Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Wednesday, September 23, 2009

ஒன்..டூ..த்ரீ................

1: இணையத்தில் ‘கட்டுக் கதையாக’ உலவும் ஒரு செய்தி.... (False News?)


பரா வின்ஃப்ரே (Opera Winfrey)வின் டாக் ஷோ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.




டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர். உலகப் புகழ் பெற்ற Tommy தயாரிப்புகளின் மூலகர்த்தா.

ஓபராவின் டாக் ஷோ ஒன்றில், டாமியைப் பேட்டி காண்கிறார் அவர்.

ஓபரா கேட்கிறார். “இனவாதத்தை தூண்டும் விதமாய், உங்களைக் குற்றஞ்சாட்டி நீங்கள் பேசியதாக சில அறிக்கைகள் வந்ததே அவை உண்மையா.. நீங்கள் அப்படிப் பேசினீர்களா?”

அவர் சொன்னதாய் வந்த அறிக்கையையும் படிக்கிறார். அது இதுதான்..

“'If I'd known African-Americans, Hispanics, Jewish and Asians would buy my clothes, I WOULD NOT have made them so nice. I wish these people would NOT buy my clothes, as they are made for upper class white people”


டாமி சொல்கிறார்: “ஆம். நான் அப்படிச் சொன்னேன்”

ஓபரா உடனே “ ஷோவை விட்டு வெளியே செல்லுங்கள்” என்று அவரை வெளியேற்றி விடுகிறாராம்!

எப்படியெல்லாம் கதை கட்டுகிறார்கள் பாருங்கள்!

** ** ** ** ** **
2:

ஜோஹன்னஸ்பெர்குக்கும், லண்டனுக்கும் இடையில் பறக்கும் ப்ரிடிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது இது...

50 வயதுள்ள ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. கறுப்பர் ஒருவருக்கு அருகில் அவருக்கு சீட். பெண்மணியால் பொறுக்க முடியவில்லை. விமானப் பணிப்பெண்ணை அழைக்கிறார்.

பணிப்பெண்: “சொல்லுங்கள்... என்ன விஷயம்?”

வெள்ளைக்காரப் பெண்மணி: “என்ன விஷயமென்று தெரியவில்லையா? என்னை எங்கே அமரவைத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். இப்படி ஒரு விலக்கப்பட்டவரோடு பயணிக்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உடனே எனக்கு வேறு சீட் ஒதுக்குங்கள்”

பணிப்பெண் அவரைப் பொறுமையாய் இருக்கச் சொல்லிவிட்டு விமான கேப்டனிடம் பேசிவிட்டு வருகிறேனெனச் செல்கிறாள்.

சிறிதுநேரத்திற்குப் பிறகு வந்து “மன்னியுங்கள் மேடம்.. எகானமி க்ளாஸில் எல்லா சீட்களும் நிரம்பி விட்டதால் பிஸினஸ் க்ளாஸிலாவது சீட் இருக்குமென பார்க்கப் போனேன். அங்கும் ஒரு சீட்டும் இல்லை.”

வேகமாக இடைமறிக்க வந்த அந்தப் பெண்மணியைக் கையமர்த்தி நிறுத்திய பணிப்பெண் தொடர்கிறாள்:

“ஆனாலும் இப்படி ஒரு பயணியோடு பயணிக்கும் கஷ்டத்தைக் கொடுக்க எங்கள் கேப்டனுக்கு விருப்பமில்லை.. எனவே” என்றவள் சொன்னது கருப்பரின் பக்கம் பார்த்து! “சார்.. தயவுசெய்து உங்கள் உடமை ஏதுமிருப்பின் எடுத்து வாருங்கள். உங்களுக்காக கேப்டன் முதல் வகுப்பில் சீட் ஒதுக்கி காத்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் எங்கள் விருந்தினர்”

சுற்றியமர்ந்தவர்களெல்லாம் ஒருநிமிடம் தொடர்ந்து கைதட்டினார்கள்!

**************************
3:


னக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர். தனியார் நிறுவனத்துல குறிப்பிடத்தக்க பதவில வேலை செய்யறாரு. (பாருங்களேன் முரணை... அந்தப் பதவியைக் குறிப்பிடாம-குறிப்பிடத்தக்க பதவி-ன்னு சொல்றேன்...!)

