Thursday, September 4, 2008

மின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்கு!


காட்சி 1:

கதாபாத்திரம் : ஒரு விவசாயி

“நான் நாலு ஏக்கர் நிலம் வெச்சு விவசாயம் பண்ணிகிட்டிருக்கேன். கரண்ட் வர்றப்ப பம்பு செட்டு போட்டு தண்ணி விடறேன். ஆனா அடிக்கடி போகற கரண்ட்னால நாலு ஏக்கருக்கும் முழுசா தண்ணி காட்ட முடியல. ஒவ்வொரு தடவை கரண்ட் வர்றப்பவும் ஒரு ஏக்கர் நனையுது. மறுபடி கரண்ட் கட்டாகுது. அப்புறம் கரண்ட் வந்து போடறப்ப அதே ஒரு ஏக்கர்கிட்ட தண்ணி போயி, தொடர்ந்து போகறதுக்குள்ள மறுபடி போயிடுது. என்ன பண்றதுன்னே தெரியல.”

------------------

காட்சி 2:

கதாபாத்திரங்கள்: ஒரு பொதுஜனம், ஒரு மின்சார வாரிய (இப்ப மின்சாரமே வாரிக்கிட்டுதான் இருக்கு!) லைன்மேன்

“என்ன ஈ.பி.க்காரரே... ஆறு மணிநேரம் கட்டாய மின்வெட்டுன்னு அறிவிச்சுட்டாங்களே. இனி இதுதான் கதியா?”


“ஆறு மணிநேரம்ங்கறது அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ரெண்டு மணிநேரம்ன்னப்பவே அஞ்சு மணிநேரம் கட் பண்ணினோம். இப்போ ஆறு மணி நேரம்னிருக்காங்க..”


“அப்ப பத்து மணிநேரம் கட் பண்ணுவீங்களா? இன்னைக்கு பேப்பர்ல, அமைச்சர் ஒருத்தர் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு இந்தப் பற்றாக் குறை தொடரும்ன்னு சொல்லியிருக்காரே...”


“அப்படீன்னா இன்னும் ஆறேழு வருஷத்துக்கு இதுதான் கதி!”


**************


காட்சி 3:

கதாபாத்திரம்: ஒரு படித்த இளைஞன்


“அதொண்ணுமில்ல சார். சென்னையில இருக்கற ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒண்ணு போட்டிருக்காங்க. அதாவது இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அவங்க நிறுவனத்துக்கு ஒரு நொடி கூடத் தடையில்லா மின்சாரம் வழங்கறதா ஒப்புதல் கொடுத்திருக்காங்க. அதான் இப்படி நம்மளைப் போட்டு வாட்டறாங்க. அந்த நிறுவனம் ஒரு மணிநேரத்துக்கு செலவழிக்கற மின்சாரத்தை வெச்சு ஒரு கிராமத்துக்கு ஒரு நாள் முழுதும் பயன்படுத்தலாமாம்.”


****************


காட்சி: 4

க.பா: ஒரு நடுத்தர வயது அதிகாரி


“சார்.. மின்சாரம் எடுக்கற தனியார் காற்றாலைகளுக்கு ஒரு வருஷம் ஒன்பது மாசமா குடுக்க வேண்டிய பில் அமௌண்டை இன்னும் கவர்மெண்ட் குடுக்கல. அவங்க எப்படி தொடர்ந்து ஓட்ட முடியும்? நிறைய பேர் இழுத்து மூடீட்டு போய்ட்டாங்க. இப்ப நம்ம படற கஷ்டங்களுக்கு அதுவும் ஒரு காரணம். அதுவுமில்லாம அரசு விழா, பொது விழாக்கள்ல பயன்படற மின்சாரத்துக்கு அளவே இல்லை!”


