Monday, January 28, 2013

அவியல் 28.01.2013

நேற்றைய நாள் இனிய நாள்.

காலையில் நண்பர் ஜோதிஜி அவர்களின் ‘டாலர் நகரம்’ புத்தக வெளியீடு. பணி இருந்ததால் தாமதமாகத்தான் போனேன். எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான ஞாநி உட்பட பலர் வந்திருந்தார்கள்.நிகழ்ச்சி முடிந்து ஞாநி அவர்களோடு பேசிக் கொண்டு வந்தேன். ஞாநி அவர்களுக்கு என்னைப் போன்றவர்கள் தோழமையாகப் பேசும்போது  தோளில் கைபோட்டபடி பேசுவது வழக்கம். அப்போது என் நண்பன் சௌந்தர் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.

‘என் நண்பனுக்கு ஒரு சந்தேகம் இருக்குங்க. அதெப்படி இவ்ளோ தைரியமா எழுதறீங்க? சிலர் செஞ்சது தவறுன்னா, தைரியமா கேட்டுடறீங்க. யாரைப் பற்றி எதிர்ப்பு தெரிவிக்கும்போதும்  பயமே இருக்காதா?’

அதற்கு இரண்டு காரணம் இருக்கு என்று சொல்லி அவர் சொன்ன இரண்டாவது காரணம் முக்கியமானது:

“உங்க நண்பர் உட்பட பலருக்கு இருக்கும் பயம் அதிகமானது. அதுனால நான் இயல்பா விமர்சிக்க வேண்டியவைகளை விமர்சிக்கறது, அவங்களுக்கு ரொம்ப தைரியமா பண்ற மாதிரி தெரியுது”

(முதல் காரணம்: ‘கொஞ்சம் பரவலா ஃபேமஸானவனை எதிர்த்தா அவங்களுக்குதான் நஷ்டம்’)

மாலை திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் சாதாரண வாசகரைப் போல ஜோல்னாப்பையோடு சுற்றிக் கொண்டிருந்தார். உமாவை அறிமுகப்படுத்தி ‘உங்க தீவிர வாசகி’ என்றபோது, மிகவும் உரிமையோடு ‘ஏன்மா காலைல கூட்டத்துக்கு வர்ல?’ என்று கேட்டார்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்.

** ** ** ** ** ** * ** **

மாலை கோபாலகிருஷ்ணன் அவர்களது மணல்கடிகை மற்றும் கவிஞர். மகுடேஸ்வரன் அவர்களது எழில் நலம் புத்தகங்கள் குறித்த கலந்துரையாடலை சேர்தளம் சார்பில் தலைவர் வெயிலான் ஏற்பாடு செய்திருந்தார். சுவாரஸ்யமான நிகழ்வாக அமைந்தது. அதில் அரங்கசாமி கேட்டுக் கொண்ட ஒரு வேண்டுகோளை பதிவு செய்தே ஆகவேண்டும்.

‘புத்தகம் படிக்கறவர்கள் தயவு செய்து, கொஞ்சமேனும் அதைப் பற்றிய விமர்சனத்தை இணையத்தில் பதிவு செய்யுங்கள். என்ன புத்தகம் படிக்கலாம் என்று இந்நாளைய வாசகர்கள் குழம்பும்போது அவர்கள் இணையத்தையே நாடுகிறார்கள். இப்போது மணல்கடிகை குறித்து எவ்வளவு பேசினோம். ஆனால் இணையத்தில்கூட இவ்வளவு விமர்சனங்கள் இல்லை’ என்றார்.

Point Noted Sir!

** ** ** ** ** ** ** **

திருப்பூரில் பத்தாவது புத்தகக்கண்காட்சி. முதல்நாளே சென்று சுஜாதாவின் ஒரு புத்தகத்தை வாங்கிக் கணக்கைத் துவங்கினேன். இன்றைக்கு மீண்டும் சென்று பார்வையிட்டேன்.

நல்ல கூட்டம். உள்ளே போகும் வழியிலேயே அப்பளம், பஜ்ஜி ஸ்டால் இருப்பதால் உள்ளே போக முடியாத அளவு கூட்டம். இன்றைக்கு ஞாயிறென்பதால் கூட்டமா என்னவென்று தெரியவில்லை.

நான் வாங்கிய புத்தகங்கள்:

1.

வேண்டாம். ஏற்கனவே சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போக முடியாத கடுப்பில் இருந்த என்னை, ‘இதுவாங்கினேன்..அது வாங்கினேன்’ என்று பலரும் ஸ்டேட்டஸும், ட்விட்டும் போட்டு கடுப்படிக்க,

படிப்பதற்காக புத்தகம் வாங்குகிறவர்கள், அவற்றைப் படித்து முடித்த பின்னரே அதைப் பற்றிப் பேசுவார்கள்’ 

என்று ட்வீட்டி விட்டேன். இப்போது நானே அடுக்கினால் சண்டைக்கு வந்துவிடுவார்கள். படித்துவிட்டு எழுதுகிறேன்.

** * ** ** ** ** ** ** 

பேருந்தில் உடுமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் நானும் என் சகதர்மிணி உமாவும். ஓட்டுனர் அருகே உள்ள இருவர் அமரும் சீட். அவர் ஜன்னலோரம் இருக்க, நான் இந்தப்பக்கம். 

பல்லடம் வந்ததும், உமா சொன்னார்: 'நீங்க இந்தப்பக்கம் வந்துக்கோங்க'

நான்: 'ஏன்?'

'நிறைய லேடீஸ் ஏர்றாங்க பாருங்க'

நான்: "ஹி.. ஹி.. எனக்கொண்ணும் ப்ரச்சினையில்லப்பா"

"உங்களுக்கும் பிரச்சினையில்லை. அவங்களுக்கும் பிரச்சினையில்லை. பிரச்சினை எனக்குத்தான். மரியதையா வாங்க இந்தப்பக்கம்!"

ஙே!