வேலை சார்பாக அரசு அலுவலகங்களுக்கு போறதும், வேலை சம்பந்தமா பலருக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதும் அவர் வேலைகள்ல அடக்கம். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, அதுக்கான அதிகாரியை தொடர்ந்து சந்திச்சிட்டு இருக்காரு நண்பர். வேலை முடியற நேரம். லஞ்சமா ஐந்திலக்கத்தைத் தொடும் ஒரு தொகையைப் பேசி முடிச்சிருக்காங்க.

பேசிவெச்சுட்ட ஒரு நாள்ல இவர் அங்க போறாரு. தேநீர் உபசரிப்பெல்லாம் முடிஞ்சு, ‘எங்க வெச்சு தர?’ன்னு கேட்டிருக்காரு இவர். ‘இங்கயே கொடுங்களேன்’னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி.

இந்த நேரத்துல அந்த நண்பரை நான் ஃபோன்ல கூப்டிருக்கேன். என் நண்பர் ஃபோனை எடுக்காம பாக்கெட்ல கையை விட்டு காசை எடுக்க முயற்சி பண்ணிகிட்டிருந்தார். திடீர்னு அந்த அதிகாரி எழுந்து ‘மொதல்ல வெளில போங்க... இப்படியெல்லாம் என்கிட்ட நடந்துக்கக் கூடாது’ன்னு ஒரு தினுசா கத்தி இவரை வெளில விரட்டிருக்காரு.

இவர் வெளில வந்து, என்னான்னு புரியாம வேறொரு மத்தியஸ்தர் மூலமா அந்த அதிகாரிகிட்ட பேச, தன்னோட நண்பர் ஒருத்தரை அனுப்பி, பணத்தை வாங்கிகிட்டு வேலையை முடிச்சுக் குடுத்துட்டாரு.

இது நடந்து ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு ஏன் அப்படி நடந்துகிட்டீங்கன்னு நண்பர் கேட்க, அவர் சொன்னது சுவாரஸ்யமான விஷயம்:

அவரோட நோக்கியா ஃபோன்ல எனக்கு அவர் ஸ்பெஷலா ஒரு ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்காரு. Chat Alert ங்கற அந்த டோன் ஒரு மாதிரி விட்டு விட்டு அடிக்கும். அன்னைக்கு நான் கூப்டப்ப, அடிச்ச ரிங் சத்தத்தைக் கேட்டு அந்த அதிகாரி, ஏதோ ரெகார்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருக்காரு. அதான் விஷயம்!

‘நல்ல நேரத்துல கூப்டீங்க பாஸூ’ம்பாரு இப்பவும் என்னைப் பார்த்தா!

** ** ** ** ** ** ** ** ** **

டிஸ்கி: மொத ரெண்டு மேட்டருமே இனவாதம்ங்கறதப் பேசுது. அது ரெண்டுக்கும் மூணாவதுக்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரி உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கற ஏதோ மூணு விஷயங்களை குறிச்சு வெச்சு, அப்பப்ப எழுதிட்டிருந்தேன். அது திடீர்னு நின்னுபோச்சு. (நீ எழுதறதே நின்னுபோச்சே.. இது மட்டுமான்னு கேட்கறீங்கதானே?) ஒன் டூ த்ரீன்னு தலைப்பு வெச்சுத் தொலைச்சாச்சு. அதுனால இந்த மூணாவது மேட்டர். அதுமில்லாம இந்த மூணாவது விஷயம் ரொம்ம்ம்ம்........ப நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நெனைச்சுட்டே இருந்தது. அப்பாடான்னு இருக்கு இப்பத்தான்!



.

Friday, November 21, 2008

லஞ்சப்பேய்!

“நீயெல்லாம் நல்லாயிருப்பியா? வெளங்குவியா? இந்தப் பச்சப் புள்ளைக்கு குடுத்ததையெல்லாம் தூக்கீட்டுப் போறீயே நீ பொம்பளையே இல்ல.. பேயி!” – பிள்ளை பெற்ற பச்சை உடம்புக்காரியின் கூக்குரலை “போம்மா.. இவ பெரிய சாமி.. சாபம் கொடுக்கறாளாம்..” என்று அலட்சியப்படுத்தி அவளுக்கருகில் வைக்கப்பட்டிருக்கும் ஹார்லிக்ஸ், ப்ரெட் பாக்கெட்களை கையில் எடுத்தபடி நகர்கிறாள் மருத்துவமனை ஊழியரான அந்த பெண்.

இடம்: கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை.

