Friday, September 18, 2009

அனுபவம்: சிறுகதைப் பட்டறை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிங்க்ளேர் லூயியை ஒரு கல்லூரியில் மாணவர் மன்றத்தில் பேச அழைத்திருந்தார்கள். கதை எழுதுவது எப்படி என்பது பற்றிப் பேச வேண்டும்.

மேடையில் எழுந்து நின்ற லூயி, “உங்களில் யார் யார் எழுத்தாளராக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும் கையைத் தூக்கினார்கள்.

“பின்னே வீட்டுக்குப் போய் எழுதுங்களேன்.. இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன பண்ணுகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாராம் லூயி!


******************************

ரையாடல் அமைப்பில் சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ளும் வரை என்னைப்போலவே பலரும் இப்படி எண்ணியிருக்கக் கூடும். சொல்லப்போனால் நான் அந்தப் பட்டறை முடியும் வரை ‘இது போன்ற பட்டறைகளினால் ஒருவன் சிறுகதை எழுத்தாளனாகிவிட முடியுமா’ என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்தக் கேள்வியை தன் அனுபவத்தால் அறைந்தெறிந்தார் பா.ராகவன்!

பாஸ்கர் சக்தி பேசி முடித்ததும் வந்த யுவன் சந்திரசேகர் பேச்சின் வீச்சை கார்க்கியின் எழுத்தில் வந்த மாற்றத்திலேயே நீங்கள் கண்டிருக்கலாம். தன் கருத்தை மிக இயல்பான-திர்க்கமான பேச்சால் சிரிக்கச் சிரிக்கச் சொன்ன யுவனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

மதிய உணவுக்குப் பிறகு பேசிய, தேவதாஸுக்குப் பின் வந்தார் பா.ராகவன்.

இதற்காகவே பவர் பாய்ண்ட் ப்ரசண்டேஷன் ஒன்றைத் தயார் செய்து எடுத்து வந்திருந்தார். இறுதிப் போட்டியில் விளாசிய சச்சினின் பேட்டிங்கிற்கு ஒத்திருந்தது அவர் பேச்சு. ஆரம்பம் முதலே அதிரடி.

எதிரில் உட்கார்ந்திருக்கும் வலைப்பதிவாளர்களை ஒருபடி மேலேற்றிக் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு வந்திருந்தார் அவர். வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிப் பிரபலமாக ஆசையிருக்கும் எவரும், இவர் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் ஜெயிக்கலாம்.

* எந்தக் கதையையும் படிக்காமல் யாருமே நிராகரிப்பதில்லை. முதல் பத்தியை வெகு நிச்சயமாகப் படிப்பார்கள். எனவே, சிறுகதையின் முதல் பத்தி மிக மிக முக்கியம். எந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியரையும் முதல் பத்தியில் கட்டிப் போட முடிந்தால் உங்கள் கதை முழுதும் படிக்க வாய்ப்பிருக்கிறது.


* கதாபாத்திரங்கள் அதிகம் வேண்டாம். ரமேஷ், சௌமியாவைப் பார்த்து ‘எனக்கு பத்து ரூபா வேணும்னு சுரேஷைக் கேட்டால் உன்னைக் கேட்கச் சொன்னான்’ என்று சொல்வதை கணேஷ் கேட்டுக் கொண்டிருந்தான் என்று எழுதினீர்களானால் படிக்கும் உதவி ஆசிரியர் வைத்துவிட்டு டீ குடிக்கப் போய்விடுவார்.

* சுருக்கிச் சுருக்கி எழுத வேண்டாம் தெளிவாக - போதிய இடைவெளியுடன் எழுத வேண்டியது அவசியம்.

* எழுத்துப் பிழைகளைத் தவிருங்கள். எந்த உதவி ஆசிரியரும் தமிழைப் போற்றுபவராய்த்தான் இருப்பார். அவரை எரிச்சலூட்டாதீர்கள்.


* கால நேரங்களை கவனமாக கையாளுங்கள். திடீரென்று மூன்று வருடத்துக்கு முன் என்று எழுதிவிட்டு, இதைச் சொல்லும் இந்த வேளையில் என்று நிகழ்காலத்துக்கு தவ்வி, மீண்டும் மூன்று வருடம் முன் என்றெழுதி வாசகனை அலைபாய விடாதீர்கள்.

இதுபோன்று இன்னபிற யோசனைகளையும் விரிவான விளக்கங்களோடு அளித்தார் பா.ரா. அதுவும் முதல் பத்தி எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணங்களோடு அவர் விளக்கிய விதம் அருமை.

