நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே யாருக்காவது அட்வைஸிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது அல்லது ‘அட்வைஸ்லாம் இல்ல’ என்று எதையாவது உளறிக்கொண்டிருக்கிறோம். நேற்றைக்கு #வாசகசாலை க் கூட்டத்தில் இறுதி உரை - அதாவது அந்த நிகழ்வின் இறுதி உரை - வழங்கச் சொல்லி, மைக் கொடுக்கப்பட்டபோது அப்படித்தான் ஒரு அறிவுரையை அள்ளிவழங்கினேன். காந்திஜி சிறுவனுக்கு ‘அதிகம் சர்க்கரை திங்காதே’ என்று அறிவுறுத்திய கதை போல, அது கிட்டத்தட்ட சென்ற வருடம் நான் கடைபிடித்தது என்பதால் கொஞ்சம் உறுதியாகவே அந்த விஷயத்தைச் சொன்னேன். 2018ல் இதை எல்லாரும் கடைபிடிக்கவேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.
நம் நியூரான்களில் பரபரவென்று ஓடும் கருத்தோஃபோபியாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கச் சொன்னதுதான் அது. நாட்டில் என்ன நடந்தாலும் உடனடியாக அதைப்பற்றி நாலு வரிகளோ, நாற்பது வரிகளோ எழுதிக் கொட்டாவிட்டால் மனசு அடங்காமல் திரிகிறது.
நிஜத்தில் நம் கருத்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பதே நிஜம். அப்படியும் கருத்துச் சொல்லும் Urge இருந்ததென்றால் தோன்றுவதை எழுதி டிராஃப்டில் போட்டு வையுங்கள். பிறகு அதைப் பற்றி யார் யார் என்னென்ன சொல்கிறார்கள், பேசுகிறார்கள் என்று குறைந்தது 24 மணிநேரங்கள் கவனியுங்கள். ‘அட... இதத்தானே நான் நெனைச்சேன். மொதல்லயே போட்டிருந்தா எனக்கு இந்த 500 லைக்ஸ் கிடைச்சிருக்குமே’ என்று தோன்றும். அப்படிக் கவலைப்படத் தேவையே இல்லை. உங்கள் ஒவ்வொரு லைக்ஸிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அது நீங்கள் எப்போது எழுதினாலும் கிடைக்கும். முதலில்எழுதி, ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேசமயம், ஒருவிஷயத்தில் உங்களுக்கு தீவிரமான, தெளிவான கருத்து இருந்து அதில் நீங்கள் உறுதியாகவும் இருப்பீர்களென்றால் எழுதலாம். இல்லாதபட்சம், அதைப் பற்றிய அறிவும், தெளிவும் உள்ளவர்கள் எழுதியதைப் படியுங்கள். விவாதங்களைக் கேளுங்கள். இணையப் பரிச்சயம் இல்லாத சக நண்பர்களிடம் அதுபற்றி உரையாடுங்கள். 24 மணிநேரம் கழித்து அதைப் பற்றி எழுதும்போது இன்னும் தெளிவும் தீவிரமும் கிடைக்கும்.
இந்த ஒரு சுய ஒழுங்கை மட்டும் கடைபிடித்தால்.. அட்லீஸ்ட் என்னுடைய டைம்லைனாவது நியூஸ் பொல்யூஷனால் பாதிக்காமல் இருக்கும் என்ற சின்ன ஆசைதான் காரணம்.
மற்றபடி, இந்த 2018-ல் இண்டர்நெட் ஹேண்ட்லிங் சார்ஜஸ் இல்லாமல் சினிமா டிக்கெட் புக் செய்யவும், அவரசமாக ஆஃபீஸ் போகும்போது சிக்னலில் சிவப்பு விழாமலிருக்கவும், லேட்டாக வீட்டுக்குப் போகும்போது சிரித்தபடி மனைவி கதவு திறக்கவும், கேட்டதுக்கு டபுள் மடங்காக கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிஃப்ட் தரவும், பர்ஸை கையில் கொடுக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ் அமையவும், நீங்கள் நிற்கும் க்யூ வேகமாக நகரவும், இன்னபிற இனிமைகள் நடக்கவும் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment