
நான் மிக கடுமையான பணிநெருக்கடியில் இருக்கிறேன். சூழல் காரணமாக அலுவலகத்தில் வேறு சில பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டிருப்பதால் அழைக்கும் நண்பர்களிடத்தில் முன்பு போல கதைக்க முடிவதில்லை. சில சமயம் பேசிக் கொண்டிருக்கும்போதே, வேறு வேலைகளையும் செய்வதால் அவர்களை உதாசீனப்படுத்துவதாய் அழைக்கும் நண்பர்கள் எண்ணும் நிலையை நானே உருவாக்கிக் கொள்கிறேன்.
சில நண்பர்கள் ஒரு சில பிரச்சினைகளின் ஆலோசனைக்காக (நம்புங்கப்பா) அழைக்கையில் மட்டும் சில நிமிடங்கள் பேச முடிகிறது. மற்றபடி வழக்கமான குசல விசாரிப்புகள், ஹாய் ஹலோக்களுக்கு நேரமின்றிப் போகிறது.
வேலைப்பளுவின் காரணமாக மனது எழுத எண்ணுவதை எழுத்தில் கொண்டு வருவதில் தடங்கல் ஏற்படுகிறது. அதனால் ‘ஏண்டா இப்படி எழுதிருக்க' என்று என்னை நானும், என்னை மற்றவர்களும் கேட்கும் நிலை வ்ருகிறது. அதன் காரணமாக ஏதாவது எழுதத் தோன்றினால் தோன்றுவதை எழுதிமட்டும் வைத்துக் கொண்டு, எப்போதாவது முயலும்போது திருத்தி வெளியிடுவதற்காக கிடப்பில் வைத்திருக்கிறேன். இருந்தாலும் இருப்பைக் காட்டிக் கொள்ள எப்போதாவது எதையாவது எப்படியிருந்தாலும் சரி என்று பதிவிடவும் செய்கிறேன்.
ஒரு காலத்தில் ‘எப்பப் பார்த்தாலும் செல்ஃபோன்ல நண்பர்களோடு பேச்சா... குறைச்சுக்க' என்று சொல்லப்பட்ட நான், ஏன் கூப்பிடறதே இல்ல என்று கேள்விக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கிடையில் அழைக்காத நண்பர்களும், என்னால் அழைக்கப் படாத நண்பர்களுக்கும் இடையில் ஒரு வசந்தி... ச்சே.. வதந்தி உலவுவதாய் உறுதிப் படுத்தப் படாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. அதாவது அவர்களைப் பற்றி தவறானதாக என்னிடம் யாரோ எதுவோ சொல்லிவிட்டதாலும், அதை நான் நம்பிவிட்டதாலும் அவர்கள் மீது கோவமும், வருத்தமும் இருப்பதால்தான் நான் அழைப்பதில்லை என்ற வதந்திதான் அது.
அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்...
அப்படியெதுவுமே இல்லை. யாரும் யாரைப்பற்றியும் எதுவும் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதை நம்பிவிடவும் நான் தயாரில்லை. எதுவானாலும் அழைத்துப் பேசி சரி செய்து கொள்வேன். அன்பும், நட்பையும்தவிர வேறெதுமில்லாத உலகில் அவையிரண்டையும் எதன் காரணமாகவும் இழக்க நான் தயாரில்லை.
இப்போதைக்கு இவ்வளவுதான்!
பி.கு. 1: ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் சொல்ல நினைத்தது.. அவரிடம் இருந்த கேள்வி, பிறரிடமுமிருக்குமென்பதால் விளக்கத்தை பொதுவில் வைக்க வேண்டியதாயிற்று.
பி.கு. 2: சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் புரிந்து கொண்டு ‘போடா மச்சான்.. விடு..' என்றுவிட்டுப் போகவும். மற்றவர்கள் புன்னகையோடு கடந்துவிடலாம்!
.