** ** ** ** **

நண்பருக்கு கார் வாங்க வேண்டி, அதுபற்றி விசாரிக்கச் சென்றிருந்தோம். அவர் ஏற்கனவே தன்னிடம் இருந்த காரை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டால் எவ்வளவுக்கு விற்கும் என்று கேட்டார்.

சேல்ஸ்மேன் சொன்ன விலை கேட்டதும் அதிர்ச்சியானார்: ‘இன்னும் முழுசா ஒரு வருஷம்கூட ஆகலைங்க. 15000 கிலோமீட்டர்கூட தொடல. இவ்ளோ கம்மியா கேட்கறீங்களே?

சேல்ஸ்மேன்: ‘காரை ஷோரூமை விட்டு ஒருவாட்டி வெளில எடுத்தாலே அம்பதாயிரம் கம்மியாகிடும் சார்”

நான் குறுக்கிட்டு ஷோரூமில் இருந்த புதுக்காரை காட்டி, “அப்ப இந்தக் காரை ரெண்டுவாட்டி வெளில எடுத்துட்டுப் போனோமே.. ஒருலட்சம் கம்மியா இதத்தருவீங்களா?

யாருகிட்ட!


** ** ** ** ** ** **

சன் டிவியில் குட்டீஸ் சுட்டீஸ் நேற்று கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம்  கலாய். (எப்படிடா அஞ்சரை மணிக்கு கூட்டத்துக்கு போய்ட்டு அதுவும் பார்த்த?’ன்னு கேட்கக்கூடாது. ரெகார்ட் பண்ணிப் பார்த்தேன்:)

ஹீதா என்றொரு சுட்டிப்பெண் கலக்கு கலக்கிவிட்டார். நெட்டில் கிடைத்தால் தேடிப் பாருங்கள். காக்கா வடைக் கதையை அவள் சொன்ன விதம்.. அழகு!

அதிர்ச்சி:

போகிற போக்கில் ரீத்து என்ற குழந்தையும் (இரண்டு, இரண்டரை வயதிருக்கும்) இமான் அண்ணாச்சியும் பேசிக் கொண்டது:

இமான்: ’உங்க வீட்ல உங்கம்மா எதுக்கு உன்னை அடிப்பாங்க?”

ரீத்து: ‘நான் தரைல எண்ணையக் கொட்னா அடிப்பாங்க”

“அப்பா என்ன பண்ணினா அம்மா அடிப்பாங்க?”

“அப்பாவ ‘நீல்லாம் ஒரு மனுசனா’ன்னு கேட்பாங்க அம்மா”

“அப்பா என்ன பண்ணுவாரு அப்படி?”

“அப்பா அம்மாவை அடிப்பாங்க. பெல்டால அடிப்பாங்க.

அண்ணாச்சி அதிர்ச்சியாகப் பார்த்தபடி, “அம்மா என்ன பண்ணுவாங்க”

“அம்மா வந்து...., அப்பா கழுத்தைப் புடிச்சு அடிச்சுடுவாங்க”

அமர்ந்து கொண்டிருக்கும் அம்மா ஹஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா என்று சிரிக்கிறார்.

அண்ணாச்சி” ‘ஓ... அதான் உங்க அப்பா வர்லியா இங்க?”

குழந்தை: “ஆமா.. அவரு வேற வீட்டுக்குப் போய்டுவாரு”

என்னாங்கடா இது? குழந்தைகள்கிட்ட பொதுவுல கேட்கணுமா இதை? அட்லீஸ்ட் எடிட் பண்ணியாவது போடலாமே?

என்னமோ போங்கப்பா!

******

Wednesday, January 23, 2013

பாதுகாப்பு

சென்னை சென்று கொண்டிருந்த இரயிலில், ஈரோட்டில் ஏறினார் அந்த நடுத்தர வயதுக்காரர். இனிஷியல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஓர் அரதப்பழைய சூட்கேஸ் கையில் இருந்தது. எனக்கெதிர் சீட்டை ஆக்ரமித்தவர், இடுப்பிலிருந்து ஓர் ஒற்றைச் சாவியை எடுத்து, சூட்கேஸைத் திறந்தார். 

ஒரு நீஈஈஈளமான சங்கிலி. அதை எடுத்து வைத்தவர், மீண்டும் சூட்கேஸினுள்ளே கைவிட்டு எதையோ தேடினார். அது அகப்பட்டதை அவர் புன்னகை சொன்னது. இன்னொரு குட்டி சைஸ் சங்கிலி. 

இப்போது அந்தக் கம்பார்ட்மெண்டிலிருந்த ஏழு ஜோடிக் கண்களும் அவர்மீது நிலைத்திருந்தன. எல்லோரையும் ஒரு சுற்றுப் பார்த்தவர், மீண்டும் சூட்கேஸை முழுவதும் திறக்காமல் உள்ளே கைவிட்டு எதையோ தேடினார். இப்போது வந்தது ஒரு மீடியம் சைஸ் பித்தளை நம்பர் பூட்டு. அடுத்ததாக மீண்டுமோர் தேடலில் வந்தது முன்னதைவிடக் குட்டி சைஸ் பூட்டு.

இப்போது, எடுத்த எல்லாவற்றையும் பொறுமையாக சீட்டில் வைத்தார். சூட்கேஸைப் பூட்டினார். சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று திறக்க முயற்சித்து சோதித்தார். சாவிக்கொத்து ஏதுமின்றி இருந்த பட்டையான அந்த சூட்கேஸின் சாவியை கையிலெடுத்தார்.

அணிந்திருந்த சட்டையை மார்புவரை மேலேற்றி விட்டுக் கொண்டார். இப்போது அவரது இடுப்பில், வேட்டியைச் சுற்றிக் கட்டியிருந்த ஐந்து இன்ச் அகலத்தில் இருந்த பெல்ட் பளிச்சென்று தெரிந்தது. பச்சையும் மஞ்சளுமாய் இருந்த அந்த பெல்டில் ஆங்காங்கே ப்ரஸ் பட்டன்களுடன் சின்ன, பெரிய சைஸில் பாக்கெட்கள்.

