Saturday, October 4, 2008

திமிரானவன்!


நான் நண்பர்களைப் புண்படுத்த விரும்பதவன். லேசான மனங்கொண்டவன், உணர்ச்சிவசமே உருவானவன் என்பதெல்லாம் தாண்டி எனக்குள்ளும் ஒருத்தன் இருக்கிறான். அவன் அகங்காரன்... திமிர் பிடித்தவன். கர்வி.

பாராட்டுக் கிடைக்கும்போதெல்லாம் ‘ஐய... என்னங்க.. எனக்கு இந்தப் பாராட்டெல்லாம் அதிகம்க’ என்று குழையும்போது, எனக்குள்ளிருக்கும் அவன் ‘டேய்... இதெல்லாம் எனக்கு ஜூஜூபி. இன்னும் நான் எங்கேயோ போகணும். தலையெழுத்து இப்போதான் இங்க வந்திருக்கேன்’ என்று நினைத்துத் தொலைப்பான். நான் அடங்கு அடங்கு என்று மிரட்டினாலும் அடங்கமாட்டான்.

‘எனக்கு உதவி தேவை. உன் ராஜாவை இங்கே வரச் சொல். அவன் இந்த ஊருக்குதான் மகாராஜா. நான் இந்த நாட்டின் தேசியகவி’ என்று இறுமாப்போடு பேசிய, ‘பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கேட்ட பாரதிதான் இவன் ஆதர்சம். உணவுக்கு வழியில்லை, இரண்டு பெண் குழந்தைகள் என துன்பப்பட்டபோதும் அவன் புத்தகத்துக்கு செய்த செலவில் கொஞ்சமும் சொத்து சேர்க்கச் செய்யவில்லை. நானும்.

‘நிலவைக் குறிவைத்துக் குதி. தவறினாலும் நட்சத்திரம் உன் வீடாகட்டும்’ என்ற மனப்பான்மையே இவனுக்கு அதிகம். இன்னும் இவன் எம்பிக் கொண்டேயிருக்கிறான். குதித்தபாடில்லை.

இவன் எழுதியதில் சிறந்ததும், சிறப்பாய் இல்லாததும் எனப் பலவற்றை நீங்கள் படித்திருக்கக் கூடும். ஆரம்பித்து, எழுதவே முடியாத ஒரு சில இவனிடம் உண்டு. அதை எழுதத் தகுதியில்லையெனினும் எழுதிக்காட்டுவேன் என்ற இவன் இறுமாப்பு ஜெயிக்கும் என்றும், ஜெயிக்கலாமா என்றும் ஒரு பட்டிமன்றம் இவனுக்குள்ளே நடந்துகொண்டே இருக்கும்.

சாரு, பைத்தியக்காரன், ஜமாலன், அய்யனார் போன்றவர்களை மரியாதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். யெஸ்.பாலபாரதி, லக்கிலுக் போன்றவர்களின் நட்பு கிடைத்ததில் அந்தக் கர்வி இன்னும் ஒருபடி மேலே போய்விட்டான். அவன் அடங்கப் போவதில்லை. அவனுக்கு மிகப் பிடித்த ஒரு பிரபலமான டாக்டர். ருத்ரன் வலைப்பக்கம் ஆரம்பித்ததைக் குடித்துக் கொண்டாடும் அளவுக்கு சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறான். அவர் தமிழில் எழுதாததற்கு இன்னும் ரெண்டு ரவுண்டு விடலாமா என்ற சோகத்தில் இருக்கிறான்.

கணிணியறிவு கொஞ்சமும் அற்றவன். ஆனால் காட்டிக் கொள்ளாமலே அதில் கரை கடந்து கொண்டிருப்பவன். தெரியாத சிலவற்றை தெரியாதென்று சொல்லி, கேவலப்பட்டுக் கொண்டதால் தெரிந்தது போல நடிப்பது சிறந்ததோ என்ற தப்பர்த்தம் எடுத்துக் கொண்டவன்.

படிப்பதில் ஆர்வம் அதிகம். ஆனால் படிப்பதை எழுத்தில் கொண்டுவரச் சிரமப்படுகிறான். இவன் நினைத்திருக்கும் இடம் இதற்கு மேல். கிடைத்ததைக் கொண்டாடிக் கொண்டிராமல், இன்னும் வேண்டுமென்ற குழந்தையாய் அடங்காது திரிபவன்.

யூமா. வாசுகியின் கவிதையை ரசிப்பவன். ராஜேஷ்குமாரின் க்ரைமை சிலாகிப்பவன். அன்பே சிவத்தில் அழுதவன். சிவாஜியில் மொட்டை ரஜினி வந்தபோது தியேட்டரில் கைதட்டி அமர்க்களம் செய்தவன்.

எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவன். ஆனால் எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவனாய் இருப்பதைத் தெரிந்திருப்பதால் பெருமை கொள்கிறான். பெண்களை மதிப்பவன். அதே அளவு பெண்களை ரசிப்பவன்.

