Monday, April 27, 2009

பக்கத்து வீடு

பதினேழு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது.

ஒரு புத்தகத் தயாரிப்புக்காக சென்னை செல்ல வேண்டி வந்தது. முதல்முறையாக தனியாக சென்னை பயணம். தங்குவதற்காக எனது அத்தை விட்டிற்கு சென்றேன். போக் ரோட்டில் சிண்டிகேட் அபார்ட்மெண்டில் வீடு. 3வது மாடியோ, நான்காவது மாடியோ. அபார்ட்மெண்ட் என்ற பிரமாண்டத்தின் உள்ளே முதன்முறையாக செல்லும் பிரமிப்பில் எத்தனையாவது மாடியில் இருக்கிறோம் என்ற ப்ரக்ஞை இல்லாமல் ஒரு வீட்டின் அழைப்புமணியை அழுத்தி விட்டேன். திறந்தது யாரோ. அரைக் கோணத்தில் திறக்கப்பட்ட கதவில், கதவுக்கும் சுவற்றுமாக ஊசலாடும் ஒரு சங்கிலி.

“இது செகண்ட் ஃப்ளோர் E ப்ளாக் இல்லையா?”

“இல்லை” – சடாரென்று பதில் வந்தது.

“செகண்ட் ஃப்ளோர் E ப்ளாக் எங்கிருக்கு?”

“இது C ப்ளாக். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” சொன்ன சொல் காற்றில் கரையும் முன் அறைந்து சாத்தப்பட்டது கதவு. அப்புறமாய்த் தெரிந்தது.. அதே மாடியில்தான் அத்தை வீடு E ப்ளாக் இருக்கிறதென்று.

சென்னைப் பயணம் முடிந்து வரும் வரை ‘என்னதிது... ஒரே அபார்ட்மெண்டில் ஒரே மாடியில் அருகிலிருக்கும் வீட்டின் முகவரி கேட்டால் தெரியாது என்று சொல்லுமளவு அண்டை விட்டாரின் பழக்க வழக்கங்கள் குறைந்துவருகிறதா’ என்று மனதில் கேள்வி.

இன்றைக்கு இந்த அண்டை வீட்டாரைப் பகைக்கும் பழக்கம் வேரூன்றி, கிளைவிட்டு, பூத்துக் குலுங்கி நச்சுப் பழங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து தேசத்தைப் பகைத்து, பக்கத்து நாட்டைப் பகைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இதொன்றும் கண்டிக்கத் தக்க செயலே அல்லவே!

திருப்பூர் மாவட்டமானபோது எனது சொந்த ஊரான உடுமலைப்பேட்டையில் பல போராட்டங்கள். உடுமலைப்பேட்டையை திருப்பூரோடு இணைக்க வேண்டாம், கோவை மாவட்ட்த்திலேயே நாங்கள் தொடர்வோம் என்று. எல்லைகள் எப்படிப் பிரிக்கப்பட்டாலும் எல்லார்க்கும் சமமான சலுகைகள், சரியான முறையில் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவார்களேயானால் ஏனிந்தக் கூப்பாடுகள் நடக்கப் போகிறது? அவர்கள்மீதான நம்பிக்கையின்மைதானே இது மாதிரியான பிரச்சினைகளுக்குக் காரணம்?

சரி.. பக்கத்து வீட்டு பிரச்சினைக்கு வருவோம்:




அகராதி என்ன சொல்கிறது? NEIGHBOURHOOD என்றால் அண்மை, அருகாமை; NEIGHBOURLINES என்றால் நட்பு, நேசம், நன்மனம்: NEIGHBOURLY என்றால் ஆதரவான, நேசமுள்ள.

அப்படியெல்லாமா இருக்கிறது இன்றைக்கு அண்டைவீட்டாரோடான நட்பு? இருக்கிறதுதான். சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறதல்லவா?

எனது நண்பன். திருமணமாகி தனிக்குடித்தனம் போன காம்பவுண்டில் இவனுக்கு ஆதரவாக பக்கத்துவீட்டு குடும்பம் ஒன்று பழகிவந்தது. இரு வீட்டாருக்குமே ஒன்றரை வருடங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.

