Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts

Sunday, April 3, 2011

What a Moment!!!

April 2 2011 - சனிக்கிழமை இரவு. மறக்க முடியாத மேட்ச்! இந்தியா கையில் கோப்பை!

கோப்பையை வென்றதன் மூலம் பலரின் வாயை அடைத்துவிட்டார் தோனி!

பலர் என்று நான் சொல்வது எதிர் நாட் டு அணியையோ எதிர் நாட்டின் பத்திரிகையையோ அல்ல. நம்ம கூடவே இருந்துட்டு இவனுக ஆகாதுப்பா என்று புலம்புபவர்களைத்தான்!

ஏற்கனவே ஆஸியை ஜெயிச்சப்பவே, இதுக்காக ஒரு போஸ்ட் போட்டு பொங்கீட்டேன். பாகிஸ்தான் கிட்ட உங்க பப்பு வேகாதுன்னாங்க.. அதுக்கும் ஆப்பு வெச்சாச்சு. மறுபடி இலங்கைகூட ஃபைனல்ஸ்ன்னப்ப, 40%தான் இந்தியாவுக்கு சான்ஸ்னாங்க.. கோவப்பட்டு, மேட்சுக்கு முன்னாடியே இந்த போஸ்டைப் போட்டேன். அதுக்கும் பேராசைன்னாங்க!

மார்ச் 31 அன்னைக்கு ட்விட்டர்ல 'எல்லார்க்கும் முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1. இலங்கைக்கு மட்டும் ஏப்ரல் 2’ன்னு எழுதினேன். யாரோ வந்து திட்டினாங்க.

இப்ப என்னாச்சு? சொல்லி அடிச்சோம்ல?

------------- ---------------- ------------------

தோனி!

(ஜனாதிபதி மாளிகையில் ஆட்டநாயகன் விருது + கோப்பையுடன்)

சிலர் பேசறாங்க. இவர் விளையாடாத கேப்டன்னு. தேவையே இல்லைப்பா. மேன் மேனேஜ்மெண்ட்னு ஒரு விஷயம் நான் இவர்ட்டேர்ந்து கத்துகிட்டேன். என்னா கூல்!

கீழ பாருங்க..

வின்னிங் ஷாட் அடிச்சுட்டாரா? கண்ல ஏதாவது வெறி தெரியுதா? ஒரு சின்ன ஆர்ப்பாட்டம்? ம்ஹூம்.

சரி.. இந்த ஸ்டில் பாருங்க..

பந்து சிக்ஸுக்கு போயாச்சு. யுவிக்கு தெரிஞ்சுடுச்சு. இது லைஃப் டைம் ஷாட்ன்னு. ஆனா இப்பவும் தோனி முகத்துல ஆரவாரம் இல்லை. அர்ஜூனன்யா அவன். பந்து போய் ராஜபக்ஷே மண்டைல விழுந்து கன்ஃபர்ன் ஆகறதுக்காக பார்த்துட்டே இருக்காரு!

இதுவரைக்கும்கூட ஓகே-ங்க..

இப்ப இந்த ஸ்டில் பாருங்க..

சிக்ஸும் அடிச்சாச்சு. மேட்சும் ஜெயிச்சாச்சு. யுவியால அடக்க முடியல.. ‘இப்பக் கூட கத்தமாட்டியாடா நீ’ங்கற மாதிரி தோனியைப் பார்த்து கேட்கற மாதிரியே இருக்கா?

ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. மனுஷனாய்யா இவன்? லவ் யூ மேன்!

-------------------------

சச்சின்!

21 வருஷத்துக்கு மேல ஆடிகிட்டிருக்கற ரன்மெஷின். ஆனா ரொம்ப பாவம்.

சச்சினும் சரி, ரஜினிகாந்தும் சரி.. ஒரே மாதிரிதான். தங்களோட ஃபீல்ட்ல டாப்ல இருந்து பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் என்ன சொன்னாலும், சொல்லலைன்னாலும், செஞ்சாலும், செய்யலைன்னாலும் குத்தம்!

ஃபைனல்ஸ்ல சச்சின் அவுட் ஆனப்ப என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரே கூப்ட்டு திட்டினாங்க.. அட.. கவலைப்படாதீங்கப்பா.. இன்னும் நாலு விக்கெட் விழுந்தாலும் ஜெயிக்கும்ன்னேன். சச்சினை நம்பி மட்டுமே இருக்கற டீம் இல்ல இது.

யோசிச்சுப் பாருங்க.. எதிரணி எப்படி வியூகம் அமைச்சிருப்பாங்க. சச்சின், சேவக்கை தூக்கிட்டா கப்பைக் கடத்தீட்டுப் போய்டலாம். மிடில்ல யுவராஜை கழட்டிவிட்டா போதும்’ இப்படித்தானே நினைச்சிருப்பாங்க. அவங்க நெனைச்சே பார்க்காத காம்பீர் ஆடினது அன்னைக்கு சர்ப்ரைஸ். அதே மாதிரி, விராட் கோஹ்லி அவுட் ஆனதும் யுவி வந்து சடார்னு ஒரு விக்கெட் விழுந்தாலும் கொஞ்சம் கஷ்டமா போயிருக்கும். அதான் சடார்னு ஒரு டவுன் முன்னாடி வந்து மிரட்டீட்டாரு தோனி.

