண்ட்டிகள் மட்டுமல்ல, அங்கிள் மேலயும் பாசம் ஆதிகம்தான்

Monday, November 9, 2009

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் வார்த்தைகள் வரவில்லை. ஆகவே வார்தைகளற்ற இந்தப் பதிவு. (ம்க்கும்!)

நாளை சந்திக்கிறேன்! (நாளைக்காஆஆஆஆ?)


.

Thursday, November 5, 2009

டாப் டென் மறதிகள்ரொம்ப நாள் கழிச்சு பத்து...

மறதி விஷயத்துல நம்மளை அடிச்சுக்க யாரும் கிடையாது. நம்மளைன்னு சொன்னா உங்களையும் சேர்த்துதான். நாம வழக்கமா மறக்கற பல விஷயங்களை பட்டியல் போட்டா டாப்ல வர்ற பத்து மறதிகள்...

1) ஏதாவது இடங்களுக்குப் போனா செல்ஃபோனை கைல வெச்சுகிட்டு, வர்றப்ப எங்க வெச்சோம்னு பத்து நிமிஷம் தேடிட்டு இருப்போம். கடைசில கையிலயும் இல்லாம, பையிலயும் இல்லாம, கடையிலயும் இல்லாம, காருக்குள்ளயே இருக்கும்.

2) வீட்டுக்குப் போறப்ப வழில இருக்கற கடைல இறங்கி ஏதாவது பொருள் வாங்க வேண்டியிருக்கும். அந்தக் கடையைத் தாண்டிப் போனப்பறமோ, வீட்டு காலிங்பெல்லை அடிக்கறப்பவோதான் அது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கும்.

3) விகடனோ, உயிர்மையோ, மணல்வீடோ படிச்சுட்டு இருப்போம். நல்ல கட்டுரையா இருக்கும். ‘இத இப்படிப் படிக்க்க் கூடாது. சண்டே பால்கனில உட்கார்ந்து பொறுமையா படிக்கணும்’ன்னு அத ஜம்ப் பண்ணீட்டுப் போவோம். அவ்ளோதான். அடுத்த இஷ்யூ வரும்போதுதான் ‘அட.. போன இஷ்யூல அதப் படிக்கலியே’ன்னு ஞாபகம் வரும். வீட்டைப் புரட்டிப் போட்டு, மனைவிகிட்ட திட்டு வாங்கி... ச்சே...

4) அலுவலக வேலையா யார்கூடயாவது எம்.டி.முன்னாடி உட்கார்ந்து ஃபோன்ல பேசிகிட்டிருப்போம். அப்போ கால்வெய்ட்டிங்ல இன்னொரு ஃப்ரெண்டு வருவார். எம்.டி.முன்னாடி எடுக்கவும் முடியாதா.. சரி அப்புறமா கூப்பிட்டுக்கலாம்னு விட்டுடுவோம். அது அவ்ளோதான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கூப்பிட்டு திட்டும்போதுதான் ஞாபகமே வரும். இல்லையேன்னு சமாளிக்கவும் முடியாது...

5) தெரிஞ்சவங்களோட பிறந்தநாள், திருமணநாள்னு குறிச்சு வெச்சிருப்போம். ‘அடுத்த வாரம் வருதா.. ம்ம்.. கூப்பிட்டு வாழ்த்தணும்’னு நெனைப்போம். கரெக்டா அதுக்கு அடுத்த வாரம்தான் ஞாபகத்துக்கு வரும்.

6) ஃப்ரெண்டுகிட்ட ஏதாவது கடன் வாங்கியிருப்போம். பட்ஜெட் போடும்போது அதுமட்டும் எப்படியோ....

7) ‘நாளைக்குக் குளிக்கறப்போ, காலை நல்லா தேய்ச்சுக் குளிக்கணும்’னு நெனைச்சுப்போம். ஆஃபீஸ்ல எப்பவாவது நம்ம காலை நாம பாக்கறப்பதான் அட மறந்துட்டோமேன்னு தோணும்.

8) ஏதாவது குறிப்புகளுக்காக ஆஃபீஸ்ல இணையத்துல உட்கார்ந்து தேடிப் பிடிச்சு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுட்டு, குறிப்பிட்ட மீட்டிங்குக்கு எல்லாத்தையும் வெச்சு கரெக்டா நோட்ஸ் எடுத்து வெச்சுட்டுப் போய் அசத்தணும்னு நெனைச்சுட்டே இருப்போம். கரெக்டா அந்த மீட்டிங்குக்கு போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் அந்தப் பேப்பர்ஸெல்லாம் எங்க வெச்சோம்னு மறந்து போய்த் தேடிட்டே... இருப்போம்.. அதுக்குள்ள...

