Wednesday, January 28, 2015

அவன்களால்தான் நிறைந்த உலகு

2005

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.

“என்னாச்சுங்க?”

“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.

“அப்ப அரை கிலோமீட்ட முன்னாலதான பெட்ரோல் பங்க்? எதுக்கு தள்ளீட்டே போறீங்க? இனிமே போனா அஞ்சாறு கிலோமீட்டராகும் பெட்ரோல் பங்க் வர..”

“அது வந்து..” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, வார்த்தைகளை மென்று விழுங்கினர்.


“ஏங்க.. என்னாச்சு?”

“பெட்ரோலுக்கு காசில்லைங்க. அதான் அப்டியே தள்ளீட்டு போய்டறோம். மூணு, நாலு கிலோமீட்டர்ல எங்க கம்பெனி வந்துடும்”

அவன் யோசித்தான். “என்னோட பைக்கும் ரிசர்வ்தான் பாஸ். வேண்ணா ஒண்ணு பண்லாம்” தன் பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். “முப்பது ரூவா இருக்கு. அப்டியே பின்னால போய், அந்த பங்க்லயே அடிச்சுட்டுப் போங்க. வேகாத வெயில்ல எவ்ளோதூரம் தள்ளுவீங்க!”

“ரொம்ம்ம்ப தேங்க்ஸ் பாஸ்!!”

-------------------------

2010

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.

“என்னாச்சுங்க?”

“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.

இவன் பைக்கை நிறுத்தினான். சாலையோரம் ஏதும் தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று தேடினான்.

“பெட்ரோல் பங்க் ரொம்ப தூரம்க. நான் கொஞ்சம் பெட்ரோல் தர்றேன். போயிருங்க. வெயில் வேற ஜாஸ்தியாருக்கு. பாட்டில் ஏதும் கெடைக்குதான்னு பாருங்க”

அவர்கள் இருவரும் இவன் அருகில் வந்து தேடினர். 

சாலை நீளமாய், ஒன்றிரண்டு வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது. நான்கைந்து நிமிடங்களில் ஒருவரும் இருக்கவில்லை சாலையில்.

இவன் பாட்டிலைத் தேட, இவன் இருபுறமும் நின்றிருந்த இருவரில் ஒருவன், இவன் தோளில் கைபோட்டான். இன்னொரு கையில் ச்சின்ன கத்தி முளைத்திருந்தது.

“பாஸ்.. ஃபோன், காசு, வாட்ச் எதிருந்தாலும் எடுத்து அவண்ட்ட குடுத்துடு பாஸு. எதும் வித்தியாசமா ட்ரை பண்ணி வெட்டு வாங்கிக்காத”

இவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. டக்கென்று இடதுகையை பாக்கெட்டில் விட்டு, மோதிரத்தை நைஸாக விரலாலேயே கழட்டி பேண்ட் பாக்கெட்டில் போட்டான்.

டக்கென்று பின்பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். வாட்ச்சைக் கழட்டினான்.

“முன்னூறு ரூவாதான் இருக்கு. வாட்ச் இந்தாங்க. ப்ளீஸ் ஃபோனை விட்டுடுங்க. ஆஃபீஸ் ஃபோன். காண்டாக்ஸ்லாம் இருக்கு. நான் மெர்ச்செண்டைஸரா வேலை செய்யறேன். கால் வந்துட்டே இருக்கும். ப்ளீஸ் கெஞ்சிக் கேட்டுக்கறேன். உங்களை நம்பி பட்டப்பகல்ல பைக்கை நிறுத்தினேன். இப்டி பண்ணீட்டீங்களே..”

“அட்வைஸ்லாம் வேணாம் பாஸ். ஓகே. ஃபோனை வெச்சுக்கங்க” என்ற ஒருவன், இரண்டாமவனிடம் “போலாண்டா. வேற காசில்லை இவண்ட்ட” என்றபடி தங்கள் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினர். 


அவன் மிகுந்த வேதனையோடு தன் பைக்கை எடுத்து அந்த இடத்தைக் கடக்கையில், வெறும் இருநூறு அடி தொலைவில் இருந்த போலீஸ் செக்போஸ்ட்டை வாழ்நாளுக்கான வெறுப்புடன் பார்த்தபடி கடந்தான்.

-------------------

2015

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் ஒருவரைப் பார்த்தான். தன் பைக், நின்று கொண்டிருக்க - இவனை நோக்கி கை காட்டியபடி நின்று கொண்டிருந்தார். 

அருகில் சென்றவன் ஏதோ யோசனை வந்தவனாய், பைக் வேகத்தை அதிகப்படுத்தியபடி சென்றுவிட்டான்.

--------------------------

குறிப்பு: அவனும் அவனும் அவனும் வேறு வேறு ஆட்கள். ஆனால் அவன் செய்தது, அவனுக்கும்-அவனுக்கும், அவனுக்கு நிகழ்ந்தது அவனுக்கும்-அவனுக்கும் தெரியும். அவன் செய்ததன் காரணமாக, அவன் செய்ய நினைத்து மாட்டிக் கொண்டதால் அவன் அதைச் செய்யவில்லை. அவ்வளவுதான். 


**


3 comments:

Unknown said...

:-)

SudhaGiri said...

2020 - தூரத்தில் ஒருவர் பைக்குடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். சென்று வண்டியை நிறுத்திவிட்டு என்ன பிரச்சனை என்றான்.பைக்ல பெட்ரோல் தீர்ந்துடுச்சு சார் என்றார். நல்லாதாகப் போயிற்று விரட்டி வர முடியாது என்று சொல்லிக்கொண்டே பாக்கெட்டிலிருந்து அந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து செயினைக் கழட்டு என்றான்.
கற்பனை செய்வது கடினம் தலைவரே. உங்களுக்கு வருது நமக்கு வரல

பிரதீபா said...

அதென்னம்மோ, நான் என்னோட போன்ல இருந்து போடற பின்னூட்டம் எதுவுமே காணறதே இல்லை.