காட்சி: 5

கா.பா: இரண்டு பள்ளி மாணவர்கள்


“டேய்.. என்னடா.. நைட்டு அடிக்கடி கரண்ட் கட்டாகி படிக்கவே முடியலைடா.. கொசுத்தொல்லையால தூங்கவும் முடியல. அதுனால காலைல சரியா எழுந்திருக்கவும் முடியல. பரீட்சையை நினைச்சாலே பயமா இருக்குடா”


“கலைஞருக்கு ஒரு பெட்டிஷன் போடுவோமா? ஒரு ரூபாய்க்கு அரிசியெல்லாம் தர்றீங்க.. இந்தமாதிரி மின்சாரம் இல்லாத கஷ்டத்துலயும் படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு 50 மார்க் வாங்கினா, 50 மார்க் இலவசம்ன்னு அறிவிக்கச் சொல்லிடலாமா?”


**************


காட்சி: 6

க.பா: இரண்டு குடும்பஸ்தர்கள்


“காலைல ஆறு டூ ஒன்பது போகற கரண்டால ஒரே தொல்லைப்பா. மிக்ஸில அரைக்க முடியல. ஹீட்டர் போட முடியலன்னு ஆஃபீஸ் போகறதுக்குள்ள அவ டென்ஷனாகி, நம்மளையும் டென்ஷனாக்கிவிட்டுப் போறா. வேலையே ஓடமாட்டீங்குது”


“இங்கயும் அதே கதைதான். கேஸ் சிலிண்டர் ப்ராப்ளம்ன்னு மைக்ரோவேவ் அவன் வாங்கினேன். இப்போ அதுக்கு கரண்ட் ப்ராப்ளம். சம்சாரத்தை சமாளிச்சாலும், மின்சாரத்தை சமாளிக்க முடியலைப்பா”

************


காட்சி: 7

க.பா: இரு நண்பர்கள்

“நேத்து நாயகன் பார்த்தேண்டா. ஜே.கே.ரித்தீஷ் கண்ணுல பொறி பறக்குதுடா. என்னா ஆக்‌ஷன்ங்கற?”


“அப்ப அந்தப் பொறியிலேர்ந்து மின்சாரம் எடுத்து கரண்ட் பிரச்சினையை தீர்க்கவேண்டியதுதானே”


“ஏண்டா.. முடியாதுன்னு நெனைக்கறியா? பண்ணிக் காட்டுவோம்டா!”


“அவரு ரசிகன்தானே நீ. அதான் அவரு மாதிரியே காமெடியா பேசற!”


******************


இதன் தொடர் பதிவை இன்னும் இரண்டு மணிநேரத்தில் படிக்கத் தவறாதீர்கள்
!

Wednesday, September 3, 2008

விநாயகர் அவியல்!



இன்று விநாயகர் சதுர்த்தி! இணையில்லாத இவரைப் பத்தி இணையத்துல மேய்ஞ்சிட்டிருந்தப்போ, மேல இருக்கற படம் கிடைச்சது! ரொம்ப ஆராய்ச்சி நடந்திருக்கும் போல!

-----------------------------------

இவருதான் முதல் எழுத்தாளர்ன்னு சொல்றாங்க. அதாவது வியாசர் மகாபாரதத்தை சொல்லச் சொல்ல தன்னோட தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுத ஆரம்பிச்சாராம். அதனாலதான் நாம என்ன எழுதினாலும் முதல்ல பிள்ளையார் சுழி போடறோமாம்! நான் மொதல்ல எல்லாம் போட்டுட்டிருந்தேன். ஒரு தபா கணக்கெழுதறப்ப 13438ங்கற மொத்த டோட்டலை பிள்ளையார் சுழியையும் சேர்த்து கூட்டி 13440ன்னு போட்டதுக்கறப்புறம் போடறதில்லை. தலைவர் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாருங்கற தைரியம்தான்!

----------------------------------------

பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில் இருக்காம். பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. வியாச முனிவர் வசித்த குகையும் அங்கே இருக்காம். போயிருக்கீங்களா யாராச்சும்?

------------------------------------------------------

சின்ன வயசுல இவருக்கு கல்யாணம் ஆயிடுச்சுசொன்னப்ப... இருங்க.. சரியா சொல்லீடறேன்., என் சின்ன வயசுல விநாயகருக்கு கல்யாணம் ஆயிடுச்சு சொன்னப்ப நான் நம்பலை. அதுக்காகவே உடுமலைப்பேட்டைல இருந்தப்ப, அங்க இருக்கற லைப்ரரில புத்தகம் புத்தகமா ஆராய்ச்சி பண்ணி 'அட! நெஜம்தான்ன்னு கண்டுபிடிச்சேன்!



