Showing posts with label tamilnadu politics. Show all posts
Showing posts with label tamilnadu politics. Show all posts

Wednesday, April 13, 2011

உங்கள் பொன்னான வாக்கை...


னக்கு அரசியல் மேல் அப்படி ஒன்றும் பெரிய தொடர்போ, ஆர்வமோ இல்லவே இல்லை. சீசனுக்காக இன்றைக்கு அரசியல் அலசல்.

இன்றைக்கு வாக்குப்பதிவு நாள். இந்த தேர்தல் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

தி.மு.க. அரசின் மீது அதிகமான எதிர்ப்பலைதான் இருந்தது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில். ஆனால் சரியான காய் நகர்த்தல்கள், ட்ராமாக்கள், செண்டிமெண்ட் ஷோக்கள், விளம்பரங்கள் என்று கொஞ்சம் எதிர்ப்பை ஆளுங்கட்சியினர் சரிகட்டிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

வடிவேலுதான் இந்த முறை தி.மு.கவின் ஸ்டார் பேச்சாளர். எப்பேர்ப்பட்ட தலைவர்களை எல்லாம் முன்னிறுத்தி பேசி ஓட்டுக் கேட்ட கட்சி, இன்றைக்கு வடிவேலுவை முன்னிறுத்தித்தான் ஓட்டுக் கேட்டாக வேண்டிய சூழலுக்கு வந்தது கொடுமைதான்.

வடிவேலு மீது எனக்கெந்த வருத்தமும் இல்லை. நான் சொல்லி நீங்கள் கேட்கவேண்டிய அவசியமெப்படி இல்லையோ அதேதான் வடிவேலுவுக்கும். விஜயகாந்தையும், பிரேமலதாவையும் குறிப்பிட்டு ‘உனக்கு அரசியலைப்பற்றி என்ன தெரியும்’ என்று ஒருமையில் கேட்குமளவு வடிவேலு ஒன்றும் அரசியல் ஆசானில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். வடிவேலுவும் வாங்கிய காசுக்கு மேலேயே கூவினார். கடைசி நாளில் கண்ணீர் ட்ராமாவெல்லாம் வேறு!


அதை சரியாக மார்க்கெட்டிங் செய்ததில் தாங்கள் கெட்டிக்காரர்கள்தான் என்று நிரூபித்தது திமுக-சன் டிவி கூட்டணி. தினகரன் எரிப்பு வழக்கின்போது, அதுவரை முதல்வர் கலைஞரெல்லாம் சொல்லி வந்த சன் டிவியினர் பிறகு கருணாநிதி என்றே குறிப்பிட்ட ஆரம்பித்தது பேசப்பட்டது. ஆக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபவர்கள் இதிலும் அவ்வாறே நடந்து கொண்டார்கள். இன்றைய சூழலில் அழகிரி, ஸ்டாலின், கலைஞர் பேச்சுகளின் க்ளிப்பிங் நேரத்தை விட வடிவேலுவின் க்ளிப்பிங் நேரம் அதிகரிப்பதே ஜெயிக்க வழி என்று செயல்பட்டார்கள்.

அதேபோல விஜய்காந்த் பேசியதையும் பேசாததையும் மிக்ஸிங் எல்லாம் செய்து ஃபிலிம் காட்டினார்கள். தினகரனில் திமுக பற்றிய பாஸிடிவ் செய்திகள் மட்டுமே வந்தன. கலைஞர் டிவி மானாட மயிலாட உட்பட எல்லாவற்றையுமே தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டது திமுக.


திமுக கூட்டணியின் மற்றொரு பலம் அதன் விளம்பரங்கள். கலக்கலாக அமைந்தது. ஜவுளிக்கடை விளம்பரங்களைப் போலவே பாட்டெல்லாம் போட்டு அருமையாக இயக்கியிருந்தார்கள். அதுவும் ‘நாட்டுக்கொரு நல்லசேதி நாத்தனாரே’ ஆரம்பித்தாலே வீட்டில் உள்ள எல்லாரும் உடன்பாட ஆரம்பித்தார்கள். (கவனிக்க: உடன் பாட. உடன்பட அல்ல!) இது ஜெயலலிதா அணியில் மிஸ்ஸிங். பாரதியார், கட்டபொம்மன், பெரியார், அண்ணாவெல்லாம் வந்து அதிமுகவுக்கு ஓட்டுக் கேட்பது போல ஒரு விளம்பரம் வந்தது. அதற்கப்புறம் ஜெயா சேனலே வைக்க பயமாக இருந்தது எனக்கு. அவ்வளவு திராபை. ஒரு விளம்பரத்தையே ஒழுங்காக மக்களைக் கவரும் வண்ணம் செய்யத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்று கோபம் கோபமாக வந்தது.

