Showing posts with label Advocate. Show all posts
Showing posts with label Advocate. Show all posts

Friday, February 20, 2009

இந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நேற்றைக்கும் ஒரு நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட்டது. சென்றமுறை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைக் காண்பித்தார்களல்லவா? இந்தமுறை சட்டத்தை படித்து முடித்தவர்களும், அதே போலீஸும். சென்றமுறை பேசாமல் வேடிக்கை பார்த்த போலீஸ் இந்தமுறை அதிரடியாகக் களமிறங்க வேண்டியதாயிற்று. காரணம் இந்தமுறை போட்டியாளர்களில் ஒருவராக அவர்கள் இருந்ததுதான்.

உயர்நீதிமன்ற வளாகம். ராமானந்த் சாகரின் மகாபாரதத்தில் பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு நிற்பதுபோல ஒருபுறம் போலீஸ் லத்தி, தடுப்பான்களுடன் நிற்க ஐம்பது-நூறடி தூரத்தில் வழக்கறிஞர்கள் நிற்கின்றனர். எந்தப்பக்கத்திலிருந்து முதலில் என்று தெரியவில்லை.. கற்கள் வீச்சு ஆரம்பமாகிறது. வழக்கறிஞர்களில் ஒருவர் தைரியமாக (!!) முன்னே வந்து பெரிய சைஸ் செங்கல்லைத் தூக்கி வீசுகிறார். போலீஸ் ‘ங்கொய்யால.. நாங்ளும் வீசுவோம்ல’ என்பது போல அவர்களும் கற்களை வீசுகின்றனர்.

கொஞ்சநேரத்தில் ‘ஷூட்.. ஷூட்’ என்ற குரல் ஒலிக்க, வக்கீல்கள் சிதறி நாலாபுறமும் ஓட கண்ணீர் புகை குண்டுகளும், வான் நோக்கிய துப்பாக்கிச் சூடும் நடக்கிறது.

வீரமிக்க நமது காவல்துறையினர் அருகிலிருக்கும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை அடித்துக் கொண்டும், அவற்றின்மீது கற்களை வீசிக்கொண்டும் முன்னே செல்கின்றனர்.

வெள்ளைச் சட்டையோடு வருவோரையெல்லாம் லத்தியில் அடித்துத் தாக்குகின்றனர் போலீஸார். ‘நீதி எங்கே.. நீதிபதி எங்கே’ என்று நம் மனசு நினைக்கும்போது அங்கே வருகிறார் நீதிபதி.. தலையில் ரத்தத்தோடு! அவரை கைத்தாங்கலாக ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். “CONTROL THIS SITUATION. WHERE IS SP?” என்று கேட்டபடி பதட்டமாகவே வண்டி ஏறுகிறார் அவர். எஸ்.பி. எங்கே யாரை அடித்துக்கொண்டிருக்கிறாரோ அவரை எங்கே தேட என்று நினைத்த காவலர்கள் மீண்டும் களத்தில் இறங்கி போரிட ஆரம்பிக்கின்றனர்.

காட்சி மாறுகிறது. உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற காவல்நிலையம். அதற்குள் இருக்கிற பீரோ, மேஜை, நாற்காலிகள் எல்லாமே வெளியே கொண்டுவரப்பட்டு திகுதிகுவென எரிந்துகொண்டிருக்கிறது. பீரோவில் இருந்த கோப்புகள் வெளியே விழ ஒரு வெள்ளைச் சட்டைக்கார்ர் அதைச் சரியாக எடுத்து தீயில் போடுகிறார். பாவம். அவரோட கேஸ் கட்டா இருக்கும். என்ன நிலைமைல இருக்கோ.. என்ன கஷ்டமோ!

என்ன நடக்குது தமிழ்நாட்ல?

இன்றைக்கிலிருந்து உண்மையாக நடந்தது என்ன என்ற விபரங்கள் தெரியவரும். என் வக்கீல் நண்பன் ஒருத்தன் ‘இது முன்னரே திட்டமிட்டது. மொத நாளே நாளைக்கு இருக்கு உங்களுக்கு’ என்றபடியேதான் போலீஸ் திரிந்தனர் என்கின்றான்.