அதில் ஒரு சின்ன சைஸ் பாக்கெட் பட்டனைத் திறந்து, கையிலிருந்த சூட்கேஸ் சாவியை உள்ளே வைத்தார். ப்ரஸ் பட்டனை அழுத்தி மூடினார். மூடிய பிறகும் சாவி இருக்கிறதாவென தடவிச் சரிபார்த்துக் கொண்டபிறகு சட்டையை இறக்கி விட்டார்.

கம்பார்ட்மெண்டில் இருந்த மற்றவர்கள் கொட்டாவி விட்டபடியே இவரிடமிருந்து கவனத்தை எடுத்திருந்தார்கள். நான் மட்டும் அவரையே சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சீட்டில் இருந்த பெரிய சைஸ் சங்கிலியை எடுத்தார். சூட்கேஸைச் சுற்றி ஆங்காங்கே இருந்த இடைவெளிகளில் அதைச் செலுத்தினார். பிறகு சூட்கேஸைக் கீழிறக்கி சீட்டின் கீழே செலுத்தினார். சங்கிலியின் இரு முனைகளையும் ஒரு கம்பியில் செலுத்தினார். சீட் மேலிருந்த மீடியம் சைஸ் பூட்டால் இரு முனையையும் இணைத்துப் பூட்டினார். 

இப்போது சின்ன சைஸ் சங்கிலி. இதை என்ன செய்யப்போகிறார் என்று ஆவலாய்ப் பார்த்தேன். பெரிய சைஸ் சங்கிலியின் இரு முனைகளிலும் இருந்த வளையத்தில் அதைச் செலுத்தி, சின்ன சைஸ் பூட்டால் அதையும் பூட்டினார். இரண்டுமே நம்பர் பூட்டுக்கள். அந்த இரண்டாவது சங்கிலியின் செயல்பாடு என்ன என்பது எனக்குப் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

இப்போது எழுந்தவர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே சீட்டில் அமர்ந்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி சிரித்தார்.

"எவ்ளோ கவனமா இருக்க வேண்டிருக்கு தம்பி" என்றார்.

"ஆமாங்க"

"ஒலகம் முந்தி மாதிரி இல்ல. இதை வெச்சுகிட்டு நிம்மதியா தூங்கவும் முடியாது. அதான் இவ்ளோ பாதுகாப்பு" என்று பெருமையாகச் சொன்னார்.

நான் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிரித்து வைத்தேன்.

"தம்பி.. ஒண்ணு சொல்லவா?"

"என்னதுங்க?"

"கிட்ட வாங்களேன்" என்றவர் கொஞ்சம் தணிந்த குரலில், "உண்மையா அந்த சூட்கேஸுல வெறும் ஜட்டி பனியன் துணிமணிதான் இருக்குது. பணம், செல்போனெல்லாம் இதோ இங்க இருக்கு"   என்றார் இடுப்பு பெல்ட்டைத் தட்டிக் காட்டி.

"இந்த மாதிரிலாம் பண்ணினாத்தான் எல்லார் கவனமும் அதுல இருக்கும். நான் நிம்மதியா தூங்கலாம். எப்படீ?" என்றுவிட்டு அவராகவே 'க்கிக்கிக்க்கிக்கி' என்று சிரித்துக் கொண்டார்.'

நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கேட்டேன். 

"இப்ப என்கிட்ட இதச் சொல்லிட்டீங்களே.. ஒருவேளை நான் திருடனா இருந்தா?"

** ** ** ** ** 

காலை ஏழு மணிக்கு இரயில் சென்னையை அடைந்தபோது அவர் யாருடனோ செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது: 

'இல்லல்ல. மதியம்தான் வரமுடியும். போய் நல்லாத் தூங்கணும். நைட்லாம் ஒரு பொட்டுக் கண்ணு மூடல"

** ** *** ** ** 

Monday, January 21, 2013

அவியல் 21.01.2013

லுவலக விஷயமாக ஒரு ஃப்ளக்ஸ் கடைக்குப் போயிருந்தேன். ஏற்கனவே ஒரு வாடிக்கையாளர் அவரது பேனருக்கு டிசைன் சொல்லிக் கொண்டிருந்தார். 

டிசைனர்: “என்ன சைஸ் வேணும்?”

வாடிக்கையாளர்: ‘நேத்து அவரு என்ன சைஸ் போட்டாரு?”

“அஞ்சுக்கு பத்து”

வாடிக்கையாளர் திரும்பி, அவருடன் வந்தவரிடன் “அப்ப நாம எட்டுக்குப் பத்து போடுவமா?” என்று விட்டு “எட்டுக்கு பத்துங்க” என்கிறார்.

டிசைனர் ஃபோட்டோஷாப்பில் சைஸ் செட் செய்துவிட்டு “என்ன படம் போடணும்?”

“நேத்து அவரு போட்ட படத்தை விடக் கலக்கலா இருக்கணும். அதுக்கு பத்திருபது அடி தள்ளித்தான் இந்த ஃப்ளக்ஸ் வைக்கப்போறோம். எல்லாரும் இதப்பத்திதான் பேசணும். அந்த மாதிரி படம் வைங்க”

டிசைனர்: “போனவருஷம் நீங்க ரெண்டு பேரும் ஒரே பேனர்தானே வெச்சீங்க?” என்று கேட்க - வாடிக்கையாளர்

“ஆமாங்க. இந்த வாட்டி நான் தனியா வைக்கறேன். சண்டையாகிடுச்சு. அந்தாளை விட நான் கூட்டம் சேர்த்துக் காமிக்கணும்” என்கிறார்.

இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று யூகிக்க முடிகிறதா?