அதிமுகவின் பலம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்தத் தேர்தலில் இரண்டே அலைதான். திமுக ஆதரவு அலை. திமுக எதிர்ப்பு அலை.

அதிமுக ஆதரவு அலை என்ற ஒன்று இல்லவே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் ஒரு மண்ணாங்கட்டியையும் செய்யாததே அதற்குக் காரணம். அதே போல ஒரு வடிவேலுவுக்கு கவுண்டர் கொடுக்குமளவுக்குக்கூட பேச்சாளர் யாருமில்லாதது அதைவிடக் கொடுமை.

ஜெ-வின் சர்வாதிகாரப் போக்கு அல்லது அப்படித் தோற்றமளிப்பதுபோல அவர் நடந்துகொண்டதும் சரியில்லை. திமுகவினர் வடிவேலுவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட, ஜெ அணி, நடிகர் சங்கத் தலைவர், ஒரு கட்சியின் தலைவரான சரத்குமாருக்குக் கொடுக்காதது துரதிருஷ்டமே. அரசியலில் அவர் சுண்டைக்காயாக இருந்தாலும் ரெண்டு சீட் கொடுத்த பாவத்துக்கு அவரையும் கொஞ்சம் கண்டுகொண்டிருக்கலாம்.

மதிமுகவை கழட்டிவிட்டது ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு. வைகோஆதரவு அலை என்ற ஒன்று இருக்கிறது. ஈழப்பிரச்னை உட்பட சில ப்ரச்சினைகளில் இறங்கிப் போராடியது அவர்கள்தான். அதிமுகவை விட. தவிரவும் வைகோ, நாஞ்சில் சம்பத் என்ற பிரச்சார பீரங்கிகளை இழந்தது இந்தக் கூட்டணி. போதாக்குறைக்கு எதிரணியின் பேச்சை மெய்ப்பிக்கும் வகையில் விஜயகாந்த் கோவைப் பிரச்சாரத்துக்குப் போகாதது கொஞ்சம் எரிச்சலையே உண்டு பண்ணியது.


மற்றொரு விஷயம் தினமலர், விகடன் போன்ற பத்திரிகைகள் (திமுக பாணியில் சொல்வதானால் – பார்ப்பண ஏடுகள்) வெளிப்படையாகவே திமுகவுக்கு எதிரான நிலை எடுத்தன. திமுக குடும்ப ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறையினர் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலையில்தான் இருக்கிறார்கள்.

போலவே காங்கிரஸ் அரசும் திமுகவினரும் இலங்கைப் பிரச்னையில் நடந்துகொண்ட விதம் எவருக்கும் பிடிக்கவில்லை. ஐநூத்திச் சொச்சம் மீனவர்களுக்காக காங்கிரஸ் அரசை மிரட்டாதவர்கள், அறுபது சொச்சம் சீட் பிரச்னைக்காக ராஜினாமா செய்யட்டுமா என்று மிரட்டியது படுமோசம். போதாக்குறைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வேறு!

----------------

முழுதாகப் படித்து விட்டீர்களா? நான் யாரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்று ஏதாவது புரிந்ததா? இல்லைதானே? எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. குழப்பமாகவே இருக்கிறேன். ஆனால் ஆளுங்கட்சிக்குப் போடக்கூடாது என்ற மனநிலை இப்போது வரை இருக்கிறது. இலவசங்கள் கொடுத்து மக்களைக் குட்டிச் சுவராக்கி, ஓட்டுக்குப் பணம் என்ற புதிய சிஸ்டத்தைக் கொண்டு வந்து நாசமாக்கி, அவர்கள் கைகாட்டும் படம்தான் வெளியாகும், அவர்கள் சொன்னதே சட்டம் என்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக செய்யும் சர்வாதிகாரம் என்று பலதும் என் போன்ற பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறதென்பது பலரிடம் பேசும்போது தெரிந்தது.

