வளர்ந்து கொண்டிருந்த டென்னிஸ் வீராங்கனை. 1990ல் 14 வயதிருக்கையில் ரத்தோர் என்ற போலீஸ் அதிகாரியினால் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள். (ரத்தோரின் மகளும், ருச்சிகாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள்!) ருச்சிகாவின் தந்தை கிர்ஹோத்ரா நீதியின் கதவுகளைத் தட்டுகிறார். பதவியில் இருக்கும் ரத்தோர் வெவ்வேறு வழிகளில் கிர்ஹோத்ராவையும் அவரது குடும்பத்தாரையும் பழி வாங்குகிறான். ருச்சிகாவின் சகோதரரை பொய் வழக்குப் போட்டுத் தாக்கினார்கள். குடும்பமே சொந்த வீட்டை விட்டு அகதிகளாய் வீடு மாறித் திரிந்தார்கள். தனக்காத்தான்-தன்னால்தான் என்ற கவலை மேலோங்க சில வருடங்களுக்கு முன் ருச்சிகா தற்கொலை செய்து கொண்டாள்.

கடந்த வாரம் நீதி தேவதை கண்ணைத் திறந்துவிட்டாள். 19 வருடம் கழித்து! பாலியல் பலாத்காரம், ருச்சிகாவின் குடும்பத்தினருக்கு கொடுத்த தொல்லைகள் என்று ரத்தோர் செய்த அட்டூழியங்களுக்கு “மிகப்பெரிய” தண்டனையை நீதிபதிகள் அளித்தார்கள் ரத்தோர் எனும் வெறிநாய்க்கு.
ஆறு மாத சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்!
தீர்ப்பு குறித்து கோர்ட்டுக்கு வெளியில் நிற்கும் பத்திரிகையாளர் அறியுமுன்னே பெயிலில் சிரித்தபடி வருகிறான் ரத்தோர்.
“என்னவோ உள்ளே தங்கமெடல் வாங்கிக் கொண்டு வந்ததுபோல சிரித்தபடி அவன் வரும்போது என்னால் இந்த நாட்டை, நீதியை, ஜனநாயகத்தை எண்ணி அழாமலிருக்க முடியவில்லை” என்று கதறுகிறார் ருச்சிகாவின் தந்தை.
பத்திரிகையாளர்கள் ரத்தோரை இடைமறித்துக் கேட்ட கேள்விகளுக்கு “அது பழைய விவகாரம். எதற்கு கிளறுகிறீர்கள்?” என்ற திமிரான பதிலுடன் போய்விட்டான்.
ஒரு கட்டத்தில் எல்லாமிழந்து தளர்ந்து போயிருந்த கிர்ஹோத்ராவை சமாதானப்படுத்தி, இந்த வழக்கை வேறொரு நண்பர் முன்னின்று நடத்துகிறார். தன் தோழிக்கு நடந்த அவலத்தின் போது உடனிருந்த ஆராதனா குப்தா இந்த வழக்கின் தீர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து வந்து, இந்தத் தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் விடுகிறார். ‘என் தோழியை என்னால் இறப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இந்தத் தீர்ப்புக்காகவா 19 வருடங்கள் என்று அவள் ஆன்மா கேட்குமே.. என்ன சொல்வேன்’ என்று அவர் புலம்புவது கண்ணோடு சேர்த்து காதையும் கட்டியிருக்கும் நீதி தேவதைக்கு எங்கே கேட்கப்போகிறது?
இப்போது எல்லா மீடியாக்களும் இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கின்றன.
ஒரு சேனல் 1993ல் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு, ரத்தோரின் முன்னிலையில் நிர்வாணமாகவும் இன்னபிற வகையிலும் துன்புறத்தப்பட்ட ருச்சிகாவின் சகோதரன் ஆஷூ, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அஃபிடவிட்டின் நகலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது.
அதில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானால் குலைநடுங்க வைக்கிறது.
ரத்தோர் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளை தன்கைக்குள் போட்டுக் கொண்டு காய் நகர்த்தி விட்டார் என்று அரியானாவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் பேட்டி கொடுக்கிறார். இந்த வழக்கை விசாரித்த ரத்தோரின் மேலதிகாரி ‘ரத்தோர் இந்த வழக்கை விசாரிக்கும் என்னையே அடிக்கடி மிரட்டி இருக்கிறார்’ என்கிறார்.
இன்னொரு சேனல் ருச்சிகாவின் தந்தையை பேட்டி எடுக்கிறது. அழுது கொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும் அந்த மனிதன் நாட்டையும், நீதியையும் நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.
இருந்தாலும் சொல்லப்படுவதில்லை.
ஜெய்ஹிந்த்.
.