கட்சியெல்லாம் இல்லை. ஐயப்ப பக்தர்கள் குழுவாம். இந்த வருடம் இரண்டு குழுவாகப் பிரிந்து, அன்னதான விழாவை போட்டியாக நடத்தி, மைக் செட்-பேனர்கள் என்று விளம்பரம் செய்து...

கூடிய சீக்கிரம் நம்மை நாத்திகனாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.


** ** ** ** ** ** ** ** 

மேலே உள்ள பத்தி நான் முகநூலில் எழுதியது. ’ப்ளாக்ல ஏன் அதிகமா எழுதறதில்ல’ என்ற கேள்விகளால் அவ்வப்போது தோன்றுவதை முகநூலிலேயே எழுதிவருகிறேன். (http://www.facebook.com/Parisalkaaran) ஆனால் பலருக்கு முகநூல் கணக்கு இல்லை. என் நண்பனும், வலையுலகின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவருமான வெண்பூ அமெரிக்கவாசியாகிவிட்டாலும் இன்றும் முகநூல் கணக்கு இல்லை அவருக்கு. 

‘நீ பாட்டுக்கு அங்க எழுதினா நானெப்படி படிக்க?” என்று கேட்கிறார்.  ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், டம்ப்ளர் என்று பலபக்கம் எழுதினால் இதுதான் ப்ரச்சினை. ஆக, இனி அங்கிருப்பவற்றையும், இங்கே எழுதியவற்றையும் மாற்றி மாற்றிக் கொட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

** ** ** ** ** ** ** ** ** 


ற்பல வருடங்களுக்கு முன் குமுதம் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் ‘லைட்ஸ் ஆன்’ (சினிமா துணுக்குப் பகுதி) விரும்பிப் படிப்பதுண்டு. வினோத் என்ற புனைப் பெயரில் ரா.கி.ரங்கராஜன் அசத்தலான நடையில் எழுதியிருப்பார். ஒவ்வொரு துணுக்கிலும் ‘நச்’சென்ற ஆங்கிலச் சொற்றொடர்கள் வேறு. 

அவற்றைத் தொகுத்து, தங்கத்தாமரை பதிப்பத்தில் புத்தகமாகப் போட்டதை அறிந்து, விபிபி-யில் வாங்கினேன். படித்தேன். 

எல்லாம் சரி. ஆனால் தொகுத்தவர்கள் ஏன் அவை வெளியான தேதியை (குறைந்த பட்சம் வருஷத்தையாவது) குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. பதிப்பாளர்களின் அசிரத்தையையே அது காட்டுகிறது. உதாரணமாக ஷர்மிலி, ஷாலினியைப் பற்றி விமர்சிப்பதைக் குறித்து ஒரு பத்தியை இப்போது படிக்கும் எனக்கு, ‘அட.. எப்ப நடந்துச்சு இது?’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்தானே? 

ப்ச்! போங்க சார்!


** ** ** ** ** ** ** ** ** ** **


http://www.parisalkaaran.com/2008/11/blog-post_19.html 

மேற்கண்ட போஸ்டில் கடைசி பாராவைப் படிக்கவும். 2008-ல் கார்க்கியை முதன்முதலில் பார்த்தபோது எழுதிய வரிகள். நண்பர்களுக்கு அருகில் இருக்கவேண்டும், வேலைக்கு வேலையும் செய்து, Passionஆன எழுத்தையும் நண்பர்களோடு கலந்து பேசி கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நான் சென்னை சென்று செட்டிலாவேன் என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறேன். ஆனால், இந்தக் கார்க்கி திருப்பூர்வாசியாவான் என்று கனவிலும் நினைத்ததில்லை. 

ஆகியிருக்கிறான். சில காலம் இங்கேதான் என்கிறான். எங்கள் ஊரில், என் தெருவில், என் வீட்டுக்கடுத்த வீட்டில் குடிவந்திருக்கிறான். அடிக்கடி ராஜன் வேறு வந்துபோகிறான். ‘டிஸ்கஷன் வாங்க பாஸ்’ என்று என்னை வேறு கூப்பிட்டு உட்கார வைத்துக் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘என்னாங்கடா நடக்குது?’ என்றால் மையமாகச் சிரிக்கிறார்கள்.

என்னமோ திட்டம் இருக்கு!

** ** ** ** ** ** ** ** ** ** **

ன்னொரு முகநூல் பகிர்வு:

எவரையும் கிண்டல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லைதான். அவரையும்தான். ஆனால் அவரது கிறுக்குத்தனங்களையெல்லாம் இனி ‘தன்னம்பிக்கை’டா என்று ஏற்றி விடுவதிலும் உடன்பாடில்லை.

படம் ஜெயிச்சுடுச்சு. (அப்படித்தானே?) இதுவரை அவர் பொதுவெளியில் செய்த கோட்டித்தனம், கோமாளித்தனத்தையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு - இனி, காமெடியைத் தன் மூலதனமாகக் கொண்டு திரையில் மட்டும் அதையெல்லாம் வெளிப்படுத்தினால் தெலுங்கு ப்ரம்மானந்தம் ரேஞ்சுக்கு அவர் வரமுடியும்.

வாழ்த்துகள் சீனி சார்!

** ** ** ** ** ** ** ** ** ** ** 

ன. 25-ல் இருந்து ஆரம்பமாகப்போகிறது புத்தகக் கண்காட்சி. திருப்பூரில். ஒவ்வொரு வருடம் போலவே மாதக் கடைசியில் ஆரம்பித்து, சம்பளம் கைக்கு வருவதற்கு முன் முடிந்துவிடும். வேடிக்கை பார்க்க மட்டுமே போக முடிகிற சூழலிலிருந்து, திருப்பூர் வலைப்பதிவர்கள் அமைப்பான சேர்தளம் விலக்கு அளித்திருக்கிறது. சென்ற வருடத்திலிருந்து வேடிக்கை பார்க்க மட்டுமல்லாமல், வருபவர்களை வரவேற்கவும், இணையத்தில் எழுதுவது குறித்தும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்க, ஃபோட்டோக்ராஃப் எடுக்க விரும்பும் நேய/ரசிக/வாசகப் பெருமக்கள் தினமும் மாலை சந்திக்க வரலாம். 