சும்மா வாய்வழி சர்வே நடத்தியதில் எனக்குக் கிடைத்த ரிசல்ட் அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது!

------------------

எது எப்படியாயினும் உங்கள் பொன்னான வாக்குகளை யாருக்காகவேனும் அளிக்க மறக்காதீர்கள். அது உங்கள் உரிமை.. கடமை.. எக்ஸெட்ரா எக்ஸெட்ரா..

கடைசியா உங்களுக்காக ஒரு வீடியோ... தவறாமப் பாருங்க..





அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

ஆல் த பெஸ்ட்!

.


Tuesday, March 29, 2011

களை கட்டிய கருத்தரங்கம்

திருப்பூரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கூட்டி, திருப்பூர் மக்களுக்கான அவர்கள் திட்டங்களை விளக்க, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற பொருளில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன்.

உள்ளே செல்கிற போதே வேட்பாளர் ஒருவர் ‘இது நியாயமா.. இல்லை நியாயமா என்று கேட்கிறேன்..’ என்று என்னைப் பார்த்து விரல் நீட்டி கேட்க, ‘லேட்டாப் போனதுக்குதான் திட்றாரோ’ என்று ஒரு கணம் பயந்தவாறே இடம் தேடி அமர்ந்தேன். அவர் திருப்பூருக்கு யாரோ செய்த துரோகம் என்று யாரையோ காற்றில் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் கூட்டத்தைப் பார்த்தேன். கணிசமான கூட்டம் வந்திருந்தது. பெரிய அறிவிப்போ பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனர்களோ இல்லாமல் காந்தி படம் போட்ட நோட்டீஸ் துண்டு இத்தனை பேரைச் சேர்த்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.

பேசிக்கொண்டிருந்தவர் முடிக்க அடுத்ததாக எம் எஸ் உதயமூர்த்தியின் மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் விருமாண்டி மீசையுடன் வந்தார். ரொம்ப அடக்க ஒடுக்கமான வேட்பாளர் இவர்தான் என நினைக்கிறேன். குனிந்த தலை நிமிராமல் பேசினார். (நிமிர்ந்தால் எழுதியதைப் படிக்க முடியாமல் போவதும் காரணம்) பூராவும் படித்துவிட்டு நான் சொன்னதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். 37 பேர் கைதட்டினார்கள்.

அடுத்ததாக பா ஜ க வேட்பாளர். ’எங்கள் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா’ என்று பேச ‘ஏன்.. உங்களுக்கே தெரியலையா?’ என்று கேட்க நினைத்ததை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ஒவ்வொருவராக கிட்டத்தட்ட ஏழோ, எட்டோ வேட்பாளர்கள் பேச அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உட்கார்ந்திருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் (சிட்டிங் எம் எல் ஏ-ங்க) கோவிந்தசாமி வந்தார். கடந்த காலத்தில் என்னென்ன செய்தேன் என்று சொல்லித்தான் நான் ஓட்டு கேட்கப் போகிறேன் என்று சிலவற்றைச் சொன்னார். பேசி முடித்து அவர் கிளம்ப எத்தனிக்கையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் ஒரு துண்டுச் சீட்டை எழுதி நீட்ட ‘சாய ஆலைப் பிரச்னைக்கு என்ன தீர்வு தருவீர்கள்’ என்று கேட்க அப்போதுதான் ஞாபகம் வந்த அவர் ‘இதை நான் மறக்கவில்லை. (அப்பறம் ஏன் பேசல?) ஆனால் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தீர்களேயானால்’ என்று ஒரு பதினைந்து நிமிட எக்ஸ்ட்ரா மொக்கையைப் போட்டுவிட்டுப் போனார். வராவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றே அவர் வந்திருந்ததாய்த் தோன்றியது.

காங்கிரஸ் வேட்பாளர் உள்ளேயே வரிசையாக அமர்ந்திருந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார். கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. வேட்பாளர்களுக்குப் பின் வாக்காளர் சார்பில் பேச மேடையேறி நின்றிருந்த பாரதி கிருஷ்ணகுமார் கொஞ்சம் ரௌத்ரம் பழகலாமா என்று யோசிப்பதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மைக்கில் விடுத்த வேண்டுகோளால் கூட்டம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

திருப்பூரின் இன்னொரு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரைத் தவிர எல்லாரும் வந்திருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைத் தந்தது. இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.


