Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Friday, April 3, 2009

அவியல் – 03 ஏப்ரல் 2009




எழுத்தாளர் ச.நா. கண்ணன் (கிழக்கு பதிப்பகம்) திருமணத்திற்குச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது.

நான், நண்பர்கள் வெயிலான், ஈரவெங்காயம் ஆகியோருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் எழுதிக் கொண்டிருந்த ஒருத்தர் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்தது போல இருந்தது. ‘இவர்தானே எழுத்தாளர் ..............., கிழக்கு பதிப்பகத்துல அந்த புத்தகம் கூட எழுதினாரே என்று நான் கேட்க வெயிலான் மையமாகத் தலையசைத்தார். அவரோ இன்னொருவரோடு பேசிக் கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சினிடையே ‘கிழக்கு.. கிழக்கு’ என்ற வார்த்தை பலமுறை கேட்டது.

அவர் என்னைப் பார்த்து ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று சைகையாகக் கேட்க..

‘பரிசல்காரன்’ என்றேன்.

‘ஓ!’ என்று சிரித்தார்.

சாப்பிட்டு முடிந்து கைகழுவிய பிறகு அவரைத் தேடிப் போய்.. ‘நீங்க..’ என்று இழுத்தோம்..

‘நந்தகுமார்’ என்றார்.

‘என்ன புத்தகம் எழுதிருக்கீங்க..’

‘புத்தகமா? நானா’ என்றார். நாங்கள் ஒருமாதிரி டரியலாகி ‘நீங்க எழுத்தாளரில்லையா’ என்றோம்.

‘இல்லையே..’

‘அப்ப கிழக்கு.. கிழக்குன்னு எதுவோ பேசிட்டிருந்தீங்களே..’

‘என்கூட இருக்கறவர் அவர் வீட்டு முகவரி சொல்லிட்டிருந்தார். கிழக்காலயா.. மேக்காலயான்னு பேசிகிட்டிருந்தோம்’

‘அப்ப கிழக்கு பதிப்பகம் பத்தி பேசலியா?’

இதற்கு அவர் கேட்ட கேள்விதான் மண்டபத்திலிருந்து தலைதெறிக்க எங்களை ஓடவைத்தது.

‘பதிப்பகமா.. அப்படீன்னா..?’

*********************************

வட இந்திய முதலாளி என்பதால் இந்தி ஓரளவு கற்றுக் கொண்டாயிற்று. அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை.. ‘பக்கா’

‘பக்காவா பண்ணி முடிச்சுடு’

‘அஞ்சு மணிக்குதானே... பக்காவா வந்துடறேன்’ என்று சர்வசாதாரணமாக அதைப் பயன்படுத்துகிறோம்.

இன்றைக்குத்தான் அகராதியைப் புரட்டும்போது பார்த்தேன். பக்கா ஒரு பக்கா ஆங்கிலச் சொல்!

Pucka – முதல்தரமான, உறுதியான, நிரந்தரமான (First Class, Permanent,

என்றிருக்கிறது.

இல்லை.. அது இந்திதானா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...

**************************

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.

‘ஓகே.. டீல்!’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.

அடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே!

இதேதான் மூன்றாவது நாளும்.

நான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது?’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.

ஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்!

**********************************

ஆதிமூலகிருஷ்ணன் பத்தின மேட்டர் இல்லாம அவியலா?

நம்ம ஆதிக்கு அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் வேற ஊர்லேர்ந்து கூப்பிடறாரு.

‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!

******************************

ஃபாலோயர்கள் பற்றி.... (ஆரம்பிச்சுட்டாண்டா...) 250 ஃபாலோயர் வந்துட்டாங்க பரிசல்’ என்று நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அப்போதுதான் பார்த்தேன். 251 எட்டியிருந்தது.

நேற்றைக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை. 247லிருந்து 4 பேர் புதிதாக சேர்ந்து 251 ஆகிவிட்டிருக்கிறது! நான் எழுதும் நாட்களில் ஒன்றிரண்டு பேர் சேர்கிறார்கள். எழுதாத நாட்களில் கொத்துக் கொத்தாக 4,5 என்று சேர்கிறார்கள். இதனால் அறியப்படும் நீதி யாதெனில்...