** ** ** ** ** ** ** ** ** ** **

மாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். சிக்னலுக்காக முன்னால் சென்ற பேருந்து நிற்கவே, நானும் நிறுத்தினேன். என் பின்னால் கைனடிக் ஹோண்டாவில் வந்து கொண்டிருந்த  வயதானவர் ஒருவர், ‘போங்க சார்’ என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னது, அந்தப் பேருந்தின் வலதுபுறம் இருந்த இடைவெளியில் போகச் சொல்லி. அந்த வழியே சிலர் நடந்து வந்து கொண்டிருக்கவே, ‘ஆளுக வந்துட்டிருக்காங்க சார்’ என்றேன். அவர் கொஞ்சம் கோபமாக, ‘நமக்குத்தாங்க வழி. வந்துட்டிருக்காங்கன்னு நின்னா, நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்’ என்று கோவமாய்ச் சொன்னபடி, என்னைத்தாண்டிச் சென்றார்.


எனக்குக் கடுப்பானது. ‘எப்டிச் சொல்றாரு பாரு? கொஞ்சம் கூட ரோட் சென்ஸ் இல்லாம. அங்க போய் நிக்கத்தானே போறாரு. இல்ல, ‘நமக்குத்தான் வழி’ன்னு ட்ராஃபிக் போலீஸை இடிச்சுட்டே போகப்போறாரா?’ என்று புலம்பினேன்.

உமா சொன்னார்: ‘விடுங்க. வயசானாலே கண்டதுக்கும் கோவம் வரத்தான் செய்யும்”

நான்: “ஆமாமா. கரெக்ட். என்னமா கோவப்படறான் அந்தாளு” என்றதும், உமா மறுபடி சொன்னார்: 

‘நான் அவரைச் சொல்லலைங்க”

ஙே! 

** ** ** ** ** ** ** ** ** **


Saturday, January 19, 2013

சார்பு -சிறுகதை

“ஏங்க கேஸ் புக் பண்ணச் சொல்லி எவ்ளோ நாளாச்சு? இன்னும் பண்லியா?”

"இல்ல”

“நாலு நாளா சொல்லிகிட்டிருக்கேன். ஒரு ஃபோன் பண்ணி புக் பண்ண முடியலயா?”

“கடுப்பைக் கெளப்பாத. எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா? ஒவ்வொரு தடவையும் என்கிட்டயே சொல்லாட்டி என்ன? வீட்லதான் ஃபோன் இருக்குல்ல? கேஸ் புக் எடுத்து, நம்பர் பார்த்து ஃபோன் பண்ணி ஆர்டர் பண்ணிக்கறதுக்கென்ன? இனிமே இதையெல்லாம் சொல்லிகிட்டே இருக்காதே. நீயே பண்ணக் கத்துக்கோ”


----------------------------

“சண்டே என்ன ப்ரோக்ராம்ங்க?”

“தெரியல. வேலை இருந்தாலும் இருக்கும். ஏன்?”

“டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போகணும். கொஞ்சம் திங்க்ஸ்லாம் வாங்கணும்”

“எத்தனை வாட்டிப்பா சொல்றது? ஒவ்வொண்ணுக்கும் நான் வேணும் ஒனக்கு. பஸ் ஸ்டாப் - இதோ - இங்க இருக்கு. ஏதோ ஒரு நாள் மதியம் போனா ஈவ்னிங் வாங்கீட்டு வந்துடலாம். எனக்கு ஆஃபீஸ்ல ஏகப்பட்ட வேலை இருக்கு. என்னையே எதிர்பார்க்காதே”

------------------------

“ஏங்க.. தண்ணி வர்லிங்க”

“ஏன்? என்னாச்சு? மோட்டர் போடலியா?”

“கீழ்வீட்டுக்காரங்க பொங்கல் லீவுக்குப் போய்ட்டாங்க. நீங்க வேற ஆஃபீஸ் போய்ட்டீங்க. இன்னைக்கு மோட்டர் போடல”

“அதான் அன்னைலேர்ந்து சொல்லிகிட்டிருக்கேன். நம்ம டேங்க் எது, லிவரை எப்படிப் பார்த்து திருப்பி வைக்கணும் எல்லாம் சொல்லித்தர்றேன் வா-ன்னு. வேணாம் வேணாம்ன. இப்பப்பாரு. தண்ணியில்லாம... நான் இருக்கறப்ப கரண்ட் இருக்காது. நீயா எதையும் செய்யக் கத்துக்கவே மாட்டியா? ச்சே!”

-----------------------

“அயர்ன் பண்ண வேண்டிய ட்ரெஸ் கட்டைப்பையில வெச்சிருக்கேன். போறப்ப குடுத்துட்டுப் போய்டுங்க”

“எட்டரைக்கு நான் ஆஃபீஸ்ல இருக்கணும். இதையெல்லாம் நாந்தான் பண்ணணுமா?”

“ஏங்க.. அவ்ளோ பெரிய பையை எப்டிங்க கொண்டுபோறது நான்?”

“ஆமா... இவ்ளோ சேரற வரைக்கும் விட்டுட்டு என்னை வேலை வாங்கு. எத்தனை வாட்டி சொல்லீருக்கேன். நாலைஞ்சு சேர்ந்த உடனே, இப்டி பொடிநடையா போய் குடுத்துட்டு வந்துடு.., எனக்கெப்ப நேரமிருக்கும்னு தெரியாதுன்னு. கேட்கறதே இல்ல நீ. நானே எல்லாம் பண்ணணும்... ச்சே”

------------------

“ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே-க்கு வரச் சொல்லிருக்காங்க. வருவீங்கதானே?”

“தெரியல. வேலை எப்டி இருக்கும்னு..”

