Showing posts with label BLOGGERS. Show all posts
Showing posts with label BLOGGERS. Show all posts

Wednesday, January 6, 2010

கிஸ்..... கிஸ்.........





தியைக் கொண்டாடும் பதிவரது அலுவலகத்தில் மாதாந்திரக் கொண்டாட்டத்தின் போது இந்தப் பதிவர் பரிந்துரைத்த விளையாட்டு என்ன தெரியுமா?

அவர் அடிக்கடி கலாய்க்கும் கவிஞரின் கவிதையைக் கொடுத்து ‘இதற்கு உங்களுக்குத் தெரிந்த பொழிப்புரை தாருங்கள்’ என்பதுதானாம்.

மிகவும் கிண்டலானதாக அந்த செஷன் போகுமென்று எதிர்பார்த்தவருக்கு ஏக அதிர்ச்சி!


அவர்கள் வியந்து, பல கோணங்களில் அந்தக் கவிதையை அர்த்தங்கள் பல சொல்லிப் பாராட்ட.. அசடு வழிந்தாராம் இவர்!

*****************************

திவுலகில் தீவிரமாக ‘இருந்த’ அந்த மூன்றெழுத்து பதிவருக்கு விரைவில் டும்டும். தனது சொந்த ஊருக்கும் தலைநகருக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறாராம். இடையில் பத்திரிகை அசைன்மெண்டுக்காக வேறொரு ஊர் என்று வேறு அலைச்சலாம்.

ஆகட்டும்டா தம்பி ராசா........

************************************

2010ல் கொஞ்சமாவது உயரத்துக்குப் போவாய் என நண்பர்கள் வாழ்த்தியதில் சந்தோஷமாய் இருந்த பதிவருக்கு ஒரு நற்செய்தி வந்ததை அந்த வாழ்த்துக்களோடு ஒப்பிட்டு ‘உயரத்துக்கு போய்ட்டேன்ல’ என்கிறாராம் அவர்.

ஆம். 2வது ஃப்ளாட்டிலிருந்த சிங்கிள் பெட்ரூம் வீட்டை காலி செய்து மூன்றாவது ஃப்ளாட்டிலிருக்கும் டபுள் பெட்ரூமுக்கு குடிபோகிறாராம்!

உயரம்!

************************

யர் பதிவர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்... ஒரு மார்க்கமான தலைப்பில் அவரது கதைகள் பதிப்பாக வரவிருக்கின்றன. அதுவல்ல அவரது சந்தோஷத்துக்கு காரணம்.. தனது நண்பர் கதைகளையும் சிபாரிசு செய்து அவருக்கு உதவியிருப்பதுதான் தனக்கு மகிழ்ச்சி என்கிறார். அவருக்கிருக்கும் ஒரே குழப்பம்:

என்ன பெயரில் எழுத என்பதுதானாம்.


வெட்கப்படாதீங்க பாஸு.. உங்க பேர்லயே போடுங்க!


****************************************

திருப்பூர்/ஈரோட்டைத் தொடர்ந்து எல்லா ஊர்களிலும் வலைப்பதிவர் குழுமம்/பேரவை என்று ஆரம்ப அமர்க்களங்கள் களை கட்டுகிறதாம்.

முத்தாய்ப்பான செய்தி என்னவென்றால் வெகுநாள் முன்பு திமுகவிலிருந்து பிரிந்த கட்சி தலைவரைத் திருப்பிப்போட்ட ஊரில் சங்கத்திற்கு தலைவர் இல்லையாம். தலைவியாம். சங்கத்தின் முக்கியமான மூன்று பொறுப்புகளையும் அந்தத் தலைவி வீட்டுப் பெண்களே ஆக்ரமிக்கிறார்களாம்.

பணக்காரதேவர்தலைவன் சொன்ன சேதி இது!


*********************************
க ஏமாற்றத்தில் இருக்கிறார் அந்த பதிவர். தோழரின் ஃப்ளவர் புக்ஸ் தொகுப்பில் தனது படைப்பு இல்லையென்று.

‘குடுத்திருக்கலாம்ல’ என்று நண்பர் கேட்டதுக்கு ‘என்னோடதை வேற யாராவது பரிந்துரைப்பாங்கன்னு விட்டுட்டேன்’ என்கிறாராம்.

கான்ஃபிடென்ஸ் ஓகே... ஓவர் கான்ஃபிடென்ஸ் ஒடம்புக்கு ஆகாது மாப்ளே!

*****************************************

பிரச்சினைகளென்றால் தீர்க்கும் அந்தப் பதிவர் தனது நண்பரின் பிரச்சினையைத் தூக்கிக் கொண்டுவந்து பொதுவில் வைத்து நண்பர்களோடு வைத்து விவாதித்தபோது கிடைத்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், ஆரோக்கியமான கருத்து மோதல்களும் அவரை மிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியதாம்.

‘ரொம்பவும் பிரமிப்பாவும் பெருமையாவும் இருக்குப்பா நம்ம நண்பர்களை நெனைச்சா’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!

*****************************************

ரம்பப்பதிவர் கருப்புடையூருக்கு விஜயம் செய்கிறாராம். ‘நண்பனைப் பார்க்க’ என்று சொல்லப்பட்டாலும் வேறெதும் சர்ப்ரைஸ் இருக்கிறதா என வலையுளவுத் துறை கண்கொத்திப் பாம்பாய் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதாம்! இதற்கு நடுவில் இங்கே வா, அங்கே வா என்று ஏகப்பட்ட அழைப்புகளால் குழம்பிப் போயிருக்கிறாராம். இரண்டு நாளில் எங்கெங்கே செல்ல என்று.


இங்க வராமப் போனீங்க...... அவ்ளோதான்!

***************************************

ண்பர்களுக்கு இடையே இருந்த மின்னஞ்சல் குழுவிலிருந்து சிலசிறு சங்கடங்களால் பிரிந்துபோன அவரும், அவனும் மீண்டும் குழுவில் இணைந்ததில் குழுவே கலகலப்பாக இருக்கிறதாம். 2010ன் மகிழ்ச்சியான செய்தி அது என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்.

இருந்தாலும் இவனழைத்து வராத அவன், சுவைப்பதிவர் அழைத்ததும் வந்ததேன் என விசாரணை நடக்கிறதாம்.

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா...

********************************

‘சும்மா வெளையாட்டா ஆரம்பிச்சேன் விளம்பரத்தை’ என்று ஆரம்பத்தில் சொன்ன அவர் இப்போது விளம்பரக் கட்டணத்தை உயர்த்துமளவு அதற்கு வரவேற்பு என்பதில் மகிழ்சியோடிருக்கிறார். சமீபத்தில் அழைத்து கேட்ட கஸ்டமருக்கு முன்பைவிட இருமடங்கு என கட்டணம் சொல்ல ‘அவ்ளோதானா.. ஓகே’ என அவர் சொல்லவும்.. துள்ளிக் குதித்தாராம் இவர்!

இப்போது தன் நண்பர்களையும் அழைத்து ‘வெளம்பரத்தைப் போடுங்க மச்சான்ஸ்’ என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிறாராம்.

நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...


***************************



.

Monday, April 6, 2009

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்ப்பா....

டிசம்பர்-ல நடந்தது இது…

ஏதோ ஒரு அவியலில் வாரணம் ஆயிரம் படம் பற்றி எழுதியிருந்தபோது, திருப்பூர் தியேட்டர் பெயர்களைச் சொல்லி 'எங்கே பார்த்தீங்க' என்று பின்னூட்டம் போட்டிருந்தார் நாடோடி இலக்கியன். மனுஷன் திருப்பூர்லதான் இருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. பதிவர்ன்னு ஒருத்தர் சிக்கினா விட்டுடுவோமா நாம? உடனே மெய்ல் பண்ணச் சொல்லி, வெயிலான், சாமிநாதன் (ஈரவெங்காயம்) எல்லார்கிட்டயும் கலந்துபேசி, டிசம்பர் 3ம் தேதி நைட் ஒரு சந்திப்பைப் போட்டோம்! (அத ஏண்டா இப்ப எழுதறன்னு கேட்டா... பொறுமையா படிங்க – தெரியும்.)

இரவு உணவு விடுதில ரெண்டு பீர், ரெண்டு ஒயினோட காத்திருந்தோம். (ஒரு முக்கியமான விஷயம்.. வந்தவங்கள்ல ஒருத்தர் ஒரு பீரும், ஒயினும் மிக்ஸ் பண்ணி சாப்ட்டார், இன்னொருத்தர் ஒரு ஒயின் மட்டும், மூணாமவர் ஒரு பீர் மட்டும். ஒருத்தர் ஒண்ணுமே சாப்பிடல. நான் என் வீட்ல நான்தான் ஒண்ணுமே சாப்பிடாதவன்-னு சொல்லிகிட்டமாதிரி மத்தவங்களும் நான்தான் அந்த நாலாவது ஆள்னு சொல்லிக்கங்கப்பா. அதுக்காகத்தான் இதைச் சொல்றேன்..)

வந்தார் நாடோடி இலக்கியன்.




நாடோடி இலக்கியன்

(எங்க மூஞ்சியை எத்தனை தடவைதான் பார்ப்பீங்க.. அதுனால CROP செய்யப்பட்டது)

நல்ல உயரம். தீர்க்கமான பார்வை. சரி.. சரி.. சிறுகதை மாதிரி வருது. நேரா விஷயத்துக்கு வருவோம்..

கொரியாவில் மென்பொறியாளராய் பணிபுரிந்து இப்போது இந்தியா வந்திருக்கிறார். (செந்தழல் ரவி.. உங்களுக்குத் தெரியுமா இவரை?) சென்னைல இருந்து திருப்பூர் வர்றப்ப ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் நடந்திருக்கு.

அதை முதலில் சொல்ல?

சரி... கெட்ட விஷயம்:- ட்ரெய்ன்ல வர்றப்ப இவர் பையை வெச்சுட்டு கதவோரம் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கார். அந்த நேரத்துல இவர் பைல இருந்த எல்லா சர்ட்டிஃபிகேட்ஸும் அடங்கின ஃபைலை எவனோ அடிச்சுட்டுப் போய்ட்டான். 10-வதிலிருந்து, கடைசியா வேலை செஞ்ச கம்பெனில குடுத்த சர்டிஃபிகெட்ஸ் வரைக்கும் எல்லாம் போச்சாம். கஷ்டமா இருந்தது. புகார் குடுத்திருக்கார்.

நல்ல விஷயம்: எடுத்துட்டுப் போனவன் லேப்டாப்பை விட்டுட்டுப் போய்ட்டான். ப்ச்.. அதகூட இன்னொண்ணு வாங்கிக்கலாம். இனி இவர் அலைஞ்சு, டூப்ளிகேட் சர்டிஃபிகேட் வாங்கறதுக்குள்ள ரெண்டு, மூணு மாசம் ஓடிடும்!!!!

(இதை எழுதிய நாளில் கிடைக்காத அந்த சான்றிதழ்கள்... இந்தப் பதிவை பதிவேற்றும் இன்றைய தினம் பாடுபட்டு டூப்ளிகேட் சான்றிதழ்கள் வாங்கிவிட்டார்)


சந்திப்பில பல சுவாரஸ்யமான விஷயங்கள் அலசப்பட்டன.

சாமிநாதன் கேட்டார்.. ‘உங்களுக்கு முதன்முதலில் பின்னூட்டம் போட்டது யாரு'ன்னு.

எனக்கு 'அம்பி'-ன்னேன். ஆனா வந்து பாக்கறப்ப தெரியுது. எனக்கு முதல் பின்னூட்டம் வந்தது என் நண்பன் ஜெய்சக்திவேல்-கிட்டேர்ந்து. மூணாவது போஸ்ட்டுக்கு. ஆனா அம்பி ஏன் ஞாபகம் இருக்குன்னா, முதல் போஸ்ட்டுக்கு முதல் கமெண்ட் அவர்தான். லேட்டா பத்து நாள் கழிச்சு போட்டிருக்கார்!!

சாமிநாதனுக்கு.... லதானந்த்.

வெயிலான் - தங்கமாங்கனி.

நாடோடி இலக்கியன் - ஏதோ NICE BLOG என்ற பெயரில் யாரோ பின்னூட்டியதாகச் சொன்னார்.

(பேச்சுசிட்டில் (பேச்சுவாக்கில் அல்ல)

காதலோடு காத்திருந்தேன் நீ வருவாய் என
வந்தவுடன் கேட்டாய் ‘உன் வருவாய் என்ன?'


என்ற அவரது கவுஜயை ஞாபகப் படுத்தி டரியலாக்கினார்.)