9) இந்த மாதிரி பதிவுகள் எழுத பத்து பாய்ண்ட்ஸை குறிப்பெழுதி கிறுக்கி வெச்சிருப்போம். கரெக்டா இத எழுதலாம்னு தோணித் தேடும்போது அது கிடைக்காம, ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு ஒம்பது பாய்ண்ட்ஸை எழுதி ஒப்பேத்தீடுவோம். அந்த பத்தாவது பாய்ண்ட் மட்டும்......

Wednesday, November 4, 2009

அவியல் 04.11.09
இந்தப் படத்தில் இருப்பவர்களெல்லாம் யார்?

1) ஆதவனுக்கு டிக்கெட் கிடைக்காமல் வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள்

2) குருவி படம் பார்த்துவிட்டு, டிக்கெட் காசைத் திருப்பிக் கேட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தவர்கள்

3) நமீதாவைப் பார்க்க சென்னை சென்று, பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு நின்று கொண்டிருப்பவர்கள்

விடை கடைசி பாராவில்.

**********************************

ண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.

“எங்கய்யா இருக்க? இன்னும் ஆஃபீஸுக்கு வர்லியா?”

“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”

“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.

இதிலென்ன இருக்கு?

பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!

*********************

ன் தோழி ஒருத்தி தனக்குப் பிறந்த மகளுக்காக ஒரு பெயர் வேண்டுமென்று ரொம்ப நாளாக செலக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு சீரியலில் வந்த (செல்வி?) கேரக்டர் ஒன்றின் மஹிமா என்ற பெயர் குடும்பத்தில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. அதையே தேர்வு செய்திருக்கிறார்கள். பெயர் வைப்பதற்கு சில நாட்களுக்கு முன், அந்த சீரியலில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் காட்டியிருக்கிறார்கள். உடனேயே எல்லாரும் கெட்ட சகுனமாக நினைத்து பேரை மாற்றிவிட்டார்களாம்! சீரியல்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.

****************************************

நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். எப்போதாவது நானும் எடுப்பேன். அரைமணிநேரம் பேசுவோம். கடைசியில் சொல்லுவார்.. “சரி..சரி.. பிஸியா இருக்கீங்க போல... நீங்க எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்பச் சொல்லுங்க.. கொஞ்சம் பேசணும்”

‘கொஞ்சம்’ பேசணுமா? அப்ப அரை மணிநேரம்கறது ‘கொஞ்சம்’கூட அல்லவா உங்களுக்கு?’ என்று நினைத்துக் கொள்வேன்!

*****************************
சில நாட்களுக்கு முன் நண்பர் செல்வேந்திரன் ஒரு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார்.

I'm happy to inform that my bike is crossing 10000 kilometers today. I take this opportunity to convey my sincere thanks to Honda company, Ministry of Transport, Road contractors, Indian Oil Corporation, Hindustan Oil Corporation and Mechanic Murugesan.

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா...


***************************

கீழே சில கவிதைகள். எழுதியது நானல்ல.. என் வலையில் போட்டுக் கொள்ள பிரபலம் ஒருவர் எழுதியது. யாரென்று கண்டுபிடியுங்களேன்...


ஏறுவரிசை - இறங்குவரிசை

அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!

----------------------

கருணை

எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!

--------------------------

போதனை

நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!

--------------------------

அதிகப்பிரசங்கம்

இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!

----------------------------

முரண் முக்தி

இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.

-----------------------
அவதார புருஷன்

கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!

------------------------

வேதாந்த விவாதம் 2009

அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரதில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.

----------------------------

ஐங்கரன்


பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?

----------------------------

மேலே படங்களில் நீங்கள் கண்டதெல்லாம் நான் சொன்ன ஆப்ஷன்களில் ஏதுமில்லை. அவர்களால் ஆதவனையோ, குருவியையோ, நமீதாவையோ பார்க்க முடியாது. அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே...

மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைப் படியுங்கள்.

(இந்தத் தகவலை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பர் குமார் சுப்ரமணியனுக்கு நன்றி!)


.