பா.ராவிடம் என்னைக் கவர்ந்த மற்றுமோர் விஷயம் முகஸ்துதி இல்லாதது. வலைப்பதிவாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர் ஆதங்கப்பட்டபோது அதில் உள்ள உண்மை செவிட்டில் அறைந்தது.

“உங்கள்ல பலபேருக்கு உங்க பலமே தெரியலைங்கறதுதான் மிகப் பெரிய கொடுமை. என்ன எழுதினாலும் கமெண்டை எதிர்பார்த்து எழுதறீங்க. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்கன்னா நீங்க நிக்கற இடம் உங்களுக்குத் தெரியும். ஏதாவதொரு வகைல முன்னேற்றம் இருக்கணும். உங்களை மாதிரி இளைஞர்கள் பலபேருக்கு - கிழக்கு உட்பட - பல இடங்கள்ல வாய்ப்பு மிகப் பிரகாசமா இருக்குங்கறத நீங்க மறந்துடக் கூடாது” என்று துவங்கி கார் ஏறும் வரை அவர் எங்களோடு உரையாடியது பலபேருக்கு கீதை கேட்ட அனுபவம்.

‘எழுத்து மேம்பட எழுதிக் கொண்டேயிருப்பதே வழி’யென்கிறார் பா.ரா. ‘தினமும் ஏதாவது எழுதிக் கொண்டே இருங்கள். பதிவிட வேண்டியதெல்லாம் இல்லை. ஆனால் எழுதுவதை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். அதேபோல ஒரு நல்ல சிறுகதை எழுதுவதற்கு முன் குறைந்தது ஐம்பது சிறுகதைகளை நீங்கள் படித்தால் நலம்’ என்கிறார் அவர்.

அவருக்கு எல்லார் சார்பிலும் நன்றி.

*****************

இனி இந்தப் பட்டறை யோசனையை முன்னெடுத்து நடத்திய சிவராமன் அண்ணாவுக்கும், குருஜி ஜ்யோவ்ராம் சுந்தருக்கும்...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் முதல் பத்தியில் மேற்கோள் காட்டியிருப்பது நீங்கள் எங்களுக்கு அளித்த ரா.கி.ராவின் ‘எப்படி கதை எழுதுவது’ என்ற புத்தகத்தில் இருந்து எடுத்ததுதான். இந்தப் புத்தகத்தை சில வருடங்களுக்கு முன் நான் தேடாத இடமில்லை. ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு இந்தப் புத்தகம் மிக அவசியமான ஒன்று!

கோ. கேசவன் எழுதிய 'தமிழ் சிறுகதைகளின் உருவங்கள்',

ஜெயமோகன் எழுதிய 'நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்'

கதைகதையாம் காரணமாம் (சந்தியா பதிப்பக வெளியீடு) 19 கதாசிரியர்கள் தங்கள் கதைகளைக் குறித்து உரையாடியதன் தொகுப்பு.

இந்த நான்கு புத்தகங்களையும் ஒருவித குற்றவுணர்ச்சியோடேதான் வாங்கினேன். காரணம் இடைவேளையின்போதே எனக்குத் தெரிந்தது இந்நிகழ்வின் செலவு உங்கள் கைமீறி நடந்துகொண்டிருக்கிறதென்பது. இந்நிலையில் நான்கு புத்தகங்களின் செலவே நாங்கள் கொடுத்த நானூறைத் தொட்டிருக்குமே என்ற கவலை எனக்கும் சில நண்பர்களுக்குமிருந்தது.

அதுவும் அவற்றில் மூன்று நேர்த்தியாக பிரதி செய்யப்பட்டு, பைண்ட் செய்து.... எத்தனை நேரம், செலவு - அதன் பின்னணியில்?

இதையெல்லாம் சொல்லக் காரணம்... பொருளாதாரத்தின் காரணமாக உங்களின் செயல்பாடுகளின் தீவிரம் குறைந்துவிடக் கூடாதென்ற கவலைதான்.

இந்நிகழ்வின் மூலம் அடுத்ததாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதை இதைவிடச் சிறப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் பரிபூரணமாக உள்ளது!


மிக நீண்டு ஒருவித சீரியஸ் தொனியில் போகும் இந்தப் பதிவை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். பட்டறைக்கு முன்னும், பின்னும், இடையிலும் நடந்த வேறு சில சுவாரஸ்யத் தகவல்களை திங்களன்று பகிர்ந்து கொள்கிறேன்.



.

20 comments:

தமிழ் நாடன் said...

அடடா எங்களுக்கெல்லாம் கலந்துக்குற வாய்ப்பு இல்லாம போயிடுச்சே!

ஏற்பாட்டாளருக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

அடுத்தமுறை கோவை வரும்போது நீங்கள் ஒரு பட்டறை நடத்துங்கள் பரிசல். நானும் உங்ககிட்ட இருந்து எப்படி சுவாரசியமாக எழுதுவதுன்னு தெரிஞ்சுக்கறேன்.

