
விஜய் பிரபுதேவா காம்பினேஷன். போக்கிரியின் ஹேங் ஓவர் இன்னும் போகவில்லை. கிட்டத்தட்ட அதே முகங்கள்.
ராணுவத்தில் மேஜரான தனது அப்பா விஜய்யை கொன்று தேசத்துரோகி பட்டம் கட்டிய பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட வில்லன் க்ரூப்பை மகன் விஜய் பழிவாங்கும் அக்மார்க் தெலுங்குக் கதை.
விஜய் தனது ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுகிறார். ப்ரூஸ்லியா, ஜெட்லியா என்று கேட்கும்போது ‘கில்லிடா’ என்று எகிறி அடிப்பது, வடிவேலுவிடம் லிஃப்ட் கேட்டு அவருக்கு ஆப்பு வைப்பது, நயன்தாராவை ஜொள்ளுவது, தன் அம்மாவைப் பார்த்து உருகுவது, பிரகாஷ்ராஜிடம் சரிக்கு சரி நிற்பது என்று தனக்கிட்ட பணியை தட்டாமல் செய்திருக்கிறார்.
ஆனால் அந்த மேஜர் விஜய்? சாரிங்ணா.. மைனராத்தான் இருக்கீங்க. மேஜர்லாம் உங்களுக்கு சரிவரலண்ணா...
தான் அமைக்கும் டான்ஸ் ஸ்டெப்களில் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை அடிக்கடி காட்டும் பிரபுதேவா இதில் டைட்டில் சாங்கில் ஆரம்பித்து பல இடங்களில் தானொரு எம்.ஜி.ஆர்.ரசிகன் என்று பறைசாற்றியிருக்கிறார். (எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் செய்ததா அல்லது எஸ்.ஏ.சியின் தூண்டுதலா என்பது டைட்டிலுக்கு முன் 'உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்' என்று நற்பணிமன்றக் கொடியைக் காட்டுவதால் சந்தேகம் வருகிறது.)
இடைவேளை வரை.. ஏன் அந்த ஃப்ளாஷ்பேக் முன்பு வரை நல்ல வேகம்தான். ஆனால் ஃப்ளாஷ்பேக்குக்கு அப்புறம் ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறது. குருவியில் மண்ணுக்குள் போன ஹீரோ ஆற்றுக்குள் இருந்து வருவது போல, இதில் புதையுண்ட பிறகு புயல் வந்து மண்ணை விலக்கி.. போதும்டா சாமி. ஏம்ப்பா.. இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்னு யூனிட்ல யாருமே யோசிக்கமாட்டீங்களா? கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருந்தா கில்லியாகக் கூடிய கதையை எப்படிக் கொண்டு போக என்று தெரியாமல் சொதப்பிவிட்டார்கள். இடைவேளையின்போது நல்லாத்தானே இருக்கு என்று தோன்றிய படம் க்ளைமாக்ஸின் ஜவ்வால் ‘ஆளை விட்டாப் போதும்’ என்று சொல்ல வைக்கிறது.
நயன்தாரா-ளம். அவ்வப்போது சோர்ந்துவிடும் ரசிகர்களை உயிர்ப்போடு வைக்கிறார் நயன்தாரா. முகபாவனைகள், உடைக் குறைப்பு என்று இளைஞர்களைத் தாறுமாறாகப் பந்தாடுகிறார். போதாத குறைக்கு சரக்கடித்து விஜயுடன் மல்லுக்கு நிற்கிறார்.
வடிவேலுவின் கால்ஷீட் கிடைத்த அளவுக்கு சீன்கள் அமைக்க டைரக்டர் திணறியிருப்பது அந்த மாட்டு ஃபைட்டிலேயே தெரிகிறது. இடைவேளைக்கு முன் ஓரளவுக்கு இருந்தவரை இடைவேளைக்குப் பின் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.
படத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் இசை. பாடல்களில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழக்கமான தெலுங்குவாடை இருப்பினும் துள்ளலாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் வரும் பல காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பில்லாவை நினைவுபடுத்துகின்றன.
பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கதையையும் கேட்டு கொஞ்சம் மாத்தச் சொல்லியிருக்கலாம்.
எனக்கென்னவோ படம் திருப்தியா என்றால் 50-50தான். ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது. குருவியால் இதற்கு நல்லபேர். அவ்வளவுதான் சொல்லமுடியும். (என்ன இருந்தாலும் அந்த அளவுக்கு போரடிக்கல என்று ரசிகர்கள் பேசிச் செல்வதைக் கேட்க முடிந்தது.)
வில்லு - குறி தவறிவிட்டது.