வேண்டாம். விடுங்க.

அதேபோல எனக்குப் புரியாத ஒன்று இந்த ட்விட்டர். அதை என் தளத்திலிருந்தே எடுத்து விட்டேன். அதில் நான் ஆக்டீவாகவும் இல்லை. ஆனாலும் வாரத்துக்கு 4 பேர் என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்வதாக மின்னஞ்சல்கள் வருகிறது.

விசித்திரம்தான்!

*******************************

தேவதச்சனின் கடைசி டினோசர் (கவிதைத் தொகுப்பு) படித்துக் கொண்டிருக்கிறேன். (உயிர்மை – ரூ.85)

சாம்பிளுக்கு ஒன்று.

எனக்கு

எனக்கு
ஏழுகழுதை வயசாகியும்
கண்ணாடியை நான்
பார்த்ததில்லை. ஒவ்வொரு
முறையும்
எதிரில் நிற்கையில்
என் முகரக்கட்டைதான் தெரிகிறது.
கண்ணாடியைக் காணோம்.
உடைத்தும் பார்த்தேன்
உடைந்த ஒவ்வொரு
துண்டிலும் ஒரு
உடையாத கண்ணாடி.
லேசான வெட்கம் எனக்கு.
பார்க்க முடியாத
கண்ணாடியைத்தான்
பார்க்க முடிகிறது.


கவிதையைப் படித்து விட்டீர்களா..

இப்போது சொல்லுங்கள்.. எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?


.

Thursday, February 5, 2009

அவியல் 05.02.09

திருப்பூரில் புத்தகக் கண்காட்சி என்றால் என் மனைவிக்கு அவ்வளவு பயம். ஏற்கனவே ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு பலமுறை பர்ஸை சோதனை செய்துவிட்டு அனுப்பியும், க்ரெடிட் கார்டு மூலம் செலவழித்துவிட்டு வந்ததில் அவருக்கு ஏமாற்றம். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருப்பதால் நானும் வாங்கும் மனநிலையில் இல்லை.

நண்பர் செல்வேந்திரனுடன் ஞாயிறன்று திரு.ஞானசம்பந்தனின் உரை கேட்கச் சென்றிருந்தோம். ஏதோ கட்சி மீட்டிங்கிற்குப் போனது போல எல்லாருமே அரசியல்வாதிகளாக இருந்தார்கள். ‘முடிஞ்சா ஒக்கார்ந்து கேளுடா’ என்பது போல பேசினார்கள். செல்வேந்திரன் ‘இதுபோன்ற இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பேச வேண்டிய விஷயங்களை எழுதிக் கொடுக்கும் பணியை ஆரம்பிக்கலாம் போல இருக்கிறதே’ என்று சொன்னார். வந்தவர்கள் எல்லாம் அழைப்பிதழை வைத்துக்கொண்டு ‘................ அவர்களே, .................... அவர்களே’ என்றது மகா அறுவை. ரொம்பக் கீழே போய், திருவள்ளுவர் அவர்களே, பாரதியார் அவர்களே என்று சொல்லாமல் விட்டது தேவலை.

எட்டாம் தேதிவரை நடைபெற இருக்கிறது இந்தப் புத்தகக் கண்காட்சி. கண்காட்சியின் பொருட்டு திருப்பூருக்கு வர விழையும் வலைப்பதிவு நண்பர்கள் ஒரு மெயிலில் தெரிவித்தால் நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.


*****************************************

கல்கத்தாவின் தெருவோரத்தில் கிடக்கிறார் அந்தப் பெரியவர். உடம்பில் அங்கங்கே புண்களுடம் ரத்தம் வழிய கிடந்தவரை நாள்முழுக்கக் கடந்துசென்ற எவரும் கண்டுகொள்ளாதபோது, அந்தக் கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய அந்த மூதாட்டி, பெரியவரைக் கைத்தாங்கலாக காரில் ஏற்றி தான் சார்ந்த மருத்துவமனையில் சேர்க்கிறார். ஓரிரு நாளில் குணமாகிக் கண்விழிக்கிறார் பெரியவர். சிலுவை அணிந்த அந்த மூதாட்டி அன்னை தெரசா என்பதில் சஸ்பென்ஸ் தேவையில்லை. பெரியவரைப் பார்த்து அன்னை தெரசா யாரென்று கேட்க, பெரியவர் சொல்கிறார். “நான் காளிகோயில் பூசாரி அம்மா. இத்தனை வருடங்களாகப் பூஜை செய்கிறேன். காளி உங்கள் வடிவில் காட்சி தந்துவிட்டாளம்மா” என்கிறார்.