ஓரிரு வாரங்களுக்கு முன் அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பனின் மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே அமர்ந்தபோது, ஏற்கனவே வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு பெண்மணியும், அவரது அன்னையும் சடாரென வீட்டிற்குள் சென்று கதவு சாத்தினர்.

அவர்கள் செயல் வித்தியாசமாய்த் தோன்றவே வினவினேன்.

நண்பனது மகன் கொஞ்சம் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்து விட்டானாம். அவர்கள் மகன் இவனுக்கு ஓரிரு மாதங்கள் மூத்தவனாக இருந்தும், இன்னும் நடக்கவில்லையாம். அதைப் பலமுறை பலவாறாகச் சொல்லி ‘உங்க கண்ணுபட்டுதான் இவன் நடக்கல’ என்பது போல எதுவோ பேசி, நண்பன் மகனைக் கண்டாலே கதவைச் சாத்திக் கொள்கிறார்களாம்.

வெறும் ஒன்றரை வயதுக் குழந்தை மேல் எல்லாம் வெறுப்பைக் காட்ட முடியுமா? என்றெனக்கு வியப்பாய் இருந்தது.

இது இப்படியென்றால் இன்னொரு சம்பவம்:

என் நெருங்கிய உறவினரின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தம்பதி. திருமணமாகி ஏழெட்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை. உறவினருக்கு ஒரு மகள். இரண்டாவதாய் மகன் ஜனித்தபோது அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி மிகுந்த நெருக்கம் காட்டியிருக்கிறாள். அந்த மகனை அவ்வப்போது அவர் வீட்டுக்குக் கொண்டு செல்வது, உறவினர் வேலையாய் எங்காவது செல்லும்போது ‘நான் பாத்துக்கறேன்’ என்று குழந்தையை வாங்கி வைத்துக் கொள்வது என்று இது தொடர்ந்திருக்கிறது.

நானும், உமாவும் ஒவ்வொரு முறை அங்கே செல்லும்போதும், அந்தக் குழந்தையை அவள் தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு கதவைத் தாளிட்டுக் கொள்வாள். வெறும் ஐந்து, பத்து நிமிடங்கள்தான் வந்து காட்டுவாள். விசாரித்ததில் ‘அந்தப் பெண்மணி குழந்தைமேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறாள். நாங்கள் வைத்த பேரை விடுத்து அவளாக ‘பாலாஜி’ என்ற பெயரில்தான் குழந்தையை அழைக்கிறாள்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘எனக்கு இது பிடிக்கவில்லை, வண்டி தவறான வழியில் செல்கிறது’ என்றுவிட்டு வந்தேன். கடைசியில் அந்த உறவினரின் மனைவி, தான் செய்துகொண்டிருந்த வேலையை விட வேண்டிய அளவுக்கு இது வளர்ந்தது. ஆம், அந்த மகன் சொந்த தாயிடமும், தந்தையிடமும் வரமாட்டான். அந்தப் பெண்மணி இவன் பெயரை பாலாஜி எனவும், தனது மகன் என்றும் அங்கங்கே சொல்லி வைத்திருக்கிறாள். கோவிலுக்குக் கூட்டீட்டுப் போறேன்’ என்று சொல்லி, தனது உறவுகள் வீட்டுக்கெல்லாம் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியிருக்கிறாள். இப்போது அந்த உறவினரின் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டோடே இருந்து குழந்தையைக் கவனித்துக் கொள்கிறார்.

டெல்லியில் இதுபோல ஒரு சம்பவம் நடந்து DNA டெஸ்ட் வரை போனது. வழக்கில் நிஜ பெற்றோருக்கே வெற்றி. ஆனாலும் சம்பந்தப்பட்ட குழந்தை பக்கத்து வீட்டு ஃபோர்ஜரி பெண்மணியில்லாமல் சாப்பிடாது, தூங்காது என்ற நிலைக்கு வந்தது. அவளை மறக்கடிக்க அரசு வேலையை உதறிவிட்டு, ஆறு வருடங்கள் மாற்றலாகி வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டார்கள் ஒரு தம்பதியர்.

