Showing posts with label Spy. Show all posts
Showing posts with label Spy. Show all posts

Monday, December 21, 2009

உளவாளி


சென்ற வார விகடனின் இணைப்பு: உளவாளி. அந்த இணைப்பைப் படித்ததும் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

1991 டிசம்பரின் போது சென்னை சென்றுவிட்டு, உடுமலைப்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையிலிருந்து திருச்சி வரைதான் பஸ் கிடைத்தது. திருச்சியில் இறங்கி சாப்பிட ஒரு நல்ல ஹோட்டல் (பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே) தேடிக் கொண்டிருந்தேன். தோளில் ஒரு கருப்பு Bag, கையில் ஒரு Bag என்று சுமை வேறு. இரவு நேரம். சுற்றி சுற்றி ஏதோ ஒரு ஹோட்டலுக்குப் போவோமென்று போய் சாப்பிட்டு விட்டு வந்தேன். வெளியே வந்தபிறகு ஏதாவது பர்ச்சேஸ் பண்ணலாமென்று மறுபடி சில கடைகள் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் கவனித்தேன் – என்னையே ஒரு ஆள் பார்த்துக் கொண்டும், தொடர்ந்து கொண்டும் இருந்தார். ‘அவனா நீ’ என்பதெல்லாம் அப்போதெனக்கு தெரியாதையாகையால் ஒரு வேளை வழிப்பறி கேஸாக இருக்குமோவென சந்தேகப்பட்டேன். அப்படியே இருந்தாலும் நான்கைந்து ஜட்டி, பேண்ட், சட்டைகளையும், புத்தகங்களையும் வைத்துக் கொண்டு அவனென்ன செய்யப் போகிறானென்று அவனை நினைத்து பரிதாபப்பட்டேன். தொடர்ந்து நடந்தேன்.
அரை மணி நேரம் கழித்து, அந்த ஆள் இன்னொரு ஆஃபீஸர் ரேஞ்ச் ஆளுடன் சேர்த்து என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தான்!

இதென்னடா, நெஜமாவே என்னைப் ஃபாலோ செய்கிறார்களா, இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா என்று ஐயமாகவே இருந்தது. சிறிது நேரத்திலேயே அந்த ஐயம் தெளிவானது.

அந்த ஆஃபீஸர் என்னருகில் வந்து ‘தம்பி.. கொஞ்சம் எங்க கூட வாங்க’ என்று மரியாதையாக – அதே சமயம் – கண்டிப்புடன் அழைத்தார்.

ஒருமாதிரி பயந்தவாறே அவர்களுடன் சென்றேன்.

பஸ் ஸ்டாண்டிலேயே இருந்த சிறிய அறை ஒன்றிற்கு அழைத்துப் போய், அமர வைத்தார்கள். அவர்கள் யாரென்று கேட்டதற்கு ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் குழு’ என்று ஏதோ ஒரு கார்டைக் காட்டினார்கள். என்னுடைய பைகள் இரண்டையும் முழுமையாக சோதனை செய்தார்கள். அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்டில் எதையோ தேடிச் சுற்றிக் கொண்டிருந்தது அவர்களுக்கு சந்தேகத்தை வரவழைத்திருக்கிறது.

அப்போது நான் யாரென்று நிரூபிக்கும் எந்த அடையாள அட்டையும் என் வசமில்லை. ஒரு பத்திரிகை, ஒரு மாதத்திற்கு அந்தப் பத்திரிகைக்காக நான் தகவல்கள் சேகரிக்க எனக்கொரு அனுமதிக் கடிதம் கொடுத்திருந்தார்கள். அதைக் காண்பித்தபிறகு, ஃபார்மலாக சில கேள்விகள் கேட்டு விட்டு விட்டார்கள்!

அப்போதுதான் சொன்னார்கள். எல்லா பஸ் ஸ்டாண்டிலேயும் சில ஆட்களை நியமித்திருக்கிறார்களாம். அவர்கள் டீக்கடையில் டீ போட்டுக் கொண்டோ, பழங்கள் விற்றுக் கொண்டோ, பொரி கடலை விற்றுக் கொண்டோ இருப்பவராகக் கூட இருக்கலாம். அவர்கள்தான் இவர்களின் உளவாளிகளாம்! (அப்பாடா.. தலைப்பு வந்துடுச்சுல்ல!)


இன்னொரு சம்பவம் – ஏழெட்டு வருஷங்களுக்கு முன். நான் திருப்பூரில் பணிபுரியும் நிறுவனத்திற்கு அருகிலிருக்கும் டீக்கடை ஒன்றிற்கு தேநீர் இடைவேளையின்போது போவோம். அப்போதெல்லாம் அங்கே ஒரு ஆள் அழுக்கு உடையும், துணி மூட்டையுமாய் அமர்ந்திருப்பான். இரவு நேரம் அவ்வளவாக தென்பட மாட்டான். ஒவ்வொரு நாள் இருப்பான், ஒவ்வொரு நாள் காணாமல் போவான். நாங்கள் அமர்ந்து தேநீர் குடிக்கும்வரை இருப்பான். பன், பிஸ்கெட் எதையாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வான், அவனாகக் கேட்க மாட்டான். ஒரு பேச்சு பேசி யாரும் கேட்டதில்லை. ‘அவன் ஒரு மெண்டல் கேசு தம்பி’ என்பார் கடைக்காரர்.

கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களாக இருந்தவன், கொஞ்ச நாட்களாக கண்ணில் தட்டுப்படவில்லை. அந்த டீக்கடைக்காரரிடம் விசாரித்தபோது தான் சொன்னார்:

“அதையேன் கேட்கறீங்க.. நாலுநாள் முந்தி ஒரு ஆள் நம்ம கடைக்கு டீ குடிக்க வந்தான். டீ சொல்லீட்டு உட்கார்ந்திருந்தான். ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். கடைக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்னுச்சு. நாம மெண்டல் கேசும்போம்ல, அந்த ஆள் திடீர்னு எந்திருச்சு, டீ குடிக்க வந்தவன் கையைப்பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு போனான். நாங்க கிறுக்குப் பிடிச்சு பண்றான்போலன்னு போய்த் தடுத்தோம், எங்களை முறைச்சு கத்தினான் பாருங்க.. நடுங்கீட்டோம். அதுக்குள்ள அம்பாசிடர் கார்லேர்ந்து ரெண்டு பேர் வந்து அந்த டீ குடிக்க வந்தவனை அள்ளிப் போட்டாங்க. இந்த மெண்டல் கேசும் கார்ல முன்னாடி உட்கார்ந்துட்டு போச்சு”

“கார்லயா?”

“ஆமாம்ப்பா. அது மெண்டல் கேசுல்ல. போலீஸ்ல ஏதோ வேலையாம். மூணு நாலு கொலை பண்ணிட்டு தலைமறைவா திரிஞ்ச ஒருத்தனை தேடிகிட்டு இருந்திருக்காங்க. அவன் சின்னவீடு இந்தப்பக்கம்தான் இருக்குன்னு அவங்களுக்கு தகவலாம். அதுக்காக ஒருமாசமா இப்படி அப்பப்ப வந்து உட்கார்ந்து, எல்லாம் விசாரிச்சு, அவன் வந்தப்ப கையும் களவுமா பிடிச்சுட்டாங்க” என்றார்.

கொஞ்சநாளைக்கு அந்தப் பகுதிகளில் 'மெண்டல் கேசு'களுக்கு நல்ல மரியாதை இருந்தது தனிக்கதை!


.