‘மதமெனும் பேய் பிடியாதிருக்க..’ என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சியில் செவ்வாயன்று திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போது இதுபோன்ற நிறைய சம்பவங்களைச் சொல்லி, முடிவில் “கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது” என்றார். இலக்கியக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதிகளுக்கிடையில் இவர் ஒரு விதிவிலக்கு. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக கூட்டத்தைக் கட்டிப் போட்டார். பேசிமுடித்து மேடையிலிருந்து இறங்கி காருக்குச் செல்லும் வரை அவரோடு பேசியது ஒரு நல்ல அனுபவம்.

*******************************************
இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.


தோனியின் வீரர்கள் இப்படிப் பாடுபட்டு வெற்றிபெற, ‘மகேந்திரசிங் தோனியா, மச்சக்கார தோனியா’ என்றும், LADY LUCK IS WITH DHONI என்றும் அவரது உழைப்பை அதிர்ஷ்டத்தோடு சம்பந்தப்படுத்துவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

*********************************************

மகள்கள் ஏதோ எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்கும்போது என்னையும் செய்யச்சொல்ல, சும்மா ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று இருவரும் ‘அப்படி இல்லப்பா.. இப்படி’ என்று என்னை அமுக்க, முதுகில் பயங்கரமான சுளுக்கு. நேற்று முழுவதும் வலி. சும்மாவே படுத்துக் கிடந்து, நேற்று மாலை பொறுக்க முடியாமல் டாக்டரிடம் போக அவர் ஏதோ சால்டரிங் கம்பிபோல ஒன்றால் ஷாக் குடுத்து, மாத்திரை தைலம் கொடுத்தார். ம்ஹூம். உமாவின் நண்பி ஒருவரது அப்பா சுளுக்கெடுப்பார் என்று கேள்விப்பட்டுப் போனோம். ‘எங்கே வலி’ என்று கேட்டார். வலது முதுகு என்று சட்டையைக் கழட்டப் போக, ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று இடது கையைப் பிடித்து, முழங்கைக்கு அருகில் எண்ணையைப் போட்டு சுளுக்கெடுத்தார். ‘முதுகுல பிடிப்பு. இங்க வழிக்கிறாரே’ என்று கேட்டபோது, ‘மாறுகால் மாறுகைலதான் சுளுக்கெடுக்கணும். நிஜமா சுளுக்கா இருந்தா இதுல சரியாய்டும். இல்லீன்னா எக்ஸ்-ரே எடுத்துத்தான் பார்க்கணும்’ என்றார். பிரமிப்பாய் இருந்தது. ஓரளவு சரியாகி, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்.
*******************************************

சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது:

“நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”

**************************************
"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"

-நான் சொன்னது!

*

Tuesday, December 9, 2008

அவியல் 09.12.08 – பாவம் ஷகீலா!

அந்தக் கவிஞர் தனது நண்பர்களோடு சிற்றுண்டிக்கு செல்கிறார். தோசை கொண்டுவரச் சொல்கிறார்கிறார்கள். பணியாளர் தோசையுடன் வரத் தாமதமாகிறது. தூரத்தே அவன் வரும்போது நண்பர்கள் கவிஞரிடம் “அவனுக்கு சட்’டென்று ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்” என்று சவால் விடுகிறார்கள். பக்கத்தில் அவன் வந்ததும் ‘பட்’டென வெண்பா சொல்கிறார் கவிஞர்....

“ஏண்டா இதற்குப்போய் இவ்வளவு நேரமா
போண்டா எடுத்துவா போ”

யாரந்தக் கவிஞர்...? கடைசியில் பார்ப்போம்.