அந்த முடிவு சரியா அமைஞ்சு மேட்ச் ஜெயிச்சதால ஓகே. இல்லைன்னா? தோனி பேசும்போது சொன்னது செம! ‘ஏன் அஸ்வினுக்கு பதிலா ஸ்ரீசாந்த்? ஏன் நீ ஒரு டவுன் முன்னாடி இறங்கின’ங்கறா மாதிரி கேள்விகள் வரக்கூடாதேன்னு பொறுப்பா ஆடினேன்னு சொன்னாரு.

சச்சின் ரிடயர்மெண்டாம்! அடப்பாவிகளா.. அதுக்கு வேலையே இல்லையே.. இத்தனை வருஷமா ஆடிகிட்டிருந்தாலும், பாருங்க.... இந்த சீரிஸ்லயும் சொச்ச ரன் வித்யாசத்துல இரண்டாமிடம் பிடிச்சிருக்காரு. சச்சின் சிங்கிள்ஸ் எடுக்கறதையும், பவுண்டரியைத் தடுக்கறதையும் பார்த்தா வயசு தெரியுது உங்களுக்கு?

இந்த வெற்றில சச்சினுக்கு கண்டிப்பா பங்கிருக்கு. அவருக்கு நம்மளால கோடி, லட்சமெல்லாம் தரமுடியாது. எனக்காக ஒரே ஒரு உறுதிமொழியைத் தாங்க.

சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13. பல முறை சொல்லியாச்சு. அடிக்கடி நூறு அடிக்கறதால, தோக்கற மேட்ச்தான் உங்களுக்கு வலியா நினைவில இருக்கு. அதுவும் சமீபமா சச்சின் செஞ்சுரி போட்டா மேட்ச் தோக்கும்ன்னு சொல்றவங்க அதிகமாய்ட்டு வர்றாங்க. அப்படி ஒரு எண்ணமிருந்தா இன்னியோட விட்ருங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..

யுவராஜ், ஜாகிர்ன்னு இன்னும் பலபேரைப் பத்தி பலதும் எழுதலாம். சச்சினைத் தூக்கி தோள்ல வெச்சுட்டு சுத்தினாங்க பாருங்க... எவ்ளோ முக்கியமான தருணம் அது.

ஒரு விஷயம் தெரியுமா? 21 வருஷமா விளையாடறாரே தவிர, பெரிய டோர்ணமெண்ட் கப் எதுவும் சச்சின் கைல வாங்கிப் பாத்ததில்லை. அதாவது 4, 5 டீமுக்கு மேல விளையாடற டி20 கப், ஐ பி எல், சாம்பியன்ஸ் ட்ராஃபின்னு எதுவும் சச்சின் இருக்கறப்ப ஜெயிச்சதில்லை. அவ்ளோ தூரம் விளையாண்டு, உழைப்பைக் கொட்டியும் இவருக்கு சரியான டீம் மேட்ஸ் இந்த தடவைதான் அமைஞ்சிருக்கும்பேன் நான். அந்த வெறிதான் நேத்து. சச்சின் கைல கப்பை கொடுத்த ஒவ்வொருத்தரையும் நான் நமஸ்கரிக்கறேன்.

------------------

அடுத்த அதிரடி ஐ பி எல் ஆரம்பம். வழக்கம்போல நான் CSK பக்கம்.

ஆனா - கீழ இருக்கற மாதிரி சூழல்கள்ல மட்டும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அப்ப மட்டும் நான் க்ரிக்கெட்டின் ரசிகன்!

நீங்க IPLல யார் பக்கம்?

.

Friday, March 25, 2011

இந்தியா டீமை இன்னும் என்னென்னெல்லாம் சொல்லித் திட்டலாம்?

ன்னெல்லாம் பேசணுமோ பேசியாச்சு!

ஒண்ணுக்கும் ஆகாத டீம்.. பவுலிங்கே இல்லை...

பாரேன்.. பங்களாதேஷ் முண்ணூறை நெருங்கீட்டானுக.. கொஞ்சம் கம்மியா எடுத்திருந்தோம்னா சங்குதான் நமக்கு..

327 எடுத்தும் ஜெயிக்காம ட்ரா பண்றானுக பாரு... இவனுக வேலைக்காக மாட்டானுக..

விட்டா அயர்லாந்து ஜெயிச்சிருக்கும். 46வது ஓவர் வரைக்கும் முக்கறானுகப்பா..