Tuesday, November 3, 2009

பி-10, பி.கா.-10.,

திமூலகிருஷ்ணன் கூப்பிட்டிருந்தார் ‘ஒரு தொடர்விளையாட்டு இருக்கு.. உங்களைக் கூப்பிட்டிருக்கேன்’ ன்னு. போய்ப்பார்த்தா அது தொடர் விளையாட்டு அல்ல. தொடர் பதிவு. ஆதி இதைத் தொடர்பதிவுன்னே குறிப்பிட்டிருக்காரு! இதை ஏன் எல்லாரும் விளையாட்டுங்கறாங்க-ன்னு யோசிச்சப்போ ‘ஒருவேளை பிடிக்காதவங்க்கிட்டேர்ந்து ஆட்டோ வந்தா ‘ஹி..ஹி.. ச்சும்மா விளையாட்டுக்குச் சொன்னேங்க’ன்னு சொல்லித் தப்பிச்சுக்கறதுக்காகன்னு நெனைக்கறேன். நம்மதானே இந்தமாதிரியெல்லாம் பயப்படுவோம், மாதவராஜ் சாரெல்லாம் இந்த மாதிரி எத்தனை ஆட்டோ பார்த்திருப்பாரு.. அவரும் இதை விளையாட்டுன்னு ஏன் குறிப்பிட்டாருன்னா ஒருவேளை அவரே குறிப்பிட்ட மாதிரி குழந்தைத்தனமா யோசிக்கறதாலகூட இருக்கலாம். குழந்தைத்தனமானது எல்லாமே விளையாட்டுதானே!

ம்ம்..எப்படியோ ஒரு பாரா கடத்தியாச்சு.. இந்த மாதிரி ஏதாவது கிறுக்கீட்டே வந்து, டக்னு PASSன்னு இந்தப் பதிவைத் தள்ளிவிட முடியாதான்னு யோசிக்கறேன். என்னாத்துக்கு பிடிக்காதவங்க இவங்கன்னு சொல்லி ஒரு சிலர்கிட்ட வாங்கிக்கட்டிக்கணும்னு தோணுது. ஆனா ஆதி தெளிவா நாளைக்குப் பதிவு போடலைன்னா அப்பறம் பேச்சு வார்த்தையே கிடையாதுன்னுட்டாரு. அதுனால என்ன சல்ஜாப்பு சொன்னாலும் எழுதித்தான் தீரணும்...

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

என் பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)


1.அரசியல் தலைவர் (யாருங்க எடுத்த ஒடனே இந்தக் கேள்வியைக் கொண்டு வந்தது..? பாருங்க.. கைகாலெல்லாம் ஒதறுது.. ச்சே...)

பிடித்தவர் : நல்லகண்ணு. பிடிக்காதவர்: விஜய.டி.ராஜேந்தர்

2.எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன் பிடிக்காதவர் : அனுராதா ரமணன்

3.கவிஞர்
பிடித்தவர் : வாலி பிடிக்காதவர் : ரமேஷ்வைத்யா

4.இயக்குனர்
பிடித்தவர் : கே.எஸ்.ரவிகுமார் பிடிக்காதவர் : பேரரசு (இதுல விக்ரமனுக்கும் இவருக்கும் பெரும் போட்டியே நடந்தது. .000001 மார்க்குல இவரு லிஸ்ட்ல வந்துட்டாரு!)

5.நடிகர்
பிடித்தவர் : ரஜினிகாந்த் பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த்

6.நடிகை
பிடித்தவர் : நயன்தாரா பிடிக்காதவர் : ஓய்.விஜயா

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா பிடிக்காதவர் : எஸ்.ஏ.ராஜ்குமார் (ல...ல..ல.லா...)

8. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி ப்ராடக்ஸ் சாந்தி துரைசாமி பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் ராஜரத்தினம் (வாடிக்கையாளர்களை மதிக்காமைக்கு)

9. அரசு அதிகாரி
பிடித்தவர் : கலெக்டர். ராதாகிருஷ்ணன் பிடிக்காதவர் : வால்டர்.தேவாரம்

10. சின்னத்திரை நட்சத்திரம்
பிடித்தவர் : அனுஹாசன் பிடிக்காதவர் : பூஜா (எப்பவுமே பபுள்கம்மை மென்னுகிட்டே திரிவாங்களே அதுனாலயே பிடிக்காது)

இதைத் தொடர நான் அழைப்பது:

1. இனியவன் உலகநாதன்
2. துக்ளக் மகேஷ்
3. நர்சிம்
4. கார்க்கி
5. முரளிகுமார் பத்மநாபன்


.

Monday, November 2, 2009

ஆள விடுங்க சாமிகளா....

