Tuesday, November 16, 2010

சவால் போட்டியின் பின்னிருந்த சவால்

சவால் சிறுகதைப் போட்டிகளின் ஒரு சில கதைகளுக்கான விமர்சனங்கள் - நேற்றைய என் இந்தப் பதிவில் காணலாம்.

மேலும் சில கதைகளுக்கான விமர்சனங்களை ஆதிமூலகிருஷ்ணனின் இன்றைய பதிவில் - இங்கே காணலாம்.


**** ***** **** **** ****

சவால் சிறுகதைப் போட்டி குறித்து ஆதி எனக்கெழுதிய அனுப்பிய பதிவு இன்றைக்கு இங்கே...

--------------------------- --------------------------------

டந்த ஆகஸ்டில் 'என்ன செய்யப்போகிறாய் மினி?' என்றதொரு மினி கிரைம் தொடரை எனது வலைப்பூவில் எழுதினேன். தொடர்ந்தது நண்பர் பரிசல்காரனின் 'மிஸ்.யாமினி' என்ற மினி கிரைம் தொடர் அவரது வலைப்பூவில். இரண்டுக்கும் நீங்கள் தந்த 'பரபர' ஆதரவைத் தொடர்ந்து ஒரு நாள் நானும், பரிசலும் கதையெழுதிய அழகினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நண்பருக்குத் தோன்றிய ஆசையே இப்படியான குறிப்புகளைத் தந்து கதைப்போட்டி அறிவிக்கும் யோசனை. 'காமினி' உருவானாள். என்னென்ன மாதிரியான எதிர்வினைகளெல்லாம் வரும் என்று நான் கருத்துச்சொன்னபோது, 'அப்படியெல்லாம் பார்த்தால் நீங்களெல்லாம்தான் இதற்குள் எழுதுவதை மூட்டைகட்டியிருக்க வேண்டும்..' என்று வாயை அடைத்தார். இருவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு போட்டியை அறிவித்தோம். வாசகங்கள் கொஞ்சம் கடுமையாகவே இருந்ததாகத் எனக்குத் தோன்றியது. ஹிஹி.. அவை பரிசல்காரனுடையவை.

'சவால் சிறுகதைப்போட்டி' என்று தலைப்பிட்டு அறிவித்துவிட்டோமே தவிர அதற்குப்பின்னால் எங்களுக்காகக் காத்திருந்த பெரிய சவால் அப்போது தெரியவில்லை. அழுத்தமான பணிச்சூழல், இருவருக்குமே இருக்கும் (தங்க)மணிச்சூழல் (இருவரும் அவ்வப்போது 'Same same.. puppy same' என்று தொலைபேசியில் பாடிக்கொள்வதுண்டு) தெரிந்தும் நாங்கள் இதில் இறங்கியிருக்கக்கூடாதோ என்று ஒரு கட்டத்தில் மலைப்பாகிவிட்டது. ஏனெனில் எனது கணிப்பாக 25 கதைகள், அதிகபட்சமாக கடைசி நேர விறுவிறுப்பில் 35 கதைகள் வரலாம் என எதிர்பார்த்தேன். நண்பரின் கணிப்பும் ஓரளவு அவ்வாறே இருந்தது. ஆனால் எங்கள் கணிப்பு தகர்ந்தது. சில விளையாட்டுகளையும் சேர்த்து 83 கதைகள் போட்டிக்கு வரும் என்று நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வந்துகொண்டிருக்கும் கதைகளைப் படிப்பது, ஒரே கோப்பாக தகுந்த எண்களிட்டுக் கோர்த்துவைப்பது, நடுவர்களுக்கு மின்னஞ்சல், மற்றும் பிரிண்ட் அவுட்களை அனுப்பி வைப்பது என்பதே மிகுந்த நேரம் எடுக்கும் செயலானது. நண்பர்களின் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதே ஒரு தனி வேலையாக இருந்தது.

