Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Friday, July 9, 2010

ஜோசப் பால்ராஜ் – பேட்டி

வலையுலகின் கடாமுடா சத்தங்களுக்கு மத்தியில் வலையுலகில் பிறர்க்கினியது செய்தே பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் சிலரை பேட்டி கண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இந்தப் பதிவு..

இன்றைக்கு: ஜோசப் பால்ராஜ். பள்ளி கல்லூரிப் படிப்பில் முதல் பெஞ்ச் மாணவன். பகுதி நேரப்படிப்பில் மேற்படிப்பு முடித்து சிங்கையில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். நண்பர்களுக்கு மட்டுமின்றி நாடுபவர்களுக்கெல்லாம் உதவும் கர்ணன். (எனக்கே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.... )

இருவாரங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்த ஜோசப் பால்ராஜுக்கு கோவை செல்ல வழி காட்டும்விதமாக அவருடன் காரில் சென்றவாறே கண்ட பேட்டி..



ஜோசப் பால்ராஜ்



நீங்க பதிவெழுத வந்தது எப்படி?


2007ல விகடன் வரவேற்பறையில ஆசிப் மீரான் அண்ணாச்சியோட வலைப்பூ அறிமுகத்த படிச்சுட்டு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சேன். மாரநேரிங்கற பேர்ல.


மாரநேரி?


என் ஊரு. தஞ்சாவூர் பக்கத்துல. ஆரம்பிச்ச புதுசுல தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பத்தியெல்லாம் தெரியாது. நானே எழுதி, மெய்ல் மூலமா இரண்டொரு நண்பர்களுக்கு ஃபார்வர்ட் பண்ணுவேன். அப்பறம் சில பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வர்றதப் பார்த்து பரவால்ல என்னோடத எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க போல’ன்னு நெனைச்சுட்டேன்.. அப்பறமா சிங்கப்பூர்ல புதிய பதிவர்களைக் கண்டா ஆதரிச்சு, அரவணைச்சு வழிகாட்டற கோவி. கண்ணணோட பதிவுல பதிவர் சந்திப்பு குறித்து படிச்சுட்டு அவர் கூட போன்ல பேசினேன். அடுத்த வார இறுதியில என் வீட்டுக்கு வந்தாரு. திரட்டிகள் பத்தியும் எப்படி ப்ளாக்கை மார்கெட்டிங் பண்றதுன்னும் சொல்லிக் கொடுத்தார்... அதுக்கு அப்பறம் தொடர்ந்து சிங்கைப் பதிவர் சந்திப்புகள்ல கலந்துகிட்டு ஜோதியில ஐக்கியமாயிட்டேன். அந்த சமயத்துல அபிஅப்பாவுக்கு சில கேள்விகள்னு கலைஞரை விமர்சிச்சு பதிவு போட்டேன். செம ஹிட்டாச்சு. அதுக்கு லக்கிலுக் பதில் போட்டிருந்தாரு. உடனே லக்கிலுக்குக்கு சில கேள்விகள்னு எழுதினேன். அதுலதான் அப்துல்லா வந்து பதில் சொல்ல, நான் எதிர் கேள்விகேட்கன்னு ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை வந்துச்சு...


என்னது அப்துல்லா சண்டைபோட்டாரா?


‘ஆமா... சண்டை முடிவுல அப்துல்லாவோட நட்பை முறிச்சுக்கற அளவுபோய். இப்ப அப்துல்லா என் நண்பர் இல்லைங்கறன்னு நிலைமைக்கு வந்தாச்சு..


நண்பர் இல்லைன்னு ஆய்டுச்சா? அப்பறம்??


அவர் இப்போ என் குடும்பத்துல ஒருத்தர். நானும் அவருக்கு அப்படியே. இதோ சென்னைல வந்து இறங்கினதுமே ஏர்போர்ட்ல என்னை ரிசீவ் பண்ணி இந்த காரைக் குடுத்தாரு. நாந்தான் வெச்சுட்டு சுத்திகிட்டிருக்கேன்.


இந்த மாதிரி சண்டை போட்டுக்கறவங்கள்லாம் நெருக்கமாய்ட்டா எவ்ளோ நல்லாருக்கும்.. இல்லையா ஜோசப்?


ஆமாண்ணா... கருத்து வேற்றுமைகளை மீறி நட்பு வளரணும். அதானே நட்பு? ஒரே கருத்துள்ள இரண்டு பேர் நட்பா இருக்கறதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?



(ஜோசப் பால்ராஜை புகைப்படம் எடுக்க பதிவர்கள் போட்டா போட்டி)



(ஆட்டோக்ராஃப் வாங்கும் கூட்டத்தின் ஒரு பகுதி)




பதிவுலகத்துக்கு வந்தது மூலம் நீங்க சம்பாதிச்சது என்ன?


என்னை மாதிரி நாடு விட்டு நாடு போறவங்களை அதிகமா பாதிக்கறது தனிமைதான். அது எனக்கு இல்லை. நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான். அதேமாதிரி எந்த நாடு, எந்த ஊர் போனாலும் இறங்கின உடனே என்னை வரவேற்கறது என் பதிவுலக நண்பர்கள்தான். அதைவிட வேறென்ன வேணும். சொல்லுங்க?



