சென்னை சென்று கொண்டிருந்த இரயிலில், ஈரோட்டில் ஏறினார் அந்த நடுத்தர வயதுக்காரர். இனிஷியல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஓர் அரதப்பழைய சூட்கேஸ் கையில் இருந்தது. எனக்கெதிர் சீட்டை ஆக்ரமித்தவர், இடுப்பிலிருந்து ஓர் ஒற்றைச் சாவியை எடுத்து, சூட்கேஸைத் திறந்தார்.
ஒரு நீஈஈஈளமான சங்கிலி. அதை எடுத்து வைத்தவர், மீண்டும் சூட்கேஸினுள்ளே கைவிட்டு எதையோ தேடினார். அது அகப்பட்டதை அவர் புன்னகை சொன்னது. இன்னொரு குட்டி சைஸ் சங்கிலி.
இப்போது அந்தக் கம்பார்ட்மெண்டிலிருந்த ஏழு ஜோடிக் கண்களும் அவர்மீது நிலைத்திருந்தன. எல்லோரையும் ஒரு சுற்றுப் பார்த்தவர், மீண்டும் சூட்கேஸை முழுவதும் திறக்காமல் உள்ளே கைவிட்டு எதையோ தேடினார். இப்போது வந்தது ஒரு மீடியம் சைஸ் பித்தளை நம்பர் பூட்டு. அடுத்ததாக மீண்டுமோர் தேடலில் வந்தது முன்னதைவிடக் குட்டி சைஸ் பூட்டு.
இப்போது, எடுத்த எல்லாவற்றையும் பொறுமையாக சீட்டில் வைத்தார். சூட்கேஸைப் பூட்டினார். சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று திறக்க முயற்சித்து சோதித்தார். சாவிக்கொத்து ஏதுமின்றி இருந்த பட்டையான அந்த சூட்கேஸின் சாவியை கையிலெடுத்தார்.
அணிந்திருந்த சட்டையை மார்புவரை மேலேற்றி விட்டுக் கொண்டார். இப்போது அவரது இடுப்பில், வேட்டியைச் சுற்றிக் கட்டியிருந்த ஐந்து இன்ச் அகலத்தில் இருந்த பெல்ட் பளிச்சென்று தெரிந்தது. பச்சையும் மஞ்சளுமாய் இருந்த அந்த பெல்டில் ஆங்காங்கே ப்ரஸ் பட்டன்களுடன் சின்ன, பெரிய சைஸில் பாக்கெட்கள்.
அதில் ஒரு சின்ன சைஸ் பாக்கெட் பட்டனைத் திறந்து, கையிலிருந்த சூட்கேஸ் சாவியை உள்ளே வைத்தார். ப்ரஸ் பட்டனை அழுத்தி மூடினார். மூடிய பிறகும் சாவி இருக்கிறதாவென தடவிச் சரிபார்த்துக் கொண்டபிறகு சட்டையை இறக்கி விட்டார்.
கம்பார்ட்மெண்டில் இருந்த மற்றவர்கள் கொட்டாவி விட்டபடியே இவரிடமிருந்து கவனத்தை எடுத்திருந்தார்கள். நான் மட்டும் அவரையே சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சீட்டில் இருந்த பெரிய சைஸ் சங்கிலியை எடுத்தார். சூட்கேஸைச் சுற்றி ஆங்காங்கே இருந்த இடைவெளிகளில் அதைச் செலுத்தினார். பிறகு சூட்கேஸைக் கீழிறக்கி சீட்டின் கீழே செலுத்தினார். சங்கிலியின் இரு முனைகளையும் ஒரு கம்பியில் செலுத்தினார். சீட் மேலிருந்த மீடியம் சைஸ் பூட்டால் இரு முனையையும் இணைத்துப் பூட்டினார்.
இப்போது சின்ன சைஸ் சங்கிலி. இதை என்ன செய்யப்போகிறார் என்று ஆவலாய்ப் பார்த்தேன். பெரிய சைஸ் சங்கிலியின் இரு முனைகளிலும் இருந்த வளையத்தில் அதைச் செலுத்தி, சின்ன சைஸ் பூட்டால் அதையும் பூட்டினார். இரண்டுமே நம்பர் பூட்டுக்கள். அந்த இரண்டாவது சங்கிலியின் செயல்பாடு என்ன என்பது எனக்குப் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்போது எழுந்தவர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே சீட்டில் அமர்ந்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி சிரித்தார்.
"எவ்ளோ கவனமா இருக்க வேண்டிருக்கு தம்பி" என்றார்.
"ஆமாங்க"
"ஒலகம் முந்தி மாதிரி இல்ல. இதை வெச்சுகிட்டு நிம்மதியா தூங்கவும் முடியாது. அதான் இவ்ளோ பாதுகாப்பு" என்று பெருமையாகச் சொன்னார்.
நான் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிரித்து வைத்தேன்.
"தம்பி.. ஒண்ணு சொல்லவா?"
"என்னதுங்க?"
"கிட்ட வாங்களேன்" என்றவர் கொஞ்சம் தணிந்த குரலில், "உண்மையா அந்த சூட்கேஸுல வெறும் ஜட்டி பனியன் துணிமணிதான் இருக்குது. பணம், செல்போனெல்லாம் இதோ இங்க இருக்கு" என்றார் இடுப்பு பெல்ட்டைத் தட்டிக் காட்டி.
"இந்த மாதிரிலாம் பண்ணினாத்தான் எல்லார் கவனமும் அதுல இருக்கும். நான் நிம்மதியா தூங்கலாம். எப்படீ?" என்றுவிட்டு அவராகவே 'க்கிக்கிக்க்கிக்கி' என்று சிரித்துக் கொண்டார்.'
நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கேட்டேன்.
"இப்ப என்கிட்ட இதச் சொல்லிட்டீங்களே.. ஒருவேளை நான் திருடனா இருந்தா?"
** ** ** ** **
காலை ஏழு மணிக்கு இரயில் சென்னையை அடைந்தபோது அவர் யாருடனோ செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது:
'இல்லல்ல. மதியம்தான் வரமுடியும். போய் நல்லாத் தூங்கணும். நைட்லாம் ஒரு பொட்டுக் கண்ணு மூடல"
** ** *** ** **
13 comments:
சரி ஃபைனல் பன்ச் :))
பட்டாசு மாம்ஸ் :))
:)
பாதுகாப்பு - பாத்துங்க அப்பு :)
- ஆகாய மனிதன்
oruthanai thunga vidama pannithu adhai perumaiya solringa?? Enna oru villa dhanam :-) lol... but gud punch
:-))
வழக்கம் போல் இறுதி குத்து அருமை.......
As usual , final punch is nice......
அய்யோ பாவம் அந்த சூட்கேஸ்
நல்ல பாதுகாப்புதான்! நன்றி!
கடைசி வரியில வச்சீங்கலே ட்விஸ்ட். செம.
பாவம் அவரை..தூங்கவிடாம பண்ணிட்டீங்க...
ஆண் பாவம் பொல்லாதது தலைவரே ....
அநியாயமா அவர் தூக்கத்தை
கெடுத்ததை தான் சொல்றேன் ..........
Post a Comment