**********************

சரி.. இப்போ கரண்ட் மேட்டருக்கு வருவோம்... நமக்கெல்லாம் பின்னூட்டம் என்பது மிக முக்கியமாக ஒரு ஊக்கம்.

ஆனால் பின்னூட்டம் என்றால் பிடரியில் கால்பட ஓடுமளவு ஆக்கினார் கணேஷ் என்கிற புண்ணியவான். அவியலில் வால்பையன் வேறு, ஒரு கேள்வி கேட்டு எல்லாப் பின்னூட்டத்தைப் போலவே இதையும் பார்க்காமல் போவீர்களா’ என்று கேட்டிருக்கிறார்.

ஐயா.. பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலளிக்காவிட்டால் பார்க்காமலே ரிலீஸ் செய்கிறேன் என்று அர்த்தமா?

எத்தனையோ முறை சொல்லியாயிற்று. அலுவலகத்தில் எனக்கு இணையம் பக்கம் போக அவ்வப்போதுதான் முடியும். அந்த நேரத்தில் பிறரது பதிவுகளை மேய்வேன். கணேஷ் வைத்த ஆப்பால் இப்போது மாடரேஷன் வேறு போட்டுத் தொலைக்கவேண்டியிருப்பதால், அதை ரிலீஸ் செய்வதில் நேரம் போகிறது. (ஐயா கணேஷா.. ‘அஞ்சாதே. ஒண்ணும் பண்ணமாட்டேன்’ன்னு அபயக்கரம் நீட்டக்கூடாதா?)

கணேஷா.. நீங்கள் செய்ததால் என்னென்ன கஷ்டம் தெரியுமா?

எனக்கு பதிவெழுத ஆகும் நேரத்தை விட அதை சிந்திக்கத்தான் நேரம் அதிகமாகும். மனதில் சிந்தனை ஓடி ஒரு வடிவத்துக்கு வந்துவிட்டால் 20 நிமிடங்களில் பதிவு ரெடி. இப்போது அந்த சிந்தனைகளில் பெரும்பகுதியை ‘யார் யார் பின்னூட்டம் போட்டு வெய்ட் பண்றாங்களோ.. பாவம். போய் ரிலீஸ் பண்ணணுமே’ என்ற கவலை அரித்துத் தொலைக்கிறது!

வால்பையன்.... என்னைப் புரிந்து கொள்வீர்களா? ஒரு நாளைக்கு 1000 பேர் படிக்கிறார்கள்.. சரி வேண்டாம் 500 பேர் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், 50 பேரின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை விட பின்னூட்டம் போடாமல் படிக்கும் 450 பேருக்காக அடுத்த நாளின் பதிவுக்காக உழைப்பதுதானே ஒரு பதிவனாய் என் கடமை?

நானென்ன வேண்டுமென்றா ‘உனக்கென்ன நான் பதில் சொல்வது’ மனோபாவத்தோடு இருக்கிறேன் நண்பா? இதோ.. இப்போதுகூட உங்கள் ஒரு பின்னூட்டத்துக்கு பின்னூட்டத்தில் இல்லாமல் பதிவிலேயே பதில் சொல்லியிருக்கிறேன்!

ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி எவ்வளவு சூப்பரோ சூப்பர் வாலு.. நீங்க கேட்டது என்ன?

டுவிட்டர் என்பது என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு பதிவு போட முடியுமா?

இல்லை மற்ற பின்னூட்டங்களை போலவே இதையும் கண்டுக்கா போயிருவிங்களா?


இதுதான். நானே ட்விட்டர்ன்னா என்னான்னு தெரியல்-ங்கறேன். அதை கட் பேஸ்ட் பண்ணி நீங்களே போட்டிருக்கீங்க... அப்பறம் என்கிட்டபோய் அதப்பத்தி விளக்கப் பதிவு போடுங்க-ங்கறீங்க. அதுவும் என் பதிவோட பின்னூட்டத்திலேயே டெக்னிகலி ஸ்ட்ராங் சர்வேசன் சார் பதிவும் போட்டு, லிங்கும் கொடுத்திருக்கறதப் பார்க்காமயே!

ஓகே.


பின்னூட்டம், பதிவு எழுதுதல் இதெல்லாம் போக ‘ப்ளாக்ல எழுதி என்னத்தைக் கிழிச்ச’ என்ற நியாயமான கேள்வி கேட்பவர்களுக்காக அச்சு இதழில் எழுதிக் காட்டவேண்டிய கடமை வேறு துரத்துகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். 15 நாட்களுக்கு முன் என்னில் உருவான ஒரு நல்ல கரு.. இதுவரை பத்து வரிகள் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. நேரம்.. நேரம்.. நேரம்..

கணேஷ்...

இதெல்லாம் எனது/எங்களது கஷ்டங்கள்.

உங்களுக்கென்ன.. நாம ஒரு நாலஞ்சு பேருக்கு பாடம் புகட்டீட்டோம்கற ரேஞ்சுக்கு எல்லாரும் மாடரேஷன் போட்டதை ரசிச்சுப் பாராட்டீட்டு இருக்கீங்க!

உங்க ரசனை, திறமைகளை வேற பக்கம் திருப்பக் கூடாதா?

ஓகே.. இனிமேலும் இத வளர்க்க மாட்டீங்கன்னு நம்பறேன்.

இதையெல்லாம் சொல்வதால் உங்களுக்குக் கோபம் வரலாம். ஆனாலும்

முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான்; எட்டிப் பழுத்து
ஆயினும் ஆமோ அறை

என்ற நன்னெறி போல.. கோபத்திலும் எங்களுக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன்.


.

Thursday, March 19, 2009

வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!

நேற்றைக்கு எங்கள் நிறுவனத்தில் ஒரு விழா. ஆண்டுவிழா மாதிரி என்று கூறலாம். நிறுவனத்திலேயே பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களில் திறமை உள்ளவர்கள் பாடல், ஆடல், மிமிக்ரி, நாடகம் என்று நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கினேன். ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். (சரி..சரி.. உணர்ச்சி வசப்படக்கூடாது. எல்லாம் இருக்கறதுதான்!!!)

இது சம்பந்தமான ரிஹர்சல், விழா அமைப்புகள் என்று ஒருவாரம் பிஸி. (என்னமோ ஒருவாரமா எழுதறதே படு மொக்கையா இருக்கே. பிஸி போல? - என்று கண்டு கொண்ட நண்பர்கள்.. வாழ்க வாழ்க!!)

நேற்று மாலை 4 மணி முதல் இரவு பத்து வரை நடந்த அந்த நிகழ்ச்சிகளை மேடையில் தொகுத்து வழங்குவது முதல், பல பணிகள் இருந்ததால் 12 மணி முதலே நான் இணையம் பக்கம் வரவில்லை. ஐந்து மணியளவில் அலைபேசியையும் அணைத்துவிட்டேன்.

பத்துமணிக்கு அலைபேசியை உயிர்ப்பித்தபோது... நர்சிம் மற்றும் அனுஜன்யா, ஜ்யோவ்ராம் போன்ற இணையில்லா இணையக் கவிஞர்களிடமிருந்தும் மிஸ்டு கால், மெசேஜ்கள் பதிவாகி இருந்தது.

நர்சிம்மை அழைத்தபோதுதான் விவரம் சொன்னார்...

நண்பர் ரவிஷங்கரது பதிவில் அவர் எழுதிய கவிதை குறித்து காட்டமான பின்னூட்டம் ஒன்று என் பெயரில் பதிவாகி இருப்பதாகச் சொன்னார். ‘நான் அவன் இல்லை’ என்றேன். அப்போதே லைனில் வந்த முரளிகண்ணன் உடனே ஒரு பதிவை எனக்காகப் போட்டு எல்லாருக்கும் விளக்கினார். ‘இது ஹேக்கிங் ஆக இருக்கக்கூடும்’ என்ற பயம் எல்லாருக்கும் இருந்தது. நான் அப்போது நெட் பக்கம் போக வழியிருக்கவில்லை. வீடு செல்ல எப்படியும் ஒரு மணிநேரம் ஆகிவிடும். ஏற்கனவே ஹேக்கிங்-கால் பாதிக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லாவும் ஒரு பதிவைப் போட்டு எல்லார்க்கும் தெரிவித்தார்.

அதற்குப் பின் வீட்டிற்கு வந்து பார்த்தால்.. நல்லவேளையாக ஹேக்கிங் எல்லாம் இல்லை.

ஓபன் ஐ.டி-டில் என் பெயரில் என் யூ.ஆர்.எல்லைப்பயன்படுத்தி ஒரு பின்னூட்டம் அவ்வளவே...!

ரவிஷங்கரது பதிவில் என் பெயரில் வந்த பின்னூட்டத்தில் என் ப்ரொஃபைல் படம் இல்லை. அந்தப் பெயரை க்ளிக் செய்தால் என் வலைப்பூவுக்குத்தான் செல்கிறது. என் ப்ரொஃபைலுக்குச் செல்லவில்லை. அதை விளக்கி அவருக்கும் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன். (இது தெரியாம மனுஷன் அனுஜன்யா-வை மட்டும் பாராட்டினீங்களே’ன்னு பதில் போட்டு.. அந்த யூத்து பாவம் ‘யோவ்.. உங்க சண்டைக்கு ஏன்யா என் கவிதையைக் குறை சொல்றீங்க?’ன்னு ஒரே அழுகாச்சி! ‘பொறு..பொறு.. உங்களுக்கு கவிதைலதான் பதில் சொல்லணும்’னு வேற மிரட்டீட்டுப் போய்ட்டாரு!)


இவன் விமர்சனம் இந்த மாதிரி இருக்காது என்றுணர்ந்த நண்பர்களுக்கு நான் என்ன சொல்வேன்? என்னை அழைத்து பாதுகாப்புக்குச் சில வழிமுறைகளை கான்ஃப்ரென்ஸில் சொன்ன, என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் நர்சிம், அப்துல்லா, ஆதி, அனுஜன்யா, வடகரைவேலன், வெயிலான், ரவிஷங்கருக்கு மின்னஞ்சலனுப்பி என் நிலை விளக்கிய அதிஷா, ஜ்யோவ்ராம், உண்மைத்தமிழன், வால்பையன், கும்க்கி, கார்க்கி...

நான் அப்படி என்ன செஞ்சிருக்கேன் உங்களுக்குன்னு தெரியல...

இனி நானே யாரையாவது திட்டத் தோன்றினால் கூட.. திட்ட முடியாமல் ஆக்கிவிட்டது இந்த நிகழ்வு!

இந்த இடத்தில் மறுபடி ஒன்றைச் சொல்ல வேண்டும்...

யாருடைய எழுத்தாவது பிடிக்கவில்லை.. நன்றாக இல்லை என்றால் நேரடியாக சொல்லக்கூடிய ஆண்மை எனக்கிருக்கிறது. அதே சமயம் எல்லாருமே நமக்குப் பிடித்த வண்ணம் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். நானெழுதுவது மட்டும் எல்லாருக்கும் பிடித்திருக்கிறதா என்ன?

எந்தச் சூழலிலும் அனானியாக கேவலமானதொரு கமெண்டை நான் போட்டதில்லை. போடமாட்டேன்.

என்னிடம் உரிமையோடு கருத்துக் கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வருந்துவார்களோ என்று யோசிக்காமல் அவர்களிடம் சொல்லிவிடுவதுண்டு. ரொம்ப காட்டமாக இருந்தால்... எஸ்ஸெம்மிஸில் அல்லது மெயிலில். (இதோ இதை எழுத எழுத ஸ்ரீ ‘ஒரு கதை எழுதியிருக்கேன்’னு பயமுறுத்துறாங்க.. போய்ப் படிக்கணும்!!!) மற்றபடி மனம்வருந்தும்படி சொல்லி எனக்குப் பழக்கமில்லை. (இதுக்கு ‘நீ ரொம்ப நல்லவண்டா’ என்று பின்னூட்டமிட தடை விதிக்கப்படுகிறது!)

ஐயா.. கம்ப்யூட்டர் அறிவு நெறைஞ்ச புண்ணியவான்களே... உங்க அறிவை இதுக்கா பயன்படுத்துவீங்க? ‘ஒரு பதிவோட தலைப்பை ரெண்டு மூணு கலர்ல எழுதணும்னா.. முடியுமா?’ன்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். இன்னும் என்னென்னவோ நாட்டுக்கு பண்ண வேண்டிய வேலைகள் உங்களால ஏராளமிருக்கு. கம்ப்யூட்டர் அறிவும் பதிவுலக அனுபவமும் வெச்சுட்டு pkp.in என்ன பண்ணிகிட்டு இருக்காருன்னு பாருங்க... அதுல கால்வாசியாவது பண்ணுங்க.

