போனவாரத்தில் ஒரு நாள். நிறுவனத்தின் வாசல் அருகே “சரி.. கிளம்பறேன்” என்று நான் ஆயத்தமானபோதுதான் அவன் வந்தான்.
“சார்.. சார்.. எங்க போறீங்க?”
“திருப்பூர் வரைக்கும் ஒரு வேலையா போறேன்.. நாலு மணிக்குள்ள போகணும். போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன்”
“சார்... அப்டியே XXXX பேங்ல இந்தப் பணத்தைப் போட்டுடுங்க சார்.. ஊர்ல மாமா எடுத்துக்குவார்”
“லேட்டாகுமா?”
“ச்சே.. இல்ல சார்.. அந்த பேங்ல கூட்டமே இருக்காது. போனா அஞ்சு நிமிஷத்து வேலை”
** ** **
சொன்னது போலவே கூட்டம் இருக்கவில்லை. இரண்டே பேர் தான் அமர்ந்திருந்தனர்.
இடது வலது புறங்களில் இருந்த நாற்காலிகளை வயசான சிலர் ஆக்ரமித்திருக்க, ஓரிருவரே இளம் வயதினராக இருந்தனர். இரண்டு கவுண்டர்கள் இருக்க நான் எதில் பணம் கட்ட என்று தெரியாமல் அருகே சென்றேன். அமர்ந்திருந்த ஒருவர் தடுத்தார்.
“ஹலோ... உட்கார்ந்திருக்கோம்ல”
‘இப்ப என்ன நின்னுட்டிருக்கன்னா சொன்னோம்?’ என்று நினைத்தவாறே, “அதான் கவுண்டர்ல யாரும் இல்லீங்களே” என்று கேட்டேன்.
“அவர்தான் வெய்ட் பண்ணச் சொன்னார்” என்றார் கவுண்டர் ஆசாமியைக் காட்டி.
நான் அமர்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து என்னைத் தடுத்த அந்த வாடிக்கையாளர் “எவ்ளோ பணம் எடுக்கறீங்க?” என்று கேட்டார்.
“பணம் எடுக்கலைங்க.. டெபாஸிட் பண்ண வந்தேன்”
“ஓ.. ஸாரி.. ஸாரி.. அப்ப அந்த செகண்ட் கவுண்டர் போங்க” என்று வழிந்தார்.
இரண்டாவது கவுண்டர் அருகே சென்றேன். கெச்சலாக ஒடிந்த உருவத்தில் ஒரு வயசானவர் அமர்ந்திருந்தார். குனிந்து கீபோர்டில் எழுத்துகளைத் தேடித் தேடி ஒற்றைவிரலால் தட்டிக் கொண்டிருந்த அவரின் தலை மேலிருந்த விளக்கு வெளிச்சத்தில் பளீரிட்டது.
சிறிது விநாடிகள் நின்ற நான், அவர் தலை உயராததால் “எக்ஸ்யூஸ்மீ” என்றேன்.
-மெ
-து
-வா
-க
நிமிர்ந்தார். ‘என்ன?’ என்றார் கண்களால்.
நான் நிரப்பப்பட்ட செலானை நீட்டினேன். இரண்டாயிரத்து முப்பது ரூபாய். நான்கு ஐநூறு ரூபாயும், மூன்று பத்து ரூபாயும் இருந்தன.
வாங்கியவர், கண்ணாடியை மேலே ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு ரூபாயாக எண்ணினார்.
“ரெண்டாயிரத்து முப்பதா?”
“ஆமா சார்”
மறுபடி இரண்டு முறை ஒவ்வொரு நோட்டையும் எண்ணினார். அதில் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் தனியே எடுத்தார். ஒவ்வொரு நோட்டையும் தலைக்கு மேல் தூக்கிப் பார்த்தார். தடவிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த ஒரு மெஷினில் வைத்து சோதித்தார். பத்து ரூபாய் நோட்டுகளை கையாலேயே தடவிக் கொடுத்தார். மீண்டும் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து எண்ணினார்.
“ரெண்டாயிரத்து முப்பது. இல்லையா?”
நான்: “ஆமா சார்”
நான் கொடுத்த செலானை எடுத்தார். டேபிளில் எதையோ தேடினார். பேனா. எல்லாவற்றையும் எடுத்து தேடினார். ட்ராவைத் திறந்து பார்த்தார். கீபோர்டை நகர்த்திப் பார்த்தார். ம்ஹூம். கையைலிருந்த பணத்தை டேபிளில் வைத்து ஒரு பேபப்ர் வெய்ட்டை அதன் மீது வைத்துவிட்டு, நாற்காலியைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி, கீழே தேடினார். விழுந்திருந்தது போலும். ஒரு பெருமூச்சை உதிர்த்தவாறே குனிந்தார். அவர் கைகளுக்கு அந்தப் பேனா எட்டவில்லை.
