கிரி கேட்டானாம்: “கஷ்டகாலம் உங்களுக்கா எனக்கா சாமீ?”
**********************************
அசல் பாடல்கள். வரிகள் முழுதும் வைரமுத்து. நாயகன் துதிப்பாடலில் (காற்றை நிறுத்திக் கேளு) ‘நண்பரை மன்னித்தழுவான்’ என்று வருகிறது ஒரு வரி. மன்னித்ததிற்கெதற்கு அழவேண்டுமென்று தெரியவில்லை. சுனிதா மேனனின் குரல், மாடுலேஷன் எல்லாமே 007-ன் கோல்டன் ஐ பாடலை நினைவுபடுத்துகிறது. கேட்க சுகமாய்த்தான் இருக்கிறது. அதேபோல ‘அதிரிபுதிரி பண்ணிக்கடா’ பாடலின் ‘டொட்டொடய்ங்’ கமீனே-வின் ‘ஆஜா ஆஜா தில் ச்சோடே’ பாடலின் ‘டண்டடாய்ங் டடடாய்ங்’வை நினைவு படுத்துகிறது. பரத்வாஜ் இந்திப் பாடல்களின் ரசிகர் என்பது அவரது முந்தைய படப் பாடல்களிலும் தெரியும்.
படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் - ஷமீராவுக்காகவும்.
**************************************
சில விளம்பரங்கள். ஒரு வயதானவர் கேரம் விளையாடுகிறார். இந்தப் புறமிருந்து ஸ்ட்ரைக்கரைச் சுண்டி விட்டு மறுபடி அந்தப் புறம் சென்றமர்ந்து அவரே விளையாடுகிறார். மறுபடி இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று ஒருவரே இருவருக்குமான ஆட்டத்தை ஆடுகிறார்.
விளம்பரம் சொல்கிறது: SILENCE IS NOT ALWAYS GOLD என்றுவிட்டு ‘உங்கள் பழைய மொபைல்களை முதியோர் இல்லங்களுக்கு பரிசளியுங்களேன்’ என்கிறது. அவர்கள் தனிமையை மறந்து நண்பர்களுடன் பேசவாவது செய்யலாமே. ஏர்செல்லின் விளம்பரம் இது.
இன்னொன்று: கண்பார்வையற்ற முதியவர் ஒருவர் ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருக்கிறார். எதற்கோ எழப்போனவர் ரேடியோவைத் தட்டிவிடுகிறார். கீழே விழுந்து பழுதாகிவிடுகிறது ரேடியோ. சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த அபார்ட்மெண்டின் இரு இளைஞர்களிடம் ‘என்னாச்சு’ என்று கேட்கிறார் தாத்தா. ‘ஒன்றுமில்லை’ என்ற ஒரு இளைஞன் அவனாகவே கமெண்ட்ரி சொல்ல ஆரம்பிக்கிறான். தொண்டை கரகரக்கிறது. நிறுத்துகிறான். மறுபடி தாத்தாவிடமிருந்து ‘என்னாச்சு’ கேள்வி. ‘விளம்பரம்க’ என்ற மற்றொரு இளைஞன் விக்ஸ் மாத்திரையைக் கொடுத்துக் கொண்டே விக்ஸுக்குண்டான விளம்பரப் பாடலைப் பாடுகிறான். மாத்திரை சாப்பிட்ட பிறகு இன்னும் பலமாக கமெண்ட்ரியைத் தொடர்கிறான் இவன். அபார்ட்மெண்டே கூடிநின்று க்ரிக்கெட் க்ரவுண்ட் ஆடியன்ஸ் போல கூக்குரலிடுகிறது. சச்சின் பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றி என்று முடித்துவிட்டு ‘வரேன் தாத்தா’ என்று கிளம்புகிறான் இளைஞன். வாசலை நெருங்கும் அவனிடம் சொல்கிறார் தாத்தா: “தம்பி... நியூஸ் வெச்சுட்டுப் போப்பா”
விக்ஸ் விளம்பரம்.
********************************
பொங்கல் ரிலீஸ்களில் ஆயிரத்தில் ஒருவன் டாப் எக்ஸ்பெக்டேஷனில் இருக்கிறதென்றாலும் பலபேர்களோடு பேசியதில் ‘போர்க்களம்’ சைலண்டாக பலரை கவர்ந்திருக்கிறதென்பது தெரிகிறது. எனக்கு இரும்புக் கோட்டை முரட்டு சிங்கமும் ஆயிரத்தில் ஒருவனுக்கு நிகரான ஆர்வத்தைத் தருகிறது. கார்ட்டூன் காலத்திலிருந்து சிம்புதேவனின் ரசிகன் நான். கௌபாய் காலத்துப் படம்.
