Showing posts with label இந்தியனின் தலைவிதி. Show all posts
Showing posts with label இந்தியனின் தலைவிதி. Show all posts

Tuesday, December 1, 2009

சிந்தை இரங்காரடீ



ந்த நண்பர் திருப்பூரில் 12 வீடுகள் கொண்ட ஒரு காம்பவுண்டில் வசித்து வருகிறார். மகன், மகளது படிப்பு மீது அவருக்கு மிகுந்த அக்கறை. தினமும் எட்டு, எட்டரைக்குத்தான் பணியை விட்டு வருவாரென்றாலும் வாரிசுகளின் பள்ளி டைரியை பார்வையிட்டு, கையெழுத்துப் போட்டு, வீட்டுப் பாடத்தை பரிசீலித்து எதிலாவது அவர்களுக்கு சந்தேகமென்றால் விளக்கி, அதன்பின்னரே சாப்பிடவே அமர்வார். இந்த வேலைகள் முடியும் வரை வேறெதிலும் கவனம் கொள்ளமாட்டார். கண்டிப்புடன் இருக்கும் அதே சமயம் க்ரியேட்டிவாக மகன்/மகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுக்கவும் தவறமாட்டார்.

மின்சார கணக்கெடுக்க மூன்று வீடுகளுக்கு ஒரு மீட்டர் என்றமைக்கப்பட்டிருந்த்து அந்தக் குடியிருப்பில். சென்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி – வியாழன் - இவர் அலுவலகம் கிளம்பும்போது கரண்ட் இல்லை. சரி, இரவுக்குள் வந்துவிடும் என்று இருந்தவருக்கு, இரவு வீட்டுக்குப் போகும்போதும் இல்லாதிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இவரது வீடு உட்பட மூன்று வீடுகளுக்கு மட்டும் கரண்ட் இல்லை. தன் அலைபேசியில் இருந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைத்திருக்கிறார். ஐந்தாறு முறை அழைத்தும் எடுக்காததால், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

அடுத்தநாள் – வெள்ளி.

அலுவலகம் கிளம்பும்போது அந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைக்கிறார். இரண்டாவது முறை எடுத்து விட்டார். விஷயத்தை சொல்லி, விலாசம் சொல்கிறார். ‘சரிங்க.. மதியத்துக்கு மேல வந்து பார்க்கறேன்’ என்கிறார். மாலை மனைவியை அழைத்துக் கேட்கும்போது யாரும் வந்து பார்க்கவில்லை என்றறிகிறார். இவரும் அந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைக்கிறார். ‘The number you’re trying to reach is currently switch off’ என்ற பதில்தான் வருகிறது. வீட்டுக்கு வந்து, திங்கள் 2nd Midterm தேர்வுகள் என்பதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே பாடங்கள் சொல்லித் தருகிறார். இன்றைக்கு மனநிலை சோர்வாக உணர்கிறார்.

சனிக்கிழமை:
அதேபோல லைன்மேனின் எண்ணுக்குத் தொடர்பு கொள்கிறார். பத்துமணிக்கு லைனில் வருகிறார் லைன்மேன். நேற்று வராதது பற்றிக் கேட்க, ‘சொன்னீங்களா? எப்ப?” என்பது போல கேள்வி வருகிறது. ஒருவாறு கெஞ்சி, ‘இன்றைக்காவது பார்த்துவிடுங்கள்’ என்கிறார்.

ஆனால் அன்றைக்கும் இவர் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. மற்ற இரண்டு வீடுகளில், ஒன்றில் ஒரு பேச்சிலர். இரவு ஏதாவதொரு நேரத்திற்கு வந்து உறங்கி, காலை போய் விடுவார். இந்த மின்சாரமின்மை அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மற்றொரு வீட்டில் இருப்பவர் இந்த நண்பர் ஏதோ முயற்சியெடுத்து செய்து கொண்டிருக்கிறார் என்று அமைதியாகவே இருக்கிறார். எதுவும் முயலக் காணோம்.

ஞாயிற்றுக் கிழமை முழுவதும் இவரால் அந்த லைன்மேனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இவரது எண்ணிலிருந்து அழைப்பு போனால் எடுக்காமல் இருந்து, பிறகு லைன் போகும்போதே அழைப்பைத் துண்டிப்பது என்று உதாசீனப்படுத்தப்படுகிறார். வேறு எண்ணிலிருந்து அழைத்தாலும், நோ ரெஸ்பான்ஸ். சைக்கிள் எடுத்துக் கொண்டு பார்பர் ஷாப், டீக்கடை, டாஸ்மாக் என்று அவரைத் தேடி இவர் அலைந்ததும் வீணாயிற்று. நண்பர்கள் ‘நாளைக்கு பவர்ஹவுசுல போய் ஒரு ரிஜிஸ்டர் இருக்கும். அதுல எழுதிட்டு வாங்க’ என்கிறார்கள்.