நாற்காலியை விட்டு எழுந்தார். குனிந்து அந்தப் பேனாவை எடுத்தார். அதை டேபிளின் மேல் வைத்துவிட்டு, நின்றவாறே பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்தார். முன் நெற்றியை அழுந்தத் துடைத்துக் கொண்டார். கைக்குட்டையை இருந்த மடிப்பு கலையாமல் அதே மாதிரி மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். கம்பிகளைத் தாண்டி, கவுண்டருக்கு வெளியே யார் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டார். அவர் பார்வைக்கு மறைக்காமல் இருக்க நான் கொஞ்சம் நகர்ந்தேன். முழுவதும் நோட்டமிட்டுவிட்டு அமர்ந்தார்.
பேப்பர் வெய்ட்டை நகர்த்தி, மறுபடி ஒருமுறை அந்த ஏழு நோட்டுகளையும் எண்ணினார். செலானை எடுத்து, அதில் இருந்த டினாமினேஷனை சரிபார்த்து டிக் அடித்தார்.
கண்ணாடியை கொஞ்சம் இறக்கி விட்டு கணினித் திரையைப் பார்த்தார். கணினியில் எதையோ டைப்பினார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார். மறுபடி எதையோ டைப்பியவர், செலானில் இருந்த வங்கிக் கணக்கு எண்ணை, ஒவ்வொரு இலக்கமாய் மிகப் பொறுமையாய் சரிபார்த்து சரிபார்த்து அடித்தார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார்.
செலானையும், கணினித் திரையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ஒண்ணு.. ஒண்ணு. மூணு.. ஆறு..” என்று கணக்கு எண் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே சரிபார்த்தார். செலானிலும், கணினியிலும் தெரியும் பெயரை சரிபார்த்தார்.
மீண்டும் செலானைப் பார்த்தவர் கேட்டார்: “ரெண்டாயிரத்து முப்பது?”
நான்: “ஆமா சார்”
இப்போது தொகையை கணினியில் அடிக்கும் முறை. ஒவ்வொரு எண்ணையும் பொறுமையாக அடித்தார். கண்ணாடியை இறக்கிக் கொண்டார். செலானையும் கணினித் திரையையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லிக் கொண்டார்.
கண்ணாடியை சரிசெய்தவாறே என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்து ‘ஆமா சார்’ என்று பதில் சொல்ல தயாராய் இருந்தேன். ம்ஹூம்.
மீண்டும் செலானின் இடது வலப் புறங்களில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தவாறே தேதி, கணக்கு எண், பெயர், தொகை, கையொப்பம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து டிக் அடித்தார். வலப்புறம் இருந்த சீல் ஒன்றை எடுத்து டமார் டமார் என்று டேபிள் அதிர சீல் வைத்தார். சீல் மேல் கையொப்பமிட்டார்.
செலானின் மறுபாதியைக் கிழித்தார். என்னிடம் கொடுக்க நீட்டியவர், மீண்டும் கையை இழுத்துக் கொண்டார். கையில் மறுபாதியைப் பிடித்தவாறே கணினித் திரையில் எதையோ சரிபார்த்தார். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு என்னிடம் நீட்டினார்.
வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.
** ** **
நேற்றைக்கு அலுவல் வேலையாக வெளியே போக பைக்கை எடுத்தேன். அவன் ஓடிவந்தான். ‘சார்.. ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை’ என்றான்.
“நான் எங்கயும் போகலைப்பா. வண்டில காத்து இருக்கான்னு பார்க்க எடுத்தேன்” என்றபடி மறுபடியும் பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தினேன்.
** ** **
35 comments:
சார்! ஒரு ரெண்டு நிமிச வேலை இருக்கு! இந்த செக்க அப்படியே........
ரசித்தேன்
இந்த மாதிரி நிறைய இருக்காங்க பரிசல்., அதுவும் திருப்பூரின் பரபரப்புக்கும் அவசரத்துக்கும் பொருந்தாமல்...:)
i think u r that person who asked sir oru five mins. am i correct parisal? eppo novel ezhutha poringka? start at right time.. otherw3ise..???
சூப்பர் ஃபினிஷிங்! பிரமாதப்படுத்தறீங்க! :-)))
சுவாரஸ்யமான நடை. கண்ணம்மா போல இதிலும் முடிவில் பரிசல் டச்
சூப்பர்.
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதா சிக்கராங்கலோ (நீங்கதா சிக்குறீங்க)..உங்கள பார்த்தா அப்படி தெரியுதோ...::))
அசத்தல் !