ஆடியோ சி டி கவர் பார்த்தீர்களா?
***************************
பிரபல குறும்பட இயக்குனரும் பதிவருமான ஆதிமூலகிருஷ்ணன் திருப்பூர் வந்திருந்தார். சனிக்கிழமை இரவு வந்தவருடன் நீண்ட நேரம் நண்பர்கள் உரையாடினோம்.
வெயிலான் போல ஆதியும் அதிகம் பேசாமல் அதிகம் கவனிப்பவர். அதேபோல செல்வேந்திரனிடமும், ஆதியிடமும் நான் வியக்கும் விஷயம்: இவர்கள் இருவரும் பேசுவது அப்படியே எழுதும் வடிவிலேயே இருக்கும். கொஞ்சமாக ஆனால் தீர்க்கமாகப் பேசுவது ஆதியிடம் நான் ரசிக்கும் அம்சம்.
அதே போல ஆதி ஒரு புகைப்படம் எடுக்க, எடுத்துக் கொள்ளும் (வாக்கியம் கரெக்டா?) சிரமங்களை குறும்படமாக எடுக்கலாம். (கேபிள் சங்கர்ஜி: நோட் திஸ் பாய்ண்ட். நீங்க பண்ணலாம்)
எங்களை புகைப்படம் எடுக்க அவர் மேற்கொண்ட வித்தைகளைப் பாருங்கள். கடைசிப் புகைப்படத்தில் அவர் நினைத்த ரிசல்ட் கிடைத்ததென்பதை அவர் புன்னகை சொல்லும்.
ஆதியுடனான சந்திப்பின்போது எங்களைக் கவர்ந்தவர்கள் இருவர். ஈரோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் பூபதி. திருப்பூர் பதிவர் பேரரசன் செந்திலின் தம்பி தினேஷ். இருவருமே வலைப்பதிவராகக் கூடிய அத்தனைத் தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தினேஷ் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டாரென நினைக்கிறேன். சந்திப்பில் அவர் கேட்ட ஒரு கேள்வி, கேள்வியை விட அவர் கேட்ட விதத்தில் எல்லாரையும் கவர்ந்தது. (ஐ ஏ எஸ் தேர்வுகளுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பணியை இவருக்குக் கொடுக்கலாம்.)
பூபதி போன்ற உற்சாகமான மனிதரை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை. பார்த்த மாத்திரத்தில் நண்பராகிறார் எல்லோரிடமும். இவருடன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி கலந்துரையாடி பதிவிட இருக்கிறேன். வெய்ட்டீஸ்ஸ்ஸ்....
அடுத்தநாள் பூபதி இரண்டு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார். ஒன்று ஏ ரகம். அப்புறம் சொல்கிறேன். இன்னொன்று ஆஹா ரகம்.
அதாவது ஹெல்மெட்டின் முக்கியத்துவத்திற்காக அசத்தலான விளம்பர ஐடியா என்று ஒன்று அனுப்பிருந்தார். விநாயகர் படத்தைப் போட்டு அருகில் வாசகம்:
“உங்கள் தலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்குமே என்னைப் போல Replacement கிடைக்காது”
************************************
இந்த (சென்ற?) வருடத்தின் புத்தகக் கண்காட்சி நிறைவடைந்துவிட்டது. நண்பர்கள் அழைப்பால் எல்லா நாளும் நானும் அங்கிருந்தேன்.
இனி யாரிடமிருந்தும் பா.ராவைப் பார்த்தேன். எஸ்.ராவைப் பார்த்தேன், பஜ்ஜி சாப்ட்டேன், அதை வாங்கினேன் இதை வாங்கினேன் பதிவுகளை எதிர்பார்க்க முடியாது. பு.கா.பதிவுகளில் டாப் ஜ்யோவ்ராம் சுந்தருடையது. அவர் எழுதியதால் மட்டுமே அது டாப். அதையே நான் எழுதியிருந்தால் ‘ஏதோ ஒண்ணு குறையுதே’ என்றிருப்பார்கள். ஒருவிதமான பகடிப் பதிவு அது!
நிற்க.
ஏழுகோடி புத்தகங்கள் விற்பனை என்கிறார்கள். பிரமிப்பாய் இருந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் வாங்கியதான கணக்கு.
என் கேள்வி: என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்?
.