“தெரியலையா? அப்ப நான் தனியா போகணுமா?”

“ஆரம்பிச்சுட்டியா? தனியா ஒண்ணும் போகவேண்டாம். நிறைய பேர் வருவாங்க பஸ்ல. போய்ப் பழகு”

“டீச்சர்ஸ் எதாவது சொல்லுவாங்க புள்ளைங்களைப் பத்தி. நீங்க வந்து கேட்டா...”

“ஏன் இப்டி பயந்துக்கறே? ஒண்ணும் ஆகாது. ஒரு மீட் நீ தனியாத்தான் போய்ப்பாரு.. என்னையே எதிர்பார்க்காம..”

----------------------

“ஸ்ஸ்ஸ்ஸ்.....”

“அச்சச்சோ.. என்னாச்சுங்க?”

“மொளகாயக் கடிச்சுட்டேன்”

“சீக்கிரம் தண்ணியக் குடிங்க”

“கிச்சன்லேர்ந்தே ஆர்டர் போடு. வா.. வாட்டர் பாட்டிலை வந்து எடுத்துக்குடு. சாப்பிடறப்ப பக்கத்துல வெச்சா என்னவாம்? நானேவா எடுத்துக்க முடியும்?”

அவள் வந்து எடுத்துக் கொடுத்த வாட்டர் பாட்டில், அவனிடமிருந்து ஐந்தடி தூரத்தில் ஒரு ஸ்டூலில் இருந்தது.

--------


Tuesday, January 8, 2013

”டிஷ்”வரூபம்!

மல்ஹாசன்!


உலகசினிமா வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத ஒரு பெயர். என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிலேயே - சிந்தனையில் - நம்மை விட, குறைந்தது ஐந்து வருடங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பவர்களில் ஒருவர். ஏற்கனவே என் அவியலில் குறிப்பிட்டது போல, திருட்டு சிடியை பலரும்  எதிர்த்தபோது, ‘அதையெல்லாம் நாம ஒழிக்க முடியாது. ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க என்ன பண்ணனும்ன்னு யோசிப்போம்’ என்று வெளிப்படையாகப் பேட்டி குடுத்தவர். இந்த உண்மையைப் பேசும் மனோபாவத்தாலேயே திரைத்துறையினர் சிலராலேயே புறக்கணிக்க, விமர்சிக்கப் படுபவர்.
விஷ்வரூபம், டிடிஹெச் (Direct To Home)-ல் வெளியிடப்போகிறார்கள் என்று ஆரம்பித்ததும் பற்றிக் கொண்டது திரையுலகம். அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தது.

இதில், தியேட்டர்காரர்களின் காமெடி தாங்கமுடியவில்லை. இதைச் சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு என்றே எண்ணுகிறேன். காரணம், முடிந்தவரை பார்க்கிற திரைப்படங்களை தியேட்டரில் மட்டுமே பார்க்கிற எண்ணம் கொண்டவன் நான். ஆனால் என்னைப் போன்ற தியேட்டரை நாடிச் செல்லும் ரசிகர்களை, மதிக்கத் தெரியாத தியேட்டர்களே அதிகம். குறைந்த பட்ச சுத்தத்துடன் கழிவறையைக் கூட பராமரிக்காத, கேண்டீன் என்ற பெயரில் எவ்வளவுக்கெவ்வளவு ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியுமோ அவ்வளவு அரைக்கிற, பார்க்கிங்கில் வசூல்ராஜாவாக இருக்கிற இந்தத் தியேட்டர் முதலாளிகள், ‘ஐயோ அம்மா’ என்று குதிக்காத குறையாகக் கத்துகிறார்கள்.

ஐயா சாமிகளே.. ஒன்றும் பயப்படாதீர்கள். நான் கண்டிப்பாக தியேட்டரில்தான் பார்ப்பேன். என் போன்றவர்களின் சதவிகிதமே அதிகம். ஆனால், டிடிஹெச்-ல் ஒளிபரப்பும் புதிய முயற்சியை நீங்கள் வரவேற்றே ஆகவேண்டும். கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சம் Out of the Box சிந்திக்கிற நண்பர்கள் உங்கள் அசோசியேஷனில் இருந்திருந்தால், கமலின் இந்த முயற்சியை இருகரம் நீட்டி வரவேற்றதன் மூலம், விஸ்வரூபம் தியேட்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கலாம். இதை ஓர் அட்டகாசமாக விளம்பர யுத்தியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்! (இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை)

இந்த விஷயத்தில் நான் எழுத நினைத்ததை ட்விட்டர் நண்பர் அஷோக் அட்டகாசமாக எழுதியிருக்கிறார். கீழே பகிர்ந்திருக்கிறேன். படியுங்கள்.

அதற்கு முன்..நான் அக்மார்க் ரஜினி ரசிகன். கமலைக் கொண்டாடுகிறவன் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கிறேன். :-)


இனி அஷோக் எழுதியது:

-------------------------------------------------
மலின் விஸ்வரூபத்தை தியேட்டரில் மட்டும் ரிலீஸ் செய்யாமல் டிடிஎச்-ல் ஒளிபரப்புவது சரியா என இங்கே ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. என் கருத்து, ஒளிபரப்புவது சரியா என்பதைவிட நாம் தியேட்டரில் பார்க்க போகிறோமா, டிடிஎச் மூலம் வீட்டிலா என்று விவாதிப்பதே சரியானதாக இருக்கும் என்பதே.

சினிமா ஒரு ஊறுகாய் வியாபாரம் எனக்கொள்வோம். கமல் என்ற வியாபாரி தனது ஊறுகாயை வழக்கமான அண்ணாச்சி கடையோடு சேர்த்து, டோர்டெலிவரி செய்யும் அம்பானி கடையிலும் விற்க முயல்கிறார். அது வியாபாரியின் வசதி.