பேசிய வேட்பாளர்கள் எல்லாருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருந்தது. அது -

-என்று சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில்..
-நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்
-ஒன்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்

இந்த மூன்று வரிகளை எல்லாருமே பேசினார்கள்.

மேடையிலிருந்த பாரதி கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தார். ‘தேர்தலை நேர்மையாக நடத்தும் திறன் நம் தேர்தல் கமிஷனுக்கு வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை’ என்றார். அப்படியாயின் ஏன் அவர்கள் எங்கெங்கே எப்படி எப்படி சோதனை நடத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே நாளிதழ்கள் மூலம் அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்றார். சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்கிறது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.

முன்பெல்லாம் வரி கட்டுகிறவர்கள் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்கள். அம்பேத்கர்தான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற மசோதாவை கொணர்ந்தார் என்றார். நேருவும் அதை வழிமொழிந்தார் என்றார். 1951ல் நடந்த முதல் பொதுத் தேர்தல் பற்றி சொன்னார். 1951 அக்டோபர் 24 முதல் 1952 ஃபிப்ரவரி 24 வரை நான்கு மாதங்கள் நடைபெற்றதாம்.

ஓட்டுக்கு உப்புமா கொடுத்தார்களாம் 1952களில்! அப்பவே...!

அதே போல கள்ள ஓட்டு பற்றியும் சொன்னார். ஜனாதிபதி ஆர்.வி. வெங்கட்ராமனின் ஓட்டை யாரோ போட்டிருந்தார்களாம். சரி.. அவரைத்தான் தெரியாது. சிவாஜி கணேசனையுமா தெரியாது? அவர் ஓட்டையும் குத்திவிட்டார்களாம். காரில் ஏறும்போது அவர் சொன்னாராம்: “அங்கதான் டூப்னா.. இங்கயுமா?”

கடைசியாக அவர் சொன்ன இரண்டு லியோ டால்ஸ்டாயின் கதைகள்தான் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு சுவையாக முடித்தது. இரண்டு கதைகளுக்கும் வலிக்க வலிக்க கைதட்டினார்கள் பார்வையாளர்கள். அதுவும் இரண்டாவது கதையின்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் எழுந்து நின்று விடாமல் இரண்டு நிமிடம் கைதட்டியதில் அவரே பேச்சற்றுப் போனார்.

என்ன அந்தக் கதைகள்?

அடுத்த பதிவில்!

(எப்பூடி??)


.

Monday, June 8, 2009

அரசியல்!

ந்த நபரை நண்பருக்கு ஏற்கனவே தெரியும். தனது பனியன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஓரிரு முறை துணி ரோல்கள் காணாமல் போவதை துப்பறிந்தபோது இவரிடம் பணிபுரிந்து கொண்டிருந்த இந்த நபர்தான் திருடிச் சென்று விற்றிருக்கிறான் என அறிந்ததும் மிரட்டி, கண்டித்து அவனை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார் நண்பர். அவன் இப்போது - பத்து வருடங்களுக்குப் பிறகு - கட்சிக்கரையிடப்பட்ட வேட்டியோடு வந்து அமர்த்தலாக நண்பர் முன்னே அமர்ந்து ‘எலக்‌ஷனுக்கு எவ்ளோ டொனோஷன் தர்றீங்க?” என்று மிரட்டலாகவே கேட்கிறான்.

“அதெல்லாம் ****கிட்ட குடுத்தாச்சுப்பா.. நீ.. நீங்க தனியா வேற வாங்க வந்துருக்கீங்களா?”


“அவங்ககிட்ட குடுக்கறது நேரா தலைமைக்குப் போகும். நீங்க இருக்கற ஏரியாவுல இருக்கப்போறது நாங்கதான். இங்க செலவு பண்ண நீங்கதானே குடுக்கணும்? இந்த பத்து வருஷத்துல கம்பெனி எப்படி மாறிப்போச்சு! ரோட்ல நின்னு பார்த்தா ஆஃபீஸ் கண்ணாடி பளபளக்குதே...”