பிரம்மா நாம க்ரேட்யா... என்னா டேலண்ட் நமக்குன்னு ஆணவமா படைப்பு வேலையை செய்ய ஆரம்பிச்சாராம். ஆணவத்தோட செய்யறப்ப பிறந்தவங்க எல்லாம் பின்னமா பிறந்தாங்களாம். என்னடான்னு யோசிச்சப்ப ஆணவம் அவருக்குள்ள வந்தப்ப அவரு விநாயகரைக் கும்பிடறதை நிறுத்தினதுதான் காரணம்ன்னு புரிஞ்சதாம். உடனே மெடிடேஷன்ல உட்கார்ந்து விநாயகர் கிட்ட “ஸாரி கணபதி.. மிஸ்டேக் ஆகிப்போச்சு. மன்ச்சுக்கப்பான்னு உருகினாராம். போனாப்போகுதுன்னு நம்மாளு வந்து இச்சா சக்தி, ஞான சக்திங்கற இரண்டு சக்திகளை பிரம்மாவுக்கு குடுத்தாராம். நம்மகிட்ட எந்த மேட்டர் வந்தாலும் பதிவா மாத்தீடறோம்ல? அதேமாதிரி பிரம்மா என்ன வந்தாலும் அதை மனுஷ உருவமாக்கிடுவாரு. அந்த இரண்டு சக்தியையும் பெண்களா மாத்தி தன்கூடவே வெச்சுகிட்டாராம். அதுதான் சித்தி, புத்தி!


அப்பாலிக்கா பிரம்மா ஸ்டெடியானப்பறம் விநாயகரோட சக்திகள் அவருகிட்டயே போகட்டும்ன்னு முடிவு பண்ணி அவரோட பேரண்ட்ஸ்கிட்ட சொன்னப்ப, “பையன் கல்யாணம் பண்ணிக்காம காலத்தை ஓட்டிடீடுவானோன்னு பயமா இருக்குப்பா. பேசாம இவங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்ன்னு பார்வதி சொல்ல எல்லாருமா கலந்துபேசி நம்மாளையும் மாட்ட வெச்சுட்டாங்களாம்!

வட நாட்டுலதான் இவரை அதிகமா குடும்பஸ்தரா கும்பிடறாங்கன்னு நெனைக்கறேன். அங்க இவருக்கு ஒரு குழந்தை பெண் - கூட இருக்கறதா பேச்சு உண்டு. யாருக்காச்சும் டீட்டெயில்தெரியுமா?


-----------------------------


இளையராஜா இசையமைச்ச விநாயகர் பாடல்கள்ல தாலாட்டுப் படவால வர்ற ‘வராது வந்த நாயகன்.. பாட்டும், (இது விநாயகர் பாட்டா-ன்னு கேக்கப்படாது!) ‘உடன்பிறப்புல வர்ற ‘சாமி வருது.. சாமி வருது வழியை விடுங்கடாவும் ரொம்ப பிடிக்கும் எனக்கு.

-----------------------------------

நேத்து ஒரு வேத விற்பன்னர்கிட்ட பேசிகிட்டிருந்தேன். எதைப்பத்தி பேசினாலும் அருமையா பேசக் கூடியவர் அவர். விநாயகரைப் பத்தி அவரு ஒண்ணு சொன்னார். அட! நெஜம்தான்ல!ன்னு ஆச்சர்யப்பட வெச்சது!