அதையெல்லாம் விட்டுட்டு ஒரு அப்பாவியைப் போய் சீண்டறீங்களேப்பா... பதிவெழுத வந்தது குத்தமாய்யா? என்னை மாதிரி பச்சப்புள்ளதான் உங்களுக்குக் கிடைச்சானா?

எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை!!!

(அந்த ப்ராக்கெட்ல சிவப்புல இருக்கறது இங்க ஆஃபீஸ்ல ஒருத்தரைப் பார்த்து சொன்னதுங்க.. தப்பா நெனைக்காதீங்க.... ஹி..ஹி..

Tuesday, March 17, 2009

வழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க!!



சமீபத்தில் எனக்கும், வேறொரு பிரபலத்துக்கும் (அப்ப நீ என்ன பிரபலமா-ன்னெல்லாம் கேட்கப்படாது!) வந்த ஒரு மின்னஞ்சலில் பின்னூட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

‘என்ன சார் நீங்களும் சரி.. உங்க நண்பர் குழாமும் சரி எப்பப் பார்த்தாலும் எங்க பார்த்தாலும் ‘ஆஹா, ஓஹோ, சூப்பர், கலக்கல், அருமை சகா’ என்பது போன்ற பின்னூட்டங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். சில சமயங்களில் இது எங்களுக்கு சலிப்பைத் தருகிறது’ என்றிருந்தார் அந்தச் சகோதரி.

முதலில் அவருக்கு என் மற்றும் நண்பர்கள் சார்பாக ஒரு மிகப்பெரிய சபாஷையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனதில் பட்டதை, பட்டென்று கேட்டமைக்கு சபாஷும், எங்கள் நலனில் அக்கறையோடு உரிமையாக விமர்சித்தமைக்கு நன்றியும்.

பின்னூட்டங்கள் என்பது ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு விமர்சனம். விமர்சனம் என்பதை விடவும்.. அது ஊக்கம் தரும் ஒரு கருத்துரை என்பதே சரி. (உளர்றேன்ல?)

வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் என்கிற ஒரு மிக முக்கியமான மேட்டர் (வேறென்ன.. பணம்தான்) வலைப்பதிவாளர்களுக்குக் கிட்டாது. என்னதான் AD SENSE போட்டாலும்.. பதிவு எழுதும் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு வலைப்பதிவாளருக்கு அதிக பட்ச சந்தோஷத்தைத் தருவது.. இந்தப் பின்னூட்டங்கள்தான்.

சமீபத்தில் நண்பர் செல்வேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இதைச் சொன்னார். இண்டர்நெட் உபயோகம், மின்சாரம், பதிவு எழுத வேண்டி பார்க்கிற சினிமா, படிக்கிற புத்தகங்கள், குறிப்புகளுக்காக நண்பர்களை அழைத்துப் பேச ஆகும் அலைபேசிச் செலவு, பயணம் என்று வலைப்பதிவாளர்களுக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் குறைந்த பட்சம் மாதம் ஐநூறாவது தொடும்.

வேறொரு நண்பர் சொன்னார்.. ‘என்னை ஃபாலோ செய்கிற ஒவ்வொருவரும்
ஆளுக்கு மாசம் அம்பது ரூபா குடுத்தாலே எனக்கு மாசம் அஞ்சாயிரத்துக்கு மேல வருமானம் வரும்’ என்று. ‘ஏண்டா.. ஒரே நாள்ல ஃபாலோயர் லிஸ்ட் ஜீரோவைக் காமிக்கும். பர்வால்லியா?’ என்று வடிவேலு ஸ்டைலில் கேட்டதும் ஃபோன் ‘டொக்’!

ஆக.. எந்தப் பிரதிபலனும் பாராமல் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எழுதும் பதிவர்களை வெறும் குறைகளை மட்டுமே சொல்லிச் சொல்லி அவர்களை டிஸ்கரேஜ் செய்து ஒதுக்குவானேன்?

சரி... வலைப்பதிவாளர்கள் வேறு எதற்கு எழுதுகிறார்கள்?

நிச்சயமாக ஒரு அங்கீகாரத்திற்குத்தான்.

தினமும் அல்லது அடிக்கடி எழுதுவதால் நிச்சயமாக நமது எழுத்து மேம்படுகிறது.

வலைப்பதிவு ஆரம்பித்து முதல் சில பதிவுகள் போட்டு நிமிடத்திற்கொரு முறை ‘ஏதாவது கமெண்ட் வந்திருக்கா’ என்று பார்க்காத மனிதர் யார்? ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.

அந்தச் சகோதரி சொன்னது போல ‘ஆஹா.. ஓஹோ..’ பின்னூட்டங்கள் பற்றி ஏற்கனவே ஆதிமூலகிருஷ்ணன் (அதாங்க... சரி.. சரி.. ஒத்துக்கறேன்.. EX தாமிரான்னு உங்களுக்குத் தெரியும்..) ‘அட்லீஸ்ட் நமக்குள்ளயாவது இந்த மாதிரி போடாம உண்மையா எழுதிக்குவோமே’ என்றிருக்கிறார். ‘அப்ப நாங்க சூப்பர்னு சொல்றது என்ன பொய்யா?’ என்று கேட்டு.. கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

‘நிறைகளைப் பிறரிடம் சொல்லுங்கள்.. குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்’ என்பதற்கேற்ப எல்லாரும் பார்க்கும் பின்னூட்டங்களில் நிறைகளைச் சொன்னாலும்.. தனிப்பட்ட முறையில் அலைபேசி, மின்னஞ்சல் அனுப்பி குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டுதானிருக்கிறோம். சில சமயங்களில் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறோம்.

வெறும் குறைகளை மட்டுமே சொல்லுவதால்... ‘ஓஹோ.. இவனுக்கும் அவனுக்கும் ஆகல போல’ என்ற பிம்பம் உருவாகும் அபாயமும் இருக்கிறது!

சினிமாத்துறையில் ப்ரிவ்யூவுக்கு சென்று படம் பார்க்கும் அனைவரும் படம் பற்றிய கருத்தை இப்படிச் சொல்லுவார்கள்...

‘இண்டர்வெல் வரை நல்ல ஸ்பீடுசார் படம்’ (இண்டர்வெல்லுக்கு அப்பறம் ஒக்கார முடியல’)

‘பாட்டு ஓக்கே’ (பெரிசா சொல்லிக்க ஒண்ணுமில்ல)

‘ஹீரோவுக்கு இது நாலாவது படம்ல சார்?’ (மொத மூணு படத்துலயே அவன் சொதப்பீட்டான். எப்படிடா அவனைப் போட்ட?)

‘காமெடி ட்ராக் படத்தைக் கொண்டுபோகுது சார்’ (அதால நீ தப்பிச்ச)

இப்படி.. சொல்ல வேண்டியதை வேறு முறையில் சொல்லிப் புரியவைத்து விடுவார்கள். அதேபோல பல பதிவர்களுக்கும் பின்னூட்டத்தைப் பார்த்தே.. ‘இவர் சொல்றது இதுதான். கொஞ்சம் பாலிஷா சொல்லியிருக்காரு’ என்று புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு சில நண்பர்கள் வெறும் ஸ்மைலி போட்டால் ‘என்னங்க. பிடிக்கலியா? வெறும் ஸ்மைலியோட போய்ட்டீங்க’ என்று கேட்கிறார்கள். (இந்தப் பதிவுக்கு எத்தனை ஸ்மைலி வரப்போகுதோ!) சமீபமாக தோழி ஸ்ரீமதி எப்பப் பார்த்தாலும் வெறும் ஸ்மைலிதான் போட்டுப் போகிறார்!

எனக்கு ‘இந்தப் பதிவு பிடிக்கவில்லை’ என்று பின்னூட்டமிட்டு அதற்கான விளக்கத்தை மெயிலில் அனுப்பிய நண்பர்களும் உண்டு. அந்த உரிமையை நான் எல்லாருக்கும் வழங்கியிருக்கிறேன். அதேபோல நல்லா இல்லாததை நல்லா இல்லை என்று சொல்லக்கூடிய உரிமையை எனக்கும் எல்லாரும் வழங்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்!

முடிவா என்னதாண்டா சொல்ல வர்ற?

பின்னூட்டப் பெட்டியை நிரப்பி ஒரு வலைப்பதிவாளரை வாழ வையுங்கள். நிஜ விமர்சனத்தை அவர்கள் ஏற்கும் வண்ணம் - நட்பான முறையில் - எடுத்துச் சொல்லுங்கள்.

அவர்கள் எழுத்து மேம்பட்டால் அவரை விடவும் மகிழ்வது நீங்கள்தான்.

அதேபோல.. வெறும் ஆஹா ஓஹோ-வினால் ஒருவர் புகழடைய முடியும், நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷ் தான்.

நீங்கள் என்னதான் சோறூட்டி, பீரூட்டி, பாராட்டினாலும் அவரிடம் சரக்கிருந்தால் அவர் எழுதி எழுதி மேல்செல்வார். இல்லாவிட்டால் கூப்பிட்டு கூப்பிட்டு ‘ஏன் எனக்குப் பின்னூட்டம் போடல’ என்று மிரட்டி வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

இந்தப் பதிவு எழுத காரணமாயிருந்த வழுக்கை டப்பா வசந்துக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

Monday, March 9, 2009

கிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு!


அந்தப் பதிவர் தன்னோட பேரை மாத்தற முயற்சில இருக்காராம். அவரோட பேருல ஏற்கனவே ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கறதால, அந்த பேர்ல எழுதினா பத்திரிகைகள்ல வர்றதுக்கும், தான் பிரபலமாகறதுக்கும், பின்னாடி கட்சி ஆரம்பிச்சு முதல்வராகறதுக்கும் இடைஞ்சல் வரலாம்கறதாலதான் இந்த முடிவாம்.

தன்னோட நெருங்கிய நண்பர்களுக்கு மெயிலனுப்பி, பேர் சொல்லுங்கப்பா ன்னு கேட்டுட்டு இருக்காராம்.

பேர் கேட்கும் பிள்ளை!

***************************

அந்த மகிழுந்துப் பதிவரை கரையேத்தறவர் திட்டம் போட்டு, கூட்டு சேர்ந்து கலாய்ச்சதுல ரொம்ப ப்பீலிங்க்ல இருக்காராம். ஸ்டிக்கர் பதிவர்கிட்ட ஃபோன் போட்டு ‘ரெண்டு மூணு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பிச்சுட்டாங்க பாஸ்’ன்னு புலம்பறாராம்.

நட்சத்திரம் தெரியுதுபார் மேலே!

****************************

ஸ்டிக்கர் பதிவர் குறித்த ஒரு கிசுகிசு. அவரோட நெருங்கிய நண்பருக்கு ஒரு புத்தக செட்டை அனுப்பறதா வாக்கு குடுத்திருந்தாராம். ‘நாக்கு தவறினாலும் வாக்கு தவறாதவராச்சே இவரு’ன்னு அந்த நண்பரும் காத்திருந்தாராம். கடைசில காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடற நிலைமைக்கு ஆளானப்பறம்.. ஸ்டிக்கர் பதிவர் ‘இங்க வந்து வாங்கிக்கங்க. இல்லீன்னா இல்லை’ன்னு சென்னைக்குக் கூப்பிடறாராம். நண்பர் நாள் பார்த்துட்டிருக்கறதா கேள்வி.

எல்லாரும் கேளீர்!

****************************

இந்த வாரம் மகிழுந்துப் பதிவர் இருக்கற இடத்துல போன வாரம் இருந்த பெரியாரூர் பதிவர் ஒரு தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியிருந்தார் இல்லையா? ‘இதுவரைக்கும் இப்படி யாருக்குமே பதிவு போட்டு சொன்னதில்லயே’ன்னு ஆச்சர்யப்பட்டு கேட்டப்போ ‘இல்ல நண்பா... நன்றி சொல்லி பதிவு போட்டேனில்லையா.. அதுல அவரு பேரு விட்டுப் போச்சு. என் மேல கோவமான்னு சாட்ல கூப்ட்டு திட்டினாரு. அதான் பிராயச்சித்தமாதான் அந்தப் பதிவைப் போட்டேன்’ன்னார். அவர் மேலும் சொன்னது..

