
வருட இறுதியில் பார்க்கும் ஒரு படம் மனதுக்கு நிறைவாய் அமைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்! இந்த சந்தோஷத்தைத் தருகிறது 3 இடியட்ஸ்.
***********************
விமானம் எடுக்கப்பட்டு விட்டது. சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருக்கும் மாதவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. பணிப்பெண் செல்ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லித் திட்டத்திட்ட எக்ஸ்யூஸ் கேட்டபடி பேசுகிறார். பேசி முடித்ததும் வியர்க்க விறுக்க எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து மயக்கமாகிவிட, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வைத்து, மாதவனை படு ஸ்பீடில் விமானநிலைய வாசல் நோக்கி மருத்துவக்குழு கொண்டு செல்ல நைஸாக கண்விழிக்கும் மாதவன் - எழுந்து - இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “ஐம் ஓகே.. நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.
இந்த ஆரம்பக்காட்சியிலேயே கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அங்கிருந்து கிளம்பும் மாதவன், தன் இன்னொரு நண்பன் ஷர்மானையும் அழைத்துக் கொண்டு அமீர்கானைத் தேடி புறப்படுகிறார்கள்.
படம் முழுவதுமே இந்தத் தேடல்தான். க்ளைமாக்ஸில்தான் அமீர்கானைக் காண்கிறார்கள். அதுவரை இவர்களின் கல்லூரி நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்தான்.
ஒரு நண்பன் விமானத்திலிருந்து இறங்கியும், இன்னொரு நண்பன் மனைவியை விட்டுவிட்டும் இப்படி ஒரு நண்பனைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்களா? இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று ஒரு இடத்தில்கூட தோன்றவில்லை. அமீர்கானைப் போன்ற நண்பன் கிடைத்தால் இதற்கு மேலும் செய்யலாம்!
ராகிங் நடக்கும்போது வானத்திலிருந்து குதித்து ஹீரோயிஸமெல்லாம் காட்டவில்லை. ஆனால் அறிவார்த்தமாக ஹீரோவாகிறார். இப்படித்தான் படம் நெடுக. இறுதிக்காட்சியில் ‘நான் ஜெயிச்சுட்டேன்ல’ என்று அந்த படிப்பாளி நண்பன் சதூர் சொல்லும்போது அமீர்கான் தான் யார் என்பதை வெளிக்காட்டும் காட்சி வரை இந்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது.
அதுவும் இடைவேளைக்கு முன் அமீர்கானைக் கிட்டத்தட்ட நெருங்கிய மாதவனும், ஷர்மானும் போய்ப் பார்க்கும்போது அங்கே ஜாவேத் ஜஃப்ரி அமர்ந்து கொண்டு ‘சொல்லுங்க நான் தான் ரஞ்சோர்தாஸ்’ என்று சொல்ல அதிர்ச்சியடையும் இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார். அப்படியென்றால் அமீர்கான்?
இடவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கும் படத்தில் பாருங்கள்!

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கு சல்யூட்! சேட்டன் பகத்தின் FIVE POINT SOMEONE நாவலைத் தழுவி எடுக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குனர். முன்னாபாய் எம்பிபிஎஸ், லஹே ரஹோ படங்களைப் போலவே இதிலும் வசனங்கள் (ஹிரானி + அபிஜத் ஜோஷி) படுஷார்ப். நல்ல சிரிப்பையும், சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள். அதுவும் இந்திய கல்வித் திட்டத்தை படம் முழுக்க கேள்விகளால் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் அவரை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.
கேமரா - முரளிதரன். சிம்லாவை இவ்வளவு அழகாய் நான் பார்த்ததில்லை. (பார்த்ததேயில்லைங்கறது வேற விஷயம்!) லே லடாக் சாலையில் அந்த கார் செல்வதை இப்படியெல்லாம் காட்ட முடியுமா! வெல்டன்!
ஷர்மான், பேமன் ஈரானி, கரீனா, கரீனாவின் சகோதரி என எல்லா கேரக்டரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன (அல்லது நாம் அப்படி நினைக்கும்) கேரக்டருக்கும் இயக்குனர் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்த ஹாஸ்டல் சிறுவன், கரீனாவின் நிச்சயிக்கப்பட்ட மணமகன் (Price Tag!), பேமான் ஈரானிக்கு முகச்சவரம் செய்யும் நபர் என்று எல்லாருமே கச்சிதம் என்றாலும் அந்த ஹாஸ்டல் சிறுவன் கவர்கிறான்!
தன் ஈகோவை விட்டு, பேமன் ஈரானி மழைநாளில் அமீரிடம் சரணடையும் காட்சியில் அவர் நடிப்பு அபாரம். அதேபோல, அந்த ALL IS WELL எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும், பிறந்த குழந்தை அழாமலிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சி... க்ளாஸ்!
மொத்தத்தில் -
3 IDIOTS - A GENIUS MOVIE!
(முன்னாபாய் வசூல்ராஜா ஆனதுபோல, இது தமிழில் வருமா என ஏங்க வைக்கிறது. வந்தால் சூர்யா மிகவும் ஆப்டாக இருப்பார்.)
.