
தூரத்தில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்க, செய்யும் வேலைக்கு துரோகமாக வேலை நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்தக் கடிதத்தை.
பழைய ஞாபகங்கள் விடாமல் துரத்துகின்றன வெயிலைத் துரத்தும் நிழலாய்.
ஒரு கதையோ, எதுவோ எழுத எழுதப்படாத நாட்குறிப்பு எடுத்து, எழுதிப் படித்து, படித்து எழுதி, அடித்துத் திருத்தி மறுபடி எழுதி ஒரே அமர்வில் நான்குமுறை அதை கூறுபோட்டு மனதிலேயே லே அவுட் அமைத்து முடித்து நாடார் கடைக்குச் சென்று பேப்பர் வாங்கி கோடு போடாமல் மார்ஜின் மடக்காமல் வைத்து -ஆனாலும் நேராக- ஒவ்வொரு பத்தியின் ஆரம்ப வரிகளை நீலத்திலும் மீதமுள்ளதை கருப்பிலும் வித்தியாசப் படுத்தி எழுதி, படித்துப் பார்த்து கவருக்குள் போட்டு அனுப்பி முடித்துக் கொண்டிருந்தாய்.
இப்போது இந்தக் கடிதத்தை எம்மெஸ் வேர்டில் தட்டச்சிக் கொண்டிருக்கிறாய். தவறுகள் எதுவும் வந்தால் Back Space. வண்ணம் கொடுக்க Text Color Editor. அது மட்டுமில்லாமல் Margin, Header, Footer, Page Layout என்று எல்லாவற்றிற்கும் பில்கேட்ஸ் துணைக்கு வருகிறார். இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று புலம்புகிறாய். அது உன் எழுத்தின் உயரமென்பதை அறியாதவனாய்.
ஞாபகமிருக்கிறதா உனக்கு? ஒரு பத்திரிகை அந்த மாதத்தின் சிறப்பு வாசகராய் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், ஆகவே வாசகர்கள் அதிலுள்ள கூப்பனில் பெயர் விலாசமெழுதி அனுப்பச் சொல்லியும் அறிவித்திருந்தார்கள். குறிப்பிட்ட அந்த வாசகரே கலந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்கு பரிசு. இல்லையேல் கலந்து கொள்பவர்களில் அவர் பெயரைக் கொண்டவருக்குப் பரிசென்று. நீ அதில் கலந்து கொள்ளவில்லை. அடுத்தமாதம் இதழ் வந்தபோதுதான் தெரிந்தது – கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஜெயித்திருந்தார். காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்தது உன்னை. நீ அனுப்பாததால் அந்த கிருஷ்ணகுமாருக்கு பரிசு.
ஏற்கனவே நீ ஒரு சுயதம்பட்டக்காரனென்ற பெயருண்டு. இதைச் சொல்லி அதை உறுதிப்படுத்த இங்கே குறிப்பிடவில்லை. அப்போது இதழில் வெளியான அந்த கிருஷ்ணகுமாரின் முகவரிக்கு நீ ஒரு கடிதமெழுதினாய். அவர் பதிலெழுதினார். பிறகு நீ தொடர்ந்தாய். அவர் அவனாய் மாறி தொடர்ந்தான். எத்தனை கடிதங்கள். எத்தனை பகிர்தல்கள். பிறிதொரு மழை நாளில் பேருந்துகள் சில மாறி அவன் வீடு கண்டுபிடித்து அவனோடு உரையாடி, உண்டு, பேசி மகிழ்ந்து…
இப்போது தொடுதிரை அலைபேசியில் ஒரு விரல் அசைவில் நூறு நண்பர்களை அழைக்கிறாய். கதைக்கிறாய். சிரிக்கிறாய். அழுகிறாய். பாடுகிறாய். படுத்துகிறாய். கேட்கிறாய். வியக்கிறாய். பாராட்டுகிறாய். பாராட்டுப் பெறுகிறாய்.
எதிலும் மேலே இருந்த கடிதங்கள் தந்த அந்நியோன்யத்தை உணர்கிறாயா? ஏன்?
மின்னஞ்சல் பரிமாற்றங்கள் ஏன் உனக்கு இந்த மகிழ்வைத் தர மறுக்கிறது? நீ மாற்றத்தை ஏற்க மறுக்கிறாயா நண்பா… இல்லை., எல்லோர்க்கும் இப்படித்தானா?
வேலை முடிந்து வீட்டுக்கு வந்து செஸ் அல்லது கேரம் எடுத்து தம்பியோடு விளையாடுவாய். ஒரு மணிநேரமோ, இரண்டு மணி நேரமோ ‘வந்து சாப்பிடப் போறீங்களா இல்லையா’ என்ற அன்னையின் விளி கேட்கும் வரை அது தொடரும். பிறகும் அது தொடரும்.
இப்போது அலைபேசியின் அப்ளிகேஷனில் நீயும் அதே விளையாட்டில் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் உன் முகம் தெரியா நண்பனும் மோதிக் கொள்கிறீர்கள். ‘என்ன இருந்தாலும் அந்த மாதிரி இல்லை’ என்று புலம்புகிறாய். உன் வீட்டில் இப்போதும் சதுரங்க அட்டையும், கேரம் போர்டும் இருக்கிறதென்பதை மறந்து.
கோவிலுக்குச் செல்கிறாய். ஆராதனையின் போது ஒலிக்கும் இயந்திர மணியோசை உன்னைக் கொன்றெடுக்கிறது. நீ ஒவ்வொரு முறை கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப்போதும் அந்த டமடம சத்தம் உன்னை துரத்தியடிக்கிறது. மணியோசை தரும் நாதம் அதிலில்லையே என மனதோடு அழுகிறாய். அதை ஏற்காத உன் மனது கோவிலிலும் இல்லாமல், உன்னிடமும் இல்லாமல் எங்கெங்கோ அலைகிறது.
நீ விட்டு விடுதலையாகி வர வேண்டியது உன் நினைவுகளிலிருந்துதான். இதே கடிதத்தை இப்படி உன் மகளெழுதக்கூடும்: ‘அப்போதெல்லாம் கணினியைத் திறந்து யோசித்து யோசித்து எழுதி அதைத் திரையில் பார்த்து மகிழ்ந்து அனுப்பி பிரசுரித்து.. இப்போது நான் நினைப்பது நினைத்து முடிக்குமுன் எழுத்தில் வருகிறது. அதிலிருந்த உணர்வு இதிலில்லை’ என்று. மாற்றங்களால் ஆனது உலகு.
இன்னும் எத்தனை காலத்திற்குதான் அம்மியில் அரைத்த சுகம் மிக்ஸியில் இல்லை, ஆக்கிப்போடும் சாப்பாட்டுச் சுவை OVEN சமையலில் இல்லை என்றெல்லாம் புலம்பப் போகிறாய்? அவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இனி நீ அவற்றைத் தவிர்க்கவியலாதென்பதும்.

அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். வேறு விமானங்கள். அதே பாதை. வேறு வேறு வாகனங்கள். எல்லாவற்றையும் எப்போதும் எல்லாரும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பா..
ஏற்கத்துவங்கு. புன்னகை தானாய் வரும். எல்லாம் மாறும்.
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா
.