**********************
நான் எந்த மெயில் அனுப்பினாலும் முடிவில் அளவில்லா அன்போடு.. கிருஷ்ணா’ என்று முடிப்பது வழக்கம். சில மெய்ல்த்ரெட் நடப்பில் இருக்கும்போது, இந்த அளவில்லா அன்போடு-வை நம்ம ஃப்ரெண்ட்ஸ் போட்டு, தாளிக்கும் தாளிப்பைப் பாருங்கள்...


அளவில்லா அட்டெண்டன்ஸோடு, அளவில்லா மப்போடு, மனமில்லா குசும்போடு, காலி வயிறோடு, அளவிலா ஆர்வத்தோடு, அளவில்லா அலுப்போடு, அளவில்லா அளவோடு அளவில்லா பியரோடு, அளவில்லா ஏழரையோடு, அளவில்லா துயரத்தோடு, அளவில்லா எதிர்பார்ப்புகளோடு அளவில்லா எச்சரிக்கையோடு, ஆப்புவைக்கும் அன்போடு., அளவான அளவோடு....

நம்ம ஃப்ரெண்ட்ஸ் கலக்கறாங்கப்பா!

***************************

ட்வெண்டி-20 படம் பார்த்தேன். மலையாளம்.

பெங்களூரில் ஒரு கொலை. அதைச் செய்தவனைக் கைது செய்கிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி சுரேஷ்கோபி. அவனை ஜாமீனில் எடுக்கிறார் அவனது திறமையான வழக்கறிஞர் மம்முட்டி. ஜாமீனில் வெளிவந்த அவனைக் கொல்கிறார் தாதா மோகன்லால். மோகன்லாலை யாரென்று தெரியாமல், வாதாடி நிரபராதி என்று வெளியே கொண்டுவருகிறார் மம்முட்டி. பிறகு அவரை போலீஸ் சுரேஷ்கோபியிடம் மாட்டிவிடுகிறார். அவர் தப்பிக்கும்போது உதவுகிறார் மம்முட்டி. மூன்றுபேரும் க்ளைமாக்ஸில் வில்லன்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

குழப்பமாய் இருக்கிறதா? படம் ஒன்றும் குழப்பவில்லை. இதை தெளிவாக காரணகாரியங்களோடும், காமெடியோடும் நகர்த்தி வெற்றிப் படமாக்கியிருக்கிறார்கள்!

சுரேஷ்கோபி, மம்முட்டி, மோகன்லால் என்று ஒவ்வொருவரின் என்ட்ரிக்கும் வித்தியாசமாக யோசித்து எல்லோருடைய ரசிகர்களின் திருப்திக்கும் உழைத்திருக்கும் இயக்குனர் சபாஷ் போடப்பட வேண்டியவர்.

மலையாள திரைப்பட சம்மேளனமான ‘அம்மா’விற்காக தயாரிக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தின் வசூலை வைத்து நலிந்த திரைப்படக் கலைஞர்களுக்கு உதவப் போகிறார்கள் என்பதால், அங்கே இருக்கும் எல்லா ஆர்டிஸ்டும் நடித்திருக்கிறார்கள். மறைந்த ஸ்ரீவித்யாகூட ஒரு சீனில் மம்முட்டியின் அம்மாவாக – ஃபோட்டோவில் – வந்துபோகிறார். என் ஒரே ஒரு குறை மலையாள சினிமாவை அகிலமெங்கும் பரப்புவதில் சிறிதளவேனும் பங்கிருக்கிற ஷகீலாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான். டைட்டில் போடும்போது, பல நடிகர்களின் ஸ்க்ரோலிங் காட்டுகிறார்கள்.. அதில்கூட அவருக்கு இடமில்லை! பாவம்!!! (இவர் மெலிந்த கலைஞர் இல்லை, படத்தில் நடிக்காமல் இருப்பதால் நலிந்த கலைஞராக ஆகிவிட்டாரோ என்னமோ!)

***********************
சென்றவாரத்தில் நண்பர் பழமைபேசி மாங்கா மடையன்’ என்பதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் இதுபற்றி நான் கேள்விப்பட்டது...