மறைமுகமாக ஆரம்பித்து நேரடியாகவே மிரட்ட ஆரம்பிக்கிறான்.

வேண்டா வெறுப்போடு ஒரு தொகை கொடுத்து அனுப்புகிறார் நண்பர்.


து தேர்தலன்று நண்பரின் நிறுவனத்தில் நடந்த சம்பவம். ஒவ்வொரு நிறுவனமும் கட்சிக்காரர்களிடமிருந்து பல்வேறு வகையிலான மிரட்டல்களோடு வசூலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. வேறொரு நண்பரின் நிறுவனம் இருப்பது கோவை பாராளுமன்றத் தொகுதியில். ஆனால் இருப்பது திருப்பூர்தான். எல்லை அருகே. அவரிடமிருந்து திருப்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்களும், கோவை தொகுதியைச் சேர்ந்தவர்களும் மாற்றி மாற்றி அழைத்து வசூலில் இறங்கியதில் நொந்துபோயிருக்கிறார் அவர்.

ங்களிடம் இரண்டு மூன்று முறை அலைந்து வசூல் கேட்டவர்களிடம் மாறி மாறி வெவ்வேறு காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். ‘குடுக்கறதும் குடுக்காததும் உங்க இஷ்டம். ஆனா உங்க மொதலாளிகிட்ட சொல்லுங்க. எங்க ஏரியாவுலேர்ந்து முப்பது நாப்பது பேர் உங்ககிட்ட வேலைக்கு வர்றாங்க. அத ஞாபகம் வெச்சுக்கோங்க’ என்கிறார் அவர். முப்பது பேரில் நாலைந்து பேரை மூளைச் சலவை செய்து நிறுவனத்தில் பாலிடிக்ஸ் ஏற்படுத்துவது சுலபம். ஆகவே வேறு வழியில்லாமல் அவரையும் கவனித்து அனுப்பினோம்.

தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு நான் கண்ட காட்சி... திருப்பூரின் முக்கியப் பகுதியில் அமைந்த ஒரு கட்சி அலுவலகம். மனைவி காய்கறி வாங்கிக் கொண்டிருக்க பதிவுக்கு ஏதாவது தேறுமா என்று பாராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அந்தக் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கரைவேட்டியுடன் ஒருவர் (ன்?) “சொன்னதக் குடுக்கறியா இல்ல வேட்டியக் கழட்டட்டுமா?” என்று உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தான். ‘கழட்டீட்டுப் போ’ என்று அவனுக்கெதிரிலிருந்த மீசை வைத்த ஆசாமி சொல்லிக் கொண்டிருந்தான். இவன் கொஞ்ச நேரக் கத்தலுக்குப் பிறகு நட்ட நடுரோட்டில் அந்த வேட்டியைக் கழட்ட எவனோ ஒருவன் “இந்தாண்ணே” என்று பேண்ட் ஒன்றை நீட்ட அதை ரோட்டிலேயே அணிந்தான். “இனிமே உன்கட்சி வேட்டியக் கட்ட மாட்டேன்... நாளைக்கு எப்படி ஆளைக் கூட்டுவன்னு பார்க்கறேன்” என்று கத்தியபடியே பேண்ட் கொடுத்த ஆசாமியுடன் மொபட்டில் பறந்தான்.

மீசைக்காரரை ஒன்றிரண்டு பேர் “குடுத்துத்தொலைக்க வேண்டியதுதாண்ணே..” என்று கடிந்துகொள்ள “கேட்டதவிட எச்சா குடுத்தாச்சுய்யா.. சும்மா சும்மா கேட்டா.. ஒரு அர்த்தம் வேண்டாம்? இன்னும் ஒரு வாரத்துக்கு வெச்சு செலவு பண்ணணுமில்ல?” என்று நியாயம் பேசினார்.

இதையெல்லாம் சொல்லி புலம்பினால்.. ஒரே பதில்தான்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

அப்படியா?