ஆக சிரிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தயக்கம் காட்டுகிற பக்கத்து வீட்டு மனோபாவமும் வேண்டாம். நீயும் நானும் ஒண்ணு என்று ஒட்டி உறவாடவும் வேண்டாம். எதிர்ப்படும்போது ஒரு புன்னகை. தேவைப்படும்போது உதவி. ஸ்பெஷலான நாட்களில் பலகாரப் பரிமாற்றங்கள் என்றிருந்தாலே போதும்.

கரண்ட் கட்டா?

‘உடனே பக்கத்துவீட்டில் பாரு.’

பார்ப்பதொன்றும் தவறில்லை. நமது ஃப்யூஸ் மட்டும் போயிருந்தால் சரிசெய்து கொள்ளலாமே என்றுதானே பார்க்கிறோம்!

இரண்டு வீட்டிலும் கரண்ட் இல்லையா? சந்தோஷம் என்று வீட்டிற்குள்ளே போகாதீர்கள்.

“சார்.. மேடம்.. கொஞ்சம் வெளில வாங்க” என்றழையுங்கள்.

நான்கைந்து நாற்காலிகளை வீட்டுமுன் எடுத்துப் போடுங்கள்.

எல்லாருமாய் அமர்ந்து பாட்டுக்கு பாட்டு பாடுங்கள். பழங்கதை பேசுங்கள். அலுவலக நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்!

*********************

ரவிசுப்பிரமணியன் எழுதிய எனக்குப் பிடித்த ஒரு கவிதையோடு இதை முடிக்கிறேன்:

மனிதாபிமானம்

மரித்துப் போனது
மனிதமனம்.
பக்கத்துவீட்டு
மரணம்
எதிர்வீட்டுத்
திருட்டு
அடுத்த வீட்டுப்பெண்
ஓட்டம்
கோடிவீட்டுத்
தகராறு.

நமக்கேன் வம்பு
கதவை மூடு.


.

45 comments:

Mahesh said...

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு" ன்னாரு வள்ளுவர். இப்பல்லாம் நீங்க சொல்றமாதிரி "முகநக" நட்பது கூட ரொம்ப அரிதாகிப் போச்சு.

Perils of urban living !!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எல்லைகள் எப்படிப் பிரிக்கப்பட்டாலும் எல்லார்க்கும் சமமான சலுகைகள், சரியான முறையில் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவார்களேயானால் ஏனிந்தக் கூப்பாடுகள் நடக்கப் போகிறது?//


உங்களுக்கு எதாவது தெரியுமா தல... தனி இடுகை ஒன்று கொடுங்களேன் தல...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வழக்கில் நிஜ பெற்றோருக்கே வெற்றி. //


வழக்கில் மட்டுமே..........,

நிகழ்காலத்தில்... said...

என் குடும்பத்தில் என்ன நடக்கிறது?
நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்?
என் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கவே நேரம் போதவில்லை.

தேடி வரும் அண்டை வீட்டாரிடம் அளவான சுமுக உறவு வைத்திருக்கிறேன்

Cable சங்கர் said...

எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற எண்ணம் இப்போதெல்லாம் ஜாஸ்தியாகிவிட்டது.. ரவிசுப்ரமணியத்தின் கவிதை அருமை.பரிசல்..

அ.மு.செய்யது said...

பதிவுக்கேற்ற கவிதை.

பதிவு முழுமை பெற்று விட்டது.

( ஆமா .நீங்க இந்த பதிவு எழுதுன விஷயம் உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியுமா தல )

அறிவிலி said...

//( ஆமா .நீங்க இந்த பதிவு எழுதுன விஷயம் உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியுமா தல )//

ரிப்பீட்டு..

அறிவிலி said...

மிக நல்ல இடுகை. நாட்டு (உலக) நடப்பு.

//நமக்கேன் வம்பு
கதவை மூடு.//

நமக்கு வேணும் வம்பு செய்தி
கேட்டுவிட்டு கதவை மூடு.

ஆதவா said...

பதிவு பிரமாதங்க பரிசல்காரன்.

எனக்கென்னவோ அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் பெரிய பங்களா வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அண்டைவீட்டு நட்பு இருப்பதில்லை என்று தோணுகிறது.

எங்கள் பக்கத்து வீடு கூட அல்ல, அந்த தெருவில் உள்ள அனைவரிடமும் நட்போடு பழகுகிறோம். எல்லோருக்கும் எங்களைத் தெரிந்திருக்கிறது!!!

அதைவிடுங்க. பக்கத்துவீட்டு கிசுகிசு இருக்கே, அது சினிமா கிசுகிசுவை விடவும் சுவாரசியமானது.

sriraj_sabre said...

சரியான பதிவு பரிசல் ...

பரிசல்காரன் said...

@ Mahesh

முதல் வருகைக்கு நன்றி மகேஷ்ஜி. சரிதான் நீங்க சொல்றது.

@ SUREஷ்

பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள் சுரேஷ். இந்தப் பிரச்சனை ஆரம்பித்தபோதே இது குறித்து எழுத நினைத்து, சில உறுதியான தகவல்கள் கிடைக்காமல் விட்டுவிட்டேன். உங்கள் பின்னூட்டம் இப்போது எழுதத் தூண்டுகிறது, எழுதுகிறேன்.

@ அறிவே தெய்வம்

அதுபோதும். (ஆமா சனிக்கிழமை அரோமா வந்தீங்களா? ஞானி வரவேல்லியாமே?)

@ கேபிள் சங்கர்.

நன்றி சங்கர்.

@ அ.மு.செய்யது

தெரியலியே... (நல்ல நட்புடன் இருக்கிறது.. குறையொன்றுமில்லை!)

@ அறிவிலி

//நமக்கு வேணும் வம்பு செய்தி
கேட்டுவிட்டு கதவை மூடு.//

இதுவும் நல்லாத்தான் இருக்கு!

@ ஆதவா

நான் குறிப்பிட்ட சம்பவம் நடந்தது காம்பவுண்ட் வீட்டில். இது எல்லா பக்கமும் விரவியிருக்கிறது ஆதவா..

பரிசல்காரன் said...

நன்றி தமிழ்விரும்பி!

Unknown said...

:))))))))

கடைக்குட்டி said...

மெட்ராஸ்ல இதெல்லாம் சகஜமப்பா...

கரெண்ட் இல்லாதபோது நீங்க செய்ய சொன்ன யோசனையை ரசித்தேன்..

valli said...

// இரண்டு வீட்டிலும் கரண்ட் இல்லையா? சந்தோஷம் என்று வீட்டிற்குள்ளே போகாதீர்கள்.
“சார்.. மேடம்.. கொஞ்சம் வெளில வாங்க” என்றழையுங்கள்.
நான்கைந்து நாற்காலிகளை வீட்டுமுன் எடுத்துப் போடுங்கள்.
எல்லாருமாய் அமர்ந்து பாட்டுக்கு பாட்டு பாடுங்கள். பழங்கதை பேசுங்கள். அலுவலக நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்! //


இந்த மாதிரி முற்றத்தில இருந்து முன் வீட்டு அண்ணா அக்காமாருடன் சேர்ந்து விடுகதை கேட்டு விடை சொல்லி மகிழ்ந்திருந்ததுண்டு. சில இனிமையான சம்பவங்களை மீட்டிப்பார்த்தேன்.


வலைப்பூவின் பெயர் நீங்கள் ரசிக்கும் படியாக இருந்ததையிட்டு மகிழ்ச்சி.நன்றி.

Subash said...

ஃலைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்!ஃஃ

மிகவும் அருமை
:)))

மணிநரேன் said...

நல்லதொரு பதிவு.

//இரண்டு வீட்டிலும் கரண்ட் இல்லையா? சந்தோஷம் என்று வீட்டிற்குள்ளே போகாதீர்கள்//

இந்த வரிகள் குறிப்பாக பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டது.தாம்பரம் இரயில்வே காலனியில் நாங்கள் இருந்தபோது மின்சாரம் சென்றுவிட்டால் மொத்த நண்பர்களுக்கும் கொண்டாட்டம்தான்.
இப்போதோ அடுக்குமாடி குடியிருப்பில்..அருகிலிருப்பவர்கள்கூட
பேச யோசிக்கிறார்கள்.புன்னகைக்கும் அளவுகோலுண்டு. :(

கவிதையும் அருமை.

பரிசல்காரன் said...

நன்றி ஸ்ரீமதி

நன்றி கடைக்குட்டி

@ வள்ளி

முற்றம் இருக்கும் வீட்டு நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி!

