Monday, January 28, 2013

அவியல் 28.01.2013

நேற்றைய நாள் இனிய நாள்.

காலையில் நண்பர் ஜோதிஜி அவர்களின் ‘டாலர் நகரம்’ புத்தக வெளியீடு. பணி இருந்ததால் தாமதமாகத்தான் போனேன். எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான ஞாநி உட்பட பலர் வந்திருந்தார்கள்.நிகழ்ச்சி முடிந்து ஞாநி அவர்களோடு பேசிக் கொண்டு வந்தேன். ஞாநி அவர்களுக்கு என்னைப் போன்றவர்கள் தோழமையாகப் பேசும்போது  தோளில் கைபோட்டபடி பேசுவது வழக்கம். அப்போது என் நண்பன் சௌந்தர் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.

‘என் நண்பனுக்கு ஒரு சந்தேகம் இருக்குங்க. அதெப்படி இவ்ளோ தைரியமா எழுதறீங்க? சிலர் செஞ்சது தவறுன்னா, தைரியமா கேட்டுடறீங்க. யாரைப் பற்றி எதிர்ப்பு தெரிவிக்கும்போதும்  பயமே இருக்காதா?’

அதற்கு இரண்டு காரணம் இருக்கு என்று சொல்லி அவர் சொன்ன இரண்டாவது காரணம் முக்கியமானது:

“உங்க நண்பர் உட்பட பலருக்கு இருக்கும் பயம் அதிகமானது. அதுனால நான் இயல்பா விமர்சிக்க வேண்டியவைகளை விமர்சிக்கறது, அவங்களுக்கு ரொம்ப தைரியமா பண்ற மாதிரி தெரியுது”

(முதல் காரணம்: ‘கொஞ்சம் பரவலா ஃபேமஸானவனை எதிர்த்தா அவங்களுக்குதான் நஷ்டம்’)

மாலை திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் சாதாரண வாசகரைப் போல ஜோல்னாப்பையோடு சுற்றிக் கொண்டிருந்தார். உமாவை அறிமுகப்படுத்தி ‘உங்க தீவிர வாசகி’ என்றபோது, மிகவும் உரிமையோடு ‘ஏன்மா காலைல கூட்டத்துக்கு வர்ல?’ என்று கேட்டார்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்.

** ** ** ** ** ** * ** **

மாலை கோபாலகிருஷ்ணன் அவர்களது மணல்கடிகை மற்றும் கவிஞர். மகுடேஸ்வரன் அவர்களது எழில் நலம் புத்தகங்கள் குறித்த கலந்துரையாடலை சேர்தளம் சார்பில் தலைவர் வெயிலான் ஏற்பாடு செய்திருந்தார். சுவாரஸ்யமான நிகழ்வாக அமைந்தது. அதில் அரங்கசாமி கேட்டுக் கொண்ட ஒரு வேண்டுகோளை பதிவு செய்தே ஆகவேண்டும்.

‘புத்தகம் படிக்கறவர்கள் தயவு செய்து, கொஞ்சமேனும் அதைப் பற்றிய விமர்சனத்தை இணையத்தில் பதிவு செய்யுங்கள். என்ன புத்தகம் படிக்கலாம் என்று இந்நாளைய வாசகர்கள் குழம்பும்போது அவர்கள் இணையத்தையே நாடுகிறார்கள். இப்போது மணல்கடிகை குறித்து எவ்வளவு பேசினோம். ஆனால் இணையத்தில்கூட இவ்வளவு விமர்சனங்கள் இல்லை’ என்றார்.

Point Noted Sir!

** ** ** ** ** ** ** **

திருப்பூரில் பத்தாவது புத்தகக்கண்காட்சி. முதல்நாளே சென்று சுஜாதாவின் ஒரு புத்தகத்தை வாங்கிக் கணக்கைத் துவங்கினேன். இன்றைக்கு மீண்டும் சென்று பார்வையிட்டேன்.

நல்ல கூட்டம். உள்ளே போகும் வழியிலேயே அப்பளம், பஜ்ஜி ஸ்டால் இருப்பதால் உள்ளே போக முடியாத அளவு கூட்டம். இன்றைக்கு ஞாயிறென்பதால் கூட்டமா என்னவென்று தெரியவில்லை.

நான் வாங்கிய புத்தகங்கள்:

1.

வேண்டாம். ஏற்கனவே சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போக முடியாத கடுப்பில் இருந்த என்னை, ‘இதுவாங்கினேன்..அது வாங்கினேன்’ என்று பலரும் ஸ்டேட்டஸும், ட்விட்டும் போட்டு கடுப்படிக்க,

படிப்பதற்காக புத்தகம் வாங்குகிறவர்கள், அவற்றைப் படித்து முடித்த பின்னரே அதைப் பற்றிப் பேசுவார்கள்’ 

என்று ட்வீட்டி விட்டேன். இப்போது நானே அடுக்கினால் சண்டைக்கு வந்துவிடுவார்கள். படித்துவிட்டு எழுதுகிறேன்.

** * ** ** ** ** ** ** 

பேருந்தில் உடுமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் நானும் என் சகதர்மிணி உமாவும். ஓட்டுனர் அருகே உள்ள இருவர் அமரும் சீட். அவர் ஜன்னலோரம் இருக்க, நான் இந்தப்பக்கம். 

பல்லடம் வந்ததும், உமா சொன்னார்: 'நீங்க இந்தப்பக்கம் வந்துக்கோங்க'

நான்: 'ஏன்?'

'நிறைய லேடீஸ் ஏர்றாங்க பாருங்க'

நான்: "ஹி.. ஹி.. எனக்கொண்ணும் ப்ரச்சினையில்லப்பா"

"உங்களுக்கும் பிரச்சினையில்லை. அவங்களுக்கும் பிரச்சினையில்லை. பிரச்சினை எனக்குத்தான். மரியதையா வாங்க இந்தப்பக்கம்!"

ஙே!


** ** ** ** **

நண்பருக்கு கார் வாங்க வேண்டி, அதுபற்றி விசாரிக்கச் சென்றிருந்தோம். அவர் ஏற்கனவே தன்னிடம் இருந்த காரை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டால் எவ்வளவுக்கு விற்கும் என்று கேட்டார்.

சேல்ஸ்மேன் சொன்ன விலை கேட்டதும் அதிர்ச்சியானார்: ‘இன்னும் முழுசா ஒரு வருஷம்கூட ஆகலைங்க. 15000 கிலோமீட்டர்கூட தொடல. இவ்ளோ கம்மியா கேட்கறீங்களே?

சேல்ஸ்மேன்: ‘காரை ஷோரூமை விட்டு ஒருவாட்டி வெளில எடுத்தாலே அம்பதாயிரம் கம்மியாகிடும் சார்”

நான் குறுக்கிட்டு ஷோரூமில் இருந்த புதுக்காரை காட்டி, “அப்ப இந்தக் காரை ரெண்டுவாட்டி வெளில எடுத்துட்டுப் போனோமே.. ஒருலட்சம் கம்மியா இதத்தருவீங்களா?

யாருகிட்ட!


** ** ** ** ** ** **

சன் டிவியில் குட்டீஸ் சுட்டீஸ் நேற்று கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம்  கலாய். (எப்படிடா அஞ்சரை மணிக்கு கூட்டத்துக்கு போய்ட்டு அதுவும் பார்த்த?’ன்னு கேட்கக்கூடாது. ரெகார்ட் பண்ணிப் பார்த்தேன்:)

ஹீதா என்றொரு சுட்டிப்பெண் கலக்கு கலக்கிவிட்டார். நெட்டில் கிடைத்தால் தேடிப் பாருங்கள். காக்கா வடைக் கதையை அவள் சொன்ன விதம்.. அழகு!

அதிர்ச்சி:

போகிற போக்கில் ரீத்து என்ற குழந்தையும் (இரண்டு, இரண்டரை வயதிருக்கும்) இமான் அண்ணாச்சியும் பேசிக் கொண்டது:

இமான்: ’உங்க வீட்ல உங்கம்மா எதுக்கு உன்னை அடிப்பாங்க?”

ரீத்து: ‘நான் தரைல எண்ணையக் கொட்னா அடிப்பாங்க”

“அப்பா என்ன பண்ணினா அம்மா அடிப்பாங்க?”

“அப்பாவ ‘நீல்லாம் ஒரு மனுசனா’ன்னு கேட்பாங்க அம்மா”

“அப்பா என்ன பண்ணுவாரு அப்படி?”

“அப்பா அம்மாவை அடிப்பாங்க. பெல்டால அடிப்பாங்க.

அண்ணாச்சி அதிர்ச்சியாகப் பார்த்தபடி, “அம்மா என்ன பண்ணுவாங்க”

“அம்மா வந்து...., அப்பா கழுத்தைப் புடிச்சு அடிச்சுடுவாங்க”

அமர்ந்து கொண்டிருக்கும் அம்மா ஹஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா என்று சிரிக்கிறார்.

அண்ணாச்சி” ‘ஓ... அதான் உங்க அப்பா வர்லியா இங்க?”

குழந்தை: “ஆமா.. அவரு வேற வீட்டுக்குப் போய்டுவாரு”

என்னாங்கடா இது? குழந்தைகள்கிட்ட பொதுவுல கேட்கணுமா இதை? அட்லீஸ்ட் எடிட் பண்ணியாவது போடலாமே?

என்னமோ போங்கப்பா!

******

7 comments:

மலர்மகன் said...

final one sema - @kolaiyali

விழித்துக்கொள் said...

பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.

Thamira said...

பின் கழுத்தை வலதுகையால் இறுக்கி, மார்பில் இறுக்கமாய் பரவி முத்தமிட்டு மகிழும் ஒரு ரொமாண்டிக் தருணம் குழந்தைக்காக லேஸாக அப்படி இப்படி சொல்லப்பட்டிருக்கலாம்.

இதுக்குப்போய் டென்ஷனாகிக்கொண்டு..

பெல்டால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு நிச்சயம் குழந்தையை இவ்வளவு ஆசை ஆசையாய் சன்டிவிக்கு தயார் செய்துகொண்டு வருவதற்கெல்லாம் நிச்சயம் நேரமிருக்காது என்பது என் துணிபு.

:-))))

திருவாரூர் சரவணா said...

பொதுவா மனிதர்கள் தாங்கள் இன்னொருவரால் கட்டளையிடப்படுவதை விரும்புவதில்லை.ஆனால்

//////////////"உங்களுக்கும் பிரச்சினையில்லை. அவங்களுக்கும் பிரச்சினையில்லை. பிரச்சினை எனக்குத்தான். மரியதையா வாங்க இந்தப்பக்கம்!"/////////////


இது மாதிரியான தருணங்கள் பெரும்பாலானவர்கள் வாழ்வை இனிமையாக்கும்.

”தளிர் சுரேஷ்” said...

குட்டி சுட்டீஸ் ரசிக்க வைத்தாலும் இப்படி பல அதிர்ச்சிகளை கொடுக்கிறது! அவியல் சுவை சிறப்பு! நன்றி!

இரசிகை said...

nice...

Nat Sriram said...

ஞாநி பத்தி எழுதின பத்தி நல்லாருக்கு..