வீட்டைவிட்டு வெளியில் வந்து கடைகளில் வாங்க விரும்பாத மேல்தட்டு கூட்டம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கும் தன் பொருள் போய்சேர வேண்டும் என ஒரு வியாபாரி நினைப்பதில் தவறெதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் தெருமுக்கு அண்ணாச்சி கடைகளை மூட வேண்டியதுதான் என்பது அபத்தம். அண்ணாச்சி கடையோ அம்பானி கடையோ மூடப்படுவதற்கு டோர்டெலிவரி சேவை காரணமாக இருக்காது என்பதுதான் எல்லோரும் விளங்கவேண்டியது.

தொலைதூரக் கல்வி துவங்கியதால் ரெகுலர் கல்லூரிகள் மூடப்படவில்லை. கல்லூரிசெல்ல முடியாதவர்களுக்கு துவங்கப் பட்டதுதான் தொலைதூரக் கல்வி. இதுதான் வியாபாரியின் தரப்பிலான சிம்பிள் லாஜிக்.

சரி கடைக்காரர் தரப்பு? 

எந்த ஒரு தொழிலும் காலமாற்றத்திற்கேற்ப இழைந்து கொடுத்தே நிலைத்திருக்கிறது. முன்பு தெருச்சுவற்றில் விளம்பரப் படம் வரையும் அற்புதக் கலைஞர்களின் தற்போதைய நிலையென்ன? கொஞ்சம் புத்திசாலிகள் கணினிவரைகலை  கற்று பிளக்ஸ் பேனர் சுழலில் தப்பிப்பிழைக்கிறார்கள். அப்டேஷன் அவசியம் என்கிறேன். தரமான சேவை வழங்காவிட்டாலோ, கடைக்கு வெளியே அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்றாலோ வாடிக்கையாளர்கள் திசைதிரும்புவது இயல்புதானே. திரும்பும் திசை, திருட்டு ஊறுகாயாக இருப்பதுதான் தொழிலுக்கே வினை.

எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இன்னும் இரண்டே வருடத்தில் இதை கமல் என்ற உள்ளூர் வியாபாரி செய்யாவிட்டாலும் ஹாலிவுட் ஊரிலிருந்து வால்மார்ட் வகையறா வியாபாரிகள் நம்ஊரில் தம் சரக்கை விற்கவருவர், இதே கடைக்காரர்கள் அப்போது எழுப்ப குரலே இல்லாமல் நெரிக்கப்படலாம் (எஃப்டிஐ நினைவில் கொள்க). உள்ளூர் வியாபாரிக்கு உடன்படா கடைமுதலாளிகள் உலக வியாபாரிக்கு கம்பளம் விரிப்பர், வேண்டாவிருப்பாக!

நிற்க..

நுகர்வோராகிய நமது பார்வை எப்படி இருக்க வேண்டும்? ஊறுகாயில் மசாலா குறைவு, உப்பு அதிகம் என விமர்சிக்கும் - விலக்கி வைக்கும் முழு உரிமை காசு கொடுக்கும் நம் எல்லோர்க்கும் உண்டு. அதேபோல், தரமானதாக ஆரோக்யமானதாக இருப்பின் கொண்டாடும் கடமையும்!

நமக்குமுன் இரண்டு தேர்வுகள் வைக்கப்பட்டிருக்கிறது: தியேட்டரா, டிடிஎச்-ஆ. (மூன்றாவதாக ஊறுகாய் டோர்டெலிவரி செய்யவருபவரை இடைமறித்து தாக்கி பிடுங்கித் தின்னும் திருட்டுவிசிடி குணத்தினரை இங்கே விவாதிப்பது வீண்) இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க நமது சௌகரியம். வியாபாரியோ, அவரின் தயாரிப்பை விரும்பும் ரசிக நுகர்வோரோ எதையும் வற்புறுத்தி திணிக்கவில்லை.

கோடியில் ஒரு சாதாரண நுகர்வோனாகிய நான், அண்ணாச்சி கடைக்கு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு, காத்திருப்பு நேரவிரயம் கணக்கில் கொண்டு டோர்டெலிவரி சேவையை விரும்பலாம். அல்லது, கடைக்கு சென்றால் கிடைக்கும் கொசுறு, pleasure of travel, outing சந்தோஷங்களுக்காக அதனை தேர்ந்தெடுக்கலாம். அது எனது நேர - பண - குண வசதியைப் பொறுத்தது.
அதைவிடுத்து டிடிஎச் சரியா தவறா, பிழையா முறையா போன்ற கேள்விகளுக்கு இடமேயில்லை என்றே கருதுகிறேன்.

-------------------------

சரிதானே?

முத்தாய்ப்பாக நம்ம ஆதி தாமிரா ஃபேஸ்புக்-ல போட்ட ஸ்டேட்டஸ்:-


தமிழ் சினிமா தியேட்டர் அசோசியேஷன் மீட்டிங்:

ஓனர்:1- விஸ்வரூபத்தை நாம வெளியிடாம இருந்தா மட்டும் பத்தாது. ஒலகம் பூரா வெளியிடாம இருக்கணும். அதுக்கு எதுனா வழி சொல்லுங்க..

ஓனர்:2- ஒலக தியேட்டர் அசோசியேஷன் ஏதாச்சும் இருக்கா?

ஓனர்:3- இல்ல, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒண்ணொண்ணு இருக்குமோ?

ஓனர்:4- அவங்க ஃபோன் நம்பர் ஏதும் கிடைக்குமா? எப்பிடி காண்டாக்ட் பண்றது? அவங்களையும் நம்ப போராட்டத்துக்கு ஆதரவு கேக்கணுமே..

ஓனர்:5- இந்த மாதிரி விஷயம்லாம் எவனுக்கு தெரியுது? பேசாம கமலுக்கே ஃபோனப்போட்டு கேட்டுருவோமா?

பிறர்: ..ங்ஙே!!!


டேய்.. ஆதி..... சிக்ஸர்யா!

....

Wednesday, January 2, 2013

கி.பி. 2013


பொறந்துடுச்சு!

