Monday, February 16, 2009

சிவா மனசுல சக்தி – விமர்சனம்

எப்போதுமே ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கும் நாயகன் நாயகி. கலாய்த்தல் ஒரு கட்டத்தில் நாயகிக்கு எரிச்சலை உண்டு பண்ண நாயகனைப் பிரிய அவர் எடுக்கும் முடிவெடுத்துப் போக, க்ளைமாக்ஸில் அவரை நாயகன் அடைந்தாரா என்பதே SMS.

தனுஷூக்கு ஏற்ற பாத்திரம். ஜீவாவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருடன் வரும் சந்தானம் – காமெடி தர்பாரே நடத்தியிருக்கிறார். `நாளைக்கு அவகூட எனக்கு டேட்டிங்’ என்று ஜீவா சொல்லும்போது, ‘பேரிச்சம்பழமா’ என்கிறார். சத்யம் தியேட்டரில் அங்கங்கே ஜோடி ஜோடியாக உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘இதென்ன தியேட்டரா.. இல்ல செவுரு வெச்ச மெரினாவா?’ என்கிறார். கவுண்டமணி போல எல்லாரையும் எல்லாப் படத்திலும் கலாய்க்கும் இவரை சவுண்டுமணி என்றழைக்கலாம்! இவர் வரும் காட்சியில் எல்லாம் தியேட்டரில் எல்லாரும் தங்களை மறந்து சிரித்து மகிழ்வதைக் காணமுடிந்தது.

நாயகி – அனுயா. ஒரு புதுமுக நடிகை இப்படி படம் முழுவதும் நடித்துக் கொண்டே இருப்பது ஆச்சரியம்தான். ஆனால் அதுவே அயர்ச்சியையும் தருகிறது!

இசை-யுவன். ‘என்னடா கண்ணெல்லாம் மஞ்சளா பூத்துப் போயிருக்கு?’ என்று அம்மா ஊர்வசி கேட்கும்போது பின்னணியில் பீர் பாட்டில் திறக்கும் சத்தம் கேட்கிறது. இதொன்றைத் தவிர சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ‘ஒரு கல்.. ஒரு கண்ணாடி’ பாடலைத் தவிர மற்ற பாடல்கள் திரையில் எடுபடவில்லை.

முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படம். இளைஞர் கூட்டத்தை தியேட்டரில் காணமுடிகிறது. வெளியே வரும் சிலரிடம் விசாரித்தபோது ‘சரி காமெடிங்க’ என்று பலர் சிரித்துக் கொண்டே வருவதையும் காண முடிகிறது.

எல்லாம் சரி...

படம் விகடன் தயாரிப்பாச்சே. இதை மட்டும் எழுதி விட்டுவிட முடியுமா? பக்கத்துவீட்டுப் பையன் கம்மியா மார்க் எடுத்தா ‘அடுத்த எக்ஸாம் நல்லாப் பண்ணுப்பா’ என்ற ஒரே வரி அட்வைஸோடு நிறுத்திவிடலாம். நம்ம பையன்னா, என்னென்ன தப்பு பண்ணியிருக்கான்னு பார்க்கணும்ல? விகடன் நம்ம வீட்டுப் பையனில்லையா? சும்மா விடலாமா?

படம் ஆரம்பித்த முதல் செகண்டில் ஹீரோ வருகிறார். இரண்டாவது செகண்டில் ஹீரோயின் வருகிறார். மூன்றாவது செகண்டில் ஹீரோ அவரைக் காதலிக்க ஆரம்பிக்க, ஹீரோயினை ஃப்ரெண்ட்ஷிப் பிடித்து விடுகிறார். இதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கோவையிலிருந்து பல முறை சென்னைக்கு ட்ரெயினில் போய் வரும் எனக்கு இப்படி காலியான ட்ரெயினையும், பேசினவுடன் ஃப்ரெண்ட்ஷிப்பாகி கதவருகே அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டு நாயகி பேசுவதையும் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. இப்படி பார்வையாளர்களுக்கு அந்நியமான காட்சிகள் நிறைய.

படத்தில் சினிமாத்தனமாய்ப் பல காட்சிகள். அந்த ட்ரெய்னில் நாயகி தனியாய் இருப்பது, நாயகியைப் பெண் பார்க்க ஆர்யா (ஆமாங்க!!) வரும் ஹோட்டலுக்கு ஜீவா வருவது, கடைசி காட்சியில் ஹீரோயின் அப்பா ஞானசம்பந்தத்தின் மாப்பிள்ளை ஹீரோயின் மயக்கமுறும்போது திடீர் டாக்டராகி நாடி பிடிப்பது (அவர் டாக்டர்னு சொல்லணுமா- என்று கேட்காதீர்கள். அப்படி ஒரு மாப்பிள்ளை இருப்பதே சொல்லவில்லை) ஒரு காட்சியில் எனக்கு நீயும், உன் அண்ணனும்தான்’ என்கிறார் ஞானசம்பந்தம். அப்புறம் எப்படி கோவையில் அவர் வீட்டில் இன்னொரு மகளும், மாப்பிள்ளையும் வந்தார்கள் என்பது தெரியவில்லை.