நெதர்லாந்து கூட வெறும் 190 எடுக்க, அஞ்சு விக்கெட் கொடுக்கறானுக..

அதெல்லாம் கூடப் போகட்டும். சவுத் ஆஃப்ரிக்கா மேட்ச்ல தோத்ததுக்கு காரணம் சச்சின் செஞ்சுரி அடிச்சதாலயாம்!

அதுவும் நெஹ்ராவுக்கு லாஸ்ட் ஓவர் குடுத்ததுக்கு தோனியை அன்னைக்குப் பொறந்த குழந்தைகூடத் திட்டிருக்கும்!

அடாடாடாடாடா!!!

ஏங்க கப்பு வேணுமா வேண்டாமா? இந்தியா ஜெயிக்கணுமா வேணாமா? சும்மா தொட்டது 90க்கும் நெகடீவாப் பேசறதுக்குன்னே திரிஞ்சா எப்படீங்க?

எங்க ஆஃபீஸ்ல ஒருத்தன் இருக்கான்.. நேத்து மேட்ச் ஆரம்பிக்கறப்பவே வந்தான்:

‘எனக்கென்னவோ இன்னைக்கு டவுட்தான்ப்பா’

‘என்ன டவுட்டு?’

‘அவனுக மூணு வருஷமா வொர்ல்ட் சாம்பியன்ஸ்...’

‘இருந்துட்டுப் போட்டும்..

அதுமில்லாம வரலாறு என்ன சொல்லுதுன்னா...’

‘சார்.. நீங்க வரலாறுல பி ஏ -வா எம் ஏ வா?’ன்னு கேட்டேன்...

‘சொல்றத முழுசாக் கேளு.. இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவை நாம ஜெயிச்சதே இல்ல..’

‘சரி..’

‘அதுனால இன்னைக்கு டவுட்டுதான்..ஆனா ஒரே ஒரு சான்ஸ் இருக்கு’

‘என்னது அது..?’

‘சேவக் 50 ஓவர் நின்னு ஆடினான்னா...’

‘நின்னுட்டு எப்படிய்யா ஆட முடியும்?’

‘ப்ச்.. கேளுய்யா.. 50 ஓவர் முழுசா வெளையாண்டா ஜெயிக்கலாம்’

‘வேற என்னென்ன ஜோசியம் சொல்வீங்கடா நீங்க? டேய்.. அந்தக் காலமெல்லாம் போயாச்சுடா.. எவன் விளையாண்டாலும், இல்லைன்னாலும் ஜெயிப்போம்.. பாரு நீ’ன்னேன் நான்.

‘டாஸ் ரொம்ப முக்கியம்’னான்.

‘டாஸ் போடற காசு வேணா ரொம்ப முக்கியமா இருக்கலாம்.. இன்னைக்குப் பாரு ஆட்டத்தை’ன்னேன்.

ஆஸ்திரேலியா டாஸ் ஜெயிச்சாங்களா... வந்துட்டான் மறுபடியும் அவன்.
‘ப்ச்.. அவ்ளோதான்ப்பா..’னான்.

ஐய்யய்யய்ய.. இவனொருத்தன்னு நெனைச்சுட்டே ‘போடா.. போய் வேலையப் பாரு’ன்னேன்.

பாண்டிங் ஆடிட்டிருக்கறப்ப மறுபடி வந்தான் ‘ஒரு விக்கெட்டை எடுக்க முடியல நம்மாளுகளால..’ன்னான்.

‘அதான் எதிர்ல விக்கெட் விழுந்துட்டே இருக்கேடா’ன்னேன்.

பாண்டிங் செஞ்சுரி அடிச்சுடுவான் போல இருக்கே’

‘அடிக்கட்டும். ஊருக்குப் போறப்ப ஒரு செஞ்சுரியோட போகட்டுமேடா.. உனக்கேன் காண்டு?’ன்னேன்.

260 அடிச்சாச்சு. அப்பயும் வந்து குய்யோ முறையோன்னான்.

அடிச்சாச்சு. இப்ப காலிறுதில ஜெயிச்சாச்சு...

அப்புற‌ம் வ‌ந்து இப்ப‌டிதான்யா ஆட‌ணும்.. என்ன‌ம்மா ஆடினான் யுவி? ஆஸி எல்லாம் ஜெயிக்கும்னு எப்ப‌டி ந‌ம்பினோமோ? சொத்தை டீமா இருக்கு. இன்னும் ஏதேதோ பாராட்டி சொன்னான்.அவ‌ன் திட்டின‌துல‌ எப்ப‌டி ஒரு லாஜிக்கும் இல்லையோ, அதே போல‌ அவ‌ன் பாராட்டின‌துல‌ம் ஒரு லாஜிக்கும் இருப்ப‌தாக‌ தெரிய‌லை. அப்ப‌டி என்ன‌டா புட‌ல‌ங்காய் லாஜிக்னு கேட்கிற‌வ‌ங்களுக்கு..

முத‌ல் மேட் ப‌ங்க‌ளாதேஷ் கூட‌. அதுவும் அவ‌ங்க‌ நாட்டுல‌ ந‌ட‌க்கிற‌ முத‌ல் வேர்ல்ட் க‌ப் மேட்ச். எல்லோரும் என்ன‌ விரும்புவாங்க‌? தோத்தாலும் 300 ர‌ன் அடிக்க‌ணும்னுதானே விரும்புவாங்க‌? செம‌ ப‌வுலிங் விக்கெட் த‌யார் செஞ்சு, இந்தியா 180க்கு அவுட்டாகி அதையும் அவ‌னுங்க‌ அடிக்க‌ முடியாம‌ 170ல‌ அவுட் ஆனா எப்ப‌டி இருக்கும்? அந்த‌ பிட்ச்சுல‌ 170 அடிச்ச‌தே பெரிய‌ சாத‌னைன்னு சொல்ற‌வ‌ங்க‌ள‌ விட‌ 180 அடிக்க‌ முடியலையான்னு ஏமாந்து போற‌வ‌ங்க‌தான் அதிக‌ம். இப்ப‌ ந‌ம்ம‌ ஆட்க‌ள் சொல்ல‌லையா, இந்தியாகிட்ட‌ 291 அடிச்சிட்டானேன்னு. அந்த‌ லாஜிக் தான் முத‌ல் மேட்சுக்கு பிட்ச்ச‌ அப்ப‌டி த‌யார் செய்ய‌ கார‌ண‌ம்.நாம‌ 70 ர‌ன் வித்தியாச‌த்தில‌ ஜெயிச்சோம். அது சாதார‌ண‌ மார்ஜினா என‌க்கு தெரில‌.

அடுத்து இங்கிலாந்து.அதுல‌ நாம‌ க‌டைசில‌ விக்கெட்ட‌ க‌ட‌க‌ட‌ன்னு விட்ட‌து த‌ப்புதான். அதுக்கு ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌ல‌. நாம‌ 10 ர‌ன் க‌ம்மியா அடிச்சோம்ன்ற‌து உண்மை. ஆனா இங்கிலாந்து ப‌வுலிங் சொத்தையான்னு பார்க்க‌ணும். செளத் ஆஃப்ரிக்கா கூட‌ 176 அடிக்க‌விடாம‌ செஞ்ச‌வ‌ங்க‌தானே அவ‌ங்க‌? என்ன‌தான் ப‌வுலிங் பிட்ட்ச்சா இருந்தாலும் தென்னாப்பிரிக்கா பேட்டிங் லைன் அப்க்கு அது கொஞ்ச‌ம் ஈசிதானே? அதுல‌ ந‌ம்ம‌ ஆளுங்க‌ 10 ர‌ன் க‌ம்மியா அடிச்ச‌து த‌ப்புதான். ஆனா பெரிய‌ த‌ப்பு இல்லை. இதான் என் லாஜிக்.

அடுத்த‌ மேட்ச் அய‌ர்லாந்த். அதுல‌ நாம‌ 46 ஓவ‌ர்ல‌ அடிச்சோம். தோனி இந்த‌ தொட‌ர்ல‌ அவ்ளோ ந‌ல்ல‌ ஃபார்ம்ல‌ இல்லை. அவ‌ர் அந்த‌ மேட்ச்சுல‌ அவ‌ரோட‌ கான்ஃபிடென்ட்ட‌ ர‌ன் அடிச்சு ஏத்திக்க நினைச்சாரு. அதான் அவ்ளோ பொறுமையா ஆடினார்ன்னு நான் நினைக்கிறேன். யூசுவ் வ‌ந்த‌வுட‌னே ப‌ந்து எப்ப‌டி தெறிச்சு ஓடுச்சுன்னு நினைவிருக்கா? தோனி அடிக்க‌டி சொல்ற‌ வாச‌க‌ம்.”Dont Always play for crowd. Play for the game”.

அடுத்த‌ காமெடி ச‌ச்சின் ச‌த‌ம‌டிச்ச‌தால‌தான் செள‌த் ஆஃப்ரிக்கா கூட‌ தோத்தோமாம். ஒரு ஸ்கூலில் 100% ரிச‌ல்ட் வ‌ர‌லைன்னு வைங்க‌. ஆனா முத‌ல் மார்க் ந‌ம்ம‌ பைய‌ன்னு வ‌ச்சிக்குவோம். மொத்த‌ ஸ்கூலும் பாஸ் ஆகாத‌த‌ற்கு உங்க‌ பைய‌ன் தான் கார‌ண‌ம். அவ‌ன் ராசியில்லை. அவ‌ன ரெண்டாவ‌து ரேங்க் போடுங்க‌ன்னு ம‌த்த‌ பேர‌ன்ட்ஸ் சொன்னா எப்ப‌டி இருக்கும் உங்க‌ளுக்கு? ஃபேக்ட் வேற‌ .ஒப்பினிய‌ன் வேற‌.அத‌ ப‌த்தி த‌னிப்ப‌திவுல‌ பார்ப்போம். ஒரு வ‌ரில‌ சொன்னா ச‌ச்சின் 100% அடிச்சா 69% இந்தியா ஜெயிச்சிருக்கு. இது பான்டிங், ஜெய‌சூர்யா போன்ற‌ ப‌ல‌ பேர‌ விட‌ ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ர்சேன்ட்டேஜ்.