@ நன்றி சுபாஷ்

@ மணிநரேன்

//.புன்னகைக்கும் அளவுகோலுண்டு.//

சரியான வார்த்தை.

நாடோடி இலக்கியன் said...

//எல்லைகள் எப்படிப் பிரிக்கப்பட்டாலும் எல்லார்க்கும் சமமான சலுகைகள், சரியான முறையில் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவார்களேயானால் ஏனிந்தக் கூப்பாடுகள் நடக்கப் போகிறது?//

இந்த மாதிரி விஷயங்கள்தான் பரிசலின் எழுத்தின் மேல் ஒரு ஈர்ப்புவர காரணமாயிருக்கிறது.

தீப்பெட்டி said...

உங்க பக்கத்து வீடு ஏதும் காலியா இருக்கா பாஸ்..

பயந்துராதீங்க.. எனக்கு இல்ல.. நம்ம நண்பர்களுக்குதான்((-:

கார்க்கிபவா said...

சென்னைல பவர் இல்லாதப்ப வெளிய நாற்காலி போட்டு பாட்டு பாடினா..

சரிதான்.. உங்களுக்கு தேவைபப்டும் ஒரு தட்டு மட்டும் விட்டுட்டு எல்லாத்தையும் பார்சல் பண்ணிடுவாங்க.. பீரோ புல்லிங், அம்மிக்கல்லு திருடன், சைக்கோ இவனுங்கள தெரியுமா?

லைஃப் ஸ்டைல் மாறிடுச்சு சகா.. அது சரின்னு சொல்ல வரல. அந்த அடிப்படைகள மாத்தாம இபப்டி செய்ய முடியாது.

பல அபார்ட்மெண்ட்ஸில் நீஙக்ள் சொல்வது போல் நடக்கிரது. பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடுவது, மாதம் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துன்னு இருக்காங்க

ராமலக்ஷ்மி said...

//எதிர்ப்படும்போது ஒரு புன்னகை. தேவைப்படும்போது உதவி.//

இதுதாங்க சரியா வருது. நல்லாச் சொல்லியிருக்கீங்க.

கடைசிக் கவிதை ‘கனல்’!

सुREஷ் कुMAர் said...

இது உண்மையில் யதார்த்தமான உண்மைங்க..
ஆனா, இப்போ எல்லாம் நகர வாழ்க்கை'ல இதெல்லாம் சகஜமப்பா..
ஹும்.. என்னாத்த சொல்ல..

narsim said...

//லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்!//

very ப்யூட்டிஃபுல் சார்..

ஆம்.. வாழ்க்கை வாழ்வதற்கே.. ஆனாலும் நாற்காலியைப் போட்டு பாடாலாம்னு சொல்றது ஓவர்.

புதியவன் said...

//லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்!//

உண்மையான வார்த்தைகள்...வாழ்க்கை மிகா அழகானதே...

நல்ல பதிவு...ரவிசுப்பிரமணியன் கவிதையோடு அழகிய முடிவு...

பரிசல்காரன் said...

//Krishna Prabhu has left a new comment on your post "கடிதம் (கடி தம் அல்ல…!)":

நல்ல பதிவு பரிசில்... இயந்திர வாழ்க்கையில் அண்டை வீட்டாருடன் நட்பு என்பது குறைந்துவிட்டது. இதில் யாரை குற்றம் சொல்ல... கிராமத்திலும் கூட தற்பொழுதெல்லாம் மாறிவிட்டது... நகரத்தை குற்றம் சொல்லுவானேன். //

கிருஷ்ணபிரபு, பக்கத்துவீடு பற்றிய இந்த கமெண்ட் பக்கத்து வீட்டுக்குச் சென்றுவிட்டது! (முந்தைய பதிவுக்கு) கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். ஓகே?

பரிசல்காரன் said...

@ நாடோடி இலக்கியன்'

நன்றி நண்பரே. (திருப்பூருக்கு வந்துட்டீங்கன்னு நெனைக்கறேன். அதான் கமெண்ட் வருது!)

@ தீப்பெட்டி

நெஜமாவே இருக்கு.