50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ? ச்சீ!” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.

இவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி!

இன்றைக்கு இங்கே இருந்தாலும், மாலை ஆறு மணிக்கு இங்கே இருக்கவேண்டுமென்று நினைக்கிறான். முடியாது. அதற்காக வருந்திக் கொண்டிருக்கிறான். நர்சிம், பாலா, முரளி கண்ணன், புரூனோ போன்ற மதிப்புமிக்க பலரை முதலில் சந்திக்கும் வாய்ப்பை இழந்து நின்றாலும், இந்தக் கணத்தில் வாழ்பவனாதலால் அதைக் குறித்துச் சிந்தியாமல் இங்கிருந்தே வாழ்த்திக் கொண்டிருக்கிறான்.

குறை சொல்லியும், பாராட்டியும், கைகுலுக்கியும், புன்னகைத்தும், பொறாமைப்பட்டும், திட்டியும் இன்னும் பலவகையிலும் இவனை மேம்படுத்தும் உங்களுக்கு என்ன செய்து நன்றி சொல்லவென்று இவனுக்குத் தெரியவில்லை. இன்னும் எழுதிக் கொல்வதிலிருந்து இவன் மனம் விலகவில்லை.

பல அரசியல்களைப் பார்த்து பயந்து நடுங்கி, ஒடுங்கிப் போயிருக்கிறான். நாளை உங்களில் யாரோடும் இவனுக்கு நட்புமுறிவு வந்துவிடுமோவென அஞ்சிக் கொண்டிருக்கிறான். அப்படி ஏதேனும் நிகழின், இவனால் அதைத் தாங்கமுடியுமாவெனத் தெரியாதிவனுக்கு. அப்போதும் இவன் இப்படி கர்வத்தோடும் ,திமிரோடும் அலையக்கூடும். ஆனால் நீங்கள் இப்போது போலவே அவனோடு இருங்கள். அப்போதும் அவனைத் தலையில் தட்டி அடக்குங்கள். அது போதும் இவனுக்கு.

இன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும். அப்போதும் இவன் உங்களோடுதான் இருப்பான்.

ஏனென்றால் இவன் திமிரானவன். ‘பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.

அது அடங்காது. அடங்கவும் கூடாது.

Friday, October 3, 2008

அதிஷாவைக் காதலிக்கும் இளம்பெண்! (சிறப்புப் புகைப்படத்துடன்!)




நம்ம வலையுலக இளஞ்சிங்கம் அதிஷா இன்னைக்கு ஒரு பதிவு எழுதியிருக்காரு. யாரோ சேர நன்னாட்டு மங்கையொருத்தி தனக்கு காதல் கடிதம் எழுதியிருக்காங்களாம். சந்தோஷமா அதைப் பகிர்ந்துகிட்டிருக்காரு. அர்த்தம் புரியலையாம்... இதோ அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு..

പ്രിയനേ,

ப்ரியனே (நாசமாப்போக!)

അങെങ്‌ഴുതുന്ന ഓരോ വരികളിലും ഞാ൯ അങയെ സ്നേഹിക്കുന്നു.


நீங்க எழுதற ஒவ்வொரு வரியிலயும் நான் உங்களை நேசிக்கறேன். (செருப்புலயே அடி!)


അങിലാതെ ഞാനില്ല.

நீங்களில்லாமல் நானில்லை. (என்ன கொடுமைடா இது!)

എന്നെ മനസിലാകുമെന്നു കരുതുന്നു.

என்னைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். (பழகிப்பாரு... அப்புறமா, நீ இந்தாளைப் பத்திப் புரிஞ்சுக்குவ!)

വരവും കാത്തു ഞനിരിക്കും.

வரவும் காத்து நான் இருப்பேன். (விளங்கினாப்லதான்!)


പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪ഷങളാകുന്നു.

பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு ஒவ்வொரு வருடங்கள்தான். (ஏதும் கடன் பாக்கியா?)

സ്നേഹപൂ൪വം
காதலுடன் (ம்க்கும்!)

ചി൯മ‌യ
சின்மய

எனக்கு கேத்தரின், ரீட்டா மாதிரி ஆங்கில மங்கையரிடமிருந்து ச்சாட் பண்ணலாமா-ன்னு நெறைய மெயில் வருது. அதெல்லாம் ஸ்ட்ரெய்ட்டா ட்ராஷுக்குத்தான் போகும். இந்த மனுஷன் பதிவாப் போட்டு தன்னோட சம்மதத்தைக் கோடிட்டு காமிச்சிருக்காரு.

அப்ப அன்னைக்கு கோவைல நீ காமிச்ச பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போற அதிஷா? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்!

இனி.. சிறப்புப் ‘புகை’ப்படம்:-




வர்ட்டா!

Thursday, October 2, 2008

இவன் அடங்கவே மாட்டானா....