அதாவது கடவுள்கள்ல மோஸ்ட் ஃப்ரெண்ட்லி நம்மாளுதானாம். சிவனை பயத்தோட பாக்கலாம், முருகனை அருளோட பாக்கலாம், கிருஷ்ணாவை காதலோட பாக்கலாம் (உண்மைதான்), பிரம்மாவை ஆச்சர்யமா பார்க்கலாம் (அவரை பாக்கறதே ஆச்சர்யம்தான்!) ஆனா உங்கள்ல ஒருத்தனா ‘நண்பா... என்னப்பா கண்டுக்கவே மாட்டீங்கற?ன்னு ரொம்ப நட்பா நெனைக்க முடியறது விநாயகர் மட்டும்தான் அப்படீன்னார்!


உண்மைதான் இல்ல?

******************


டிஸ்கி: காலை ஆறிலிருந்து ஒன்பது மணிவரை பவர் கட்! அதுனால இதை இப்பவே..5.40... பதிவேத்தறேன்!!! காலைல 6 டூ 9, மாலை 6 டூ 7, இரவு 10 டூ 11 பவர் கட். (இது அறிவிக்கப்பட்டது. இதுக்கு மேல அறிவிக்கப்படாத மின்வெட்டும் இருக்கு!) இரவு அந்த நேரத்துலதான் எதுனா டிராஃப்ட் பண்ணுவேன். காலைல 8 மணிக்கு உட்கார்ந்து எழுதி போஸ்ட் பண்ணுவேன். இப்ப எதுவுமே முடியல. இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெக்வெஸ்ட்டா விநாயகர்கிட்ட என்னோட வேண்டுகோள் இதுதான்..

‘எப்படியாச்சும் ஆற்காட்டார்கிட்ட பேசி ஒரு விடிவுக்காலம் கொண்டு வாப்பா!'


(அதுக்கு பேசாம ஒரு யூ.பி.எஸ். வாங்கிக்கப்பான்னு விநாயகர் சொல்லுவாருன்னு நெனைக்கறேன்!)

Tuesday, September 2, 2008

காணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு

கால ஓட்டத்தில் காணாமல் போனவை என்று கேட்டால் எப்போதுமே என் நினைவுக்கு வருவது கடிதம் எழுதும் பழக்கம்தான்! இதைப் பற்றி கடந்து போன கடிதநாட்கள் என்றொரு பதிவு நான் எப்போதோ போட்டுவிட்டதால் அதே தகவல்களைத்தான் இங்கே மறுபடி தரவேண்டியிருக்கும்! (நல்ல பதிவாக நான் நினைக்கும் அதற்கு இரண்டே பின்னூட்டம். அதில் ஒன்று நான்!)

அதைத்தவிர வேறொன்றென்றால் அதுவும் எழுதும் பழக்கம்தான். கடிதம் அல்ல! டைரி!

இப்போதெல்லாம் யாராவது டைரி எழுதுகிறார்களா என்ன? டைரியில் எதையோ எழுதுகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் போல நம்மைப் பற்றி, தினசரி நடப்புகளை சுயசரிதை போல டைரி எழுதுவோமே, அந்தப் பழக்கம் இப்போதும் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே!

எனக்கு எழுதும் பழக்கம் வந்ததே நாட்குறிப்புகள் எழுதித்தான் எனலாம்! ‘காலை ஆறரை மணிக்கு எழுந்தேன். பல்துலக்கிவிட்டு காபி கேட்க அடுக்களைக்கு போகும் முன் மாமா ‘ஏண்டா.. படிக்காம அடுக்களைலல என்ன பண்ணீட்டிருக்க?’ என்று திட்டினார்’ என்கிற ரீதியில் சுவாரஸ்யமே இல்லாமலிருக்கும் என் நாட்குறிப்புகள். சில நாள் ‘இன்று மனது சரியில்லை. எழுதுவதற்கு ஒன்றுமில்லை’ என்றும் இருக்கும். பின்னாளில் அந்த டைரியைப் புரட்டிப் பார்க்கும்போது, அப்போது மனது சரியில்லாமலானது எதனால் என்று கேள்வி என்னைத் தாக்கும்! ‘அடேய்.. அதை எழுதியிருந்தா நல்லாயிருக்குமில்லையா’ என்று நானே நினைத்ததுண்டு!

