Wednesday, July 24, 2013

செல்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கான சில விதிகள்


உங்கள் கையிலிருக்கும் செல்ஃபோன் சைஸ் மற்றவர்களுக்கு சவால் விடுவதாய் இருக்கவேண்டும். ரொம்பவுமே சிறியதாக அல்லது பெரியதாக. எல்லாரிடமும் இருப்பது போல இருந்தால் கவனம் ஈர்க்கப்படாது.

செல்ஃபோன் என்னதான் டுபாக்கூராக, இருந்தாலும் அதன் கவர் / கேஸ் புதியதுபோல ஸ்டைலிஷாக இருக்க வேண்டும்,

போலவே, ஸ்க்ரீன் கார்டை அடிக்கடி மாற்றிக் கொள்ளவேண்டும். அது செல்ஃபோன் புதியதாக இருக்குமொரு தோற்றத்தைத் தரும்.

பஸ், இரயில் போன்ற பயணங்களில் / பொது இடங்களில் ஸ்பீக்கரில் உரக்கப் பாட்டுப் போட்டுக் கேட்கவேண்டும். தவறியும் இயர்ஃபோன் வைத்துக் கேட்கக்கூடாது. உங்களுக்கு பத்து பதினைந்து அடி தள்ளி வேறொரு பிரகஸ்பதியும் அதே போல பாட்டுப் போட்டு வெறுப்பேற்ற முயலலாம். அதற்கெல்லாம் நீங்கள் அஞ்சக்கூடாது. அவர் பாட்டும், உங்கள் பாட்டுமாய் கலந்து கட்டி உடன் பயணிக்கும் / உடன் இருக்கும் பிறரை கொலைவெறிக்குத் தள்ளுவதொன்றே உங்களது லட்சியமாக இருக்க வேண்டும்.

உங்கள் ரிங்டோன், அருகிலிருப்பவர்களை ஒரு செகண்டுக்கு பயத்தில் துள்ள வைக்கும் ரிங்டோனாக இருப்பது மிக அவசியம்.

பிறரது அலுவலகம், கோவில், நூலகம் என்று எங்கு சென்றாலும் சைலண்ட் மோடில் போடாமல் செல்ல வேண்டும். அங்கே நமது செல்ஃபோன் அலறும்போது, பதறுவதுபோல் பதறி எடுத்து ஒலியைக் குறைக்கவோ, சைலண்ட் போடவோ செய்ய வேண்டும்.

முந்தைய விதி, நண்பர்களுடனோ, சக ஊழியர்களுடனோ, தியேட்டரிலோ இருக்கும்போது செல்லாது. அந்தத் தருணங்களில் உங்கள் ஃபோன் அலறினால் சா--கா--மா- எடுத்து, யார் அழைப்பது என்று நி-தா--மா-கப் பார்த்து, முகத்தில் ஒரு சலிப்பைக் காட்டிவிட்டு பிறகு என்னவும் செய்து கொள்ளலாம். இது, உடனிருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவு பிஸியான மனிதர் என்பதையும், நீங்கள் நினைத்தால் ஓர் அழைப்பை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம் என்பதையும் சுட்டிக்காட்டும்.

போகுமிடமெல்லாம் சார்ஜரை எடுத்துக் கொண்டு, ‘சார்ஜ் போட்டுக்கவாஎன்று கேட்டுக் கொண்டே, சம்மந்தப்பட்டவர் சரி சொல்லுமுன் ப்ளக்கில் மாட்டிவிட வேண்டும்.
  