வெஸ்ட் இன்டீஸ்கூட‌ 80 ர‌ன் வித்தியாச‌த்துல‌ ஜெயிச்சோம். ஆனா அதையும் சில‌ பேர் பாகிஸ்- ‍வெஸ்த் இன்டீஸ் மேட்ச் அப்போ கிண்ட‌ல் அடிச்சாங்க‌. அதுக்கு விள‌க்க‌ம் சொன்னா கார்த்திக்கிற்கு அம்மா ப‌தில் சொன்ன‌ மாதிரி ஆயிடும். அத‌னால‌ விட்டுடுவோம்.

இப்போ பாகிஸ்தான் தான் செம‌ ஸ்ட்ராங்னு சொல்லிட்டு திரிய‌றாங்க‌. புத‌ன்கிழ‌மை நைட்டு அவ‌ங்க‌ளுக்கும் இருக்கும். இப்போ என்ன‌ செய்ய‌லாம்?

னக்கு சமீபத்துல வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ்ஸை சொல்லி இத முடிக்கறேன்..

படுக்கையறையில் மனைவியும் கணவனும் அமைதியாக ஆளுக்கொரு திசை பார்த்துப் படுத்திருக்கிறார்கள்.

மனைவி: (மனதுக்குள்) என்னாச்சு.. ஏன் பேசாம படுத்திருக்காரு? ஏன் என்கிட்ட பேச மாட்டீங்கறாரு? வேற எவளாவது அவரோட மனசுல வந்துட்டாளா? நான் அலுத்துட்டேனா அவருக்கு? முகத்துல சுருக்கம் வந்தது காரணமா இருக்குமோ? ஓவரா மேக்கப் போடறன்னு சொல்லுவாரு.. அது பிடிக்காததாலயோ? நான் அசிங்கமாய்டேன் போல அவருக்கு.. கன்னா பின்னான்னு வெய்ட் போட்டுட்டேனோ.. இல்லியே.. ரொம்ப தொண தொணக்கறதால விலகிப் போறாரோ.. ஏன் இப்டி அப்செட்டா இருக்காரு?

கணவன்: (மனதுக்குள்):

“ச்சே.. போயும் போயும் தோனி, நெஹ்ராகிட்டயா அந்த ஓவரைக் குடுக்கணும்?”

.

Friday, February 11, 2011

1...2...3...

1.

ன்றைக்கு எனக்கு அலுவலகத்தில் ஏதோ டென்ஷன் தினம். அடுத்த நாளும் அந்த டென்ஷன் தொடரும் நிலைமை. இரவு வீட்டுக்கு வந்து இந்திய அணியின் மேட்ச் - லைவ் - பார்க்கிறேன். இந்தியா 190க்கு ஆல் அவுட். ஐயகோ என்று தென்னாப்பிரிக்காவின் சேஸிங்கையும் பார்க்கிறேன். 152க்கு ஐந்து. 39 ரன்கள் மட்டுமே வேண்டும். ஐந்து விக்கெட்டுகள். வழக்கம்போல ‘இவனுக எப்பவுமே இப்படித்தான்’ என்று படுத்து உறங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி என்று நியூஸ் என்னை எழுப்ப, அன்றைக்கு முழுதும் உற்சாகமாய் இருந்தேன். ஒருத்தனின் மனநிலையையே மாற்றுகிறது இந்திய அணியின் வெற்றி!

உலகக் கோப்பை க்ரிக்கெட். என் போன்ற க்ரிக்கெட் ரசிகர்களின் கனவு தினங்கள் வெகு அருகில். ஓர் இந்தியக் க்ரிக்கெட் ரசிகனாக இந்த உலகக் கோப்பை வெகு ஸ்பெஷல். சரியான ஃபார்மில் இருக்கும் டீம். அதுவும் சொந்த ஊரில்.

எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் விளம்பரங்கள். வேர்ல்ட் கப்புக்காக ஸ்பெஷல் விளம்பரங்கள் அணிவகுக்கும். பெப்ஸியின் ஹெலிகாப்டர் ஷாட் (தோனி), தூஸ்ரா (ஹர்பஜன்), பல்ட்டி ஹிட் (கெவின் பீட்டர்ஸன்) போன்ற விளம்பரங்கள் சுவாரஸ்யம்.