ரவணனுக்கு வழித்தடங்களை ஞாபகம் வெச்சுக்கறதுன்னா அவ்ளோ கஷ்டம். கார்ல எப்பவுமே தமிழ்நாடு, இந்தியா மேப் வெச்சுகிட்டுதான் சுத்துவான். பலதடவை, அவன் ஆஃபீஸுக்கே அட்ரஸ் கேட்டுத்தான் போவான். ஆனாலும் அவனையே யார்கிட்டயும் வழி கேட்க்கூடாதுன்னு முடிவெடுக்க வெச்சது அவனோட ஊட்டி ட்ரிப்.

குடும்பத்தோட ஊட்டி போனான் சரவணன். ஊட்டியில் கொடுமையான விஷயம் வழித்தடம் கேட்கறது. கேட்டா ஊட்டிய பத்தி ஒனக்கென்ன தெரியும்ங்கற மாதிரியேதான் பதில் சொல்வாங்க. ஒரு வளைவுல ரோடு ரெண்டா பிரியுதே-ன்னு நிறுத்தி ஒரு நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர் போட்டவர்கிட்ட (ஊட்டில ஸ்வெட்டர் போட்டிருந்தா மாக்ஸிமம் அவர் உள்ளூர்க்காரரா இருப்பார். அதுவும் நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர்!) ‘ஊட்டி நேராவா?”ன்னு கேட்டான் சரவணன்.

”இல்ல ரைட் டர்ன் எடுத்துப் போங்க”ன்னாரு. சரி.. ஒரு பொது அறிவுக்காக இருக்கட்டுமேன்னு “நேராப் போனா எங்க போகும்?”ன்னு கேட்டான் இவன்.

அவ்ளோதான்.. அதென்னவோ ராணுவத் தடவாளம் இருக்கற ரகசிய ரூட்டோ என்னமோ.. உடனே மூஞ்சி அவருக்கு கடுமையா ஆகிடுச்சு... “ஹலோ நீங்க எங்க போகணும்?”ன்னு கேட்டார். சரவணனுக்கு டரியலாய்டுச்சு. ஏதாவது தப்பா கேட்டுட்டோமோன்னு நடுங்கீட்டே.. “ஊ..ஊட்டிதாங்க போகணும்”னான்.

“அதான் நேராப் போனா போகாதுன்னு சொல்லீட்டேன்ல? ரைட்ல போங்க”

இவன் விடல.. “இல்லீங்க... இந்த ரூட் எங்க போகும்ன்னு...”

“ஊட்டிதானே போகணும் நீங்க? ஊட்டிதானே? போங்க.. ரைட் எடுத்து போன்னா போய்யா”ன்னு சொல்லிகிட்டே பக்கத்துல இருந்தவர்கிட்ட “இப்படிப் போனா அங்கியும் இங்கியும் சுத்தும்.. இதெதுக்கு கேக்கறான் அவன்? ரைட்ல போன்னா போக வேண்டியதுதானே?”ன்னு முனகினார். இவன் பொண்டாட்டி இவனைப் பார்த்து.. “சரி.. சரி.. காரைத் திருப்புங்க”ன்னு சொல்லவே. ‘ங்க’ – ‘ய்யா’வாய்டுச்சு ‘டா’வாகறதுக்குள்ள போயிடலாம்னு திரும்பீட்டான்.

அதே மாதிரி ஒருத்தரைக் கேட்டா அவர்கூட இருக்கற ரெண்டு மூணு பேர் கூட்டா சேர்ந்து கும்மியடிச்சு பதில் சொல்லி குழப்பறது-அடுத்த நாள்- ஊட்டிக்குள்ள இன்னொரு இடத்துல நடந்தது.

பைகாரா ஃபால்ஸுக்குப் போகணும் முடிவு பண்ணினாங்க. ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்ததும் காரை ஓரங்கட்டி நிறுத்தி இறங்கிப் போய்க் கேட்டான்.

“சார் பைகாரா ஃபால்ஸ் எப்படிப் போகணும்?”

“பை காரா?”

“ஆமாங்க பைகாராதான்”

“இல்ல... பை காரா?”

-இதென்னடா வம்பாப்போச்சு.. “பைகாராதாங்க”

“ஐயோ.. கார்ல போறீங்களான்னு கேட்டேன்..”

‘அடக் கொடுமையே By Carஆ-ங்கறதயா அப்படிக் கேட்டான்’ னு நெனைச்சுட்டு ‘ஆமாம்’னான்.