@ கார்க்கி & நர்சிம்

ரெண்டு பேரும் ஒரு விஷயத்தை மனசத் தொட்டு சொல்லுங்க. இதே நம்ம மூணு பேரும் இப்போ பக்கத்து பக்கத்து வீட்டுல குடியிருந்தோம்னா, இப்படி நாற்காலியப் போட்டு கத பேசுவமா மாட்டோமா?

திருடனுங்க கரண்ட் கட்லதான் வருவானுகன்னு இல்ல. அப்படியே வந்தாலும் ரெண்டு மூணு பேர் சேர்ந்து இருக்கும்போது போயி கும்மலாம்ல?

@ நன்றி ராமலக்‌ஷ்மி மேடம். (ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சேங்க.. ராமலக்ஷ்மில க்ஷ் எப்படி அடிக்கறீங்க. நான் இப்போ கட் பேஸ்ட் பண்ணினேன்..)

@ சுரேஷ்குமார்

நன்றி நண்பா. நீங்க சொல்றது சரிதான். ஆனா சரிதானான்னு நீங்கதான் சொல்லணும்!

@ புதியவன்

நன்றி நண்பா..

ப்ரியமுடன் வசந்த் said...

நற்காலி நாலு போட்டு உட்கார்ந்தால் நாற்காலியோட நாலு காலும் உடஞ்சுடுமே என்ன பண்ணுறது தல


அப்பறமா நம்ம பக்கமெல்லாம் வர மாட்டீங்களா?

Thamira said...

மிகவும் நியாயமான, அவசியமான, அழகான பதிவு.. பாராட்டுகள் பரிசல். மனங்கள் விரியட்டும்.. இச்செய்தி எங்கும் பரவட்டும்.!

ILA (a) இளா said...

//பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா? //

இப்படியும் ஒருத்தர் எழுதி இருக்காருங்க.. :(

அரவிந்தன் said...

பக்கத்து வீடு மட்டுமல்ல பக்கத்து நாட்டில் நடப்பவை பற்றியும் எந்த வித அக்கரையும் இல்லாமல் சில பதிவர்கள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நம்புகிறேன்

அன்புடன்
அரவிந்தன்

புருனோ Bruno said...

//“இது C ப்ளாக். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” சொன்ன சொல் காற்றில் கரையும் முன் அறைந்து சாத்தப்பட்டது கதவு. //

சிட்டி கல்ச்சர் சார்.. சிட்டி

வசந்த் ஆதிமூலம் said...

பரிசல், உங்க பதிவுல கடைசியா சொன்ன கவிதை அருமை.
பதிவர் சந்திப்புல உங்களை எதிர்பார்த்திருந்தேன். இவ்ளோ மொக்கை போடுறாரே.. உங்களை சந்திச்சு உங்க கருத்துகளை கேட்டு நாமளும் நாலு கெட்டபேரு எடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஏமாத்திட்டியலே...

கோபிநாத் said...

தல பதிவும் கவிதையும் நல்லாயிருக்கு..

கார்க்கிபவா said...

//ரெண்டு பேரும் ஒரு விஷயத்தை மனசத் தொட்டு சொல்லுங்க. இதே நம்ம மூணு பேரும் இப்போ பக்கத்து பக்கத்து வீட்டுல குடியிருந்தோம்னா, இப்படி நாற்காலியப் போட்டு கத பேசுவமா மாட்டோமா?//

ஹிஹிஹி.. நாங்க அவ்ளோ பாவம் செய்யலைங்க...

வால்பையன் said...

நான் குடியிருந்தது அனைத்தும் காம்பவுண்ட் வீடுகள் தான்!

எனது பெற்றோர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கலகலப்பாக பேசி பழகி எங்களுக்கும் கற்று கொடுத்ததால் நாங்களும் அவ்வாறே பழகுகிறோம்!

என்ன தங்கமணி தான் அப்பப்ப அவுங்க கூட பேசாதிங்கம்பா! காரணம் கேட்ட சப்ப மேட்டரா இருக்கும்.

அதனால கண்டுகுறதே இல்லை

ஆகாய நதி said...

நல்ல பதிவு... இப்படியெல்லாம் நாங்க இருந்த காலமும் உண்டு... திருச்சில டவின்சீப்ல இப்படித்தான் இருந்தோம்... ஆனால் அதே திருச்சியில் சொந்த வீட்டிற்கு வந்த போது அருகில் எல்லாரும் இருந்தும் யாரு இல்லை...