எரிச்சலூட்டும் விஷயம் – இந்த விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பும் விதம். ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். மொத்த ஸ்க்ரீனில் க்ரிக்கெட்டைச் சுருக்கி ஒரு மூலையில் தள்ளிவிட்டு மீதி முழுவதுமாய் ஆக்ரமிக்கும் பைக் லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் தரினும் வேண்டேன். போலவே பவுண்டரியைத் தொட்டுப் பறந்த ஆறாவது பந்து கயிற்றுக்கு முன் தொட்டு நான்கானதா, கொஞ்சம் பின் தொட்டு ஆறானதா என்று முடிவாவதற்கு முன் வரும் விளம்பரப் பொருட்களுக்கும் மனதளவில் தடாதான்.

சம்பந்தமில்லாத – அல்லது - சம்பந்தம் இருக்கிற ஒரு தகவல். கூகுளில் க்ரிக் இன்ஃபோவைத் தேட Cri என்று ஆரம்பித்தால் தானியங்கி குறிச்சொல் காட்டும் சொல்:

Criminal Minds!

-----------------------------------------------------
2.

ஸ்ஸெம்மெஸ் கலாட்டாக்கள் சில சமயம் க்ளுக்கென சிரிக்க வைக்கும். கொஞ்சமாய் சிந்திக்க வைக்கும்.

சமீபத்தில் வந்து என்னைக் கவர்ந்த எஸ்ஸெம்மெஸ் சில:

--

அந்த வகுப்பறைக்குள் நுழைகிறார் கலைஞர். மாணவர்களிடம் கேட்கிறார்: ‘பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் ராமு. எனக்கு இரண்டு கேள்விகள்’

கலைஞர்: “கேளு ராமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

“மிகவும் தைரியமான கேள்வி! இதற்கு இடைவேளைக்குப் பிறகு பதில் சொல்கிறேன்”

----இடைவேளை ----

மீண்டும் கலைஞர்: “பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’

கலைஞர்: “கேளு சோமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

கலைஞர்: “மூணாவது கேள்வி?”

சோமு: “ராமு எங்கீங்க ஐயா?”

****************

இன்னொன்று:

||ஜெய் ஸ்ரீ ரஜினிகாந்தாய நமஹ:||

இந்த எஸ்ஸெம்மெஸ்ஸை குறைந்தது 9 பேருக்கு அனுப்புங்கள். படிக்காமலே நீங்கள் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள். உதாசீனப்படுத்த வேண்டாம். ஒரு முறை இதை உதாசீனப்படுத்தி டெலீட் செய்த ப்ளஸ் டூ மாணவனின், பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஃபெய்ல் என்று மாறியது!

****************

மூன்றாவது:

மனைவி: “டின்னருக்கு என்ன வேணும்க?”

கணவன்: “பருப்பும் சாதமும்...”
மனைவி: “நேத்துதாங்க அது வெச்சேன்?”

கணவன்: “சரி... கத்திரிக்காக் கொழம்பு”
மனைவி: “ஐய.. உங்க பையன் சாப்பிடவே மாட்டான்”

கணவன்: “முட்டைக் கொழம்பு?”
மனைவி: “ ஆளப்பாரு.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை..”

கணவன்: “பூரி?”
மனைவி: “இந்நேரத்துக்கு பூரியா? ஏங்க இப்டி?”

கணவன்: “சரி.. பேசாம நான் ஹோட்டல்ல பார்சல் வாங்கியாரவா?”
மனைவி: “அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்க.. உங்களுக்காகத்தானே சொல்றேன்..”

கணவன்: “அப்ப மோர்க்குழம்பு வை”
மனைவி: ”அதுக்கு மோர் வேணும். வீட்ல இல்லை”

கணவன்: “இட்லி சாம்பார் வெச்சுடேன் பேசாம?”
மனைவி: “கரெக்டுங்க.. ஆனா மொதல்லயே சொல்லிருந்தா மாவு அரைச்சு வெச்சிருப்பேங்க”

கணவன்: “கம்முன்னு மேகி செஞ்சுடு. அதான் கரெக்ட்”
மனைவி: “அது உங்களுக்குப் பத்தாதுங்க. நீங்க நைட் தான் ஹெவியாச் சாப்பிடுவீங்க”

கணவன்:”வேற என்னதான் செய்வ?”
மனைவி: “இதென்னங்க என்னைக் கேட்டுட்டு? நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம்?”

இந்தப் பொண்டாட்டிகளே இப்படித்தான் பாஸ்!

-----------

3.

கூகுள் பஸ்தான் தற்போதைய என் சோர்வு நீக்கி. அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். பலரும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸில் கிடைக்கிற கேப்பில் ஆட்டோ, லாரி மட்டுமில்லாது குசும்பன் போன்றவர்கள் ஃப்ளைட்டே ஒட்டுகிறார்கள்.

http://www.google.com/buzz/yesbalabharathi/YaczwFPPDjA/%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8

தல பாலபாரதியின் இந்த பஸ்ஸில் குசும்பனின் அளவிலா நக்கலின் ஒரு இடத்திலாவது நீங்கள் சிரிக்கவில்லையென்றால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவும்.