கார்க்கிபவா said...

:)))

திங்கிள்கிழமைக்கு காத்திருக்கிறோம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி

மங்களூர் சிவா said...

அடடா எங்களுக்கெல்லாம் கலந்துக்குற வாய்ப்பு இல்லாம போயிடுச்சே!

ஏற்பாட்டாளருக்கு வாழ்த்துக்கள்!

பகிர்வுக்கு நன்றி

தராசு said...

எனக்கு குடுத்து வைக்கல தல,

பொறாமை, ஏமாற்றம், வயித்தெரிச்சலா இருக்கு.

ஸ்வாமி ஓம்கார் said...

ஒருத்தன் ஏற்கனவே நல்லா சொறிவானாம் , அவன் கையில் அரிப்பு செடி வேற பட்டுச்சாம்...

இது இந்த பதிவை பார்த்ததும் நம்ம ஊரு கிராமத்துக்காரர் சொன்னது :)

butterfly Surya said...

அருமையான தொகுப்பு.

வாழ்த்துகள்.

JACK and JILLU said...

நான் கூட அவினாசிலதான் "LAW AND ORDER" MAINTAIN பண்ணிட்டு இருக்கேன்!!! நெக்ஸ்ட் டைம் நம்மளையும் கூப்பிடுங்க தலைவா.., அன்புடன் ஜாக்!

"உழவன்" "Uzhavan" said...

உரையாடல் அமைப்பினரின் புண்ணியத்தால் இப்போதுதான் ராகிரா வின் எகஎ படித்துக்கொண்டிருக்கிறேன்.
அடுத்த இடுகைக்குக்கான எதிர்பார்ப்பில்..
உழவன்

நாஞ்சில் நாதம் said...

///ஒருத்தன் ஏற்கனவே நல்லா சொறிவானாம் , அவன் கையில் அரிப்பு செடி வேற பட்டுச்சாம்...///

ஹா ஹா ஹா ஹா

Kumky said...

கார்க்கி said...

:)))

திங்கிள்கிழமைக்கு காத்திருக்கிறோம்..

நானும்தான்....

Kumky said...

சூட்டோட சூடா புத்தகம் படிக்க ஆரம்பித்தமைக்கு ஆச்சரியங்கள் கே.கே.(எத்தனை பேர் படிப்பாங்களோ எனற சந்தேகமும் ஒரு காரணம்)

கதைகதையாம் காரணமாம்....
ஒரு அருமையான தொகுப்பு..படித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லொருமே இனைய வசிப்பான்கள்தானே...பிடிஎப் பைலாக தேடி அதை பார்வேர்ட் செய்திருந்தால் செலவு குறைந்திருக்குமேயென ஜ்யோவ்ஜி கிட்ட கடைசில நமநமத்துக்கொண்டிருந்தேன்...

காரியம் ஆன பொறவு வண்டி வண்டியா ஆலோசனை சொல்றதுதானே நம்ம பரம்பரை பழக்கம்.

Radhakrishnan said...

நல்லதொரு அனுபவம். மிக்க நன்றி.

அன்பேசிவம் said...

லேட்டா வந்தாலும் எழுதிய பலராலும் விடுபட்ட பல விசயங்களை, நியாபகம் வைத்துஎழுதியிருக்கிறீர்கள். நன்றி. என்போன்ற கஜினிகளுக்கு பயனுள்ள பதிவு.:-)

selventhiran said...

குட்!

Thamira said...

சின்ன அம்மிணி said...
அடுத்தமுறை கோவை வரும்போது நீங்கள் ஒரு பட்டறை நடத்துங்கள் பரிசல். நானும் உங்ககிட்ட இருந்து எப்படி சுவாரசியமாக எழுதுவதுன்னு தெரிஞ்சுக்கறேன்.
//

என்னையும் அவசியம் கூப்பிடவும். பட்டறைக்குப் போய் வந்ததில் இருந்து ஒரு கதையும் தோணமாட்டேங்குது.. ஹிஹி.!

பிச்சைப்பாத்திரம் said...

//“பின்னே வீட்டுக்குப் போய் எழுதுங்களேன்.. இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன பண்ணுகிறீர்கள்?” //


இதையே கலந்து கொண்ட எழுத்தாளர்களும் சொல்லியிருந்தால் - அதுவும் மதிய உணவுக்கு முன்னால் - பெரிய கலவரமே ஏற்பட்டிருக்கும். :-)

விக்னேஷ்வரி said...

I missed it. :(

வேதாளம் said...

இந்த தலைமுறைக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு கிட்டாதா?