“இங்கெ இப்படித்தானுங்க. ஏதோ ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரின்னா செலவில்லைன்னுதானுங்க வர்றோம். ஆனா இங்கேயும் பொம்பளைப்புள்ள பொறந்தா 300, பையன்னா 500ன்னு குடுத்தே ஆகணும். குடுக்கறவரைக்கும் நல்லா இருந்தாலும் வீட்டுக்குப் போக விடமாட்டாங்க. குடுக்க முடியாதவங்ககிட்ட இதோ, இந்த மாதிரி அவங்களை பாக்க வர்றவங்க குழந்தைக்கு கொடுக்கற பழங்கள், ரொட்டீ-ன்னு எது இருந்தாலும் தூக்கீட்டுப் போவாங்க” என்கிறார்கள்.

மருத்துவர்களும் அதே வகைதான் என்கிறார்கள். ஏதாவது ஆபரேஷன் என்றால் ‘அந்த வசதி இல்லை. என் க்ளினிக்குக்கு வா. பதினைந்து, இருபது ஆயிரங்களில் முடிக்க வேண்டியதை ஐந்தாயிரத்தில் முடித்துத் தருகிறேன்’ என்று மார்க்கெட்டிங் பண்ணும் டாக்டர்களும் இருக்கிறார்கள்.

பிரசவ வார்டின் செவிலி முதல் சுடுகாட்டு வெட்டியான் வரை வகைதொகையில்லாமல் எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது இந்த லஞ்சப் பேய்.




இதை ஒழிக்கவே முடியாதா?

“கண்டிப்பா முடியாதுங்க. வேணும்னா கம்மி பண்ணலாம். அது உங்க பேச்சுத்திறமையும், பழக்கவழக்கத்தையும் பொறுத்தது. எங்க ஆஃபீஸீக்காக நான் பல அரசு நிறுவனங்களுக்கும் போறேன். மத்தவங்களை விட கம்மியா லஞ்சம் கொடுக்கறேன். அதுக்கு நான் கொடுக்கற விலை என்னோட தன்மானம். என் வயசு, அனுபவம் எல்லாத்தையும் விட்டுட்டு கண்டவன் முன்னாடி கைகட்டி, அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டீட்டு வர்றேன். அங்கெல்லாம் என்னோட மானம், மரியாதையை லஞ்சமா கொடுக்கற மாதிரிதான். கஷ்டமா இருந்தாலும் வேற வழியில்லை. அதிகமா குடுக்கற சந்தர்ப்பம் வந்தா நான் வேலை செய்யற நிறுவனம் எனக்கே அதுல பங்கு இருக்கோ’ன்னு சந்தேகப்படும்” என்கிறார் கார்த்திகேயன். ஒரு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி.

மேலும் இவர் சொல்லும் இன்னொரு காரணம் யோசிக்க வைக்கிறது.

“தன்னோட பெற்றோரை வெச்சு காப்பாத்தணும்கற எண்ணம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை. ரிட்டயர்டானப்பறமோ அல்லது தன்னால வேலைக்கு போக முடியாம வீட்ல இருக்கற வயசு வந்தாலோ தன்னை, தன் மனைவியை தானேதான் பார்த்துக்கணும். அப்போ குறைஞ்சது 75 வயசு வரைக்கும் இருப்போம்னு ஒவ்வொருத்தனும் கணக்குப் போட்டு, வேலைக்குப் போக முடியாத கடைசி கால 20 வருஷத்துக்கும் சேர்த்து வேலைக்குப் போகும்போதே சமாதிக்கணும்ன்னா லஞ்சம் வாங்கறதைத் தவிர வேற வழியே இல்லை. அதுவும் இப்போதைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்குப் போட்டு, 20 வருஷத்துக்கப்பறம் என்னமாதிரி இருக்கும்-ங்கற பயத்துல கன்னாபின்னான்னு லஞ்சம் வாங்கி சேர்த்து வெச்சுக்கறாங்க” என்கிறார்.

இந்தியனில் சுஜாதா எழுதியிருப்பாரே... ‘மத்த பக்கமெல்லாம் செய்யற வேலையை மீறறதுக்குத்தான் லஞ்சம். இங்கே வேலை செய்யறதுக்கே லஞ்சம்’. அது உண்மைதான்.