கொஞ்சம் விவரம் தெரிந்து சுஜாதா, பாலகுமாரன் படிக்க ஆரம்பித்தபோது எழுதியவை சுவாரஸ்யமானவை! பார்த்த படம், நாட்டு நடப்பு (?), படித்த புத்தகங்களின் விமர்சனங்கள், சைட்டடித்த பெண்கள் என்று கண்டதையும் எழுத ஆரம்பித்தேன். கதை, நாவல்கள் தாண்டி சுஜாதாவின் கட்டுரைகளில் லயித்த நாட்களில் (இப்போதும்!) எழுத்து இன்னமும் சுவாரஸ்யமான தளத்தில் பயணித்தது. ஒவ்வொரு நாளும் அந்த நாளின் ஏதேனும் முக்கிய, சொல்லிக்கொள்ளும்படியான நிகழ்வை எடுத்துக் கொண்டு அதை டைரியில் கட்டுரை வடிவில் எழுதுவது அவ்வளவு இன்பமாக இருந்தது!


அதற்குப் பிறகு முன்கதை சுருக்கம் (பாலகுமாரன்), வனவாசம் (கண்ணதாசன்) இவற்றைப் படித்து ‘ஐயையோ.. நமக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாச்சே... பிற்காலத்துல என்னோட சுயசரிதை எழுதச் சொல்லி பதிப்பகங்கள் க்யூவுல நிக்கறப்ப என்ன பண்றது?’ என்று ஞானோதயம் பிறந்து நானே சுய சரிதை மாதிரி ட்ரை பண்ணினேன். ‘அவன்’ன்னு என்னை படர்க்கைல விளிச்சு எழுத ஆரம்பிச்சேன். எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சு (ஏன் ஆரம்பிக்கணும்ன்னு யோசிச்சிருக்கலாம்!) என்னோட நண்பர்கள் பத்தி முதல்ல எழுதலாம்ன்னு முடிவு பண்ணி, ‘அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் ஐந்து பேர்’ அப்படீன்னு துவங்கி, தனித்தனி தலைப்பெல்லாம் போட்டு என்னோட ஐந்து நண்பர்கள் பற்றி எழுதியிருந்தேன்.

ஒரு அசுபயோக அசுப தினத்தில் நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கொரு பீர் அடித்துவிட்டு இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சீரியஸாக விவாதித்துக் கொண்டிருந்தபோது சும்மா இருக்க மாட்டாமல் என் நண்பன் ஒருத்தன் என் கையில் இருந்த டைரியை வாங்கிப் பார்த்தான்.

அந்த டைரில முதல் மூன்று நான்கு பக்கங்களுக்கு வால்டர் தேவாரம் துப்பாக்கி கைல வேச்சிருக்கற ஸ்டில், விஜயகாந்த் எட்டி உதைக்கற ஸ்டில், ப்ரூஸ்லி நின்ஜாவைச் சுத்தற ஸ்டில்ன்னு ஒட்டி ஒவ்வொரு பக்கமும் ‘இதுக்கு மேல திறந்தா தீர்ந்தடா மவனே’ அப்படீங்கறமாதிரியெல்லாம் எழுதி லே-அவுட் பண்ணி வெச்சிருப்பேன். யாரும் பார்க்கக்கூடாதுன்னு! (பின்னாளில உமாகிட்ட அதையெல்லாம் காமிச்சு பேசீட்டிருந்தப்போ.. ‘யாராவது பார்க்கணும்ன்னு இவ்ளோ நேர்த்தியா பண்ணீருக்கிங்க’ ன்னாங்க! ‘அந்த யாரோ நீதான்னு அப்போ பீலா விட்டாலும், அவங்க சொன்னதுல இருந்த உண்மை ஒத்துக்கச் சொல்லிச்சு)