பொது இடங்களில் செல்ஃபோனை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. கையில் வைத்துக்கொண்டு நோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் ஃபோனில் நெட்கார்ட் இருக்காது, ஒரு மிஸ்ட் கால் இருக்காது, ஒரு மெசேஜ் இருக்காது.. இருந்தாலும் என்னமோ முக்கியமான அஃபீஷியல் மெய்ல் அனுப்புவது போல, நோண்டியபடி செட்டிங்ஸையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்

ஒருவேளை பாக்கெட்டில் இருந்தால், அழைப்பே வரவில்லையெனினும் அவ்வப்போது எடுத்து பொத்தானை அழுத்தி செல்ஃபோனைப் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் ஃபோன் உங்களை விட்டு ஓடிவிடும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களில் எவருக்கேனும் அழைப்பு வருமாயின், உடனேயே நீங்கள் உங்கள் ஃபோனை எடுத்து ஒரு முறைப்பு முறைத்துவிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் மெசேஜ் அனுப்ப நேர்ந்தால் அங்கங்கே பார்த்தபடி டகடகவென்று இரண்டு கைவிரல்களாலும் டைப்ப வேண்டும். இது நீங்கள் ஒரு அப்பாடக்கர் என்று காட்டிக் கொள்ள உதவும்.

சக மனிதர்களோடு உரையாட நேர்கையில், ஃபேஸ்புக், ட்விட்டரோடு -  ‘வாட்ஸப்ல ஃபோட்டோ அனுப்பு, வீ-ச்சாட்ல வா, ஃப்ரிங்ல கனெக்ட் பண்ணு போன்று பேசி நீங்கள் வைத்துள்ளது ஸ்மார்ட் ஃபோன் எனவும், பல அப்ளிகேஷன்களை டவுன்லோடி அப்டேட்டாக இருக்கிறீர்கள் எனவும் உணர்த்தவேண்டியது அவசியம்.

உங்களுக்கு அழைத்தவர் துபாயிலோ, சிங்கப்பூரிலோ இருப்பதுபோலவும், ஒருவேளை அழைப்பு துண்டிக்கப்பட்டாலும் அவருக்கு காதுகேட்கும் என்பதுபோல, அதி உச்சக் குரலிலேயே பேசவேண்டும்

ஆஃபீஸ் மீட்டிங் போன்ற செல்ஃபோனைத் தவிர்க்க வேண்டிய இடங்களில், ஃபோனை சைலண்ட் மோடில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது அதன் ஸ்க்ரீனைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.

உலகத்திலேயே நம்பர் ஒன் ஃப்ராட் நீங்களாக இருப்பினும், உங்கள் ரிங்டோன், ‘உள்ளம் உருகுதைய்யா’, ‘நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய’, ‘கௌசல்யா சுப்ரஜா ராமா’ போன்று சுற்றியிருப்பவர்களுக்கு உங்களை ஒரு ஒழுக்கசீலராக காட்டுவதாய் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தால், குடிக்கலாம், சிகரெட் பிடிக்கலாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் ரிங்டோன் மட்டும் சரணமய்யப்பா என்று கதற வேண்டும்.

மனைவியின் பெயரை, ‘டார்லிங்’, ‘ஸ்வீட்ஹார்ட்’ என்று ஐஸ் வைக்கும் விதமாய் காண்டாக்ஸில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் அழைப்பு வந்தால், பிஸியாக இருப்பதாய் எடுக்காமலிருக்கவோ, கட் செய்யவோ வேண்டும். அல்லது மூஞ்சியை இஞ்சிக் கஷாயம் குடித்த எதுவோ போல வைத்துக் கொண்டு சலித்தபடி, பிறர் முன் மனைவியை ஒரு திட்டு திட்டிவிட்டு அட்டெண்ட் செய்ய வேண்டும்.

பொதுஇடங்களில் நண்பரிடமிருந்து உங்களுக்கு ஏதும் அழைப்பு வந்தால், ’யெஸ்.. டெல் மீ ப்ரோ’ என்று பீட்டரில் ஆரம்பித்து, பிறரை விட்டு விலகி வந்தபின், வழக்கமான, ‘அந்தக் கஸ்மாலம் பண்ற வேலை கீதே மச்சி’ என்று லோக்கலுக்குத் தாவவேண்டும்.