நேற்று கோவை நீதிமன்றத்தில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. ஒருவருக்கு ரூ.20000 அபராதமும், நான்காண்டு சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

நண்பர் கருணாகரனிடம் (கும்க்கி) பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “மத்த கேஸ்லயெல்லாம் வழக்கு பதிவானப்பறம் அதை நிரூபிக்கணும், ஆதாரம் வேணும் இப்படிப் பல சிக்கல் இருக்கு. ஆனா லஞ்சம் வாங்கின வழக்கு, சம்பவம் ஆதாரபூர்வமா நிரூபிக்கப்பட்ட பின்னாலதான் பதிவே ஆகுது. அதுல ஒருத்தன் மாட்டினான்னா அவ்ளோதான்”

இவ்வளவு வீரியமான விஷயமாக இருந்தும், லஞ்சம் வாங்குவதிலோ, கொடுப்பதிலோ சளைக்காமல் இருக்கும் அதிகாரிகளும், மக்களும் மாற வழியே இல்லை.

இல்லை. பேசாமல் அதையும் சட்டமாக்கிவிட்டுப் போங்கள் என்று சொல்வோர் சட்டமாக்கினாலும், ‘சட்டப்படி இந்த வேலைக்கு 500 ரூவா ஆகும், நீங்க பார்த்து செய்ங்க’ என்று கேட்கத் தொடங்குவார்கள்.

திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த மாதிரி லஞ்ச அத்துமீறல்களை எதிர்த்து தனி மனிதனாகப் போராடி வருகிறார். ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கியவரிலிருந்து, ஐம்பதாயிரம், லட்சம் என்று கேட்பவர்கள் வரை எந்தத் துறையாய் இருந்தாலும் இவரிடம் சொன்னால் மறைவாக வீடியோ எடுத்து அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து சந்தி சிரிக்க வைத்துவிடுகிறார்.

திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கருகே இருக்கும் கோயிலில் வைத்து ஒரு பெண் போலீஸ் லஞ்சம் வாங்குவதை இவர் வீடியோ எடுத்துவிட்டு, அந்த பெண்போலீஸ் அருகே போய் ‘நாளைக்கு கோர்ட்ல பார்க்கலாம்’ என்று சொல்ல அவர் முகம் வெளிறி அந்தக் காசை தூக்கிப் போட்டு கர்ப்பகிரகத்துக்குள் சென்று ஒளிந்துகொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.

அதே போல வேறு சில போலீஸ் அதிகாரிகள் ‘இதெல்லாம் எதுக்கு? நாம சமாதானமாகலாம்’ என்று இவர் வீட்டுக்கு வந்து சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்து சமாதானம் பேச, பேசி முடிந்த பிறகு ‘எல்லாம் சரியா பதிவாகிருக்கா பார்த்துக்கோங்க’ என்று அவர்களுக்கு டி.வி-யில் போட்டுக் காட்டி ஓட வைத்திருக்கிறார். (இவரைச் சந்தித்து பேச ஆவலாயிருக்கிறேன். விரைவில் பேசி எழுதுகிறேன்)

குழந்தையிலிருந்தே இது ஆரம்பமாகிவிடுகிறது என்கிறார்கள் இதை உளவியல் ரீதியாகப் பார்ப்பவர்கள். விழுந்த இடத்தை அடித்து, குழந்தை அழுகையை நிறுத்தி அதற்குப் பழி வாங்கும் எண்ணத்தை விதைக்கும் பெற்றோர்கள், ஒண்ணைக் குடுத்து ஒண்ணை வாங்கிக்கோ’ என்ற ரீதியாக லஞ்சத்தையும் பழக்கி விடுகிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.

எது எப்படியோ, என்ன விலை கொடுத்தாவது இதை ஒழிக்க முடிந்தால் அதைக் கொடுக்க நாமெல்லாம் தயாராக இருக்கிறோம் என்பதே உண்மை!




பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்குறிப்பு:-

தமிழ்மண மகுடத்துக்கு ஓட்டுப் போடச் சொன்னேன். எப்படின்னு சொல்லாம விட்டுட்டேன். எல்லாரும் போட்டு கவுத்துட்டாங்க. சொல்லாமலே இருந்திருக்கலாம்ன்னு நெனைக்கறேன்.. :-)

பதிவோட தலைப்புல ‘க்ளிக்'கினா தம்ப்ஸ் அப்' சிம்பல் வரும்ல அதுல க்ளிக்குங்க. அதை விட்டுட்டு தம்ஸ் டவுன்ல க்ளிக்கிடாதீங்க.

ஓக்கே? ஸ்டார்ட் மீஜிக்....