.

Monday, October 25, 2010

க்ரிக்கெட்டும் நானும்... (மீள்ஸ்)

ன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.

விளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன்? அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல!) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.

அடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்!) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்?’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)

டிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா!)

அதுக்கப்பறமா நான் டிவில கிரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.

அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ!) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.

அதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.

இன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா?’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.

அவ்ளோதான் நம்ம புராணம்!

.

Friday, January 22, 2010

க்ரிக்கெட்டும் நானும்

நேற்று (இன்றெழுதப்பட்ட (21 ஜன. ‘10) இந்தப் பதிவு நாளை (22 ஜன) வருமானால் இந்த நேற்றை ‘நேற்று முன்தினம்’ என திருத்தி வாசிக்கவும்!) ஜெயா ப்ளஸ் சேனலில் க்ரிக்கெட் பற்றிய ஓர் அலசலில் ச.நா.கண்ணனுடன் நண்பர் முரளிகண்ணனும் பங்கேற்று சிறப்பாகப் பேசினார். முதலில் அவருக்கு வாழ்த்துகள்.

அழைத்துப் பாராட்டி ‘ஏங்க என்கிட்ட சொல்லவேல்ல? கார்க்கி சொல்லித்தான் தெரிஞ்சது’ என்றபோது உங்களுக்கு க்ரிக்கெட் பிடிக்குமான்னு தெரியல அதான் சொல்லல’ என்றார்.

இந்தா பிடி, அடுத்த பதிவுக்கான மேட்டரை என்று சொல்வது போல இருந்தது அவர் பதில். அதனால் இதோ எனக்கும் க்ரிக்கெட்டுக்குமான ஸ்னானப்ராப்தி:

ன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.

விளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன்? அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல!) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.

அடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்!) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்?’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)

டிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா!)

அதுக்கப்பறமா நான் டிவில கிரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.

அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ!) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.

அதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.

இன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா?’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.

அவ்ளோதான் நம்ம புராணம்!

.

Monday, August 25, 2008

இந்தியன் கிரிக்கெட்டும், வலைப்பதிவர்களும்

நம்ம இந்தியன் கிரிக்கெட் டீம் ஒரு மேட்ச்ல ஜெயிக்கறதும், ஒரு மேட்ச்ல தோக்கறதும்ன்னு விளையாடிட்டு இருக்காங்க. நம்ம ஆளுக எப்ப ஜெயிப்பாங்க, எப்ப தோப்பாங்க, ஏன் ஜெயிக்கறாங்க, ஏன் தோக்கறாங்க-ங்கறது புரியாத புதிர்!

ஒரு வேளை நம்ம பதிவுலக பெருந்தலைகள் டீம்ல இருந்து, தொடர்ச்சியா சில மேட்ச் தோத்தா அவங்களுக்கு என்ன மாதிரி வார்னிங் மெய்ல் பி.சி.சி.ஐ-லேர்ந்து வரும்?

ஒரு கற்பனை:-

******************

லக்கிலுக்:

நல்ல ஸ்டார் பேட்ஸ்மேன் நீங்க. அடிக்கடி ‘கிட்னி கார்ட் மாத்தணும், ஜட்டி கிழிஞ்சிடுச்சு, ட்ரவுசர் கிழிஞ்சிடுச்சு’ன்னு பெவிலியன் போறது நல்லால்ல. அதே மாதிரி அடிக்கடி அதிஷா கூட ஷகீலா படம், சோனா படம்ன்னு போய் கன்செண்ட்ரேஷனை குறைச்சுக்கறீங்க.

கோவி.கண்ணன்:

நீங்க திடீர் திடீர்னு லக்கிலுக் அடிச்ச ஷாட்டையே ரிபீட் பண்ணி அவரை வம்புக்கு இழுக்கறீங்க. அதேமாதிரி அடிக்கடி பேட்ஸ்மேன் சந்திப்பு நடத்தி உங்க ப்ராக்டீஸை மிஸ் பண்றீங்க. சிங்கப்பூர்ல மேட்ச் நடந்தப்போ தேவதர்ஷினி, தீபாவெங்கட்டை நீங்க பார்க்கப் போனதுக்கு புகைப்பட ஆதாரம் இப்போ மீடியா கையில சிக்கீருக்கு!

முத்துலெட்சுமி-கயல்விழி

என்ன மேடம் நீங்க. உங்க நம்பர் 11. தென்னாப்பிரிக்காவுல ஒருத்தருக்கு இதே நம்பர் இருக்குன்னு பின்னாடி இருக்கற ஒண்ணை முன்னாடியும், முன்னாடி இருக்கற ஒண்ணை பின்னாடியும் போட்டுக் குடுங்கன்னு கோவிச்சுட்டு சரியா விளையாடலைன்னா எப்படி? எப்படிப் போட்டாலும் உங்களை ரசிகர்களுக்குத் தெரியாதா என்ன?