நேற்று காலை திடீரென அழைப்பு வடகரை வேலன் அண்ணாச்சியிடமிருந்து. 'யோவ்.. பரிசல். உன் ஃப்ரெண்ட் ஜப்பான் வெங்கட்ரமணனைக் கூட்டீட்டு வரேன். நீ வெயிலானோடு தயாரா இரு. கோபி போய் சின்னரஜினி கிரியோட குழந்தையைப் பார்த்துட்டு, அவருக்கும் வாழ்த்துச் சொல்லீட்டு வரலாம்” ன்னு. ஓக்கேன்னு கிளம்பி, வெயிலானையும் (சேர்த்துப் படிங்கப்பா, வெயில், யானைன்னு படிச்சுடாதீங்க!) கூட்டீட்டு பெருமாநல்லூர் போய், அங்கே காத்திருந்த வேலன், வெங்கட்ரமணனோடு & கோ போட்டுக் கொண்டு கோபி நோக்கிப் பயணித்தோம்.




(வேலன், வெயிலான், பரிசல்காரன்,. வெங்கட்ரமணன்)

வழியில் தென்பட்ட இந்த வாய்க்கால் கரையோரம் கொஞ்ச நேரம் காலாற நடந்தோம். ஒரு இடத்தில் அண்ணாச்சி துண்டு போட்டு, அங்கே இருந்த ஒருவரிடம், “இந்த இடத்தைப் பத்திரமா பாத்துக்கங்க. வரும்போது குளிக்கணும்” என்றார். வெயிலான் இந்த வருடத்துக்கு ஏற்கனவே குளித்ததால் மறுத்துவிட்டார். அங்கிருந்து புறப்பட்டோம்.




(சின்ன ரஜினி - கிரி)


வழியில் கிரிக்கு அலைபேச, அவர் சிக்னலுக்கு அருகே இருந்த சிக்னலில் (ஆமாங்க) காத்திருந்தார். அவரோடு அவர் மனைவி வீட்டிற்கு சென்றோம்.

(வெங்கட்ரமணன், கிரி, வெயிலான், வேலன்)
(எவ்வளவு நேரந்தான் ஃபோன் பேசறா மாதிரியே நடிக்கறது.. சீக்கிரம் எடுப்பா...)




(வெயிலான், தூண், கிரி, வெங்கட்ரமணன், பரிசல்காரன், வேலன்)








நம்புங்கப்பா.. நான் பரிசல்காரன்தான். துடுப்பெல்லாம் இருக்கு பாருங்க. (காந்திஜெயந்தி-ங்கறதால 'தண்ணி' இல்லை!)


1) கிரியின் புகுந்த வீட்டில் என்ன சாப்பிட்டோம்?
2) அதற்குப்பிறகு கிரி வீட்டிற்குப் புறப்பட்டது..
3) கிரியின் தந்தை, தாயின் விருந்தோம்பல்.. (அதுவும் அவங்கப்பா ஒவ்வொருத்தருக்கா பரிமாறினது.... ச்சான்ஸே இல்லை!)
4) நாங்கள் (அட்லீஸ்ட் நான்) சமீபத்தில் கண்டதிலேயே மனதைக் கொள்ளை கொண்ட கிரியின் வீடு









சினிமா ஷூட்டிங்குக்கு பேர் போன முருகன் கோயில்


5) கிளம்பும்போது போன மேலே உள்ள கோயில்...

இதுபற்றியெல்லாம் அண்ணாச்சி எழுதுவார். (கதையெல்லாம்தான் தொடர்பதிவு போடணுமா.. சந்திப்பை தொடர்பதிவா போடக்கூடாதா?)

இரு முக்கியமான விஷயங்கள்:-

வெங்கட்ரமணன் ஆரம்பத்தில் எனக்கு மெயில் அனுப்பி ஜப்பானில் இருப்பதாகவும், அக்.2 கோவை வரும்போது சந்திப்பதாகவும் சொன்னார். நானும் கிண்டலா ஜப்பான்ல இளவரசிக எல்லாம் கயில வெச்சிருக்கற விசிறி வாங்கீட்டு வாங்க-ன்னுட்டேன். மனுஷன் நெஜமாவே ரெண்டு விசிறி வாங்கீட்டு வந்துட்டார்! என் வீட்டு இளவ்ரசிக ரெண்டுபேரும் லீவுக்கு போய்ட்டதால, அவங்க வந்த பின்னாடி விசிறியைக் குடுத்து ஃபோட்டோ எடுத்துப் போடறேன். வெங்கட்ரமணனோட அன்புக்கு நன்றி!

வெங்கட்ரமணன் கோவைக்காரர். சென்னையில் பணி. நாலு மாத ப்ராஜக்ட் சம்பந்தமாதான் ஜப்பான் போயிருந்தாராம். சென்னையில் வேளச்சேரியில் இருந்த அவர், இப்போது குடி போயிருப்பது மடிப்பாக்கம் சதாசிவா நகர். லக்கிலுக், பார்த்துக்கோங்க!