2012 மாதிரியான சிக்கலான வருஷம் இருந்ததில்லை. (இனி இருக்கும்டா-ங்கறது கேட்குது) . புதுவருஷம்கறது ஒரு ரிஃப்ரெஷ்தான். மத்தபடி அதே வட்டி, வாடகை, திரி, கிஸ்தி எல்லாமே தொடரத்தான் செய்யும்.

நான் சொல்ல வந்தது வேற. இந்த கி.பி.2013, இன்னைக்காக வெச்ச தலைப்பு இல்ல. சுயபுராணம். 

கீழ இருக்கற ஸ்டில் பாருங்க. பெரிசு பண்ணிப் படிச்சுப் பாருங்க.


நான் எழுதி 30.09.1993 குமுதத்துல வந்தது.

அந்த கி.பி. 2013-ஏ வந்தாச்சு. அதை எழுதறப்ப-  நான், இப்படி கணினில எழுதுவேன், ப்ளாக் ஆரம்பிச்சு உங்களையெல்லாம் டார்ச்சர் பண்ணுவேன்னெல்லாம் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டேன். எல்லாம் விதி! ஹும்!

அதை விடுங்க.

2012 - கொடுமையான கடுமையான வருஷம். கேட்ட பலரும் இதையேதான் சொல்றாங்க.

சரி.. அப்படி இருந்தும் வாழ்க்கையை ரசிக்கறது எப்படி? சொல்றேன் கேளுங்க.

----

ங்க ஆஃபீஸ் லஞ்ச் டைம்ல அஞ்சாறு பேர் ஒக்கார்ந்து பேசிகிட்டிருந்தோம். அதுல ஒருத்தர் கறார் ஆசாமி. டீ, காஃபி சாப்பிடமாட்டார். சினிமா பத்தி அதிகமா பேசமாட்டார். சிடுமூஞ்சின்னு சொல்ல முடியாது ஆனா.

சமீபத்திய சினிமாக்கள் பத்தின பேச்சு வந்தப்ப நான் கேட்டேன்:

“யோவ்.. நீ டீ, காபிக்கே வரமாட்ட. சினிமால்லாம் பார்க்கற பழக்கம் உண்டா?கடைசியா தியேட்டர்ல பார்த்த படம் என்ன?”

அவர் கொஞ்ச நேரம் யோசித்து, ‘ஜீவா நடிச்ச படம். பேர் சரியா தெரியல..” என்று யோசித்தார்.

நான், ‘ஈ’யா என்றேன். (‘நான்’ பக்கத்துல கமாவைக் கவனிங்க. ‘நான் ஈ’ அல்ல)

‘இல்லைங்க.. என்று என்னென்னமோ சொன்னார், ஜீவா அதச் செய்வார் இதைச் செய்வார் என்று கிட்டத்தட்ட கமர்ஷியல் படங்களில் ஹீரோ செய்யும் எல்லாவற்றையும் சொன்னார். நான் “வேற எதுனா சொல்லு” என்றதற்கு, ‘அந்தப் படத்துல ஜீவா, ஹீரோயினை லவ் பண்ணுவார்” என்றார். நான் கடுப்பை மறைத்துக் கொண்டே, ‘ஹீரோயின் பேர் என்ன?’ என்றேன். என்னமோ லதாவோ, சுதாவோ சொன்னார்.

“அந்தப் பேர்ல யாருய்யா ஹீரோயின்?” என்று கேட்டதற்கு, ‘படத்துல ஜீவா அப்டித்தான் கூப்டாரு” என்றார். இது வேலைக்காகாது என்று விட்டுவிட்டு கேட்டேன்.

“சரி அதை விடு. அப்ப, நீ புதுப் படமெல்லாம் பார்க்கறதே இல்லையா?”

“ஓ.. பார்ப்பேனே..”

“எப்படி?”

“டி.வி-லதான்”

”டி.வி.லயா? அது வந்து ஆறேழு மாசம் கழிச்சுத்தானே போடுவாங்க? நாங்கேட்கறது புதுப் படம்”

“ஆமாங்க புது படம்தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு ஒரு புது படம் பேர் சொல்லி, ‘அதக்கூட போன வாரம் பார்த்தேன்’ என்றார்.

“ஓ..திருட்டு டிவிடில பார்த்தேன்னு சொல்லு”

“என்னது திருட்டா? போய்யா யோவ்.. காசு குடுத்து வாங்கின டிவிடி. திருட்டு டிவிடியாம்ல” என்றார்.

கூட இருந்தவர்களெல்லாம் சிரிக்கவே, அவர்களையும் ஒரு மாதிரி பார்த்து, முன்னைவிடவும் சீரியஸாக, “நெஜமாய்யா. காசு குடுத்துதான் வாங்குவேன். அதும் மூணு பட டிவிடி அம்பது ரூவா தெரியுமா?” என்றார்.

அதையும் ரொம்பவே சீரியஸாகச் சொன்னார். நாங்களெல்லாம் கொஞ்ச நேரம் திருட்டு டிவிடி என்றால் என்ன என்று விளக்கிச் சொல்லியும் அவர் கேட்டபாடில்லை.

“எங்க - என்ன நடக்குதுன்னெல்லாம் எனக்குத் தேவையில்லை. நான் அத காசு குடுத்துதான் வாங்கறேன். அத திருட்டு-ன்னு சொல்றத ஏத்துக்க முடியாது. நான் வாங்கற எல்லாத்தோட ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தா நான் வாங்க முடியும்?” என்று முடித்துக் கொண்டார்.

--

கொஞ்சம் ஆராய்ந்தால், நம்மைச் சுற்றி இப்படி பல சுவாரஸ்ய மனிதர்களும், சம்பவங்களும் இருக்கத்தான் செய்யும். (மெசேஜ் சொல்ட்டனா?)

அதை உணர்ந்து, ரசித்து வாழ்ந்தால், இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாள்தான். :-)