‘உங்க ஊர்க்காரர் ரெண்டு பேரை மிஸ் பண்ணீட்டேன். அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. அதுவும் பெரியார் ஊர்க்காரனான நான், பெரியார் அடிக்கடி சொல்ற வார்த்தைப் பதிவரை குறிப்பிட மறந்ததுதான் பெரிய வருத்தம்’ன்னார்.

‘அவர் ஏன் அவ்ளோ ஸ்பெஷல்’ன்னு கேட்டேன்.

“உங்க ஊருக்கு வந்திருப்போ 1500 ரூபாய்க்கு ப்ளாக் லேபிள் ஃபுல் வாங்கிக் குடுத்தது அவருதாங்க” என்றார்.

நல்லாயிருங்கப்பூ!

********************************

தோழர் ஒருத்தர் எழுதறது கொறஞ்சுடுச்சேன்னு கூப்ட்டு கேட்டேன். ஆணி அதிகம்னார். ‘இருந்தாலும் வாரத்துக்கு ஒண்ணாவது எழுதப்பா’ன்னு திட்டினேன். உடனே போனவாரம் ரெண்டு பதிவு போட்டுட்டார்.

கூப்ட்டு நன்றி சொன்னேன். அவர் சொன்னார்....

“நீங்க சொன்னா கேப்பேங்க.. ஏன்னா அதுதான் முதலாளி விசுவாசம்”

அடப்பாவி.. அப்போ நீ டொமய்ன் வாங்க க்ரடிட் கார்டுல நான் கட்டின பணத்தைத் திருப்பித்தரப் போறதில்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

********************************

எல்லார் வீட்டுக்கும் படம் காமிச்சிட்டிருக்கற அந்தப் பதிவர் ஒரு என்.ஆர்.ஐ-யை கரெக்ட் பண்ணி வெச்சிருக்காராம். ‘இங்க வா, அங்க வான்னு அலைகழிச்சு கதை கேட்கறாங்க.. ஆனா இன்னும் கன்ஃபர்ம் ஆனபாடில்லை’ன்னு புலம்பறாராம். கூடிய சீக்கிரம் கன்ஃபர்ம் ஆகி நானும் டைரக்ட் பண்ணீடுவேன்’ன்னு நம்பிக்கையோட சொன்னார். வாழ்த்துச் சொல்லீடுவோம்.

நான்தான் மொத விமர்சனம் போடுவேன்!

************************

அடிக்கடி எழுதாம விடுபட்டு, விடுபட்டுப் போற அந்த பதிவுலக தல, அடிக்கடி எழுதலீன்னாலும் பதிவுலகத்தோட தொடர்பிலயேதான் இருக்காராம். சமீபத்துல வலையுலக திரைஞானியைச் சந்தித்த அவர் ‘புனைவுகள் எழுதறப்போ பத்திரிகைகளுக்கு அனுப்பி, வரலீன்னா அப்பறமா வலையில போடுங்க’ என்கிற மிக உயர்வானதொரு அறிவுரையைத் தந்தாராம்.

‘ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க அவர் அப்படிச் சொன்னது. என்னோட புனைவுகள் அந்த அளவுக்கு தகுதியான்னு பயமா இருக்கறதால அனுப்பத் தயக்கமா இருக்கு’ என்கிறார் திரைஞானி தன்னடக்கத்துடன்.

ட்ரை பண்ணுங்க ஜி!

*****************************

அந்த பதிவுலக நண்பர்கள் வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறதாம். வரிசையாக அவர்களைச் சார்ந்தவர்கள் லாங்க்வேஜ்ஸ்மெல் முகப்பில் இருக்கப் போகிறார்கள் என்ற மகிழ்ச்சியாம். இந்த வாரம் மகிழுந்துப் பதிவரைத் தொடர்ந்து அடுத்தவாரம் அந்த இடத்தை ஆக்ரமிக்கப் போகிறவர்...

என்னது... ஒருத்தரைப் பத்தி ரெண்டு கிசுகிசு வேண்டாமா?

சரி..சரி...

*

Thursday, February 26, 2009

ப்ளாக்கராக ஆய பயனென் கொல்….

அது அந்த ஊரின் மிகப் பெரியதொரு க்ளப். உறுப்பினர்களும், பெரிய பணக்காரர்களுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த க்ளப்பில் கேரம் போட்டி நடைபெற்று முடிந்ததை நானறிந்தேன். கேரம் விளையாட்டில் எனக்கிருக்கும் ஆர்வம் காரணமாகவும், சில பல விதிமுறைகளை அறியும் பொருட்டும் அந்த ஊரின் கேரம் க்ளப் செகரெட்டரி யாரெனவும், அவரது எண்ணை அறியவும் அங்கே சென்றேன்.

ரொம்ப ஃபார்மலா இருக்குல்ல எழுத்து.. சரி.. விடுங்க.. ஃபார்மல்லேர்ந்து, நார்மலுக்கு வரேன்.

உள்ள போய் நேரா இருக்கற நாற்காலில இருந்த ஒருத்தர்கிட்ட “இங்க கேரம் டோர்னமெண்ட் நடந்ததுன்னு கேள்விப்பட்டேன். எனக்கு..”

“யாருப்பா அது? என்ன வேணும்?” – நான் தொடருமுன் வலது பக்கத்திலிருந்து ஒரு குரல். தடித்த குரல்.

திரும்பிப் பார்த்தேன். பெரிய மேஜையும், சுழல் நாற்காலியுமாய் இருந்த வெள்ளைச் சட்டை மனிதனொருவர் என்னை அழைக்க... “அவர்தான் மேனேஜர். அவர்கிட்ட கேளுங்க” என்றார் முதலாமவர்.

சரின்னு அவர்கிட்ட போனேன்.

“சார். எங்க கம்பெனில கேரம் டோர்னமெண்ட் வைக்கலாம்னு இருக்கோம். அதுக்கு சில ரூல்ஸ் பத்தின விளக்கம் தேவைப்படுது. உங்க க்ளப்ல கேரம் டோர்னமெண்ட் நடந்ததுல்ல? இந்த ஊர் கேரம் க்ளப் ப்ரசிடெண்ட், செகரெட்டரி நம்பர் எதாவது..”

“மொதல்ல உன் பேரென்னன்னு சொல்லுப்பா”

“கிருஷ்ணகுமார்ங்க”

“கிருஷ்ணகுமார்னா? என்னமோ பில்கிளிண்டன் மாதிரி சொல்ற? எங்கிருந்து வர்ற தம்பி?”

“என் பேர் கே.பி.கிருஷ்ணகுமார்ங்க” இந்த முறை இனிஷியலோடு சொன்னேன். “எங்க கம்பெனி பேரு.. “ தொடருமுன் அவரே இடை மறித்தார்...

“கே.பி.கிருஷ்ணகுமாரா? இருங்க ஒரு நிமிஷம்” என்றவர் மேஜைப் பேப்பர்களை அலசி அந்த வார இதழை எடுத்தார். குமுதம். அதன் அட்டைப் படத்தைப் பார்த்ததுமே நான் நிமிர்ந்தேன்

“நீங்க வலைப்பூ எதாவது எழுதறீங்களா?” என்றவர் அந்தக் குமுதத்தை புரட்டினார்.

“ஆமாங்க. நீங்க தேடறது என்னைப் பத்தித்தான்” என்று குமுதத்தில் அந்தப் பக்கத்தை அவருக்கு எடுத்துக் கொடுத்தேன். டாப் டென் வலைப்பூக்கள் என்று என் வலைப்பூ 6வதாக எழுதப் பட்டிருந்தது அதில். அதில் திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமாரின் வலைப்பூ என்று ஸ்பெசிபிக்காக குறிப்பிட்டிருந்ததே அவரது கவனத்தைக் கவர்வதற்குக் காரணம்.

அதற்குப் பிறகு அவர் எனக்குத் தனி நாற்காலி கொணரச் செய்ததும், நானும் அவரும் பேசிக் கொண்ட விஷயங்களும் இந்தப் பதிவிற்கு அநாவசியம்!

***********************

அடிக்கடி என் பதிவில் எங்கள் எம்.டி, எங்கள் எம்.டி என்று குறிப்பிடும் எங்கள் எம்.டி.க்கு (மேடம்) நானொரு ப்ளாக்கர் என்பது தெரியாது.

கடந்த வாரத்தில் ஒருநாள் எங்கள் அலுவலகத்திற்கு எங்கள் எம்.டி-யின் நண்பர் ஒருவரிடம் எங்கள் மேடம் “நான் கடவுள் பார்த்தாச்சா?” என்று கேட்க.. அவர் உடனே சொன்னார்...

“இன்னும் பார்க்கல. ஆனா கிருஷ்ணா எழுதின ரிவ்யூ படிச்சதுமே உடனே பார்க்கணும்னு தோணிச்சு. அருமையா எழுதியிருந்தார்” என்றார்.. என்னை அருகிலேயே வைத்துக் கொண்டு.

உடனே எம்.டி.. “கிருஷ்ணா எழுதின ரிவ்யூவா? என்ன சொல்றீங்க?” என்று கேட்க நான் வலைப்பதிவு எழுதுவதை ஏற்கனவே அறிந்திருந்த அவரும் “என்ன மேடம் உங்களுக்குத் தெரியாதா? அவரு ஃபேமஸ் ப்ளாக்கர்” என்று என் பிரஸ்தாபங்களை எடுத்து விட... “என்னப்பா எப்பவுமே என்கூடவே இருக்க. சொல்லவேல்ல? எங்க உன் பேஜை ஓப்பன் பண்ணிக் காமி” என்றார்.

காண்பித்தேன். தமிழ் படிக்கத் தெரியாததால் “என்னப்பா இங்லீஷ்ல இல்லியே.. நானெப்படிப் படிக்க?” என்றார். மிகவும் சந்தோஷப்பட்டார். அலுவலகத்தில் இருந்த சீனியர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டார்.

பிறகு தனியாக என்னை அழைத்தார்.

“என்னோட பழைய லேப்டாப் ஒண்ணு இருக்கு. நாளைக்கு கொண்டுவரேன். அத வெச்சுக்க. எங்கியாவது போகும்போது ஒனக்கு ஈஸியா இருக்கும்ல?” என்றார். அதே மாதிரி கொண்டுவந்து கொடுத்தார். இதோ.. அதில்தான் அடித்துக் கொண்டிருக்கிறேன் இந்தப் பதிவை!

*********************

டிஸ்கி: எனக்குக் கிடைத்திருக்கும் எண்ணிலடங்கா நண்பர்களுக்கு முன் மேலே குறிப்பிட்ட இரண்டுமே மிக மிகச் சாதாரணப் பயன்கள்தான்..!

Thursday, December 11, 2008

STOP THIS NONSENSE!

அங்கீகாரம் என்பதற்குத்தான் எல்லாருமே ஏங்குகிறோம். கணவன் தன் சமையலை பாராட்ட மாட்டானா என்று அவன் முகம் பார்க்கும் மனைவிகளாலும், டீச்சர் கடகடவென்று டிக் அடித்துக் கொண்டே புரட்டுவார் என்று தெரிந்தும் அழகழகான கையெழுத்தில் ஹோம் வொர்க்கைச் செய்து, அவர் கையெழுத்துப்போடும் போது, நிமிர்ந்து பார்த்து தன் எழுத்தை மெச்ச மாட்டாரா என்று ஏங்கும் மாணவ, மாணவிகளாலும், முதலாளி சொன்ன வேலையைச் செய்துவிட்டு, அவரது முதுகு தட்டலுக்குக் காத்திருக்கும் தொழிலாளிகளாலும், கடைக்கண் பார்வையால் ‘உன் விசுவாசத்தை மெச்சினேன்’ என்றொரு வார்த்தை கிடைக்காதா என்று ஏங்கும் தொண்டர்களாலும் நிறைந்ததுதான் இவ்வுலகம்.

ஆனால், அங்கீகாரம் என்ற பெயரில் உங்களைத் தவறாக ஏற்றிவிட்டுக் கொண்டே இருக்கும் நண்பர்களால் என்ன பயன்? அவர்கள் மறைமுகமாக நம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒரு பெண். அவரது அயராத உழைப்பில் இருபது வருடங்களுக்கு மேல் நின்று நிலைத்து, ஏற்றுமதியில் பேர் வாங்கிய நிறுவனங்களில் ஒன்று இது.

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். முதன் முதலாக ஒரு வெளிநாட்டு BUYERக்காக ஆயத்த ஆடைகள் தயாரித்து, அது தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்தது. மனம் தளர்ந்து, ‘என்னுடைய உற்பத்தியில் நீங்கள் சொல்லுமளவு குறைகள் ஏதுமில்லை’ என்று வாதாடினார் எங்கள் மேடம். இன்ஸ்பெக்‌ஷன் செண்டரில் வைத்து நடந்த இந்த வாக்குவாதங்களின் போது, அந்த BUYERன் இந்திய ஏஜண்ட் எங்கள் மேடத்தை தனியாக அழைத்தார்.