SP.VR.சுப்பையா:-

சார்.. நீங்க விளையாடத்தானே வந்திருக்கீங்க. அடிக்கடி அம்பயர்கிட்ட போய் பேசீட்டே இருந்தா எப்படி? கோவைல நடந்த மேட்ச்ல நீங்களும், அம்பயரும் ரொம்ப சுவாரஸ்யமா பேசீட்டே இருந்ததுல ஒரு மணிநேரமா மேட்ச் நின்னதுகூட உங்களுக்கு தெரியல. பேசாம... இல்லல்ல.... பேசீட்டே நீங்க வர்ணணையாளரா வந்துடுங்க!

ச்சின்னப்பையன்:

எப்பப்பார்த்தாலும் விளையாடற எல்லாரும் மென்பொருள் நிபுணரானால் என்ன பண்ணுவாங்க-ன்னு சிந்திச்சுட்டே இருக்கீங்க நீங்க. பொழுது போகலைன்னா என்ன பண்றதுன்னு கலவை வேற உங்களுக்கு. ஏதாவது சொல்லீட்டா பெவிலியனைப் பார்த்து முதுகுகாட்டி ஃபோட்டோ எடுத்துட்டு `என் பின்னாடி ஃபுல் க்ரவுடும் இருக்குன்னு மிரட்டறீங்க.

சென்ஷி:

என்ன சொல்றது? வர வர நீங்க மேட்ச்சுக்கே வர்றதில்ல. அப்பப்ப தண்ணி கொண்டுவந்து குடுத்துட்டு போயிடறீங்க. இப்பல்லாம் 5, 10 ன்னு ரன் அடிச்சாலும் க்ளாஸிக் ஷாட்டாதான் அடிக்கறீங்க. ஆனா அடிச்சு ஆடறதில்ல!

மங்களூர் சிவா:

நீங்க தனியா ரன் எடுக்கணும் சிவா. உங்களுக்கு முன்னாடி விளையாடறவங்க ரன் எடுக்கறப்ப `ரிப்பீட்டேய்’ன்னு கத்திட்டே இருக்கறதால உங்களுக்கு ஸ்கோர் கார்டுல ரன் ஏறாது.

நாமக்கல் சிபி:

நல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.

வால்பையன்:

முதல்ல மாதிரி நைட் பார்டீஸ் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டோம். நல்லது. ஆனா, க்ரவுண்டல லக்கிலுக்கைப் பார்த்து ‘நான் ஷாட் அடிச்சப்போ ஏன் கைதட்டலை?’ன்னு அவரை வம்புக்கு இழுக்கறது நல்லால்ல.

குசும்பன்:

ரொம்ப குசும்பு ஜாஸ்தியாயிருச்சு உங்களுக்கு. எங்களையே கிண்டல் பண்ணி கார்ட்டூனெல்லாம் போடறீங்க.

தமிழன்;

எல்லா மேட்சுக்கும் போயி நல்லா கைதட்டுறீங்க. உங்க சொந்த க்ரவுண்ட்ல மேட்ச் நடக்கறப்ப ஏனோ சோகமாவே இருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியல.

தமிழ்பிரியன்:

மேட்சுக்கு முன்னாடி தேசிய கீதம் பாடறப்ப யார் யார் கூடப் பாடறாங்கன்னு கவனிச்சுட்டு, கவலைப் பட்டுட்டே இருக்கீங்க. அதனால உங்க விளையாட்டுல கவனம் கம்மியாய்டுச்சு! அதுவும் கவலைகள் இப்போல்லாம் உங்களுக்கு கலவையா வருது!

நிஜமா நல்லவன்:

போன மேட்ச்சுக்கு அப்புறம் ‘எல்லாரும் நல்லா விளையாடினாங்க. நானும் ஏதோ விளையாடினேன். இனிமே வர்ல’ன்னு ரிட்டயர்மெண்ட் அறிவிக்கறீங்க. முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். இதுவரைக்கும் உங்ககிட்டேர்ந்து விளக்கம் வர்ல. இது சரியில்ல. அடுத்த மேட்ச்ல இறங்கி விளையாடலைன்னா ரசிகர்கள் கோவத்துக்கு ஆளாய்டுவீங்க.

பரிசல்காரன்:

நல்லா விளையாடீட்டு இருக்கறப்ப ‘எல்லா பாலையும் அடிச்சு ஆடாதீங்க, டிஃபென்ஸும் பண்ணுங்க’-ன்னா பேட்டைப் போட்டுட்டு பெவிலியன் வந்துடறதா? அதேமாதிரி ஃபேமிலியை காலரில உக்கார வைங்க.. அடிக்கடி அவங்களை பிட்சுக்குள்ள கூட்டீட்டு வரக் கூடாது.