திங்கள்கிழமை, காலை அலுவலகத்துக்குப் போய் ஒரு மணிநேரம் அனுமதி வாங்கிக் கொண்டு, பவர் ஹவுசுக்கு செல்கிறார். அங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள். ‘கம்ப்ளெய்ண்ட் ரிஜிஸ்டரா? அதெல்லாம் இப்ப யார் எழுதறாங்க? உங்க வீட்டு லைன்மேனுக்கு அடிக்க வேண்டியதுதானே?’ என்கிறார்கள். இவர் கடந்த ஐந்து நாட்களாக பட்ட அவதியைச் சொல்கிறார். ‘ஐய... அந்த லைன்மேனுக்கு ப்ரமோஷன் கன்ஃபர்ம் ஆயிடுச்சுங்க.. ஆனா இன்னும் போஸ்டிங் போடல. அதுனால லைன்ல சரியா வேலை செய்யறதில்லை. அடிக்கடி நம்பரை மாத்தீடுவான். இந்த மாசத்துல மட்டும் மூணுவாட்டி மாத்தீட்டான்’ என்றார்கள். ‘சரி.. அந்த ரிஜிஸ்டரைக் குடுங்க. அட்ரஸ் எழுதி குடுத்துட்டு போறேன். வந்து பார்க்கச் சொல்லுங்க’ என்கிறார் இவர்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தேடியும் அந்த ரிஜிஸ்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து இவரும் தேடுகிறார். ம்ஹூம். பயனில்லை. ‘விடுங்க.. நாளைக்கு வந்து ஏ.ஈ-ஐப் பாருங்க. அவரு கூப்ட்டு ரெண்டு வாங்கு வாங்கினாருன்னா டப்பியைக் கட்டீட்டு வந்துடுவான்’ என்கிறார்கள் அவர்கள். அப்படியானால் இன்றைக்கும் சரியாகாதா என்று மிகுந்த மனவேதனையோடு திரும்புகிறார்.

செவ்வாய்க்கிழமை.
பவர்ஹவுஸ் சென்று, ஒருமணிநேரம் காத்திருந்து ஏ.ஈ தரிசனம் பெற்று ஆறு நாட்களாக வீட்டில் மின்சாரமில்லை என்பதையும், வாரிசுகள் தேர்வுக்குப் படிக்க இயலாத நிலையையும் சொல்கிறார். ‘இன்னைக்கே அவனை வந்து பார்க்கச் சொல்றேன்’ என்கிறார். வேறு லைன்மேன்கள் இல்லையா என்று இவர் கேட்டதற்கு ‘இன்னைக்குதானே என்கிட்ட வந்திருக்கீங்க? நைட்டுக்குள்ள சரியாய்டும் போங்க.. என்னாத்துக்கு வேறலைன்மேன்களை தொந்தரவு பண்ணிகிட்டு’ என்றிருக்கிறார்.

இரவுக்குள் ஒரு மாற்றமுமில்லை. புதன் காலை, கவுன்சிலரை சந்தித்து அழமாட்டாத குறையாக புகார் தெரிவிக்க, அவர் மனது வைத்து முயன்று, அன்று மாலை லைன்மேன் ஒருவன் வந்து ‘என்னா தருவ?’ என்ற டிமாண்டோடு சரிசெய்துவிட்டுப் போயிருக்கிறான்.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் –ஆறு நாட்கள். ஒரு தனிமனிதன் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது என்பதற்கு சாட்சியாய் கடந்திருக்கிறது.

நேற்று என்னைச் சந்திக்க அவர் வந்திருந்தபோது, என் நேற்றைய காமன்மேன் பதிவை படித்துக் கொண்டிருந்தோம். ‘ஒரு சாமான்யனால எதுவுமே செய்ய முடியாது கிருஷ்ணா’ என்று நீர் தளும்பும் கண்களோடு இதை அவர் விவரித்தபோது என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

உலகத்தைப் புரட்டும் நெம்புகோல், ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமென்று நம்புகிறவன்தான் நான். ஆனால், அந்த நெம்புகோலால், என் சக மனிதன் என்னைக் குத்துகிறானே என்கிற அவரது வருத்தம், விடையில்லா கேள்வியாய் நிற்கிறது. ‘எல்லாரையும் விடுங்க. அந்த லைன்மேன் என்னை மாதிரி ஒரு சாமான்யன் தானே.. அவனுக்கு கூட இரக்கம்கறது இருக்காதா? இதே ஒரு பணக்கார வீட்டுலயோ, பெரிய நிறுவனத்திலயோ நடந்திருந்தா இப்படி அலட்சியமா இருப்பானா? என் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர, நைட் கொசுக்கடியில்லாம என் குடும்பம் தூங்க நான் பட்ட கஷ்டத்த விட இந்த சம்பவங்கள் என் மனசுல தந்திருக்கற வலி அதிகம் கிருஷ்ணா. இந்த மாதிரி கரண்ட் போனா என்ன பண்ணனும்.. நான் பண்றது சரியா? என் முயற்சிகள் தப்பானதாலதான் பலனில்லாம போச்சா.. முதல் நாளே பவர் ஹவுசுக்கு போகணுமா.. ஓரளவு உலகம் தெரிஞ்ச எனக்கு இப்படீன்னா என்னை விட அசட்டுத் தனமா இருக்கற மனுஷன் இந்த உலகத்துல வாழவே தகுதியில்லாதவனா..’ என்று துவங்கி அவர் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் என்னை இரவு என் உறக்கத்தைக் கலைத்தன.

என்ன செய்ய வேண்டும் நாம்?


சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ – கிளியே
செம்மை மறந்தா ரடீ
-பாரதியார்

.