“லுக்... நீங்கள் வாதாட வேண்டியது இங்கே அல்ல. உங்க ஊழியர்கள்கிட்டதான். உங்க GOODSஐ நீங்களே CHECK பண்ணிக்கலாம். இதை ஓக்கே செய்ய எங்களுக்கு அஞ்சு நிமிஷம்தான் ஆகும். ஆனா ஒரு வளரப்போற நிறுவனமான உங்களுக்கு அது நல்லதில்ல. இதுதான் ஓக்கேன்னா, இதுக்கு மேல முயற்சிக்க முடியாம உங்க நிறுவனமும், நீங்களும் நின்றுவிட வாய்ப்புண்டு” என்று அறிவுறுத்தினார்.

‘அன்றைக்கு ‘உங்க உற்பத்தி ஏ-ஒன்’ என்று சமாதானப்படுத்தி, சமரசம் செய்து கொண்டு அனுப்பப் பட்டிருந்தால் இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்’ என்று எங்கள் மேடம் அடிக்கடி சொல்வதுண்டு.

அந்தத் தரக்கட்டுப்பாட்டில் ஓகே ஆகவில்லை என்றால் RECHECK செய்யப்பட்டு, அது ஓக்கே ஆகிப் போய்விட வாய்ப்புண்டு. ஆனால் தவறான அங்கீகாரமும், வெற்றுப் பாராட்டுக்களும் என்னப் போன்ற ஒருவனுக்கு முன்னேற்றத்தைத் தரவே தராது.

எதுக்குய்யா இப்போ இந்தக் கதையெல்லாம் என்று கேட்பவர்களுக்கு..

பாரிஸ் திவா என்றொருத்தர் தமிழில் சிறந்த முதல் மூன்று இடங்களைப் பிடித்த வலைப்பூக்கள் என்று லக்கிலுக், பரிசல்காரன், அதிஷா மூன்று பேரையும் வெளியிட்டிருக்கிறார். என்ன கொடுமை இது?

நிச்சயமாக எனக்கோ, மேலே குறிப்பிட்டுள்ள என் நண்பர்கள் லக்கிலுக், அதிஷாவிற்கோ இந்த நம்பர் கேமில் எள்ளளவும் உடன்பாடில்லை. நாங்கள்தான் சிறந்ததென்றால் சிறந்ததை அவர் என்னவென்று வகைப்படுத்துவார்?

இதுபற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டபோதே கோவம் வந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதே சரி என்று பேசாமல் இருந்தேன். ஆனால், இப்படி முடிவுகள் வெளியிட்டு எங்கள் நண்பர்கள், எங்களைப் படிக்கிறவர்கள் முன் எங்களை தலைகுனிந்து நிற்கச் செய்கிறார் அவர். இன்னும் எழுத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பிற்கு முட்டுக்கட்டையாகவே இது போன்ற பிதற்றலான கருத்துக் கணிப்புகளும், பாராட்டுகளும் இருக்கின்றன.

எங்கள் எழுத்தின் தரம் என்ன என்பது எழுதி முடித்துப் படிக்கும்போதே எங்களுக்குத் தெரியும். மரண மொக்கை எது, நன்றாக எழுதப்பட்டது எது என்பதை அறிந்தேதான் இருக்கிறேன். உதாரணத்திற்கு நேற்று எழுதப்பட்ட ஒண்டிக்கட்டை உலகம் புத்தக விமர்சனம் கொஞ்சமும் சரியில்லை என்பதை உணர்கிறேன். வேலைப்பளு, வேறு சில டென்ஷன்களால் எழுதித் தொலைத்து பதிவேற்றம் வேறு ஆயிற்று. (இந்த லட்சணத்தில் அது 200வது பதிவு!)

இப்படிப்பட்ட நிலையில் சும்மா ஒரு பத்து, பதினைந்து பேரைப் போட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தி, முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என்று வெளியிட்டு சிறப்பாய் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களின் சாபத்தையும், கோபத்தையும் எங்கள் பக்கம் திருப்பி விட்டிருக்கும் இவரது இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இனியும் இவர் இதுபோன்ற வேலைகளைத் தொடரவேண்டாமெனக் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, October 20, 2008

ப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்

யார் இந்த ப்ளீச்சிங் பவுடர்?

இந்தப் ப்ரச்சினை எப்படி ஆரம்பித்தது? எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்கிற ஆராய்ச்சியையெல்லாம் விட்டுவிடுவோம். முடியும் கட்டத்தில் இருக்கிறது என்று நம்புவோம்.


ப்ளீச்சிங் பவுடரின் உண்மையான பெயர் அருண்குமார். (இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்பையனின் பெயர் அருண்ராஜ்!) ஹைதராபாத்தில் சத்யத்தில் பணிபுரிந்தவர், தற்போது பெங்களூரில் ஒரு MNC நிறுவனத்தில் NETWORK ENGINEER பணிபுரிகிறார்.

பதிவுகளையும், பதிவுலகத்தைப் பற்றியும் மூன்று நான்கு மாதங்களாகத்தான் தெரியும் அவருக்கு.

“ஒரு சில விஷயங்களைத் தவிர லக்கிலுக்கின் எழுத்துக்கு நான் ஒரு தீவிர வாசகன். ஆனால் நியாயமான சில விஷயங்களை அவர் மறைப்பதும், வெளியிடாததும் என்னை பாதித்தது. அந்தக் கோபத்தைத்தான் பதிவெழுதி தீர்த்துக் கொண்டேன்” என்கிறார்.

“அவர் என்றில்லை. நீங்கள் சொல்வதில் சில விஷயங்கள் பிடிக்காதபோதும் வெளிப்படுத்தினேன். என்னுடைய கோபமெல்லாம் ஒரு நாளைக்குத்தான். அடுத்தநாள் அதை மறந்து விடுவேன்” என்றார்.

எந்தெந்த பதிவுகளைப் படிக்கிறார்?

“இன்றைக்கும் என்னுடைய ஃபேவரைட் லிஸ்டில் இட்லிவடை, லக்கிலுக், பரிசல்காரன், கார்க்கி நான்குபேர்தான் இருக்கிறார்கள். இப்போதுதான் வால்பையன், நல்லதந்தியை சேர்த்திருக்கிறேன்” என்று சொல்லும் இவர் “இந்தப் ப்ரச்சினையில் வால்பையன் பேரை இழுத்துவிட்டது ஆரம்பத்துல எனக்கு விளையாட்டாத்தான் இருந்துச்சு. ஆனா போகப்போக ஜோசப் பால்ராஜ் மாதிரியான சீனியர் பதிவர்களே, அதை நம்பற மாதிரி பின்னூட்டம் போட்டபோது என்னால வால்பையன் கஷ்டப்படுவாரோ’ன்னு தோணிச்சு” என்கிறார்.

‘இந்தப் ப்ரச்சினையை தீர்க்க, என் வலைப்பூவையே அழித்துவிடுகிறேன்’ என்று வால்பையனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். நல்லவேளையாக எனக்கும் CC அனுப்பியிருந்தார். ‘இப்படியே கொஞ்ச நாள் விளையாடுவோமே’ என்று வால்பையன் ஆசைப்பட, எனக்கு அது பிடிக்கவில்லை. இது பெரிதாகி, வேறு ப்ரச்சினைகளில் போய் முடியவும் வாய்ப்புண்டு என்பதால் நான் ப்ளீச்சிங் பவுடரிடம், ‘உங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிடவா’ என்று கேட்டேன். அனுமதி கொடுத்தார் ப்ளீச்சிங் பவுடர். ‘புகைப்படம் மட்டும் போடவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

“என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் என்ன சங்கடம் என்றால், என் நண்பர்கள் யார் என்ன எழுதினாலும், என்னால் எதிர்க்கருத்து சொல்ல முடியவில்லை” என்கிறார்.

பதிவுலகில் நல்ல நட்பான சூழல்தானே நிலவுகிறது என்று கேட்டதற்கு... “அது நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிறைய நண்பர்களை பெற்றிருப்பவர்கள், சீரியசான விஷயங்களிலும், அரசியல் சம்மந்தமான விவாதங்களிலும், தங்களுடைய கருத்தை கூறினால் எங்கே நட்பு பாதிக்குமோ என்று ஒதுங்கியே இருகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் வேற யாரு.. நீங்கள் தான் பரிசல்!” என்று வெளிப்படையாகக் கூறினார்.

என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். வால்பையனாகட்டும், ப்ளீச்சிங் பவுடர் ஆகட்டும்... உங்களுக்கு பிடிக்காத கருத்தை எதிர்ப்பதில் உங்களின் உரிமையை யாரும் மறுக்க முடியாது. அது தொடர்ந்த தனிமனிதத் தாக்குதலாக மற்றவர்களால் விமர்சிக்கப் படுவதைத் தவிர்க்க, ஆரோக்யமாகவே வெளிப்படையாகவே விமர்சிக்கலாம்.

நான் ரஜினிகாந்த் பற்றி பாராட்டி எழுதியது பிடிக்கவில்லையா, அதை நேரடியாக விமர்சியுங்கள். உனக்கு எப்படி ரஜினிகாந்தைப் பிடிக்கலாம் என்று கேட்பது என் உரிமையில் கை வைக்கும் செயலாகி விடுகிறது! (ஒரு உதாரணத்துக்கு சொல்றேங்க... நீங்க இப்படிச் செய்றீங்கன்னு சொல்லல..)


சிங்கைப் பதிவர்களிடம் இந்தப் பண்பை நான் பார்த்திருக்கிறேன். நேருக்கு நேர் என்று கருத்து மோதல்கள் மட்டும் செய்து, அந்த மோதலை ஆரோக்யமான விவாதமாக மாற்ற வேண்டும்.


அதேபோல ப்ளீச்சிங்பவுடரின் சில பார்வைகள் பிரமிப்பூட்டுபவை, வால்பையனின் சில எழுத்துகளும், தனக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கும் தெளிவும் பாராட்டக் கூடியது.

மற்றபடி, நட்புக்காக என்று எதையும் எதிர்த்துப் பேசத் தயங்குகிறீர்கள் என்று என்னைப் பற்றி ப்ளீச்சிங் பவுடர் சொன்னதும் உண்மைதான். இல்லையென்று வாதிட்டு ப்ளீச்சிங் பவுடரின் நட்பை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை! உண்மையில், வலையுலகில் எழுதுவதால் பணம் சேர்க்கவோ, புரட்சி பண்ணவோ முடிவதில்லை. நட்பைத்தான் சேர்க்க முடிகிறது. அதையும் கெடுத்துக் கொள்வானேன்!


“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தை கூறுவதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்” -வால்டேர்.

.

Thursday, October 16, 2008

எல்லோர்க்கும் நன்றி! (விடைபெறும் பதிவு அல்ல!)


பலருடைய பதிவுகள்ல இதை நீங்க பாத்திருக்கலாம். FOLLOWERSன்னு இருக்கும். அதுக்கு வேற சிலபேர் வெச்சு போட்டிருப்பாங்க. நான் என்கூட நீங்களும் வர்றீங்களா’ன்னு கேட்டிருப்பேன். வலது பக்க சைடு பார்ல இருக்கும். (யாருய்யா அது.. அனுமதி பெற்ற பாரா?-ன்னு கேக்கறது?)

மொத மொதல்ல நான் இந்த WIDGETஐ போட்டப்ப நந்து f/o நிலா-வும் முதலாகவாவும், லக்கிலுக் இரண்டாவதாவும் என் ஃபாலோயரா வந்தாங்க. லக்கிலுக்கை தொடர்ந்து மூணாவதா வந்தது யாரு தெரியுமா? Any Guess?


அதுல FOLLOW THIS BLOGஐ க்ளிக் பண்ணி என் ப்ளாக்கை நீங்க ஃபாலோ பண்ணினா, நான் எந்த போஸ்ட் போட்டாலும் உடனே உங்க டாஷ்போர்டுல தெரியும். (கார் வெச்சிருக்கறவங்க உடனே அந்த டாஷ்போர்டுல பார்த்து தெரியலையேன்னு கேட்கக்கூடாது...)

எனக்கென்ன வசதின்னா, நான் உங்களை அடிக்கடி பார்க்கணும்ன்னா, உங்க பதிவைப் படிக்கணும்ன்னா, நீங்க என் ஃபாலோவராய்ட்டீங்கன்னா, உங்க படத்துல க்ளிக்கினா ஈஸியா போயிடும்!

