
மிகப்பெரிய தொழிலதிபர் மகன் சக்தி (பரத்), காதல் தோல்வி காரணமாக மனது வெறுத்து கால்போன போக்கில் போகையில், இரயில் பயணத்தில் துறுதுறு அஞ்சலியை( தமன்னா)ச் சந்திக்கிறான். அவளது வீடு வரை சென்று தங்குகிறான்.
அவளது பேச்சும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் குணமும் அவனைக் கவர்கிறது. அவளுக்கு, முறைமாமனை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. ஆகவே சக்தியின் உதவியுடன் தன் காதலன் கௌதமை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
வீட்டை விட்டு வந்ததுமே, அஞ்சலி தன் காதலன் கௌதமைத் தேடி ஊட்டி சென்றுவிட, சக்தி புத்துணர்ச்சியோடு திரும்ப சென்னை வந்து, சரிந்து கிடக்கும் தன் பிஸினஸை வெற்றிப் பாதை நோக்கித் திருப்புகிறான். அஞ்சலி எப்படி எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு முடிவெடுக்கிறாளோ அப்படி தன் தொழிலின் ஒவ்வொரு அடியையும் மிக ஸ்போர்டிவாக அதே சமயம் – சரியான முடிவுகளை எடுத்து முன்னேறுகிறான்.
அங்கே அஞ்சலி வீட்டில் எல்லாரும், அவள் சக்தியைக் காதலித்து அவனுடன் ஓடிவிட்டதாகக் கருதுகிறார்கள். ஒன்பது மாதங்களுக்குப் பின் தொலைக்காட்சி ஒன்றில் சக்தியின் பேட்டியை கண்டு, அவனைத் தேடி வந்து அஞ்சலியைப் பற்றிக் கேட்கிறார்கள். அப்போதுதான் அஞ்சலி, தன் காதலனுடன் வீட்டுக்குத் திரும்பவில்லை என்பதையே அறிகிறான் சக்தி.
பிறகு அஞ்சலியைத் தேடிப் போன சக்தி என்னவாகிறான், அஞ்சலி கௌதமுடன் சேர்ந்தாளா என்பதையெல்லாம் வெ.தி.கா.
பரத் இடைவேளை வரை அமைதியாய் இருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் நடிக்கிறார். ஓகே.
இடைவேளை வரை பேசிக் கொண்டேஏஏஏஏஏ இருக்கிறார் தமன்னா. ஒருகட்டத்தில் இது போதும்டா சாமி எனுமளவு ஓவர்டோஸாகப் போய் விடுகிறது.
படத்தில் ஹீரோ, ஹீரோயினைவிட அதிக கைதட்டல்கள் வாங்குவது லொள்ளுசபா சந்தானம். ஏற்கனவே இவரை கவுண்டமணியின் அடுத்த வாரிசாக – சவுண்டுமணி- என்று ஒரு விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் படத்தில் அதை அப்படியே நிரூபித்திருக்கிறார்.
பாடல்கள் அருமை. படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் ஆர்ட் டைரக்ஷன். பாடல் காட்சிகளிலும், மற்ற சீன்களிலும் கண்ணுக்கு உறுத்தாத அழகான கலைநயத்தைக் காட்டியிருக்கிறார். சபாஷ்!
வசனம் – ஒரிஜினலின் அப்படியேயான தழுவலாவெனத் தெரியவில்லை. பல இடங்களில் நன்றாகவே வந்திருக்கிறது. சன் டி.வி-யின் உபயத்தால் வசனங்கள் வருமுன்னரே ரசிகர்கள் கைதட்டுவதைக் காண (கேட்க?) முடிகிறது.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஜவ்வாய் இழுப்பது. பல இடங்களில் ‘போதும் முடிங்கப்பா’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. கொஞ்சம் செதுக்கி இருந்தால் இன்னும் காணச் சுகமாயிருந்திருக்கும்!
கண்டேன் காதலை – தமன்னா + சந்தானத்துக்காக ஓடும். சன்.டி.வி- அதைச் செய்யும்.
பி.கு – 1: JAB WE MET ஒரிஜினல் டிவிடி வாங்கி வைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இந்தப் படம் வரப்போகிறது என்பதால் அதைப் பார்க்காமல் வைத்திருக்கிறேன். தியேட்டர் கமெண்டுகளில், ‘இந்தில நல்லா பண்ணியிருந்தாங்கப்பா’வைக் கேட்க முடிந்தது.
முக்கியமான பி.கு: 2:- உ.போ.ஒ – மாற்றுப்பார்வை விமர்சனங்களால் தாக்குண்டு, இதில் மாற்றுப்பார்வை பார்த்து ஏதேனும் நுண்ணரசியல் படத்தில் இருக்கிறதாவென ஆராய்ந்தேன். ஒன்று கிடைத்தது.
பரத்தும் தமன்னாவும் இரயிலைத் தவற விட்டு ஓர் ஊரில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ஊரில் நடுரோட்டில் மாருதி வேன் வைத்து, விபச்சாரிகள் கஸ்டமர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரௌடிகள் தமன்னாவைத் துரத்துகிறார்கள். லாட்ஜூகள் விபச்சார கஸ்டமர்களுக்காக வாடகைக்கு விடப்படுகிறது. இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!
.