ஆனால் அந்தக் கற்களும், லத்தியும் நேற்றைக்கு வந்ததல்ல. பல தலைமுறை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது இவர்களுக்கிடையேயான பகை. நேற்றைக்கு நடந்ததும் வெறும் முன்னோட்டம்தான். இதன் பின்விளைவுகளும், இன்னும் பல சண்டைகளும் நேரடியாக – மறைமுகமாகத் தொடரத்தான் போகிறது.

எனக்கிருக்கும் கேள்வி: தோற்றத்தில் சக மனிதனாய்ச் சிரித்துப் பழகிக்கொண்டிருக்கும் உங்களுக்குள் இவ்வளவு பகையை சேர்த்து வைக்க எப்படி முடிகிறது?

கல்வியும், இந்தச் சமூகமும் உங்களுக்குக் கற்றுத் தந்தது என்ன? இதையா? நேரடியாகவோ, மறைமுகமாகவோ இது போன்ற நிகழ்வுகளுக்கு சக மனிதன் என்கிற முறையில் நானும் ஒரு காரணம்தான். நான்.. நாங்கள் என்ன செய்ய வேண்டும் இப்போது?

என் தலைமுறையிலேயே இதெல்லாம் நடக்கிறதே.. என் மகன், மகள் தலைமுறை எப்படி இருக்கும்?

இனி பள்ளிக்கூடத்தில் போர்க்காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைக் கட்டாயப்பாடமாக்கத்தான் வேண்டும்போல இருக்கிறதே! பள்ளியிலேயே கத்தி, துப்பாக்கி பயிற்சி கொடுக்கவேண்டுமா?

ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கவே முடியாது. ‘சண்டை போட்டா பழசு மறந்துடும்’ என்ற ‘அமாவாசை’யின் தத்துவத்தைத் தான் ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றனர்.

பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை.. ஸ்ரீஇலங்காவில் பாதுகாப்பில்லை என்கிறோம். அங்கே தீவிரவாதிகளால், இராணுவத்தால் இப்படிச் சண்டைகள் நடக்கிறது. இங்கே மனிதனோடு மனிதனாய்ப் பழகும் இவர்களுக்குள் இவ்வளவு வன்மமா? கைது செய்து வரச் சொன்னால்.. கண்ணில் பட்ட வாகங்களை எல்லாம் நொறுக்க யார் சொல்லிக் கொடுத்தார்கள் போலீஸுக்கு? சென்னையில் இது நடந்தது என்று பதிலுக்கு கோவையில் ரகளையில் ஈடுபட்டு காவல்துறை வாகனம் ஒன்றில் கண்ணாடியை உடைத்த வக்கீல்கள் இந்தச் சமூகத்திலிருந்து கற்றுக் கொண்டது என்ன? தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அவர்கள் விட்டுச் செல்வது அந்தக் கற்களைத்தானா?

கடைசியில் என்மீதே எனக்கு பயமாய் இருக்கிறது. சென்றமுறை சட்டக்கல்லூரி சம்பவத்தின்போது ‘ஐயோ.. இப்படியெல்லாம் நடக்கிறதே’ என்று இரண்டு நாட்கள் அந்த்த் தாக்கத்திலேயே இருந்தேன். நேற்றைக்கு அத்தனை சமூகச்சீர்கேடான காட்சிகளைப் பார்த்தபிறகும் அடுத்த பத்து நிமிடத்தில் AMERICA’S FUNNIEST VIDEOS பார்த்துச் சிரிக்கமுடிந்தது என்னால்.

சிலரிடம் பேசியபோதும் இதையே உணர முடிந்தது. புதியபடம், நேரடி கலைநிகழ்ச்சிகள் எல்லாம் போரடித்து இப்பொதைய ட்ரெண்ட் இதுதான் என்பது போல ஆகிவிட்டது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும்போது மதுரையில் மூன்று பஸ்கள் எரிக்கப்பட்டதாய் செய்தி சொல்கிறது.

ஒன்றும் சொல்வதற்கில்லை!