இவற்றிற்கெல்லாம் முதலாக நடுவர் தேர்வு ஒரு சிக்கலான தலையாய விஷயமாக இருந்தது எங்களுக்கு. நிச்சயமாகக் கொஞ்சமேனும் பிரபலமாகியிருக்கும் எழுத்தாள நண்பர்களை அணுகியிருக்க முடியும். எங்களுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நண்பர்களாக சிலர் இருப்பது வசதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்த 'ஸ்டார் வேல்யூ' வழியை மறுத்து 'பதிவர்களுக்குப் பதிவர்களால்..' கொள்கைப் படி பதிவர்களையே நடுவர்களாக்க முடிவுசெய்து சில பிரபல பதிவர்களை அணுகினோம். நாங்கள் தேர்வு செய்தவர்கள் ஸ்டார் வேல்யூ இருப்பவர்கள் என்பதைவிட நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்ற எங்கள் எண்ணப்படி இருந்தார்கள். அவர்களில் கணிசமான நேரம் செலவிடத் தயாராக இருந்த மூவர் குழு போட்டியின் நடுவர்களாக இருக்கச் சம்மதம் சொன்னார்கள்.

முதலாமவர் வெண்பூ.

வெண்பூ அவரது வீட்டுச்சூழல், அலுவலகச் சூழலால் தொடர்ந்து பதிவெழுதுபவராய் இல்லாவிடினும் பதிவுலகை தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வருபவராய் உள்ளார். மேலும் எழுதுவதைவிடவும் தற்போது வாசிப்பதிலேயே மிகவும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். நாளடைவில் நிறைய எழுதுவார் என நம்பலாம். சிறுகதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். துவக்கத்தில் நிறைய கதைகள் எழுதியவர். விகடனில் இவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டாமவர் எம்.எம்.அப்துல்லா.

பதிவுலகில் துவக்ககாலத்திலிருந்தே எங்கள் நண்பர். மேற்சொன்னவை அப்படியே இவருக்கும் பொருந்தும். நண்பர்களில் நிச்சயம் அதிகம் பிஸியாக இருக்கும் நபர் என இவரைச்சொல்லலாம், ஏனெனில் பணி அப்படி. ஆயினும் மிக விருப்பத்தோடு இதில் கலந்துகொண்டார். எனக்குத் தெரிந்து பதிவுலகில் இவரது படுக்கையறையில்தான் அதிகபட்ச புத்தகங்களைக் கண்டிருக்கிறேன்.

மூன்றாமவர் ஜீவ்ஸ்.

இப்போதும் நான் ஏதும் கதைகள் என்ற பெயரில் எழுதினால் அதைப்பற்றி மெனக்கெட்டு போன் செய்து அபிப்பிராயம் கேட்கும் முதல் நபராக இருப்பவர் நண்பர் ஜீவ்ஸ். மிகச்சிறந்த ஒரு புகைப்படக்காரராக இருக்கும் அதே நேரம் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாதாமாதம் புகைப்படப் போட்டிகளை நடத்தும் 'பிட்' குழுவிலிருக்கும் அனுபவம் வாய்ந்தவர்.

ஏற்கனவே இருந்த எங்களின் எதிர்பார்ப்புகளோடு இன்னும் இறுக்கமாக, நேர்மையாக விதிகளைப் புனைந்துகொண்டனர் நம் நடுவர்கள். நாங்கள் இருவர் உட்பட யாரும் பெரும்பாலும் கதைகள் எழுதியவர்களின் வலைப்பூக்களில் சென்று பின்னூட்டமிடவில்லை. கதைகளுக்கு எண்கள் தரப்பட்டன. எழுதியவர் யாரென்ற தகவல் நடுவர்களுக்குத் தரப்படாமல் அந்த எண்கள் தரப்பட்டன. கதைகளை நிதானமாகப் படித்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மூவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆகவே எனது தேர்வான 'முடிவுகள் தேதி : நவம்பர் 1' என்பதை முதலிலேயே அனைவரும் நிராகரித்துவிட்டனர். கணினியில் வாசிப்பதை விட ஃபீல் கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் கதைகளைப் பிரிண்ட்அவுட் எடுத்தே வாசித்தார்கள். அதுவும் சென்னையிருக்கும் அப்துல்லாவுக்காக பிரிண்ட்அவுட்டுகளை எடுத்துக்கொண்டு மெனக்கெட்டு தாம்பரத்திலிருந்து சிட்டிக்குள் போன கதையெல்லாம் வேறு நடந்தது. அந்தக் கதையை தனிப் பதிவாகவே எழுதலாம். பதிவுலகுக்காக செலவு செய்யும் சில மணி நேரங்களையும் பல நாட்கள் இந்தப் பணிக்காகவே நாங்களும், நடுவர்களும் செலவு செய்ய நேர்ந்தது எனில் அது மிகையாகாது. தகுந்த இணைப்புகளுடன் கதைகளின் விமர்சனங்களைக் கோர்த்தது பரிசலின் சாதனை என்று கூட சொல்லலாம், ஏனெனில் அவரது வீட்டு இணைய இணைப்பின் வேகம் அத்தகையது. கடந்த நாட்களில் அவர் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையும், பிறர் பதிவுகளில் அவர் நடமாட்டமும் இதன் சாட்சி.