பரிசல்காரன் said...

@ பிரியமுடன் வசந்த்

வந்து அடிவாங்கிட்டு உட்கார்ந்துட்டிருக்கேன்.

@ ஆதி

நன்றிங்க..

@ இளா

சூப்பரு!

@ அரவிந்தன்

ஆமாம்.. ஒத்துக்கறேன்.

@ புரூனோ

ம்ம்ம்ம்

@ வசந்த் ஆதிமூலம்

டிக்கெட் செலவுக்கு ஸ்பான்ஸர்ஷிப் இல்லாததால் வரல.

(உங்க பேர்ல கேரக்டர் வெச்சு கதை ரெடியாய்ட்டு இருக்கு. ரொம்ப நக்கலடிச்சீங்கன்னா வில்லனாக்கிடுவேன். ஜாக்கிரத!)

@ கோபிநாத்

நன்றி

@ கார்க்கி

ஆனா நான் நெறைய புண்ணியம் பண்ணிருக்கேன். அதுனால எனக்கும் இது நடக்கல!

@ வால்பையன்

கரெக்ட். சில சமயம் அவங்க சொல்றது ரொம்ப சில்லியா இருக்கும்!

@ ஆகாய நதி

//இப்படியெல்லாம் நாங்க இருந்த காலமும் உண்டு//

இப்படி இறந்த காலத்தில் சொல்லப்படுவது எத்தனை வேதனையானது.. இல்லையா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ம்ம்..நல்லா இருக்கு.

பரிசல்காரன் said...

மிக நன்றி அறிவன்!

ராமலக்ஷ்மி said...

//க்ஷ் எப்படி அடிக்கறீங்க.//

நீங்கள் தமிழ் தட்டச்சிட என்ன மென்பொருள் உபயோகிக்கிறீர்கள் எனத் தெரியாது. நான் உபயோகிக்கும் NHM writer-ல் 'x'-யை தட்டினால் 'க்ஷ்':)!

பரிசல்காரன் said...

@ ராமலக்ஷ்மி

அட! நானும் NHM ரைட்டர்தான் உபயோகிக்கிறேன். கிட்டத்தட்ட NHM ரைட்டரின் PRO போல அதன் புகழ்பரப்பிக் கொண்டிருக்கிறேன். அந்த எக்ஸ் பட்டனை உபயோகிக்கவே இல்லை!

நானாக கண்டுபிடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் நினைத்து, முடியாமல் கேட்டுவிட்டேன்.

நம்மிடமே இருக்கும் பொருளை ஊரெல்லாம் தேடுவதென்பது இதுதானோ!

நன்றி!

Vetirmagal said...

சொந்த வீட்டில் இருக்கும் குடும்பங்கள் முதலில் ஒரு நல்ல அக்கம் பக்கம் வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வாடிக்கை. நாமும் ஒரு மாடல் பக்கத்து வீடாக இருப்பது முக்கியம்.

அவர்கள் குப்பை நம் வாசலில் தள்ளுவதை பொறுமையாக எடுத்து சொல்லி, (பல முறை), வழிக்கு கொண்டு வந்தோம். ஒரு மன இணக்கம் அமைய பல நாட்கள் ஆயிற்று.

பொதுவாக இப்போது பொறாமையும் , 'நாம் -அவர்கள்' மனப்பான்மையும் , குடியிருப்புகளை பிரித்தே வைத்துள்ளன.

அருமையான பதிவு.

வணக்கம்

மங்களூர் சிவா said...

ம். இங்கயும் அதே கதைதான்.

Unknown said...

மக்களுக்கு சுயநலம் அதிகமாகிவிட்டது..
அதனால் தான் இப்படி..
நகரங்களில் மட்டுமல்ல, இன்று கிராமங்களில் கூட இப்படி தான்..

நம் மக்கள், நம் நாடு என்று என்று இருந்தவர்கள் எல்லாம் மறைந்து, இப்போ என் வீடு, என் குடும்பம் என்கிற மக்கள் பெருகிவிட்டார்கள் (தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி)..

கவிதை அருமை..