என்ன ஒரு சந்தோஷமான சமாச்சாரம்ன்னா, ரெண்டுநாள் முன்னாடி என் 47வது ஃபாலோவரா டாக்டர்.ருத்ரன் வந்திருக்காரு. எனக்கு சந்தோஷம் தாங்காம கத்துன கத்துல டாக்டர் ருத்ரன்கிட்ட கூட்டீட்டு போகணும்போல-ன்னு ஆஃபீஸ்ல இருக்கறவங்க சொன்னாங்க. நான் கத்தறதே அவராலதான்னு சொன்னேன்! :-)

அவரோட வாழ நினைத்தால் வாழலாம் புத்தகம் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு புத்தகம். என் துணைவி உமா, (மேரேஜுக்கும் - காதலிக்கறதுக்கும் முன்னாடி) அந்தப் புத்தகத்தைத்தான் எனக்கு முதல்ல பரிசா குடுத்தாங்க. படிச்சுட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். எப்போ மனசுக்கு ஆறுதல் தேவைன்னாலும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்.

அந்தப் புத்தகத்தை குடுத்துட்டு படிச்சாச்சா, படிச்சாச்சா-ன்னு பலதடவை உமா என்கிட்ட கேட்டாங்க. ‘ஓ'ன்னு சில அத்தியாயங்களை அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன். சுரத்தேயில்லாம கேட்பாங்க. எனக்கு ஏண்டா, எவ்ளோ இண்ட்ரஸ்ட் இல்லாம கேக்கறாங்க'ன்னு தோணும்.

அப்பறம் காதலை பரிமாறிகிட்டு ரொம்பநாள் கழிச்சு அந்தப் புத்தகத்தை கொண்டுவரச் சொல்லி காட்டினாங்க. அதுல ‘இதுவும் இன்னமும் வர உடனிருக்கும் உமாவுக்கு'ன்னு டாக்டர் சமர்ப்பணம் பண்ணியிருப்பாரு. நம்ம மரமண்டைக்கு அப்பதான், ஓஹோ.. இதுதான் மேட்டரா-ன்னு வெளங்கிச்சு!

அப்பறம் அவரோட பல புத்தகங்களை தொடர்ந்து வாசிச்சேன். என் ப்ரதர்-இன் -லா வோட பையன் பேரு ருத்ரேஷ். அதுவும் டாக்டரோட தாக்கம்தான். பேர் வைக்கறப்ப இதுதான் வேணும்னு அடம்பிடிச்சு வெச்சோம்!

இதுனால என்ன சொல வர்றேன்னா, அந்த ஃபாலோயர்ஸ்ல நீங்களும் கலந்துக்குங்க...! (எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..!) எனக்கும் உங்க பதிவுப் பக்கம் வர ஈஸியா இருக்கும்ல!

லக்கிலுக்கைத் தொடர்ந்து மூணாவதா வந்தது யாரா இருக்கும்னு நிறையபேர் கண்டுபிடிச்சிருப்பீங்க. யெஸ்... வால்பையன்!


இந்த நேரத்துல நந்து, லக்கிலுக், வால்பையன், வெண்பூ, விஜய், கார்க்கி, வீரசுந்தர், முரளிகண்ணன், வெட்டிப்பயல், கார்த்திக், கூடுதுறை, வடகரை வேலன், சிம்பா, விக்னேஸ்வரன், தாமிரா, பொடியன், குசும்பன் ,சர்வேசன், karthik, அகநாழிகை, வெயிலான், அதிஷா, தியாகராஜன், தென்றல், ஜிம்ஷா, மதுசூதனா, TBCD, புதுகைத்தென்றல், கணேஷ், Ara, முத்துலெட்சுமி-கயல்விழி, திவ்யா, கும்க்கி, ரமேஷ், மதுரை நண்பன், விலெகா, ஜீவன், sen, ரோஜா காதலன், நர்சிம், கேபிள் சங்கர், Raj, Pondy-Barani, இராம், கோவி.கண்ணன், டாக்டர்.ருத்ரன், Busy, Pradeep எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் நன்றி!

(இதப்படிக்கறவங்களுக்கு இத்தனை பேரை ஏன் எழுதி அறுக்கணும்ன்னு தோணலாம்... பதிவெழுதாம படிக்க மட்டும் செய்யற நிறையபேர் இதுல இருக்காங்க. அவங்களுக்கு ஒரு சின்ன நன்றிக்கடன்!)


ரெண்டாவது முக்கியமான விஷயம், இந்த தமிழிஷ் டூல்பார். இதோ இதுல நம்ம பதிவுலயே இணைச்சுட்டா எல்லாரும் ஓட்டுப் போடுவாங்கன்னு பார்த்தா, ஒருத்தரும் போடறதில்ல! ஓட்டுப் போடறதுன்னாலே சோம்பேறித்தனம்தானே. என்னமோ உங்க இஷ்டம்... பார்த்து பண்ணுங்க!


முக்கியமான பின்குறிப்பு:-

இதப் படிச்சவங்க இதையும் போய்ப் படிங்க. சமீபத்துல நான் படிச்சதுலயே எனக்கு மிகப் பிடிச்சது!

Wednesday, October 15, 2008

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்


“என்னது.. பொணம் கையை ஆட்டிக் கூப்பிட்டுதா?”ன்னு ஆச்சர்யமா பயத்தோட கேட்டேன் நான். கான்ஸ்டபிள் சொன்னாரு. “நானும் அப்படித்தான் நெனச்சு பயந்து நடுங்கிட்டேன். ஒருவேளை உயிரிருக்குமோன்னுகூட தோணிச்சு. அப்புறம் பயந்து பயந்து பக்கத்துல போய்ப் பார்த்தா, இறந்தவன் போட்டிருந்த முழுக்கை சட்டை கிழிஞ்சு காத்துல ஆடிகிட்டிருந்தது. எனக்குத்தான் அவனே கூப்பிடறமாதிரி மனப்ரமையா இருந்திருக்கு’ன்னார். நான் கேட்டேன் ‘ஏதோ ஒரு நாளைக்குத்தானே அப்படியாகும். மத்தநாள் எல்லாம் ஜாலிதானே?’ அவரு சொன்னார்... ‘அந்த ஏதோ ஒரு நாள் இன்னைக்குத்தானா-ன்னு தெனமும் பயந்துகிட்டேதான் பயணிக்கறோம்’

இப்போ சொல்லுங்க எல்லா வேலையிலயும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கத்தானே செய்யுது?”

இந்த இடத்தில் நிறுத்தினார் அவர்.


அவர்?




(கருணாகரனுடன் பரிசல்காரன்)


கருணாகரன். கும்க்கி என்கிற பெயரில் பின்னூட்டங்கள் போடுகிறார். கிருஷ்ணகிரியில், கூட்டுறவு வங்கியில் செகரட்டெரியாக இருக்கிறார்.


ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே என்னைச் சந்திக்க வேண்டும் என அலைபேசிக் கொண்டே இருந்தார். (அப்புறம் எப்பதான் வெச்சார்?) சனிக்கிழமை வருவதாகவும், ஞாயிறு மாலை திரும்புவேன் என்றும் கூறினார்.

சனிக்கிழமை ஈரோடு போய் வால்பையனைச் சந்தித்துவிட்டு, வாலோடு திருப்பூர் வந்தார்! மதியமே வந்துவிட்டார். வழக்கம்போல ஆபத்பாந்தவன், அனாதரட்சகன், நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய என் உற்ற தோழன், ஆருயிர் நண்பன் (எல்லாம் ஒண்ணுதாண்டா) வெயிலானை அழைத்து ‘ஹி..ஹி.. இந்த மாதிரி இந்த மாதிரி.. இந்த மாதிரி..இந்த மாதிரி..’ என்று சொல்ல, “ஒனக்கு இதே பொழப்பாப் போச்சுய்யா.. ஒனக்காகப் பண்ணல. ஒன்ன நம்பி வர்றவங்களுக்காகவும், திருப்பூரோட சுற்றுலா மேம்பாட்டுக்காகவும் போய் ரிசீவ் பண்றேன்” என்று திட்டிவிட்டு இந்தியா ஹவுஸ் லாட்ஜூக்குப் போய் அவர்களோடு ஐக்கியமானார்.

சற்று நேரத்த்தில் சாமிநாதன் ஒரு பரிசுப்பொருளோடு போய் அவர்களைச் சந்தித்திருக்கிறார். நானும் சரியாகச் சொன்ன நேரத்தில் (இரவு 9 மணி!) அவர்களைச் சந்தித்தேன். தொழிலதிபர் சாமிநாதன் சனிக்கிழமை என்பதால் அவரது நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கச் சென்றுவிட்டார்.

நண்பர் (அஜ்மன் புகழ்) நந்தகோபால் வந்தார். அவர் கருணாகரனுடன் சேர்ந்து ஆன்மிக விஷயங்கள் பேசினார். கருணாகரனின் கைலாஷ் யாத்திரை அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம்!

12 மணிக்குப் பிறகுதான் என்னோடு பேச ஆரம்பித்தார் கருணாகரன். அரசு சம்பந்தமான அனைத்து விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அரசு இயந்திரங்கள் குறித்து அவர் பேசியது தனித்தனிப் பதிவாகப் போடலாம்! இப்போது எழுதாதீர்கள்... இன்னும் விவரம் தருகிறேன் என்றிருக்கிறார். அவரே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதினால் அது ஒரு சிறப்பான துறை சார்ந்த வலைப்பூவாக மிளிரும் என்பதில் ஐயமே இல்லை.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அவரோடு அளவளாவிவிட்டு, கிளம்பும்போது பார்த்தேன். ஒரு பெரிய BAG கொண்டுவந்திருந்தார்.

“என்னங்க.. ரெண்டு நாளைக்கு இவ்ளோ பெரிய பேக்?”

“ஒரு நிமிஷம் இருங்க” என்றவர் பேகைத் திறந்தார்.

புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்....

கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான புத்தகங்கள்!

“ஒவ்வொண்ணாத்தாங்க படிக்க முடியும். ஒண்ணைப் படிச்சுட்டு தர்றேன். அப்புறமா அடுத்தத குடுங்க” என்றேன்.

“மெதுவாப் படிங்க. எல்லாமே உங்களுக்குத்தான்”

எனக்கு பேச்சே வரவில்லை.

இரவு இரண்டு மணிக்கு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றேன்.

அடுத்தநாள் அவர் வால்பையனோடும், இன்னொரு நண்பர் பிலாலோடும் நான் பணிபுரியும் இடத்துக்கே வந்து சென்றார்.


அவர் கிளம்பும் நேரம் ஃபோன் வந்தது. முன்பெல்லாம் பதிவெழுதிக் கொண்டிருந்த.. இப்போது பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் பாலராஜன்கீதா தம்பதி சமேதராக திருப்பூர் வந்திருந்தார்கள். புதுகை அப்துல்லா மூலமாக என்னை சென்னையில் கிளம்பும்போதே தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் வருவதாகச் சொல்லி அலைபேசினார்கள். சரியாக கும்க்கி, வால்பையனோடு நான் நின்றிருந்த இடத்தில் பாலராஜன் சார் வந்திறங்கினார். (இவரோடு ஆன சந்திப்பு நாளைக்குச் சொல்றேன்...!!)

நான் அறிமுகப்படுத்தினேன்.

“இவர்தாங்க வால்பையன்”

“நிஜமாவா? உங்க பதிவுகள்ல நீங்க மத்தவங்களை கலாய்க்கற மாதிரி கலாய்க்கலியே?”

“இல்லல்ல. இவரு வால்பையன்ங்கறது உண்மை. ஆனா இவரு ‘அவரா’ன்னு தெரியல”

வால்பையன் அடக்கமுடியாமல் சிரிக்க... விடை பெற்றார்கள்.