நீங்க சாதிச்சது?


தனியா நான் எதையும் சாதிச்சேன்னு சொல்ல மாட்டேன். நண்பர்கள் கூட சேர்ந்து மணற்கேணி-2009ஐ சிங்கைல நடத்தினதுல பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.


நான் இடைமறிக்கிறேன்.. ‘சிங்கைநாதனுக்கு நீங்க செஞ்ச உதவியை குறிப்பிட மறந்துட்டீங்களே...?’


‘இல்ல அண்ணா.. அத நான்மட்டுமில்ல.. அதுல பங்குவகிச்ச எல்லாருமே பெருமையா குறிப்பிட்டுக்கலாம். இன்னைக்கு அவர் நல்ல உடல்நலத்தோட, அதைவிட உறுதியான மனபலத்தோட இருக்காரு. அதுக்கு எல்லா பதிவர்களும் நேரடியா, மறைமுகமா அவருக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் நன்றி சொல்லி அந்நியப்படுத்த விருப்பமில்ல. அவர் இப்போ மாற்று இதயத்துக்காக வெயிட்டிங்ல இருக்காரு.



சிங்கைநாதனுக்கு உதவினப்ப உங்களுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைச்சதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுல சிறந்ததா எதை நினைக்கறீங்க?


எனக்கு கிடைச்ச பாராட்டு இல்லை, ஒட்டு மொத்த பதிவுலகத்துக்கும் கிடைச்சது அது. குசும்பன் சொன்னது... சிங்கைநாதன் ஓரளவு தேறிவந்த சமயம் ஒருநாள் ஃபோன்ல கூப்பிட்டான் குசும்பன். ‘டேய் ஜோசப்... இனி எனக்கு கவலையில்லைடா.. ஏதாவது ஒண்ணுன்னா நீங்க எல்லாம் இருக்கீங்கடா’ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டான். எனக்கு பேச்சே வர்ல. இந்த செக்யூர் ஃபீலிங்கை ஒருத்தனுக்கு குடுக்க வெச்ச பதிவுலகுக்கு நன்றின்னு நினைச்சுட்டேன்.



பதிவுலக சண்டை சச்சரவுகள் குறித்து...


ரெண்டே வகைதான். ஒண்ணு எவனாவது மேல போறான்னா அவனை அமுக்கறது.. இல்லை தான் மேல வரணும்னா வேணும்னே பண்றது.. தான் புகழ் பெறனும்னோ, இல்ல அடுத்தவன் புகழ கெடுக்கனும்னோ செய்யிறது தான்.


இந்தியாவை விட்டுப் போய் வெளிநாட்டுல வேலை செய்யறோமேன்னு வருத்தம் உண்டா?


இல்லைங்க. உண்மை என்னான்னா நான் இந்தியாவில் வேலை தேடும்போது என் கூட இண்டர்வ்யூ அட்டண்ட் பண்ணினவங்ககூட நான் போட்டி போட முடியல. அதே வெளிநாட்டுல ஈஸியா செலக்ட் ஆகி செட்டில் ஆய்ட்டேன். ஆக, என்னைவிட புத்திசாலிகள் இந்தியாவுலதான் வேலை செஞ்சுட்டு இருக்காங்க’ - சிரிக்கிறார்.


புதுசா வர்ற பதிவர்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க?


கிண்டலா? நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா? இருந்தாலும் ‘நிறைய படிங்க. நிறைய எழுதுங்க. நட்பு வட்டத்தை பெரிசாக்கிங்கோங்க. வலையை எழுதிப் பழக ஒரு சிறந்த களமா உபயோகப்படுத்தொக்கோங்க’-இந்த மாதிரி என் சீனியர்ஸ் எனக்குச் சொன்னத சொல்லிக்கலாம்’


பேட்டி நிறைவுறுகிறது.


********************************************
நான் ஜோசப் பால்ராஜுடன் கோவையில் சஞ்சய் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு கல்லூரியின் முகவரி கேட்கிறார் ஜோசப். உள்ளே சென்று லேடீஸ் ஹாஸ்டலில் ஒரு பெண் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணை சந்திக்க வேண்டும் என்கிறார். நாங்கள் காரில் காத்திருக்கிறோம். இறங்கி ஒரு கவரில் பார்க்கர் பேனா ஒன்றும் சில ஆயிரம் ரூபாய் தாள்களும் வைத்து அந்தப் பெண்ணுக்கு அளித்துவிட்டு வருகிறார்.


நான் கிண்டலாகக் கேட்கிறேன்.. ‘என்னய்யா லேடீஸ் ஹாஸ்டலுக்கெல்லாம் விசிட் போறீங்க??’


ஜோசப் சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘இந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லைண்ணா. சிங்கப்பூர்ல இருக்கறப்ப எங்க க்ரூப் மூலமா கேள்விப்பட்டு முழு படிப்புச் செலவும் நான் ஏத்துகிட்டிருக்கேண்ணா.. ‘இந்தியா வந்தா வந்து பார்த்துட்டுப் போங்கண்ணா’ன்னு சொல்லீட்டே இருக்கும். அதான் பார்த்துட்டு வந்தேன்’


காரில் இருந்த யாருமே கொஞ்ச நேரத்துக்கு பேசவே இல்லை.


.