தேங்கா மடையன், மாங்கா மடையும் இரண்டுமே புழக்கத்தில் இருந்ததாம். (தேங்கா மடையன் இப்போது இருக்கிறதா?) அதாவது அடிக்கடி முட்டாள்தனமாக செயல்படுபவன் தேங்கா மடையன். எப்போதாவது முட்டாள்தனமாக செயல்படுபவன் மாங்கா மடையன். காரணம் எப்போதும் காய்க்கும் தேங்காய். சீஸனில் மட்டும் காய்க்கும் மாங்காய். அதனால்!

*************************

சென்னை வந்திருந்தபோது நண்பர்களுடனான கலை இரவில் - பாடல்கள், காப்பி அடிப்பது குறித்த பேச்சின்போது வெளிவந்த தகவல்கள்....

‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ – இந்தப் பாடல்தான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ வின் இன்ஸ்பியரேஷன். பாடிப்பாருங்கள்.

‘தந்தனத்தோம் என்று சொல்லியே.. வில்லினில் பாட..’ – இதுதான் ‘சிங்கமொன்று புறப்பட்டதே.. சபதம் செய்து’. இன்ஸ்பியரேஷனெல்லாம் இல்லை. டைரக்ட் காப்பி!

‘கொக்கரக்கோ கோழி..கொக்கரிக்கும் தோழி’ (கலைஞன்) இதுதான் ‘தோஸ்த்துபடா தோஸ்த்து’ (சரோஜா) என்றான் சகா கார்க்கி.

ஜித்தன் படத்தில் ‘அ முதல் அஃகு தானடா’ பாடலின் சரணம்...

‘ஒத்தரூபா பொட்டுக்காரி
ஒத்துழைக்க கெட்டிக்காரி
தளதளன்னு குலுங்கிவரும்
தாகம்தீர்க்கும் தண்ணிலாரி..’ முழுச்சரணமும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலின் சரணமாகிய
‘படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் சுருட்டிக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்..’ சரணத்தோடு ஒத்துப் போகும்!

இந்தப் பட்டியல் முடியாது.

சபாஷூன்னேன்!

****************************
முன்பெல்லாம் வெறும் படம் மட்டும் போட்டு, கலக்கலாக ஒரே வரியில், டயலாக்கில் குபுக் கென்று சிரிக்கவைக்கிற நகைச்சுவைகள் நிறைய வரும். சிம்பு, சரண் எல்லாரும் இதில் எக்ஸ்பர்ட்! இப்போதெல்லாம் இந்த டைப்பில் வருவது அரிதாகிவிட்டது.

விகடனில் சிம்புவின் ஒரு ஜோக்.. (2000ல் வந்தது)

நகராட்சி வண்டி நிற்கிறது. அதிகாரிகள் அந்த மோசமான ரோட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். ‘ரோடா இது’ என்பது போல ஒரு முகபாவம் அவர்களிடத்தில். பக்கத்தில் ஒரு கிராமத்துப் பெரியவர், அந்த அதிகாரிகளிடம்...

‘ஆமாங்க.. கடைசியா தேர்தல் சமத்துல போட்ட ரோடுதான். ஜவஹர்லால் நேரு பிரசாரம் பண்ணவர்றார்னு அவசர அவசரமா போட்டாங்க’

படத்திலிருப்பவர்களில் முகத்தைப் பார்த்தால் அப்படிச் சிரிப்பு வரும்!

இதைவிட இன்னொன்று.. 1943ல் (ஜூலை 11 இதழில்) வந்தது..

ஒரு பேஷண்ட் வாயை அகலமாகத் திறந்திருப்பார். பல்டாக்டர் சொல்வார்..

‘வாயை அளவா திறங்க போதும். நான் வெளில நின்னுதான் பல் பிடுங்கப் போறேன்’

*******************

அந்தக் கவிஞர், வைரமுத்து!

இனி இந்த வாரக் கவிதை

தமிழர்
கடவுள்
முருகன்
கும்பிட
நீண்ட
வரிசை
ஜனவரி 1.

-நெல்லை கண்ணன்