Showing posts with label என்னடா பண்ணுவ?. Show all posts
Showing posts with label என்னடா பண்ணுவ?. Show all posts

Wednesday, August 13, 2008

வால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

அன்புள்ள வால்பையன்!

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் பீர் போத்தலையும், சைட் டிஷ்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.

தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்துத் தொலைக்கவில்லை! மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம், உங்களது பதிவுகளை வேறு வழியில்லாமல் வாசித்து வருகிறேன்.

அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.

கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது சமீபத்திய சந்திப்பு ஒன்று. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார். 6.6%க்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சரக்கையடித்தால் உடல்நலக் குறைவு ஏற்படுமென்று!

ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த சரக்கடிப்பது என்பது ஒண்ணாம் நெம்பர் கெடுதலான பழக்கம். எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.

ஆனால் நீங்கள் போதை என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.

உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில், எப்போதாவது பீர், பிராண்டி மற்ற எல்லா சரக்குகளையும் அடியுங்கள். நல்ல வெளிநாட்டு மதுவகையை நாடுங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு சரக்கு மாஸ்டராகக்கூட வரமுடியும். (கோட்டர் கோயிந்தசாமி கோவை வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)

போதையுலகு ஒரு மிரேஜ். சில சரக்கு ரசிகர்கள் இருப்பார்கள். ஒருத்தன் சரக்கடித்து உளறும்போது அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் மட்டையானால், தங்கள் போதைக்கு அடுத்த ஊறுகாய் தேடிப் போய் விடுவார்கள். அதைப் போல எல்லா பார்களிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் முதன் முதலில் பீரடித்த போதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.

சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

1) காலையில் எழுந்தது முதல் இன்று என்ன சரக்கடிப்பது. எதை சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்வது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?

2) எத்தனை பேர் நமது பக்கத்து பெஞ்சில் என்ன சரக்கடிக்கிறார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?

3) கோவிலில் கழிக்கும் நேரம் நீங்கலாக மற்ற அனைத்து நேரமும் மப்பிலேயே வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?

5) எப்போதடா டாஸ்மாக்கில் போய் உட்காரலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?

6) உங்கள் குவாட்டரை சிந்தாமல் அடிக்க முடிகிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.

இரவில் நெடு நேரம் உங்களை டாஸ்மாக்கில் காண முடிகிறது.

(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் டாஸ்மாக்கில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இல்லை. இருந்தாலும் சொல்ல முடியாது.)

இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞரான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, un remunerative, time consuming, tiresome, lengthy and tedious டாஸ்மாக்குக்கல்ல.

பகல் பூராவும் முதலாளி கார்த்திக்கின் செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த டாஸ்மாக்கில் நடமாடுவது நியாயமா?

எனக்குத் தெரிந்து டாஸ்மாக்கில் கணக்குப் பிள்ளையாயிருந்த எவனோ ஒருத்தன் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கல்லாவை காலி பண்ணி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறான்.

ஒரு பெண் தேவதையைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவளுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா? தலை சிறந்த முதல் நிலை அதிகாரியாக அவள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.

அவ்வப்போது சரக்கடியுங்கள். அதிகமா சரக்கடிப்பவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.

வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு ஸ்பான்சர் கிடைத்து பாரும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது குடித்துக் கொண்டிருப்பவர்கள்.

குடிப்பதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது குடிக்காவிட்டால் … (சரி வேண்டாம்.)

இன்னும் சிலர் டாஸ்மாக்கிலேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு குவாட்டர் பாட்டில் ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது குடிப்பார்கள்

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் குடிகார நாயே என்று திட்ட வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்களுக்கு குவாட்டருக்கு மேல் வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.

இன்னும் சிலர் மேல்தட்டு குடிகாரர்கள்.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ஒரு பீர். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! குடிப்பதைவிட குடிகாரர்களை அவதானிப்பவர்கள்.

பீர்முகம்மது போன்றோர் மாதிரி அளவாக, ராவாக மாதம் ஒரு முறை அல்லது வருடம் இருமுறை முறை குடியுங்கள்.

Kindly be a balanced man. Don’t get excited!

எல்லாருக்குமே தான் மப்பில் இருக்க வேண்டுமென்ற உந்துதல் இருக்கும்.

குழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள்? Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.

தாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்?

ஒரு முறை கோட்டர் கோயிந்தசாமியிடம் கேட்டேன்.