“இதே ரூட்ல நேராப் போனீங்கன்னா...” ன்னு ஆரம்பிச்சான். ‘ஊட்டில எல்லா ரூட்டுமே வளைஞ்சு வளைஞ்சுல்ல போகும்.. அதெப்படி நேராப்போறது’ன்னு குதர்க்கமா நெனைச்சவன் “சொல்லுங்க”ன்னான்.

“சிக்னல் ஒண்ணு வரும்.. அந்த சிக்னல்லேர்ந்து ரைட்ல போகக்கூடாது... லெஃப்ட்ல போனீங்கன்னா”

-ரைட்ல போகக்கூடாதுன்னா அத ஏன் சொல்லணும்? நேரடியா லெஃப்ட்ல போன்னு சொல்ல வேண்டியதுதானே??

“ரோடு ரெண்டா பிரியும்.. அதுலயும் லெஃப்ட் பிடிச்சு போங்க.. 24 கிலோமீட்டர்.. பைகாரா வரும்”

ஓரளவு இதை மனதில் வைத்துக் கொண்டு திரும்பிட்டான்... “சார்..” என குரல் கேட்டது... பார்த்தா அவனுக்கு வழி சொன்னவரோடு இன்னொருவர் நின்று கொண்டிருந்தார். “எங்க போகணும்?”

“பைகாரா”

“நேராப் போய் லெஃப்ட்ல போங்க”

அதற்குள் முதலாமவர் “நீ சொல்றது சிக்னலுக்கு முன்னாடி வர்ற லெஃப்ட்.. சிக்னல்ல லெஃப்ட் போனாத்தான் கரெக்டா வரும்”

“இல்லடா... இந்த ரூட்ல சிக்னலுக்கு முன்னாடி எங்கடா லெஃப்ட் வருது?”

“ஆமா வருதுல்ல” – இது புதிய குரல். அவர்களோடு இன்னொருவரும் சேர்ந்திருந்தார். மூணாவதா இன்னொருத்தரா? கடவுளே..

“யோவ்.. இந்த ரோட்ல எங்கடா லெஃப்ட் வருது?”

“நம்ம கிறிஸ்டி வீடு இருக்குல்ல? அதுக்கு அடுத்ததா....”

“கிறிஸ்டியா?.. ஆமா.. அவ ஊர்லேர்ந்து லீவுக்கு வந்திருக்காளாமே?”

சரவணனுக்கு கடுப்பாச்சு.. இருந்தாலும் கிறிஸ்டிங்கற பேர் பிடிச்சிருந்தது. அதுனால பொறுமையா நின்னுட்டிருந்தான். கிறிஸ்டி ஏர் ஹோஸ்ட்ரஸா இருக்காங்க. இப்ப ஏதோ லீவு போலிருக்கு. வந்திருக்காங்க.. இவங்க மூணுபேரும் அடுத்தநாள் கிறிஸ்டி வீட்டுக்கு மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு போகப் போறாங்க. ஒருவழியா எல்லாம் முடிவானப்பறம்தான் ஒருத்தன் அட்ரஸுக்காக நிக்கறாங்கறதே அவங்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

“நீங்க என்ன பண்றீங்க....”

“நான் கோவைல மொபைல் ஷாப் வெச்சிருக்கேன்.. க்ளாட் டு மீட் யூ.”ன்னான் சரவணன்.

“அதில்லீங்க.. இப்ப என்ன பண்றீங்க..”

“இப்ப வீக் எண்ட்க்காக ஊட்டி வந்திருக்கேன்..”

“ஐயோ கடவுளே.... பேச விடுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா.. நேராப் போயி..”

“ஒண்ணும் பண்ணல.. கெளம்பறேன்” னான் இவன்.

அதுக்குள்ள பின்னாடிலேர்ந்து இன்னொரு குரல் “நீங்க எங்க போகணும்க”ன்னு கேட்டது. ரஜினி படமா இருக்கேன்னு (எங்கேயோ கேட்ட குரல்) திரும்பினான் சரவணன்.

நேத்து எண்டராகும்போது ஊட்டிக்கு ரைட்ல போகச் சொன்ன நேவிப்ளூ ஸ்வெட்டர் பார்ட்டி!

‘ஐயோ ஆள விடுங்கப்பா’ன்னு ஓடி வந்தவன்தான். அதுக்கப்பறம் யார்கிட்டயும் வழியே கேட்கல. அங்கங்க இருக்கற போர்டைப் பார்த்து போய்ட்டே இருந்தான்!


.