அதைப் பார்த்த நண்பன் ‘டேய் நான் பார்க்கலாமில்ல?’ ன்னான். பீர் மயக்கத்துல ‘நீ என் நண்பண்டா! பாரு’ன்னுட்டேன்! பார்த்துட்டு அந்த அஞ்சு பேரும் ஒரே ரகளை! நான்தான் கேனத்தனமா என்னமோ என்னோட எழுத்து நாட்டுடமையாகற மாதிரி பேசீட்டு திரிஞ்சேன்னா, அவனுங்க ‘எங்களைப் பத்தி
இவ்ளோ ஓப்பனா எழுதியிருக்க. நாளைக்கு பத்திரிகைல வந்தா என்னாகறது’ ன்னு சண்டை போட்டாங்க! எனக்கு வந்த சிரிப்புக்கு அளவே இல்லை. இப்ப வடிவேலு கேட்ட கேள்வியை அப்பவே நான் என்னையே கேட்டுகிட்டேன்!(இன்னுமாடா இந்த ஊர் நம்மளை நம்புது?) அந்த விவாதம் ஒரு கட்டத்துல முத்தி அந்த டைரியை கிழிக்க வேண்டியதா போச்சு! (அடுத்த நாள்தான் தெரிஞ்சது, முதல்ல டைரியை வாங்கிப் படிச்சவன் அடிச்சிருந்தது பீர் அல்ல. ஹாட்! அது பண்ணினதுதான் அத்தனையும்!)


அடுத்தநாள் அவங்க வந்து ‘நல்லா எழுதியிருந்தடா. ஏதோ எமோஷன்ல சொல்லீட்டோம். தொடர்ந்து எழுது’ன்னாங்க. சரீன்னு அவங்க பேர் போடாம எழுத ஆரம்பிச்சு, பல விஷயங்களையும் தொடர்ந்து சுவாரஸ்யமா எழுதினேன். பின்னாளில அதை உமாகிட்ட குடுத்தப்ப, அந்த டைரி திரும்பி வரும்போது பல இடங்கள்ல சிகப்பு ஸ்கெட்ச்ல அடிச்சுட்டுதான் குடுத்தாங்க! எதெது அவங்களுக்கு பிடிக்கலன்னு புரிஞ்சுக்க அது உதவிச்சு!)


அதற்குப்பிறகு அதிகமாக டைரி எழுதின ஞாபகமே இல்லை! அப்பப்ப பிடிச்ச, பாதிச்ச கவிதைகளை எழுதி வெச்சுட்டதோட சரி! நல்ல நினைவா என்கிட்ட இருந்த ஆறு டைரியையும் ஒரு யோகா க்ளாஸுக்கு எடுத்துட்டு போனப்ப ‘பழசை மறந்துடணும்’ன்னு சொல்லி, தீக்குள்ள போடச் சொல்லீட்டங்க! அது அப்படியே போச்சு! அதுல எழுதப்பட்ட விஷயங்கள் ஆயிரம் பதிவுகளுக்கு சமம்! (சிரிப்பைப் பாரு! சந்தோஷமா எல்லாருக்கும்?)


வருடா வருடம் இந்த முறை நல்ல டைரி வருமா என்று எதிர்பார்ப்பு இருப்பதுண்டு! இன்னமும் டைரி மீதான மோகம் குறையவே இல்லை. ஆனால் எழுதத்தான் முடிவதில்லை! நீங்கள் யாரேனும் எழுதுகிறீர்களா என்ன? (எழுதுகிறீர்களா என்ன-அப்படீன்னு கேக்கலாம். என்ன எழுதுகிறீர்கள்-ன்னு கேக்க முடியாது! தமிழ் ஈஸ் க்ரேட்யா!)


டிஸ்கி: கால ஓட்டத்தில் காணாமல் போனவை என்ற தலைப்பில் சுரேகா ஆரம்பித்து, புதுகைத் தென்றல் என்னை எழுதச் சொன்னதற்காக எழுதிய பதிவு. எனக்கடுத்ததாய் யாரை அழைப்பது என்று யோசித்தபோது, யார் யாருக்கெல்லாம் இந்த தலைப்புல மேட்டர் இருக்கோ அவங்க எல்லாம் எழுதலாம்ன்னு சொல்றது உத்தமம்ன்னு நெனைச்சுட்டேன்!

ஆனாலும் ஒருத்தர் கண்டிப்பா எழுதணும்ன்னு ஆணையிடறேன். அவர் என் பார்ட்னர் வெண்பூ.