சரி.... இதெல்லாம் சாதாரணம்தான்.. ஜெயித்தபிறகு இவர்கள் செய்வதென்ன? பிறரிடம் இப்படி வாங்கி வசூலித்ததை ஏதோ உழைத்து சம்பாதித்து செலவு செய்தது போல “சும்மாவா? எவ்ளோ செலவு பண்ணினோம் தெரியுமா? அதையெல்லாம் வட்டியும் முதலுமா வசூலிக்க வேண்டாமா?” என்றபடி மீண்டும் வசூல்வேட்டையில் இறங்குவது.. அதைவிடக் கொடுமை!

யாரைச் சொல்லியும் குற்றமில்லை!

Monday, September 22, 2008

வேணாம் வடிவேலு... விட்டுடுங்க.



























அன்புள்ள வடிவேலுவுக்கு...

நான் உங்க ரசிகன்-ங்கறத சொல்லவே வேண்டியதில்லை. உங்க டயலாக் டெலிவரிக்கும், மாடுலேஷனுக்கும், பாடி லேங்குவேஜூக்கும் யாருதான் உங்களுக்கு ரசிகனா இருக்க மாட்டாங்க?

விவேக் மேல்தட்டு மக்களை தன்னோட சிந்திக்கற டைப் காமெடி மூலம் ஒரு பாதைல நடந்து போய்ட்டிருக்கறப்ப, ஒண்ணும் தெரியாத மாக்கான் மாதிரி இருந்துகிட்டு, நீங்க பண்ற சேட்டைகள் மூலமா கலக்கலா எல்லாரையும் கவர்ந்தீங்க. நீங்க வர்றவன், போறவன்கிட்டயெல்லாம் அடிவாங்கறப்ப எதுக்கும் கலங்காம நீங்க பேசற டயலாக் பலதும் இன்னிக்கு சொன்னதுமே ‘குபுக்’ன்னு சிரிப்பு வர்ற அளவுக்கு பேர் பெற்றிருக்குது.

’அது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம்’

‘வேணாம்… வலிக்குது. அழுதுடுவேன்’

‘ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க’

‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?’

’இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?’

‘கிளம்பீட்டாய்ங்கய்யா… கிளம்பீட்டாய்ங்க’

‘என்னை வெச்சு காமெடி, கீமெடி பண்ணலியே’

‘இதுதான் அழகுல மயங்கறதா?’

‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ் மட்டம் வீக்’

‘என்னா வில்லத்தனம்?’

‘இப்பவே கண்ணைக் கட்டுதே..’

இந்தப் பட்டியல் ‘முடியல’ வரைக்கும் முடியாத ஒண்ணு! படிக்கும்போதே உங்க மாடுலேஷன்லதான் படிக்கமுடியும். படிச்ச உடனே ஒரு ரிலேக்சேஷன் கிடைக்கும். ஏன், என் வாழ்க்கையிலயே பல சிக்கலான சந்தர்ப்பங்களை உங்களோட ஏதாவது டயலாக்கைச் சொல்லி, கூட இருக்கற எல்லாரையும் சிரிக்கவெச்சு, சூழ்நிலையிலவே மாத்தியிருக்கேன்.

ஒரு கட்டத்துல விவேக்குக்கும், உங்களுக்கும் கடுமையான போட்டி ஆரம்பிச்ச சமயம், அது ஆரோக்யமான போட்டிதான்-ங்கற மாதிரி, விவேக் சில படங்கள்ல உங்க ‘கிளம்பீட்டான்யா’ வைச் சொல்லி சிரிக்க வெச்சாரு. அவ்வளவு ஏன், நீங்க நடிக்காத சூப்பர் ஸ்டாரோட ‘சிவாஜி’ல விவேக் உங்க மாடுலேஷன்ல ஒரு இடத்துல பேசுவாரு. அதுமட்டுமில்லாம ரஜினிகாந்தே ‘என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே’ன்னு டயலாக் பேசினாரு. அவன் டயலாக்கை நான் பேசறதா’ன்னு கொஞ்சமும் தயங்காம பேசினது சூப்பர் ஸ்டாரோட பெருந்தன்மைன்னாலும், அந்த டயலாக் யாரு எழுதியிருந்தாலும் உங்களாலதான் அது பிரபலாமாச்சுங்கறதுல எந்தவித சந்தேகமுமில்லை!

