
சமீபத்தில் எனக்கும், வேறொரு பிரபலத்துக்கும் (அப்ப நீ என்ன பிரபலமா-ன்னெல்லாம் கேட்கப்படாது!) வந்த ஒரு மின்னஞ்சலில் பின்னூட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
‘என்ன சார் நீங்களும் சரி.. உங்க நண்பர் குழாமும் சரி எப்பப் பார்த்தாலும் எங்க பார்த்தாலும் ‘ஆஹா, ஓஹோ, சூப்பர், கலக்கல், அருமை சகா’ என்பது போன்ற பின்னூட்டங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். சில சமயங்களில் இது எங்களுக்கு சலிப்பைத் தருகிறது’ என்றிருந்தார் அந்தச் சகோதரி.
முதலில் அவருக்கு என் மற்றும் நண்பர்கள் சார்பாக ஒரு மிகப்பெரிய சபாஷையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனதில் பட்டதை, பட்டென்று கேட்டமைக்கு சபாஷும், எங்கள் நலனில் அக்கறையோடு உரிமையாக விமர்சித்தமைக்கு நன்றியும்.
பின்னூட்டங்கள் என்பது ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு விமர்சனம். விமர்சனம் என்பதை விடவும்.. அது ஊக்கம் தரும் ஒரு கருத்துரை என்பதே சரி. (உளர்றேன்ல?)
வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் என்கிற ஒரு மிக முக்கியமான மேட்டர் (வேறென்ன.. பணம்தான்) வலைப்பதிவாளர்களுக்குக் கிட்டாது. என்னதான் AD SENSE போட்டாலும்.. பதிவு எழுதும் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு வலைப்பதிவாளருக்கு அதிக பட்ச சந்தோஷத்தைத் தருவது.. இந்தப் பின்னூட்டங்கள்தான்.
சமீபத்தில் நண்பர் செல்வேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இதைச் சொன்னார். இண்டர்நெட் உபயோகம், மின்சாரம், பதிவு எழுத வேண்டி பார்க்கிற சினிமா, படிக்கிற புத்தகங்கள், குறிப்புகளுக்காக நண்பர்களை அழைத்துப் பேச ஆகும் அலைபேசிச் செலவு, பயணம் என்று வலைப்பதிவாளர்களுக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் குறைந்த பட்சம் மாதம் ஐநூறாவது தொடும்.
வேறொரு நண்பர் சொன்னார்.. ‘என்னை ஃபாலோ செய்கிற ஒவ்வொருவரும்
ஆளுக்கு மாசம் அம்பது ரூபா குடுத்தாலே எனக்கு மாசம் அஞ்சாயிரத்துக்கு மேல வருமானம் வரும்’ என்று. ‘ஏண்டா.. ஒரே நாள்ல ஃபாலோயர் லிஸ்ட் ஜீரோவைக் காமிக்கும். பர்வால்லியா?’ என்று வடிவேலு ஸ்டைலில் கேட்டதும் ஃபோன் ‘டொக்’!
ஆக.. எந்தப் பிரதிபலனும் பாராமல் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எழுதும் பதிவர்களை வெறும் குறைகளை மட்டுமே சொல்லிச் சொல்லி அவர்களை டிஸ்கரேஜ் செய்து ஒதுக்குவானேன்?
சரி... வலைப்பதிவாளர்கள் வேறு எதற்கு எழுதுகிறார்கள்?
நிச்சயமாக ஒரு அங்கீகாரத்திற்குத்தான்.
தினமும் அல்லது அடிக்கடி எழுதுவதால் நிச்சயமாக நமது எழுத்து மேம்படுகிறது.
வலைப்பதிவு ஆரம்பித்து முதல் சில பதிவுகள் போட்டு நிமிடத்திற்கொரு முறை ‘ஏதாவது கமெண்ட் வந்திருக்கா’ என்று பார்க்காத மனிதர் யார்? ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.
