Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Wednesday, August 20, 2008

நீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா?

ஒருத்தரிடம் காசே இல்லையென்றாலும் அவரால் ஒன்றை வாங்கமுடியும். அது கடன்தான்! கடன் குடுப்பதோ, வாங்குவதோ தவறில்லை. ஆனால் ஒப்புக்கொண்ட தேதியில் கடனை திருப்பிக் கொடுப்பதும், அப்படி சொன்ன தேதியில் திருப்பிக் கொடுப்பவருக்கு கடன் கொடுப்பதும் முக்கியம்!

நேற்று என் ஆஃபீஸ் பாய் ஒருத்தன் “சார்.. ஒரு நூறு ரூபா இருந்தா குடுங்க” என்றான். அவன் ஏற்கனவே எனக்கு நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. அது இரண்டு மாசங்களுக்கு முன். இரண்டு மாசத்தில் நான் கேட்காததால் மறந்துவிட்டேன் என்று நினைத்தானோ என்னமோ. ஆனால் நான் அதை சொல்லி “ஏற்கனவே வாங்கினதைக் குடுக்கல இல்லியா? அதனால இப்ப தரமாட்டேன்” என்று பயமுறுத்திவிட்டு, மனசு கேட்காமல் ”வேறொருத்தன் எனக்கு தரணும் அவன் தந்தால் தர்றேன்” என்று சொல்லி கொடுத்தும் விட்டேன். “கண்டிப்பா 200 ரூபாயும் திருப்பிக் குடுத்துடுவேன்” என்றிருக்கிறான். பார்க்கலாம்!

நான் மிக உயரிய பதவியிலிருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நல்ல பதவிதான். என் போன்றவர்களுக்கு சங்கடமான விஷயம் கீழே பணிபுரிபவர்கள் இது போன்ற சின்ன சின்ன கடன் கேட்பதும், அதை மறந்துவிடுவதும்தான்! (குடுத்தவங்க இல்ல. வாங்கினவங்க மறந்துடறாங்க!)

அதைவிடக் கொடுமையான விஷயம் “இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்??) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” என்று வாங்கியவர்கள் அரசல் புரசலாக பேசுவதுதான்!

இப்போதெல்லாம் பிச்சைகாரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாக வாங்குவதில்லை. கடைக்காரன் எவனும் ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதேயில்லை. அதேபோல 100 ரூபாய் கடன் குடுத்தால் அது திரும்பி வருவதேயில்லை!

இப்படித்தான் பேனா மூடியோடு கொடுத்தால் திரும்பி வராது என்று மூடியை கழட்டி விட்டுத்தான் கொடுப்பானாம் ஒருத்தன். “இப்பெல்லாம் பேனா திரும்பி வந்துடுதா?” என்று கேட்டால் ”எங்க? வீடு பூரா மூடியா இருக்கு” என்றானாம்!

இதை எழுதும்போதுதான் உட்கார்ந்து யோசித்தேன். அப்படி இப்படி என்று ச்சின்னக் கடன்களிலேயே எனக்கு 2450 ரூபாய் வெளியே நிற்கிறது! என்ன கொடுமை இது!

நான் எப்போதோ கல்கிக்கு ஒரு பொன்மொழி எழுதி அனுப்பினேன்.

“உங்கள் நண்பன் உண்மையானவனா என்று சோதிக்க வேண்டுமா? அவனிடம் கடன் கேட்டுப் பாருங்கள். நீங்கள் உங்கள் நண்பனுக்கு உண்மையானவனாக இருக்க வேண்டுமா? கடன் கொடுக்காதீர்கள்!”

கடன் கொடுப்பதில் இல்லை என்று சொல்லும் கலை ரொம்ப முக்கியம்! அதில் வடக்கத்தியர்கள் கை தேர்ந்தவர்கள். உடனே கொடுக்க மாட்டார்கள். நாளைக்கு, நாளைக்கு என்று இழுத்தடிப்பார்கள். அந்த இடைவெளியில் நிஜமான காரணமா, திருப்பிக் கொடுப்பதில் தேர்ந்தவனா என்றெல்லாம் எடை போட்டு விடுவார்கள்! கொடுக்கக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் அவ்வளவுதான். என்ன கொஞ்சிக் கூத்தாடினாலும் பைசா கூட அவர்களிடமிருந்து வாங்க முடியாது!

கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்பதிலும் சரி, வாங்கினதை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பதிலும் சரி நம்மவர்கள் திறமைசாலிகள்!

நான் உடுமலைப்பேட்டையில் இருந்தபோது, தளிரோட்டில், முனிசிபல் காம்ப்ளக்ஸில் எங்கள் ஸ்கூலருகே `க்ரவுன் காபி பார்’ என்றொரு பேக்கரி இருந்தது. கடைக்காரருடன் நல்ல நட்பு. நாங்கள் அருகிலுள்ள கேரம் க்ளப்பில் விளையாடுவதும், இவர் கடையில் அரட்டையடிப்பதுமாக ரொம்பவும் பிஸியாக இருந்த காலம் அது. கடையின் விலைப்பட்டியலை ஒரு சார்ட் பேப்பரில் எழுதித் தரச் சொன்னார். (என் கையெழுத்து அப்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கும்!) எழுதிக் கொடுத்தேன். ‘கடன் அன்பை முறிக்கும்’ என்றும் எழுதச் சொன்னார். நாமதான் அடுத்தவன் சொல்றத கேட்கவே மாட்டோமே? ‘அது வேண்டாம்ண்ணே’ என்று சொல்லி, வித்தியாசமாக இருக்கணும் என்று ‘ஊசி நுழைந்து பிரிக்க முடியாத நட்பையும், காசு நுழைந்து பிரித்துவிடும்’ என்று எழுதிக் கொடுத்தேன்.

பிறகு 1992ல் திருப்பூரில் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த போது ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த க்ரவுன் காபி பார் ஓனரிடமிருந்து ஒரு இன்லேண்ட் லெட்டர் வந்தது. அவர் கடையில் என் அக்கவுண்டில் 192 ரூபாய் இருந்தது. (ரொம்ப முக்கியமான கேள்வி: பேங்க்ல அக்கவுண்ட்ல இருக்குன்னா, அது நம்ம பணம்! டீக்கடைல அக்கவுண்ட்ல இருக்குன்னா அது கடன்! ஏன் இப்படி?) அதைக் குறிப்பிட்டும், நீ எங்க இருந்து டீ சொன்னாலும் அனுப்பிக் கொடுத்தேனே’ என்றெல்லாம் வருத்தப்பட்டு எப்ப தருவ?’ என்று கேட்டிருந்த அந்த லெட்டரை அவர் நான் எழுதிய பொன்மொழியையே எழுதி முடித்திருந்தார்! நான் தூங்காத இரவில் அந்த இரவும் ஒன்று!

என் தந்தை பணிபுரிந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் அவரது முதலாளி (சேட்) தனது மேசைமேல் வைத்திருந்த ஒரு குறிப்பு:-


YOU ASK ME CREDIT
I GIVE NO MONEY
YOU GET MAD.

I GIVE CREDIT.
YOU DIDN’T PAY.
I GET MAD.

BETTER
YOU GET MAD.