அதுவும் நடுவர்கள் ஒரு நாளில் சுமார் 5 கதைகளை மட்டுமே வாசித்துக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இதனால் தொடர்ந்து வாசிப்பதால் ஏற்படும் சோர்வைப் போக்கவும், ஆர்வத்தைத் தக்கவைத்து முழு ஈடுபாட்டுடன் பணியை மேற்கொள்ளவும் ஏதுவாயிற்று. மேலும் முழுமையான, திருப்தியான முடிவையும், அத்தனைக் கதைகளின் சுருக்கமான விமர்சனங்களையும் அவர்களால் தரமுடிந்தது.

முதலாவது முக்கிய விதியாக கொடுக்கப்பட்ட விதிகளுக்குள் கதை அமைந்திருக்கிறதா எனப் பார்த்தார்கள். பின் கதைக்களம், நடை, சுவாரசியம் போன்ற அடிப்படையில் தனித்தனியாக மதிப்பெண்கள் தந்து முதலிடம் பெற்ற கதைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலிடம் பெற்ற பதினைந்து கதைகள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவற்றுள் பரிசுக்குரியவற்றை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை பங்குபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நடுவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோருக்கு எங்கள் அன்பு.

பதிவர்கள் என்றில்லாமல் பின்னூட்டம் போடும் வாசகர்களையும், வலைப்பூவே இல்லாதவர்களையும் எழுத வைத்ததுதான் இந்தப் போட்டியின் வெற்றி என்று எங்களிடம் தெரிவித்த - எங்களின் இந்த முயற்சிக்கு ஊக்குவிப்பை அளித்த - பிரபலங்கள் பலருக்கும் இந்த நேரத்தில் எங்கள் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள்தான். முதல் கதை முயற்சி என்று சொல்லி எழுதிய பலரும் மேலும் முயன்று, இன்னும் பல சிறப்பான படைப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி.

-ஆதிமூலகிருஷ்ணன்


.

20 comments:

'பரிவை' சே.குமார் said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

Mudivai ethirparkkirom.

a said...

சவால் போட்டியை போட்டியாளர்களுக்கு சமமாக சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுத்திய பொறுப்பாளர்கள் : பரிசல் , ஆதி.
நடுவர்குழு நண்பர்கள் : வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ்
பங்கு பெற்ற போட்டியாளர்கள்.
பரிசு பெறப்போகும் வெற்றியாளர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(விமர்சனங்கள் மீதான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து பதில் அளிக்கும் பரிசல் கிருஷ்ணாவிற்க்கு சிறப்பு பாராட்டுக்கள்... )

Unknown said...

இவ்ளோ நடந்ததா...உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள். முடிவு எப்போன்னு இன்னைக்குள்ள சொல்லிடுவீங்க இல்ல...

Unknown said...

//'ஸ்டார் வேல்யூ' வழியை மறுத்து 'பதிவர்களுக்குப் பதிவர்களால்..' கொள்கைப் படி பதிவர்களையே நடுவர்களாக்க முடிவுசெய்து சில பிரபல பதிவர்களை அணுகினோம்//
:-)

R. Gopi said...

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_15.html

சரவணகுமரன் said...

வாவ்!

வாழ்த்துக்கள்... :-)

pichaikaaran said...

நான் கதை அனுப்பியதும் உடனடியாக அக்னாலட்ஜ்மெண்ட் மெயில் அனுப்பினார் பரிசல் . வியந்து போனேன் .
கறாரான விமர்சன பதிவு அருமை . தவறு என்றால் வெளிப்படையாக சொல்லி இருப்பது பாராட்டதக்கது . மேம்போக்காக குறைகளை சொல்லி இருந்தாலோ , சொல்லாமல் விட்டிருந்தாலோ , உண்மையிலேயே நல்ல விஷயங்களை பாராட்டும்போது அதில் ஆழம் இருந்திருக்காது .

pichaikaaran said...

ஒரு வேண்டுகோள் . அடுத்த விமர்சன பதிவில் , குறை காணும் விஷயங்களை இன்னும் கறாராக ,விரிவாக சொன்னால் நல்லது. இது எங்களுக்கு பயன்படும் .