ஜூப்பரு
ஹா ஹா ஹா ! செம்ம *
குரு... கலக்கல்ஸ்...
ROFL"அவர் பார்வைக்கு மறைக்காமல் இருக்க நான் கொஞ்சம் நகர்ந்தேன்." You have a way with words, such a keen eye and a good sense of humour, both required elements for good writing. Looking forward to other such posts :)
amas32
ரொம்ப நாளைக்கு முன்னாடி, ரயில் முன்பதிவு செய்வதற்கு 40-50 பேர் கியூவில் நின்றிருக்கும் பொது, இப்படி ஒரு அலுவலர் செய்தது ஞாபகம் வந்தது...:)
Superb..!!!
//உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதா சிக்கராங்கலோ (நீங்கதா சிக்குறீங்க)..உங்கள பார்த்தா அப்படி தெரியுதோ...::))//
:)))
இப்பலாம் ATMலேயே டெபாசிட் பண்ணலாமே..
ஆண் லயனல பணப் பரிமாற்றம் பண்ணலாமே..
மோஃபைல் போனுலேருந்து கூட செய்யலாமே..
அந்த காஷியர் உங்களுக்கு பாடம் புகட்டணும்னே அப்படி செஞ்சாரோ ?
உதவிகள் சில நேரங்களில் உபத்திரவமாகலாம்....(ஸ்பெல்லிங் கரக்டாண்ணே)....
நல்ல பினிஷிங்...
உங்களுக்கு ரொம்ப பொறுமைதான். இனிமேல யாரு சார் 5 நிமிஷ வேலைன்னாலும் நீங்க எஸ்கெப்புதானே?
இப்படி தினமும் பத்து விஷயம் நடக்குது. post office, bank, restaurant, railway station counter, இப்படி எங்கயுமே எவனுமே வேலைய ஒழுங்கா செய்யறதில்ல...
பரிசல் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆளுக வராங்க... எல்லாம் மொகராசியோ?
//
தலை மேலிருந்த விளக்கு வெளிச்சத்தில் பளீரிட்டது.
//
ஹா ஹா...
//
‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்து ‘ஆமா சார்’ என்று பதில் சொல்ல தயாராய் இருந்தேன். ம்ஹூம்.
//
வடிவேல் " ரெண்டம்பது" ஜோக் ஞாபகம் வருது,,,
ஹா ஹா.. ஹீ ஹீ.. என்னோட வாத்தியார் ஒரு தடவை வேலையா போகும்போது இதே மாறி பணம் கொடுத்து காசோலை எடுத்து வரச் சொன்னாரு. திரும்ப வரும் போது வண்டி ஆக்சிடென்ட். கை ஒடிஞ்சு ஒரு மாதம் கட்டோடு சுத்துனேன். இது எல்லாம் சின்ன வயசுல அப்பா அம்மாவுக்கு உதவி பண்ணாம பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு பண்ணுன பாவத்தால் வந்த பின்விளைவுகள்.
ரொம்ப பொறுமை சார் உங்களுக்கு
ஆமாங்க எனக்கும் இப்படி அனுபவம் இருக்கு .
சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி
நல்லா இருந்துச்சி சார்
சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி
rombo poruma venum sir
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதா சிக்கராங்கலோ (நீங்கதா சிக்குறீங்க)..உங்கள பார்த்தா அப்படி தெரியுதோ...::))
ஈரோட்டானை வழி மொழிகிறேன்
உங்கள் எழுத்து நடை அபாரம்..
"நேற்றைக்கு அலுவல் வேலையாக வெளியே போக பைக்கை எடுத்தேன். அவன் ஓடிவந்தான். ‘சார்.. ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை’ என்றான்.
“நான் எங்கயும் போகலைப்பா. வண்டில காத்து இருக்கான்னு பார்க்க எடுத்தேன்” என்றபடி மறுபடியும் பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தினேன். "
அதையும் ஒத்துகிட்டு போயிருந்தா
இன்னொரு பதிவு போட்டிருக்கலாமே சார் . . .
நன்றி
அன்பின் பரிசல் - நன்று நன்று - அஞ்சு நிமிஷத்து வேலை தான் - இருந்தாலும் இப்படி எல்லாம் ஆயிடுது - ,,,, - ம்ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா
நீங்க ரொம்ப பாவம்ங்க!!
@ வழிப்போக்கன் - யோகேஷ்
//
வடிவேல் " ரெண்டம்பது" ஜோக் ஞாபகம் வருது,,,//
அட ஆமால்ல
-மெ
-து
-வா
-க
......
நீங்க சுஜாதா ரசிகரோ?
Doss.A
ungalukkunnu varraanga paarunga..ha ha..soopparu. I somehow missed to read this before.
Post a Comment