அந்தச் சகோதரி சொன்னது போல ‘ஆஹா.. ஓஹோ..’ பின்னூட்டங்கள் பற்றி ஏற்கனவே ஆதிமூலகிருஷ்ணன் (அதாங்க... சரி.. சரி.. ஒத்துக்கறேன்.. EX தாமிரான்னு உங்களுக்குத் தெரியும்..) ‘அட்லீஸ்ட் நமக்குள்ளயாவது இந்த மாதிரி போடாம உண்மையா எழுதிக்குவோமே’ என்றிருக்கிறார். ‘அப்ப நாங்க சூப்பர்னு சொல்றது என்ன பொய்யா?’ என்று கேட்டு.. கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
‘நிறைகளைப் பிறரிடம் சொல்லுங்கள்.. குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்’ என்பதற்கேற்ப எல்லாரும் பார்க்கும் பின்னூட்டங்களில் நிறைகளைச் சொன்னாலும்.. தனிப்பட்ட முறையில் அலைபேசி, மின்னஞ்சல் அனுப்பி குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டுதானிருக்கிறோம். சில சமயங்களில் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறோம்.
வெறும் குறைகளை மட்டுமே சொல்லுவதால்... ‘ஓஹோ.. இவனுக்கும் அவனுக்கும் ஆகல போல’ என்ற பிம்பம் உருவாகும் அபாயமும் இருக்கிறது!
சினிமாத்துறையில் ப்ரிவ்யூவுக்கு சென்று படம் பார்க்கும் அனைவரும் படம் பற்றிய கருத்தை இப்படிச் சொல்லுவார்கள்...
‘இண்டர்வெல் வரை நல்ல ஸ்பீடுசார் படம்’ (இண்டர்வெல்லுக்கு அப்பறம் ஒக்கார முடியல’)
‘பாட்டு ஓக்கே’ (பெரிசா சொல்லிக்க ஒண்ணுமில்ல)
‘ஹீரோவுக்கு இது நாலாவது படம்ல சார்?’ (மொத மூணு படத்துலயே அவன் சொதப்பீட்டான். எப்படிடா அவனைப் போட்ட?)
‘காமெடி ட்ராக் படத்தைக் கொண்டுபோகுது சார்’ (அதால நீ தப்பிச்ச)
இப்படி.. சொல்ல வேண்டியதை வேறு முறையில் சொல்லிப் புரியவைத்து விடுவார்கள். அதேபோல பல பதிவர்களுக்கும் பின்னூட்டத்தைப் பார்த்தே.. ‘இவர் சொல்றது இதுதான். கொஞ்சம் பாலிஷா சொல்லியிருக்காரு’ என்று புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு சில நண்பர்கள் வெறும் ஸ்மைலி போட்டால் ‘என்னங்க. பிடிக்கலியா? வெறும் ஸ்மைலியோட போய்ட்டீங்க’ என்று கேட்கிறார்கள். (இந்தப் பதிவுக்கு எத்தனை ஸ்மைலி வரப்போகுதோ!) சமீபமாக தோழி ஸ்ரீமதி எப்பப் பார்த்தாலும் வெறும் ஸ்மைலிதான் போட்டுப் போகிறார்!
எனக்கு ‘இந்தப் பதிவு பிடிக்கவில்லை’ என்று பின்னூட்டமிட்டு அதற்கான விளக்கத்தை மெயிலில் அனுப்பிய நண்பர்களும் உண்டு. அந்த உரிமையை நான் எல்லாருக்கும் வழங்கியிருக்கிறேன். அதேபோல நல்லா இல்லாததை நல்லா இல்லை என்று சொல்லக்கூடிய உரிமையை எனக்கும் எல்லாரும் வழங்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்!
முடிவா என்னதாண்டா சொல்ல வர்ற?
பின்னூட்டப் பெட்டியை நிரப்பி ஒரு வலைப்பதிவாளரை வாழ வையுங்கள். நிஜ விமர்சனத்தை அவர்கள் ஏற்கும் வண்ணம் - நட்பான முறையில் - எடுத்துச் சொல்லுங்கள்.
அவர்கள் எழுத்து மேம்பட்டால் அவரை விடவும் மகிழ்வது நீங்கள்தான்.
அதேபோல.. வெறும் ஆஹா ஓஹோ-வினால் ஒருவர் புகழடைய முடியும், நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷ் தான்.
நீங்கள் என்னதான் சோறூட்டி, பீரூட்டி, பாராட்டினாலும் அவரிடம் சரக்கிருந்தால் அவர் எழுதி எழுதி மேல்செல்வார். இல்லாவிட்டால் கூப்பிட்டு கூப்பிட்டு ‘ஏன் எனக்குப் பின்னூட்டம் போடல’ என்று மிரட்டி வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
இந்தப் பதிவு எழுத காரணமாயிருந்த வழுக்கை டப்பா வசந்துக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!