Showing posts with label ringtones. Show all posts
Showing posts with label ringtones. Show all posts

Friday, October 10, 2008

ரொம்ப தொந்தரவு பண்றேனோ...



வர வர செல்ஃபோனால வர்ற தொந்தரவுகளைத் தாங்கவே முடியறதில்ல. எனக்கு ஃபோன் வர்றதைச் சொல்லவே இல்ல.

நான் ஃபோன் பண்ணி அறுக்கறேன்னு ஒரு எழுத்தாளர் நேத்து சொன்னார். அவருகிட்ட ஃபோன் பண்ணி பேசிகிட்டிருக்கறப்ப கேட்டாரு.

“இதுதான் ஒரு எழுத்தாளரை அழைக்கும் முறையா”

“யாருன்னாலும் இப்படித்தாங்க அழைக்க முடியும். இவரு எழுத்தாளர்ன்னு செல்ஃபோன்ல பச்சை பட்டனுக்கு பதிலா வித்தியாசமா செவப்பு பட்டனை அமுக்கினா கால் கட்டாகிடுமே”ன்னு அப்பாவியா நான் சொன்னதுக்கு கெட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டீட்டு ஃபோனை வெச்சுட்டாரு அந்த ரைட்டர்! இருடி.. வெச்சுக்கறேன்.

வேற ஒரு தொல்லை.. இந்த ரிங்டோன்!

ஆஃபீஸ்ல ஒரு தோழி. ஒருதடவை அவங்க செல்ஃபோனை டேபிள்ல தேடிகிட்டிருக்கறப்ப ‘இரு.. நான் கூப்ட்டுப் பார்க்கறேன்’ன்னு கூப்பிட்டப்போ ‘சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்.. ஒன்ன நெஞ்சில் வெச்சுக்கிட்டேன்’ பாட்டு! அவங்க நார்மல் ரிங்டோன் வேற.

“என்ன.. ரிங் டோனை மாத்தீட்டியா”ன்னு கேட்டா, “இது உங்களுக்குன்னு வெச்ச ரிங்டோன்”ன்னாங்க.

“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.

அப்புறம் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா வெச்சுகிட்டாங்க. முன்னைக்கு இது பரவால்லன்னு விட்டுட்டேன்!

என் ஃப்ரெண்டோட மாமா இறந்துட்டாரு. ஃப்ரெண்ட்ஸ்கிட்டயெல்லாம் கூப்பிட்டு சொன்னான். அவன் குடுத்த நம்பருக்கெல்லாம் கூப்பிட்டப்போ... ஒவ்வொருத்தன் Dialer Tone வெச்சிருந்தானே...


‘நம்ம காட்டுல மழ பெய்யுது...’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”


‘என்ன சொல்லப் போகிறாய்’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”

‘வேறென்ன வேறென்ன வேண்டும்.. ஒருமுறை சொன்னால் போதும்’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”


இன்னும் என்னென்னமோ வெச்சிருந்தாங்க. ஞாபகத்துக்கு வரல.

அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. என்னமோ அவங்கதான் அந்த ட்யூனை கம்ப்போஸ் பண்ணினா மாதிரி ஒருவித மிதப்போட, சுத்தியும் எல்லாரும் பார்க்கறதைப் பார்த்துட்டே.. ரொம்ப சாவகாசமா ஆன் பண்ணிப் பேசுவாங்க.

சமீபமா லேடீஸ் வாய்ஸ்ல சில DIALER TONE வந்திருக்கு. கூப்பிட்ட உடனே ‘நான் உங்களை காய்கறி வாங்கீட்டு வரச் சொன்னேனே... அப்படியே ஹார்லிக்ஸ் அரைக் கிலோ வாங்கீட்டு வந்துடுங்க...’ன்னு ஆரம்பிச்சு ஒரு லிஸ்ட்டே போடுது அந்தக் குரல். என் ஆஃபீஸ்ல ஒரு ட்ரைவர் அந்த டோன் வெச்சிருக்காரு. எல்லா மனைவிமார்கள் குரல்லயும், ஒரு வித மிரட்டல் தொனி இருக்குமே, அந்த மாதிரியே இருக்கும் அந்தக் குரல். ஒரு விஷயம் என்னான்னா, ரெண்டு நாளா நான் ஆஃபீஸ் விட்டு வர்றப்ப ஒரு தடவை அவருக்கு ஃபோன் பண்ணி அந்த டோனைக் கேட்டுட்டுதான் வர்றேன். மனைவி ஏதாவது சொல்லிவிட்டிருந்து மறந்திருந்தாக் கூட அந்தக் குரல் திட்டுற திட்டுற ஞாபகத்துக்கு வந்துடுது!

சில மாதங்களுக்கு முன்னாடி ஒரு கேரளா நம்பர் எல்லார்கிட்டயும் சுத்திகிட்டிருந்தது. ‘இந்த நம்பருக்கு கூப்ட்டா பேய் பேசுது’ன்னு. ‘ஏண்டா ஞானசூன்யங்களா, அந்தப் பக்கம் பேசறது பேய்தான்னு எப்படிடா தெரியும்?’ன்னா குரல்லயே தெரியுதுங்கறாங்க.

அதே மாதிரி ‘ஹிட்லர் கடைசியா பேசினது’ன்னு ஒரு நம்பர் சுத்திகிட்டிருந்தது. அதே நம்பர் இன்னொருத்தன் குடுத்து ‘ஆப்ரஹாம் லிங்கன் பேசினது’ன்னான். இன்னும் நம்ம எம்.ஜி.ஆர், சிவாஜியை வெச்சு இந்த விளையாட்டை ஆரம்பிக்கல இவங்க!

ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!