கும்க்கி (எ) கருணாகரனை பத்திரமாக அழைத்துவந்து என்னைச் சந்திக்கச் செய்த வால்பையனுக்கும், வால்பையனை பத்திரமாக அழைத்துவந்த கருணாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அரசு வேலைகள் குறித்து கருணாகரன் சொன்ன ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

“பப்ளிக்குக்கு அரசு வேலைகள் சம்பந்தமா யாரைப் பார்க்கணும்ன்னு தெரியாததுதான் பெரிய தப்பு. அதுனால ஒரு நாள்ல முடிக்க வேண்டிய வேலைக்கு மக்கள் மாதக்கணக்கா அலையறாங்க. அரசு எவ்வளவோ செலவு பண்ணுது. ஒவ்வொரு அரசு அலுவலகங்கள்லயும் அந்தத் துறைல என்ன வேலை நடக்குது.. எதெதுக்கு யாரைப் பார்க்கணும், குறைந்தது எத்தனை நாள் ஆகும் என்பது மாதிரியான விளக்கக் கையேடு இருந்தா எவ்வளவோ ப்ரச்சினைகள் தீரும். பத்து பேர்ல ஒருத்தனாவது “இது உங்க வேலை. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டிய வேலையை பத்து நாளா இழுக்கறீங்க”ன்னு தைரியமா போய்க் கேட்பாங்க. ஆனா நாம கேக்கறது தப்போ-ங்கற பயத்துலயே யாரும் ஒண்ணும் கேக்கறதில்ல. இந்த மாதிரி கையேடு வர்றதால அவங்க வேலை அதிகமாகும்ங்கறதும் வராம இருக்கறது ஒரு காரணமா இருக்கலாம். யாராவது பப்ளிக் இண்ட்ரெஸ்ட்டுக்காகவாவது இதப் பண்ணலாம்” என்றார்.


கும்க்கி, ப்ளீஸ் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு நீங்களே அரசுத் துறைகள் பத்தின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துங்க. இது வேண்டுகோள் இல்லை.

கட்டளை!

Saturday, October 4, 2008

திமிரானவன்!


நான் நண்பர்களைப் புண்படுத்த விரும்பதவன். லேசான மனங்கொண்டவன், உணர்ச்சிவசமே உருவானவன் என்பதெல்லாம் தாண்டி எனக்குள்ளும் ஒருத்தன் இருக்கிறான். அவன் அகங்காரன்... திமிர் பிடித்தவன். கர்வி.

பாராட்டுக் கிடைக்கும்போதெல்லாம் ‘ஐய... என்னங்க.. எனக்கு இந்தப் பாராட்டெல்லாம் அதிகம்க’ என்று குழையும்போது, எனக்குள்ளிருக்கும் அவன் ‘டேய்... இதெல்லாம் எனக்கு ஜூஜூபி. இன்னும் நான் எங்கேயோ போகணும். தலையெழுத்து இப்போதான் இங்க வந்திருக்கேன்’ என்று நினைத்துத் தொலைப்பான். நான் அடங்கு அடங்கு என்று மிரட்டினாலும் அடங்கமாட்டான்.

‘எனக்கு உதவி தேவை. உன் ராஜாவை இங்கே வரச் சொல். அவன் இந்த ஊருக்குதான் மகாராஜா. நான் இந்த நாட்டின் தேசியகவி’ என்று இறுமாப்போடு பேசிய, ‘பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கேட்ட பாரதிதான் இவன் ஆதர்சம். உணவுக்கு வழியில்லை, இரண்டு பெண் குழந்தைகள் என துன்பப்பட்டபோதும் அவன் புத்தகத்துக்கு செய்த செலவில் கொஞ்சமும் சொத்து சேர்க்கச் செய்யவில்லை. நானும்.

‘நிலவைக் குறிவைத்துக் குதி. தவறினாலும் நட்சத்திரம் உன் வீடாகட்டும்’ என்ற மனப்பான்மையே இவனுக்கு அதிகம். இன்னும் இவன் எம்பிக் கொண்டேயிருக்கிறான். குதித்தபாடில்லை.

இவன் எழுதியதில் சிறந்ததும், சிறப்பாய் இல்லாததும் எனப் பலவற்றை நீங்கள் படித்திருக்கக் கூடும். ஆரம்பித்து, எழுதவே முடியாத ஒரு சில இவனிடம் உண்டு. அதை எழுதத் தகுதியில்லையெனினும் எழுதிக்காட்டுவேன் என்ற இவன் இறுமாப்பு ஜெயிக்கும் என்றும், ஜெயிக்கலாமா என்றும் ஒரு பட்டிமன்றம் இவனுக்குள்ளே நடந்துகொண்டே இருக்கும்.

சாரு, பைத்தியக்காரன், ஜமாலன், அய்யனார் போன்றவர்களை மரியாதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். யெஸ்.பாலபாரதி, லக்கிலுக் போன்றவர்களின் நட்பு கிடைத்ததில் அந்தக் கர்வி இன்னும் ஒருபடி மேலே போய்விட்டான். அவன் அடங்கப் போவதில்லை. அவனுக்கு மிகப் பிடித்த ஒரு பிரபலமான டாக்டர். ருத்ரன் வலைப்பக்கம் ஆரம்பித்ததைக் குடித்துக் கொண்டாடும் அளவுக்கு சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறான். அவர் தமிழில் எழுதாததற்கு இன்னும் ரெண்டு ரவுண்டு விடலாமா என்ற சோகத்தில் இருக்கிறான்.

கணிணியறிவு கொஞ்சமும் அற்றவன். ஆனால் காட்டிக் கொள்ளாமலே அதில் கரை கடந்து கொண்டிருப்பவன். தெரியாத சிலவற்றை தெரியாதென்று சொல்லி, கேவலப்பட்டுக் கொண்டதால் தெரிந்தது போல நடிப்பது சிறந்ததோ என்ற தப்பர்த்தம் எடுத்துக் கொண்டவன்.

படிப்பதில் ஆர்வம் அதிகம். ஆனால் படிப்பதை எழுத்தில் கொண்டுவரச் சிரமப்படுகிறான். இவன் நினைத்திருக்கும் இடம் இதற்கு மேல். கிடைத்ததைக் கொண்டாடிக் கொண்டிராமல், இன்னும் வேண்டுமென்ற குழந்தையாய் அடங்காது திரிபவன்.

யூமா. வாசுகியின் கவிதையை ரசிப்பவன். ராஜேஷ்குமாரின் க்ரைமை சிலாகிப்பவன். அன்பே சிவத்தில் அழுதவன். சிவாஜியில் மொட்டை ரஜினி வந்தபோது தியேட்டரில் கைதட்டி அமர்க்களம் செய்தவன்.

எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவன். ஆனால் எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவனாய் இருப்பதைத் தெரிந்திருப்பதால் பெருமை கொள்கிறான். பெண்களை மதிப்பவன். அதே அளவு பெண்களை ரசிப்பவன்.

50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ? ச்சீ!” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.

இவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி!

இன்றைக்கு இங்கே இருந்தாலும், மாலை ஆறு மணிக்கு இங்கே இருக்கவேண்டுமென்று நினைக்கிறான். முடியாது. அதற்காக வருந்திக் கொண்டிருக்கிறான். நர்சிம், பாலா, முரளி கண்ணன், புரூனோ போன்ற மதிப்புமிக்க பலரை முதலில் சந்திக்கும் வாய்ப்பை இழந்து நின்றாலும், இந்தக் கணத்தில் வாழ்பவனாதலால் அதைக் குறித்துச் சிந்தியாமல் இங்கிருந்தே வாழ்த்திக் கொண்டிருக்கிறான்.

குறை சொல்லியும், பாராட்டியும், கைகுலுக்கியும், புன்னகைத்தும், பொறாமைப்பட்டும், திட்டியும் இன்னும் பலவகையிலும் இவனை மேம்படுத்தும் உங்களுக்கு என்ன செய்து நன்றி சொல்லவென்று இவனுக்குத் தெரியவில்லை. இன்னும் எழுதிக் கொல்வதிலிருந்து இவன் மனம் விலகவில்லை.

பல அரசியல்களைப் பார்த்து பயந்து நடுங்கி, ஒடுங்கிப் போயிருக்கிறான். நாளை உங்களில் யாரோடும் இவனுக்கு நட்புமுறிவு வந்துவிடுமோவென அஞ்சிக் கொண்டிருக்கிறான். அப்படி ஏதேனும் நிகழின், இவனால் அதைத் தாங்கமுடியுமாவெனத் தெரியாதிவனுக்கு. அப்போதும் இவன் இப்படி கர்வத்தோடும் ,திமிரோடும் அலையக்கூடும். ஆனால் நீங்கள் இப்போது போலவே அவனோடு இருங்கள். அப்போதும் அவனைத் தலையில் தட்டி அடக்குங்கள். அது போதும் இவனுக்கு.

இன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும். அப்போதும் இவன் உங்களோடுதான் இருப்பான்.

ஏனென்றால் இவன் திமிரானவன். ‘பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.

அது அடங்காது. அடங்கவும் கூடாது.

Friday, August 29, 2008

எழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க!

“நல்ல பதிவர் தான். என்ன பதிவுகள் கொஞ்சம் அதிகம்..” நீங்கள் வலைப்பூ திறக்கும்போது பதிவுலகத்தில் விசாரிக்கும்போது இதுபோல எந்தப் பதிவரைப் பற்றியாவது சொல்லியிருப்பார்கள். வலைப்பூ இருப்பது பெரிய குற்றமில்லை தான். அப்படியென்றால் அதிக பதிவெழுதுவது மட்டும் அவ்வளவு பெரிய குற்றமா என்ன?

தமிழ்மணத்தில் எழுதிய லக்கிலுக்குக்கு வாயே இல்லாமல் தானிருந்தது. தமிழ்மணம் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடந்த பதிவர் தெய்வமாக லக்கிலுக் வாழ்ந்து வந்தார். பலரது தலைப்பை மட்டுறுத்திய தமிழ்மணத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. . கடைசி வரைக்கும் லக்கிலுக் அப்படியே இருந்திருந்தால் அவரை இன்று பதிவர் தலைவனாக கொண்டாடியிருப்போமா என்ன?

காட்டமாக “தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்” என்று எழுதியதால் தானே தமிழ்மணத்துக்கு நீதி வழுவியது புரிந்தது? லக்கிக்கும், அவரது ஜட்டிக்கும் (தலைப்புங்க...) தமிழ்மணத்தில் இடம் கிடைத்தது? இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை எழுதியே தீரவேண்டும். எழுதாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். தேவையற்றதை எழுதுபவர்களும் படுதோல்வி அடைகிறார்கள்.

எழுதாவிட்டாலும் தோல்வி, அதிகமாக எழுதினாலும் தோல்வி! என்னதான் செய்வது என்கிறீர்களா? எழுதுங்கள், இதைப்பற்றி நாலு பதிவு எழுதுங்கள். நாலு பேர் பின்னூட்டத்தை கண்கொடுத்துப் பாருங்கள். எழுதுவதற்கு தான் கையும், படிப்பதற்கு தான் கண்ணும் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதை எங்கே எழுதவேண்டும்? எப்படி எழுத வேண்டும்? ஏன் எழுதவேண்டும்? என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். மகிழ்ச்சி, வெற்றி, குதூகலம், அன்பு, காதல், கத்தரிக்காய், இத்யாதி.. இத்யாதி எல்லாமே உங்களை தேடிவரும். நீங்கள் தேடி அலையவேண்டியதில்லை.


எழுதுவது தான் பல பேருக்கே தொழில் தெரியுமா?

வாத்தியார் சுப்பையா எழுதாவிட்டால் பல்சுவையை இழுத்து மூடிவிட்டு போய்விடலாம். டாக்டர் புரூனோ எழுதாவிட்டால் அவரது வாசகர்கள் கதி அதோகதிதான். லக்கிலுக் எழுதாவிட்டால் யார் தலைவனாக இருப்பது? கோவி.கண்ணன் எதிவினைப் பதிவுபோடாமல், பதிவர் சந்திப்பு நடத்தாமல் காலத்தைக் கடத்தினால் உங்கள் மண்டை வெடித்துவிடும். அதிஷா, ச்சின்னப்பையன், ஆயில்யன், மங்களூர் சிவா, நாமக்கல் சிபி, வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, வால்பையன், முத்துலெட்சுமி கயல்விழி, தாமிரா, வடகரை வேலன், மைஃப்ரெண்ட் இவர்கள் எழுதுவதை நீங்களோ, நீங்கள் எழுதுவதை அவர்களோ படிக்காமல் ஏதாவது ஆக வாய்ப்பிருக்கிறதா? அதுவும் குசும்பன் கமெண்ட் பதிவு போடாவிட்டால் வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தனின் தலை சுக்குநூறாக வெடித்து விடுமே? அதுபோல அவரது வாசகர்களுக்கு தலை வெடித்துவிடுமாம் தெரியுமா?

முன்பெல்லாம் மளிகை லிஸ்ட், காய்கறி லிஸ்ட் என்று எழுதுவார்களாம் இல்லத்தரசிகள், இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு சமையல் குறிப்புகளை எழுதிக் கொண்டே போகிறார்கள்!