ஆனா… சமீபமா உங்க பேரு அரசியல்ல அடிபடறது பிடிக்கல தலைவா. உங்களுக்கு அது தேவையில்லாத விஷயம்ன்னு எனக்குப் படுது. அரசியல் தேவையில்லைன்னு சொல்ல வரல. சும்மா காசுக்காக மேடைல அரசியல் பேசி, காணாமப் போன காமெடி நடிகர்கள் லிஸ்ட்ல நீங்களும் வந்துடுவீங்களோன்னு பயமா இருக்கு! ரூம்போட்டு யோசிச்சு, உங்களை வெச்சு காமெடி பண்ண ஒரு கூட்டம் கெளம்பீடுச்சு. அதுல நீங்க மாட்டினா அப்புறம் ’வேணாம். வலிக்குது’ன்னு ’அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ன்னு அழ வேண்டியதுதான். ஏன்னா அரசியல்ல உங்க பில்டிங்கும் ஸ்ட்ராங்கில்ல, பேஸ்மட்டம் வேற வீக்கா இருக்கு. இது உங்களுக்கே தெரியும்.

இதுக்கு முதல்ல உங்க வீட்டுக்கு முன்னாடி நடந்த கார் பிரச்சினையப்ப உங்க மேல அவ்வளவா தப்பில்லைன்னு சம்பவ இடத்துல இருந்த என் நண்பர் மூலமா தெரிஞ்சுகிட்டப்ப ’பாவம்யா இவரு’ன்னுதான் தோணிச்சு. அதே மாதிரி இரண்டு நாட்களுக்கு முன்னாடி உங்க வீட்ல, அலுவலகத்துல நடந்த கல்வீச்சு சம்பவமும் வன்மையா கண்டிக்கக்கூடிய விஷயம்தான். அதுல பாதிக்கப்பட்ட உங்களோட மனம் எவ்வளவு சங்கடத்துக்குள்ளாகியிருக்கும்ன்னு புரிஞ்சுக்கமுடியுது. அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படக் கூடியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

ஆனா, இன்னைக்கு காலைல செய்திகள்ல உங்க பேட்டியைப் பார்த்தேன். ‘விஜய்காந்த் எந்தத் தொகுதியில நின்னாலும் அவரை எதிர்த்து நிக்கறேன். அவரா, நானான்னு பார்க்கறேன்’ –ன்னு சொன்ன நீங்க அதுக்கு முன்னாடி, ‘பார்க்கலாமா… நீயா நானான்னு பார்க்கலாமா?’ன்னு ஒருமைல சொன்னதை என்னால ரசிக்க முடியலைங்க.

நான் யாருக்கும் பரிஞ்சு பேசல. அரசியல்ல குதிக்கறது அவ்வளவு சாதாரணமா என்ன? ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே யோசிச்சு, யோசிச்சு நம்ம மனநிலைக்கு இது ஒத்துவராதுன்னு அமைதியா இருக்காரு. உங்களுக்கு எதுக்கு இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு பேட்டி? இதுனால நீங்க நாளைக்கே அரசியலுக்கு வருவீங்கன்னு நான் சொல்லல. இந்தமாதிரி பேட்டியெல்லாம் நீங்க குடுக்கறதால உங்களை யாரோ பின்னாடி இருந்து இயக்கறதாகவும், அதுக்கு நீங்க பலிகடா ஆகற மாதிரியும் தோணுது.

ஒரு காலத்துல விஜய்காந்த்-துக்கு குடைபிடிக்கற கேரக்டர்ல நடிச்ச நீங்க இன்னைக்கு நிஜ வாழ்க்கைல அவரையே இப்படி எதிர்க்கற அளவுக்கு வளர்ந்ததுக்கு பின்னாடி இருக்கற உங்க உழைப்பு சந்தேகத்துக்கிடமில்லாதது. அதற்குப் பாராட்டுக்கள். ஆனா, எல்லாரையும் அரவணைச்சுப் போங்க தலைவா. இந்த மாதிரியெல்லாம் பப்ளிக்ல ஒருத்தரை, அதுவும் உங்க சொந்த ஊர்க்காரரை ஒருமைல திட்டற அளவுக்கு போகணுமா?

வேணாம் வடிவேலு...விட்டுடுங்க!

இப்படிக்கு
உங்கள் ரசிகர்கள்ல ஒருத்தன்.