தராசு said...

எழுதிய அவர் பதிவிடாமல், நீங்கள் பதிவிட்டது ஏனோ???? (இதையே அங்கயும் கேக்கணும்னு தோணுது)

அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள் தல... (ரெண்டு பேருக்கும் தான்)

R. Gopi said...

\\ஏற்கனவே இருந்த எங்களின் எதிர்பார்ப்புகளோடு இன்னும் இறுக்கமாக, நேர்மையாக விதிகளைப் புனைந்துகொண்டனர் நம் நடுவர்கள்\\

இதை வெளிப்படையாக சரியான முறையில் நீங்கள் சொல்லவில்லை என்பது என் கருத்து. உதாரணம், சிங்கைப் பதிவர்கள் நடத்தும் போட்டி. அந்த அறிவிப்பிலேயே தெரிகிறது, தீவிரமான போட்டி என்று.

இரண்டாவது போட்டி முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற பதிவுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன. எனக்கு இந்த நேரத்தில் தேவை நதி மூலம் ரிஷி மூலம் இல்லை. போட்டியின் முடிவுகள்தான். கலந்து கொண்டவன் என்கிற உரிமையில் கேட்கிறேன்.

இந்த வாரத்துக்குள் வெளியாகும், இன்று மாலைக்குள் என்று முடிவு வெளியாகும் என்று அறிவிப்போம் என்று நீங்கள் அடுத்தடுத்து சொல்லிக் கொண்டே போவது எனக்குப் பிடிக்கவில்லை. போதும் இந்த பில்ட் அப். எரிச்சல் உண்டாகிறது.

Unknown said...

@gopi ராமமூர்த்தி அவர்களுக்கு.

உங்கள் லிங்கை படித்தேன்.

விமர்சனத்தை ஏற்க முடியாதவர்கள் பொதுவெளிக்கு வரவே கூடாது என்பது என் எண்ணம்.. ஒரு கதை என்றிருந்தால் அதை முதல் முறை எழுதியவரா? ரெண்டாவது முறை எழுதியவரா? என்று பார்ப்பது எப்படி நல்ல நடுவருக்கு பண்பாகும்? தீர்ப்பு கொடுப்பதற்கு நேரமாகிவிட்டது அதை பற்றி கேட்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் கதைகளை விமர்சிக்க நடுவர்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது. நீங்கள் இதை சாண்ட்விச் கதை என்று நினைத்தால் அது உங்களுடய நினைப்பே தவிர இதை வைத்து தளிகை செய்யும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி சொல்லும் நீங்கள் நாளை முடிவு வெளியானதும் இந்த கதையில் என்ன தகுதி இருக்கிறது.. எப்படி முதல் பரிசு கொடுத்தீர்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கத்தான் செய்வீர்கள். உங்களின் பங்கு கொண்ட ஆர்வத்துக்கு ஏற்ற நீங்கள் எதிர்பார்த்த விமர்சனம் வரவில்லை என்ற நினைப்பில் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது நண்பரே..

Ramesh said...

இந்த போட்டிக்காக உங்கள் குழுவின் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது.. வாழ்த்துக்களும் நன்றிகளும்..

முதலிடம் பெற்ற அந்த 15 கதைகளையும் கூட வெளியிடுங்கள்..

பரிசு கிடைக்காவிட்டாலும்.. கடைசி கட்ட தேர்வுக்காவது நம் கதை வந்திருக்கிறதே என்று பார்த்து எங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் இல்லையா..

Madhavan Srinivasagopalan said...

வெற்றியாளர்களை அறிவிக்கும் பொது,
முதல் 15 இடங்களில் வந்தவர்களை பெயர் அடிப்படையில் அகரவரிசையில் அறிவிப்பீர்களா ?
முதல் 20 சதவிகத்தில் வந்த திருப்தியாவது மற்ற 12 பேர்களுக்கு கிடைக்குமே.

anujanya said...

அடப்பாவிகளா! இவங்க தான் நடுவர்கள்னு தெரிஞ்சிருந்தா....பேப்பர் சேஸ் பண்ணி, பாசாகி, ஞானபீடம் வாங்கி, முதலமைச்சர் கூட ஆகி இருப்பேன்...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

sk.mani said...

well done

நந்தாகுமாரன் said...

நன்றி. வாழ்த்துகள்.

Unknown said...