வலைப்பூ வந்தாலும் வந்தது. எல்லோரும், எப்போதும், எதையாவது எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். நின்றால் பதிவு, நடந்தால் பதிவு, படுத்தால் பதிவு. நாமெல்லாம் எழுதிக்கொண்டேயிருப்பதால் தான் பல திரட்டிகள் பதிவுகளாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். பெட்ரோல் விலையேற்றம், சேதுசமுத்திர திட்டம் என்று எந்தப் பிரச்சினையை எடுத்தாலும் அரசியல் கட்சிகள் நாடுதழுவிய பந்த் நடத்துகிறார்கள். ஒரே ஒருநாள் யாரும் எந்தப் பதிவும் எழுதமாட்டோம் என்று பதிவர்களாக சேர்ந்து பந்த் நடத்தினால் என்னவாகும்? கட்சிகள் நடத்தும் நாடுதழுவிய பந்தை விட கூடுதல் கவன ஈர்ப்பை பெறும் அல்லவா?


பதிவு என்றாலே நம்ம ஆட்களுக்கு பொண்டாட்டி தான் நினைவுக்கு வருகிறார்கள். பொண்டாட்டிகள் ஒரு கருத்து வங்கி. எதைப் பற்றி பேசினாலும் நாலு, ஐந்து பக்கத்துக்கு கருத்து சொல்வார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்று தோன்றும். ஆனாலும் தெரியாத விஷயத்தையும், தெரிந்தது போல பேசுவதுதான் பொண்டாட்டிகள் வேலை. காலையில் அலுவலக நேரத்தில் பார்க்கலாம், பைக் பில்லியன்களில் உட்கார்ந்துகொண்டே பேசிக்கொண்டே இருப்பார்கள். மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியாது. லக்கிலுக்கின் நண்பர் ஒருவரின் மனைவி இதுபோல ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கை. அப்படி என்னதான்யா உன் பொண்டாட்டி உங்கிட்டே ஓயாம பேசுது என்று ஒருநாள் அவர் கேட்டார். அவ என்ன பேசுறான்னு எனக்கெப்படி தெரியும்? ஹெல்மெட்டுக்குள்ள நைசா ஹியர் போனை மாட்டிட்டு நான் எஃப்.எம்.முல்லே கேட்டுக்கிட்டிருக்கேன் என்று பதிலளித்தார். அதையும் தன் பதிவில் எழுதிவிட்டார் லக்கி! இப்படி நண்பர்கள் பேசுவதும், சணடையிடுவதும் எல்லாமே பதிவுதான் பதிவர்களுக்கு!


காலையில் ரெண்டு பேனாவை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டு நாள் முழுவதும் எழுதாவிரதம் கூட இருந்துவிடலாம். இப்பொதெல்லாம் எழுதும் விரதமும் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். எழுதாமல் இருப்பது தான் இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாததும், மிகக்கடுமையானதாகவும் இருக்கக்கூடும். உரிமைகளை கேட்கவும், உணர்வுகளை சொல்லவும், உறவாடவும், நட்பினை கொண்டாடவும், மகிழ்ச்சியை – சோகத்தை பகிர்ந்துக் கொள்ளவும், எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் எழுதவேண்டியது அவசியமாகிறது. வாள்முனையைவிட பேனாமுனை வலிமையானது என்று சும்மாவா சொன்னார்கள்?

எழுதுவதென்றால் வெட்டியாக கீபேட் உடைய, கை வலிக்க எவ்வளவோ எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் உருப்படியாக, உபயோகமாக, வலைநாகரிகமறிந்து, சரியான சந்தர்ப்பத்தில், சரியான இடத்தில், சரியானவர்களிடம் சரியாக எழுதுவது எப்படி? இதைத்தான் யாராவது எழுதுவார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். எழுதி, எழுதி எனக்கு கை வலிக்கிறது, யாராவது கொஞ்சநேரம் எதையாவது பின்னூட்டமாய் எழுதுங்களேன்!!


டிஸ்கி 1: லக்கிலுக் நேற்று எழுதிய பதிவின் எதிர்வினைப் பதிவு இது.

டிஸ்கி 2: வேறு நல்லதொரு பதிவு எழுதிக் கொண்டுதான் இருந்தேன். நேற்று இரவும், இன்றும் காலையும் நான் வழக்கமாக பதிவெழுதும் நேரங்களில் மின்சாரம் தடை பட்டதால் வேறு வழியின்றி அலுவலகத்தில் வந்து ’வெரி சிம்பிள், வெரி எஃபக்டீவ்’ என்றழைக்கப்படும் இந்தப் பதிவைப் போட வேண்டியதாய்ப் போய்விட்டது.

Thursday, August 7, 2008

பதிவர்கள், பதிவுகள் – வினா விடை

பதிவர்கள் என்பவர்கள் யாவர்..?

BLOGGERS என ஆங்கிலத்திலும், பதிவர்கள் என தமிழிலும் அழைக்கப்படும் இவர்கள் வலைப்பதிவு ஒன்றை தங்களுக்கென ஆரம்பித்து, தங்கள் படைப்புகளை, கருத்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள். அந்த வலைப்பதிவுகள், வலைப்பூ எனவும் அழைக்கப்படுகிறது.


மொக்கை என்பது என்ன? அதன் இலக்கணங்கள் யாவை?

படிக்கும் வாசகரை `இவனையெல்லாம் மதிச்சு படிக்க வந்தோம் பாரு’ என்று சிந்திக்க வைத்து, வெறுப்புற்று வெளியேறச் செய்யும் வண்ணம் எழுதுவதே `மொக்கை’ எனப்படும்.

ஒரு பதிவு எழுதும்போதே, என்ன எழுதப்போகிறோம் என்று தெரியாமல் ஆரம்பிப்பதே இதன் இலக்கணமாகும். மற்றும் அந்தப் பதிவு போட்ட பிறகு வரும் பின்னூட்டங்களின் வழி, அது நிஜமாகவே மொக்கையா, இல்லையா என அறியலாம்.


பின்னூட்டம் என்றால் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

நீங்கள் பதிவை வெளியிட்ட`பின்’, உங்களுக்கு `ஊட்டம’ளிக்கும் வகையில், அல்லது மேம்படுத்தும் வகையில் உங்களுக்கு அளிக்கப்படும் கருத்துகள், பின்னூட்டம் எனப்படும். இதை தமிழ்மண மொழியில், மறுமொழி என்றும் அழைக்கலாம். தங்கள் நேரத்தை ஒதுக்கி, வெறும் ஸ்மைலி போட்டு ஓடாமல் `raap’ போன்றவர்கள் எழுதும், நீண்ட, நெடிய, விளக்கமான பின்னூட்ட்ங்களை `பதிவூட்டம்’ எனவும் அழைக்கலாம். (ஒரு பதிவுக்குரிய அளவில், பின்னூட்டம் எழுதுவதால்!)


பின்னூட்டமாறு என்பது என்ன?

உங்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு, மதிப்பளித்து, ஒரு பதில் போடுவதே பின்னூட்டமாறு எனப்படும். `கைமாறு’ என்ற சொல்லிலிருந்து இது உருவானது.


‘பின்னூட்ட கயமைத்தனம்’ என்றால் என்ன?

இரண்டு பின்னூட்டங்களுக்கு மேல் இருந்தால்தான் தமிழ்மண மறுமொழிதிரட்டியில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், ஒரு கமெண்டை தானே போடுவது, அல்லது, வெறுமனே வந்து ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு செல்வது ஆகியவை பின்னூட கயமைத்தனம் என்றழைக்கப் படுகிறது. `அதிஷா’ என்ற பதிவரால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.


`பின்னூட்ட டுபுரித்தனம்’ என்றால் என்ன?

முந்தைய கேள்விக்கான பதிலையே வாசிக்கவும்.


`சூடான இடுகைகள்’ என்றால் என்ன? அதற்குரிய இலக்கணங்களை வரையறு.

ஒரு நாளில் அதிகபட்ச வாசகர்கள் படிக்கும் வண்ணம் எழுதப்படும் இடுகைகள் சூடான இடுகைகள் எனப்படும். இதற்கான இலக்கணங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கலாம். நிரந்தர மற்றும் தற்காலிக. யெஸ்.பாலபாரதி, லக்கிலுக், தமிழ்மணம் ஆகியவை தலைப்புகளில் வருமாறு எழுதுவது நிரந்தமாக (எந்தக் காலகட்டத்திலும்) சூடான இடுகைகளாக வரும். `தற்காலிக’ என்பது அப்போதைய ஏதாவது செய்திகளைப் பொறுத்து அமையும். உதாரணம் தற்போதைய சூடான தலைப்பு, ரஜினி (அ) குசேலன்.


‘பா.க.ச.’ என்பதன் விரிவாக்கம் என்ன?

பதிவர்களின் முன்னேற்றத்திற்கென உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து, நேரம் ஒதுக்கி பாடுபடுபவர் யெஸ்.பாலபாரதி என்பது அனைவரும் அறிந்ததே. அவரை கலாய்ப்பதற்கென்றே ஒரு சங்கம் நாமக்கல் சிபியால் உருவாக்கப்பட்டது. அதுவே `பாலபாரதி கலாய்ப்போர் சங்கம்’ என்றழைக்கப்படும் `பா.க.ச.’

இதற்கு எதிரான அமைப்புதான் `பா.பா.ச.’ (பாலபாரதி பாராட்டுவோர் சங்கம்) ஆனால், இவ்வமைப்பு குறித்த திட்டவட்டமான குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை.


பதிவுலகின் அரசியல், நுண்ணரசியல் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் அது `அரசியல்’. சொல்லாமல் விட்டால் அது நுண்ணரசியல்.


‘கும்மி’ என்றால் என்ன?

ஒரு பதிவிற்குச் சென்று அதிகபட்சமாக, சம்பந்தமாகவோ, சம்பந்தமில்லாமலோ பின்னூட்டங்களிடுவது `கும்மி’ என்றழைக்கப்படுகிறது. `குசும்பன்’ `மங்களூர் சிவா’ ஆகியோர் இந்தக் கும்மியில் கைதேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.


`கவுஜ’ என்றால் என்ன?

மொக்கையாக எழுதப்படும் கவிதைகள் `கவுஜ’ என்றழைக்கப்படும். அதிலும் சிறந்த, கொடுமையான, கேவலமான, சூப்பரான கவுஜ கொலை வெறிக் கவுஜ’ எனப்படும் சுருக்கமாக கொ.வெ.க. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணமாக நாமக்கல் சிபியின் `கவுஜ’யைச் சொல்லலாம்!


இப்படிப்பட்ட வலைப்பூக்களின் பயன்கள் யாவை?

இவ்வாறு படைப்புகளை எழுதுவது, படிப்பதன் மூலம் நடப்பு செய்திகளை அவ்வப்போது அறிந்துகொள்வது மற்றும் பல பதிவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். அந்த நட்புக்கு இணையாக எதுவுமே கிடையாது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் புகைப்படமெடுக்கும் ஆர்வமிகுந்த என்னை அழைத்து, நந்து ஈரோட்டிலிருந்து அழைத்து, `என்ன உங்ககிட்ட கேமரா இல்லையா? யாரயாவது ஈரோடு அனுப்புங்க. என்கிட்ட ஒரு டிஜிட்டல் கேமரா இருக்கு. குடுத்துவிடறேன்’ என்றது. அவரை இப்போதுவரை நான் நேரில் சந்தித்ததே இல்லை!

இன்னொரு உதாரணம் சமீபத்தில் டெல்லிக்கு செல்கிறேன் என்று என் நண்பன் சொன்னபோது, `ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுடா. அங்க தெரிஞ்சவங்க இருக்காங்க' என்று நான் சொன்னேன். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொன்னேனென்றால் கயல்விழி முத்துலெட்சுமி அக்காவை நம்பித்தான். (க்கா, அவன் திரும்பி வந்துட்டான்.. பயப்படாதீங்க! :-)) அந்த நம்பிக்கையை, நட்பை எந்த சொந்தங்களும் எனக்கு தரவில்லை என்பதை இந்தச் சபையில் உரத்துச் சொல்கிறேன்!

இது போலவே உங்களுக்கு கிடக்கும் வெளிநாட்டு நண்பர்கள் உங்கள் மீது அன்புகாட்டுவதை உணர்கையில் இந்த உலகம் முழுதும் உங்களுக்கு தெரிந்தவர்களால், உங்கள் நண்பர்களால் நிரம்பியிருப்பதை உணரமுடியும்!


டிஸ்கி:- (DISCLAIMER) இதன் `விடுபட்டவை’களை யாரேனும் பதிவாக எழுதலாம்!