பட்த்தில் பல க்ளைமாக்ஸ்கள். பல இடங்களில் இந்த இடத்தில் படம் முடிஞ்சு போனா நல்லா இருக்கும் என்று நமக்குத் தோன்றுகிறது. அது அதிகமாகி, அதிகமாகி.. படம் முடிஞ்சா நல்லா இருக்கும் என்று எல்லாருக்குமே தோன்றுகிறது. என் ஒரு நண்பன்.. ‘நீ எனக்கு வேண்டாம்’ என்று ஹீரோயின் கோவித்துவிட்டுப் போகும் காட்சியில் தியேட்டரை விட்டு வெளியே வந்து, கொஞ்ச நேரத்தில் யாரும் வெளியே வராத்தைக் கண்டு மறுபடி உள்ளே போய் உட்கார்ந்தானாம்.

நாயகன்-நாயகி கலாய்ப்பது ஒரு கட்டத்தில் எல்லாருக்குமே சலிப்பைத் தருகிறது. ‘ஒண்ணு சேரணுமே இவங்க’ என்றூ பார்வையாளர்களுக்குத் தோன்ற வேண்டும். ‘ஒண்ணு சேரக்கூடாதுடா’ என்றுகூடத் தோன்றலாம். ஆனால் ‘சேருங்க.. சேராமப் போங்க’ என்று பார்வையாளரைப் பார்வையாளராயே ஆக்கிவிடுகிறார்கள். படத்துக்கு விகடன் விளம்பரப் படுத்தியிருந்ததுபோல இளைஞர்கள் ஜீவாவுக்கும், இளைஞிகள் அனுயாவுக்கும் சப்போர்ட் பண்ணுவதுபோல ஒரு காட்சி அமைப்பும் இல்லை.

விகடன் தயாரிப்பு என்பது சரி. பட்த்தில் முதல் வசனமே ‘ஆல் நியூ ஆனந்தவிகடன்’ என்பதுதான். அதுக்காக ஒரு காட்சியில் விகடனை டேபிளில் நிற்கவைத்து (அப்பத்தானே அட்டைப் படம் தெரியும்!) ஒரு பெண் படித்துக் கொண்டிருப்பதுபோலக் காட்டியதெல்லாம் ஓவர்.
டாஸ்மாக்-கில் காதலைச் சொல்லும் காட்சி புதுசு. பாராட்டலாம்.

காமெடிதான் படத்தின் பலம்.

சிவா மனசுல சக்தி - வி கடனுக்காகப் பார்க்கலாம்!

முதல் நாளே படம் பார்த்து.., இப்படி இந்தப் பதிவை முடிச்சுட்டு ஆஃபீஸ்ல அஞ்சாறு பேரை நேத்துப் போய்ப் பார்க்கச் சொல்லியிருந்தேன். அவங்களைக் கேட்டா, வந்த கமெண்ட்ஸ்...

‘ரொம்ப நாளாச்சுங்க... இவ்ளோ காமெடியா ஒரு படம் பார்த்து..’

‘ஒரு தடவை பார்க்கலாம் சார்’

‘கவர்ச்சி.. ஆபாசம்னு இல்லாம நல்ல படம்தான் சார்’

‘க்ளைமாக்ஸ் இழுத்துட்டாங்க..’
‘ப்பா.. காமெடின்னா சரியான காமெடிங்க...’

ம்ம்ம்ம்!

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

22 comments:

Cable சங்கர் said...

எனக்கென்னவோ.. யாரும் விகடன் மேல உள்ள அன்பினால உண்மைய சொல்லைன்னு நினைக்கிறேன். பரிசல் உள்பட.. ஆனால் பப்ளிக் தெளிவானவங்க.. அதுக்கான ரிசல்ட் கொடுத்துட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

ஆமா, உங்க மனசுல யாரு?கரண்டுல
:))

☼ வெயிலான் said...

// எனக்கென்னவோ.. யாரும் விகடன் மேல உள்ள அன்பினால உண்மைய சொல்லைன்னு நினைக்கிறேன். பரிசல் உள்பட.. //

பரிசல் மனசுல வி-கடன்

எம்.எம்.அப்துல்லா said...

//ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

//

உங்க ஃபீலிங்கை ஒழுங்காச் சொல்லங்குறது என் ஃபீலிங்.
:)

கார்க்கிபவா said...

அது எதுக்கு சகா விகடனுக்காக பார்க்கனும்? பிடிக்கலைன்னா பிடிக்க்லைனு சொல்ரதுதானே விகடன் விமர்சனம்?

ILA (a) இளா said...

விகடன் படம் எடுத்தா நல்லா இருக்கனும்னு இருக்கா? யார் வீட்டு நியாயம் இது?

pudugaithendral said...

ம்ம் எல்லோரும் படம் பார்த்து விமர்சனம் போடறீங்க.

நான் அதைப் படிக்க மட்டும் தான் முடியும்.

:(

Venkatramanan said...

//கோவையிலிருந்து பல முறை சென்னைக்கு ட்ரெயினில் போய் வரும் எனக்கு // சொல்லவேயில்லை! அப்ப அடுத்த முறை வீட்டுக்கு வாங்க பாஸ்!

அன்புடன்
வெங்கட்

Thamira said...

பார்க்கவேண்டிய லிஸ்ட்ல படம் பரிசல்.. கடைசியா என்னதான் சொல்றீங்க.. ம்ம்வா.. ம்ஹும்வா?

வெண்பூ said...

கொஞ்சம் ஏமாத்தம்தான் பரிசல்.. நீங்க, லக்கி ரெண்டு பேருமே கொஞ்சம் மைல்டா ஜாக்கிரதை உணர்வோட விமர்சிச்சிருக்குறதா நெனக்கிறேன்.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

பரிசல்காரன் said...

அடக்கடவுளே..

விகடனுக்காகப் பார்க்கலாம்னு நான் எழுதியிருக்கறதுல இருக்கற கேப்பை (வி - கடனுக்காக)யாருமே பார்க்கலியா!

ஐயோ.. இவங்களை வெச்சுட்டு நான் என்ன பண்றது!

பரிசல்காரன் said...

//நீங்க, லக்கி ரெண்டு பேருமே கொஞ்சம் மைல்டா ஜாக்கிரதை உணர்வோட விமர்சிச்சிருக்குறதா நெனக்கிறேன்.//

இதுவும் உண்மைதான் வெண்பூ..! ஒத்துக்கறேன்,

பொது வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமில்லையா!!!

Saminathan said...

எல்லோருக்கும் மார்க் போடற விகடன்
தாத்தா இந்த படத்துக்கு என்ன மார்க் போடுவார்...

மாதவராஜ் said...

பரிசல்!

நீங்கள் படத்துக்கு மார்க் போட்டிருக்கலாமே!
ஆணால் உங்க விமர்சனத்துக்கு நான் 55 மார்க் கொடுக்கிறேன்.

//ஆனால் ‘சேருங்க.. சேராமப் போங்க’ என்று பார்வையாளராயே ஆக்கிவிடுகிறார்கள்.//

ரசித்தேன். படம் பாருங்க... பாக்காம போங்க என்ற தொனி இருக்கே...

புருனோ Bruno said...

//எனக்கென்னவோ.. யாரும் விகடன் மேல உள்ள அன்பினால உண்மைய சொல்லைன்னு நினைக்கிறேன். பரிசல் உள்பட.. ஆனால் பப்ளிக் தெளிவானவங்க.. அதுக்கான ரிசல்ட் கொடுத்துட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்.//

ஹி ஹி ஹி

Nilofer Anbarasu said...

புது டெம்ப்லேட் ரொம்ப நல்லா இருக்கு :)

Kumky said...

வி-கடன்... அருமை.

Kumky said...

டெம்ப்ளேட் தயார் செய்து கொடுத்த சப்பான் கம்பெணிகாரவுக பேர போட்டு நன்றி கோட சொல்ல தாவலயா..?
(ஸ்ரீ மதியா?)

gayathri said...

டாஸ்மாக்-கில் காதலைச் சொல்லும் காட்சி புதுசு. பாராட்டலாம்.

nalla idam than pa athu.

Unknown said...

Its Good Review.

வால்பையன் said...

சிவா மனசுல சக்தி - வி கடனுக்காகப் பார்க்கலாம்! //

உங்களுக்கு விகடனிடம் கடன் பாக்கி இருக்கலாம், நாங்க என்னாப்பா பாவன் பண்ணினோம்

Natty said...

பரிசல்... டி. வி. காம்பியர் ரேஞ்சுல படம் முடிச்சி வரவங்க கமென்ட் எல்லாம் போட்டுட்டீங்க.... டி.வி. அதிகம் பார்க்கரீங்களோ?