“ஐயா! விஸ்கியும், பிராண்டியும் இவ்வளவு ராவாய் அடிக்கிறீர்கள். ஊற்றியும் கொடுக்கிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு பார் ஆரம்பித்து அதில் குடித்துக் கொண்டேயிருக்கக்கூடாது?”

“அதிகம் கோட்டர் கிடைக்காத டாஸ்மாக் ஊழியன் தனது இல்லக் கிழத்தியை வைத்து சாராயம் காய்ச்சும் பணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.

கடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன். அன்றிலிருந்து 4 நாட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.

வால்பையன்! மீண்டும் சொல்கிறேன். போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். உடல்நலம் கெடுவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் டாஸ்மாக் உலகம்!


பின்குறிப்புகள்:

1. நேற்று முழுதும் இருந்த இறுக்க மனநிலை தவிர்க்கவே இந்த மொக்கை!

2. இப்படி ஒரு மொக்கை வரும் என்று எழுதும் முன்னும், எழுதியபின்னும் வால்பையனுக்கு தெரிவிக்கப்பட்டது.

3. லதானந்த் அங்கிளுக்கும், ஐயா உங்க லெட்டரைப் போல நானும் ஒண்ணு எழுதீருக்கேன். கிண்டல் பண்ணினதா நெனச்சுக்காதீங்க என்று அலைபேசியிலழைத்துச் சொல்லப்பட்டது! “போட்டுக்கடா மாப்ளே” என்று அனுமதி கொடுத்த அவருக்கும் நன்றி!

4. நான் ஒரு நாளில் இணையத்தில் அமர்வது 45 நிமிடம் முதல் இரண்டு மணி நேரங்கள். என் உமாவின் அனுமதியுடன், ஞாயிறு ஒன்பது மணிக்குள் பதிவிட்டபின், அந்த தினம் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே!

5. இந்தக் கடிதம் கிண்டலடிக்கும் தொனியில் எழுதப்பட்டாலும் வால்பையன் வாரம் இருநாள் தவிர்க்க இயலாமல் சென்றுவரும் டாஸ்மாக் பயணத்தை நிறுத்தும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டது. (அவரிடம் அனுமதி பெற்று)

6. வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.

7. நான் கெட்ட கேட்டுக்கு அடுத்த பதிவு 100ஐத் தொடுது! அதுல என்ன தலைப்புல எழுதறதுன்னு உங்களையே கேட்டிருக்கேன். சைடுல இருக்கற POLL ல க்ளிக்கி ஓட்டுப் போடுங்க.

8. ”ஒண்ணும் எழுதாதே”ங்கற ஆப்ஷன் குடுக்கல. குடுத்தா அதுதான் அதிக ஓட்டு வாங்கும்ன்னு தெரியும்!

(டேய்... ப்ளாக்குல போறவனே, வாரத்துக்கு ஒண்ணு எழுதுடான்னா, அந்த ஒண்ணையே ஏழு பதிவோட நீளத்துக்கு எழுதுவியா நீ? இரு..இரு.. உனக்கு அடுத்த கடிதம் தயாராய்கிட்டே இருக்கு!!)

இந்தப் பதிவிற்கான லேபிள்: (200 கேரக்டருக்குமேல் BLOG ஏற்றுக்கொள்ளவில்லை. என் கேரக்டருக்கு அது ஒத்துவராத்தால் இங்கே கொடுக்கிறேன்!)

மொக்கை, சீரியஸ், உயிர்த்தெழுதல், வால்பையன், சரக்கு, அங்கிள் கோவப்படமாட்டார், இவன் திருந்தமாட்டான், எக்கேடோ கெட்டு ஒழிங்கடா, என்ன கொடுமை பரிசல் இது, என்ன கொடுமை அங்கிள் இது? முத்துதங்கச்சிக்கு நன்றி, வேலண்ணனுக்கு நன்றி, மை ஃப்ரண்டுக்கு நன்றி, அதிஷாவுக்கு நன்றி, ஜிம்ஷாவுக்கு நன்றி, நாமக்கல் சிபிக்கு நன்றி, குசும்பனுக்கு நன்றி, சஞ்சய்க்கு நன்றி, ஈரோடு கார்த்திக்கு நன்றி, வால்பையனுக்கு நன்றி, லக்கிலுக்குக்கு நன்றி, சென்ஷிக்கு நன்றி, கோவியாருக்கு நன்றி, எல்லாருக்கும் நன்றி