கடைசியாக

இதுபோன்று பற்பல செல்ஃபோன் கேனத்தனங்களைச் செய்தாலும், அதையே ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு, அன்றைக்கு முழுவதும் கமெண்ட்ஸ் என்ன, லைக் எத்தனை என்பதை செல்ஃபோனிலேயே எடுத்துப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

9 comments:

இரசிகை said...

:)

nallayirukku..

உலக சினிமா ரசிகன் said...

தாங்கள் குறிப்பிட்ட விதியின்படி இனி செயல்படுவேன்.
கண்ணை திறந்ததுக்கு நன்றி சாமி.

Umesh Srinivasan said...

சும்மாவே இவனு(ளு)ங்க அலப்பற தாங்கல்ல.இதுல நீங்கவேற செய்முறை விளக்கம் குடுக்குறீங்களா? உருப்பிட்டுறும்.

Katz said...

பஸ்ஸில் ஊருக்கு போகும் போது, எதோ ஒரு உலக படத்தை உங்கள் ஸ்மார்ட் போனில் ஓடவிட்டு (இயர் போன் வைத்து தான்) பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவருக்கு உங்களது உலக அறிவை காட்டிக் கொள்ள வேண்டும். அவ்வப் போது, சத்தம் போட்டு சிரித்துக் கொள்ள வேண்டும்.


(பக்கத்தில் இருக்கும் அவருக்கு, நீங்கள் இயர் போன் வைத்து படம் பார்த்தாலும், அவர்களது view -வில் உங்கள் ஸ்மார்ட் போன் இருக்கும். அதை பார்க்காமல் இருக்க வேண்டி கஷ்டப் பட்டு வேறு பக்கம் பார்வையை திருப்ப வேண்டிய அவஸ்தையை அனுபவித்தால் தான் புரியும்)

நாய் நக்ஸ் said...

மீண்டும்....அதே....குறள்...திருக்குறள்....

ஐயா....!!!!

Kaviyarasu said...

முந்தைய விதி, நண்பர்களுடனோ, சகஊழியர்களுடனோ, தியேட்டரிலோஇருக்கும்போது செல்லாது. அந்தத் தருணங்களில்உங்கள் ஃபோன் அலறினால் சா-வ-கா-ச-மா-கஎடுத்து, யார் அழைப்பது என்று நி-தா-ன-மா-கப்பார்த்து, முகத்தில் ஒரு சலிப்பைக் காட்டிவிட்டுபிறகு என்னவும் செய்து கொள்ளலாம். இது,உடனிருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவுபிஸியான மனிதர் என்பதையும், நீங்கள்நினைத்தால் ஓர் அழைப்பை ஏற்கவோமறுக்கவோ செய்யலாம் என்பதையும்சுட்டிக்காட்டும்.

Class

Kaviyarasu said...

முந்தைய விதி, நண்பர்களுடனோ, சகஊழியர்களுடனோ, தியேட்டரிலோஇருக்கும்போது செல்லாது. அந்தத் தருணங்களில்உங்கள் ஃபோன் அலறினால் சா-வ-கா-ச-மா-கஎடுத்து, யார் அழைப்பது என்று நி-தா-ன-மா-கப்பார்த்து, முகத்தில் ஒரு சலிப்பைக் காட்டிவிட்டுபிறகு என்னவும் செய்து கொள்ளலாம். இது,உடனிருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவுபிஸியான மனிதர் என்பதையும், நீங்கள்நினைத்தால் ஓர் அழைப்பை ஏற்கவோமறுக்கவோ செய்யலாம் என்பதையும்சுட்டிக்காட்டும்.

Class

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்கோ.

கஸ்மாலம்னா என்னாங்கோ?

Madhavan Srinivasagopalan said...

போன வாரம் அந்த முப்பத் தஞ்ஜாயிரம் ரூபாய் செல்போன் திருட்டு போயிடிச்சு... அதுக்காக.. வேற வாங்காம எத்தன நாள்தான் இருக்குறது ..
அதான்.. நேத்தைக்கு இந்த புது போன் வாங்கிட்டேன், முத்தெட்டு ஆயிரம் ரூபாய்...