முதலிடம் பெற்ற அந்த 15 கதைகளையும் கூட வெளியிடுங்கள்

Joseph said...

விமர்சனங்கள் என்பவை உங்களை செதுக்கும் உளி என்று எடுத்துக்கொண்டால் கட்டாயம் உங்கள் எழுத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ஒரு போட்டியை நடத்துவது என்பது மிக சாதாரணமான வேலை இல்லை. இதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான். சிங்கை பதிவர்களால் நடத்தப்படும் மணற்கேணி போட்டிகளை நடத்தும் குழுவில் பங்கேற்றவன் என்ற முறையில் இதை சொல்கிறேன். எந்த ஒரு போட்டி அமைப்பாளரும் எவ்விதமான குறைபாடும் இன்றி போட்டியை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று படும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

போட்டி முடிவுகள் தாமதமாவதை பலரும் குறை சொல்லியுள்ளார்கள். ஆனால் அனைவரும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இந்த பதிவர்கள் அனைவரும் முழுநேரப் பதிவர்கள் இல்லை. தங்களின் கடும் பணிகளுக்குமிடையில் இது போன்ற ஆர்வமூட்டும் போட்டிகளை சவாலாக எடுத்துக்கொண்டு செய்கின்றார்கள். சில நேரங்களில் தாமதம் என்பதை தவிர்க்கவே இயலாது. விமர்சனங்களை திறந்த மனதுடன் எதிர்கொள்ளுங்கள். போட்டி என்று வந்துவிட்டால் குழந்தை முதியவர் என்றெல்லாம் சலுகை எதிர்பார்க்க இயலாது. நடுவர்களும் புதிய எழுத்தாளர்கள், தேர்ந்த எழுத்தாளர்கள் என பார்த்து மதிப்பிட இயலாது. அப்படி செய்தால் நடுநிலை இன்மை என்றாகிவிடும். புதிய எழுத்தாளர்கள் தயவு செய்து இதை ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு விமர்சனங்களில் சொல்லியிருப்பதை தங்களது எழுத்தை முன்னேற்ற கிடைத்த நல்ல வாய்பாக கருத வேண்டும்.

போட்டி குறித்த உங்களது எதிர்மறை கருத்துகள் போட்டி அமைப்பாளர்களை சோர்வுற செய்து, இது போன்ற போட்டிகள் மேலும் நடைபெற விடாமல் தடுத்தால் அது யாருக்கு இழப்பு? இது போன்ற போட்டிகள் இருந்தால் தான் பலரும் வெளிச்சத்திற்கு வர இயலும்.

போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

வீரராகவன் said...

என் கதையில் இருந்த நாடகத் தன்மையை அழகாக சுட்டி காட்டியதும், போட்டிக்கு வந்த கதைகளை அலசிய விதம் என்னைப் போன்ற முதல் முறையாக சிறுகதை எழுத முயற்சிப்பவர்களுக்கு அருமையான வழிகாட்டியாக இருக்கும்.
பரிசை வென்றவர்களுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும்
நடுவர்களுக்கு மட்டுமல்ல பரிசல்காரருக்கும் எனது பாராட்டுக்கள்.
அடுத்த போட்டி எப்போது?

சில நேரங்களில் தாமதம் என்பதை தவிர்க்கவே இயலாது. விமர்சனங்களை திறந்த மனதுடன் எதிர்கொள்ளுங்கள். போட்டி என்று வந்துவிட்டால் குழந்தை முதியவர் என்றெல்லாம் சலுகை எதிர்பார்க்க இயலாது. நடுவர்களும் புதிய எழுத்தாளர்கள், தேர்ந்த எழுத்தாளர்கள் என பார்த்து மதிப்பிட இயலாது. அப்படி செய்தால் நடுநிலை இன்மை என்றாகிவிடும். புதிய எழுத்தாளர்கள் தயவு செய்து இதை ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு விமர்சனங்களில் சொல்லியிருப்பதை தங்களது எழுத்தை முன்னேற்ற கிடைத்த நல்ல வாய்பாக கருத வேண்டும்.

போட்டி குறித்த உங்களது எதிர்மறை கருத்துகள் போட்டி அமைப்பாளர்களை சோர்வுற செய்து, இது போன்ற போட்டிகள் மேலும் நடைபெற விடாமல் தடுத்தால் அது யாருக்கு இழப்பு? இது போன்ற போட்டிகள் இருந்தால் தான் பலரும் வெளிச்சத்திற்கு வர இயலும்.

போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.