Showing posts with label Time Management. Show all posts
Showing posts with label Time Management. Show all posts

Friday, April 17, 2009

கிருஷ்ணகதா – நேரம் காலம்...

மகாபாரதக் கதைகள் மிகுந்த சுவாரஸ்யமிக்கவை. ராமாயணக்கதைகளும்தான்.

அவ்வப்போது மகாபாரதம் அல்லது ராமாயணத்திலிருந்து சில சுவையான கதைகளை பகிர்ந்து கொள்ள சித்தமாய் இருக்கிறேன். (நல்லாத்தாண்டா போய்ட்டிருந்தது???)

அவ்வப்போது பைபிள், குரானிலிருந்தும் வரலாம். எதுவாயிருப்பினும் கிருஷ்ணகதா-தான் தலைப்பு. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்வதால். (நாட்ல இந்த நடிகனுங்க தொல்ல தாங்கலடா.. அவனவன் பொறந்த நாளுக்கு அவனவனே போஸ்டர் அடிச்சுக்கறான் பாரு-ங்கறாமாதிரிதான் இது. பொறுத்தருள்க.)

******************************

அடிக்கடி நாம் உபயோகப்படுத்தும் வாக்கியத்திலொன்று ‘நேரம் ரொம்ப முக்கியம்’ என்பது.

வடிவங்கள் வேறுவேறாயிருப்பினும் அடிக்கடி வெவ்வேறு வகைகளில் இந்த வாக்கியம் வந்துவிழுகிறது.

‘டைம் பார்த்துக்கப்பா.. லேட் பண்ணிடாத’

‘இன்னைக்கு விட்டா அவ்ளோதான்’

‘லாஸ்ட் மினிட்ல ஏண்டா அவசர அவசரமா ஓடறீங்க.. மொதல்லயே ப்ளான் பண்றதில்லையா’

‘அரைமணி நேரம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்திருக்கலாம்’

இன்னும் எத்தனை எத்தனை வடிவங்களில் நேரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் அலுவலகத்தில் எப்போது மீட்டிங் என்றாலும் வெவ்வேறு ஃபேக்டரிகளிலிருந்து வந்து சேர்கிறவர்களால் தாமதமாகும். கஷடப்பட்டு, வேண்டுமென்றே முன்கூட்டிச் சொல்லி நாம் நினைத்த நேரத்துக்கு எல்லாரும் வந்துவிட்டால் எம்.டி. அன்று தாமதப்படுத்துவார். குறித்த கணத்தில் ஆரம்பித்த மீட்டிங் 10%கூட இருக்காது. அதேபோலத்தான் குறித்த நேரத்தில் முடிப்பதும். (பெரும்பாலும் மீட்டிங்கின் முடிவு நேரம் குறிப்பிடுவதில்லை. பலசமயம் மீட்டிங்கில் கலந்து கொள்பவர்களின் வேலை முடிவுதான் மீட்டிங்கில் தீர்மானிக்கப்படுகிறது!!)

அமெரிக்க ஜனாதிபதி நேர மேலாண்மைக்காக இரண்டு வழிகளைக் கடைபிடிக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

யாரையாவது சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தால் சந்திக்க வருகிறவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில்தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட 10 நிமிடமோ, 15 நிமிடமோ அந்த அறைக்கு ஜனாதிபதியே வந்து பேசிவிட்டு எழுந்து சென்று விடுவார். சந்திக்க வருகிறவர்கள் அதன்பின் குறிப்பிட்ட நேரம் வரை இருப்பதென்றால் இருக்கலாம், போவதென்றால் போகலாம். தமது அறைக்கு அழைத்து, ’டைமாச்சு போங்க’ என்று சொல்லவேண்டிய வேலை இல்லை.

அதேபோல அவரது அறையின் நாற்காலியின் அமரும்பகுதி சற்றே முன்பக்க சாய்மானத்தில் அமைக்கப்பட்டிருக்குமாம். (ஸ்லோப்-பாக) அதாவது உட்கார்ந்தால் முன்னோக்கி லேசாக வழுக்கும் அமைப்பில். கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே எழுந்து போகலாம் என்று தோன்றுமாம்.

தமிழகத்தின் தொழிலதிபர் ஒருவரது அறையில் ‘எனக்கு இன்றைக்கு முடிக்க வேண்டிய நிறைய வேலைகள் காத்திருக்கிறது. உங்களுக்கு?’ என்றொரு அறிவிப்பை மேஜையிலேயே வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

சரி.. இப்போது அந்த மகாபாரதக் கதை...(ஓஷோ சொல்லும் கதைகளில் ஒன்று இது!)



திண்ணையில் அமர்ந்திருந்த தருமரிடம் பிச்சை கேட்கிறான் ஒருவன். ஏதோ வேலையாய் இருந்த அவர் ‘நாளைக்கு வாப்பா’ என்கிறார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன் உடனே முரசை எடுத்துக் கொண்டுபோய் கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு முரசடிக்கிறான்.


“தம்பி... என்னப்பா செய்கிறாய்? எதற்கு இப்போது முரசடித்து ஊரைக்கூட்டுகிறாய்?” என்று கேட்கிறார் தர்மர்.


“எங்கள் அண்ணன் காலத்தை வென்று விட்டான்’ என்று இந்த ஊருக்கு அறிவிக்கப்போகிறேன் அண்ணா..”

தருமருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “காலத்தை வென்றேனா.. நானா..?” குழப்பத்தோடே கேட்கிறார்.

“ஆமாம் அண்ணா. பிச்சைக்காரரை நாளைக்கு வரச் சொன்னீர்களே? நீங்கள் நாளைக்கு இருப்பீர்களா? அவன் நாளைக்கு இருப்பானா? நீங்கள் இருந்தால் பிச்சையிடும் மனோபாவம் உங்களுக்கு இருக்குமா? அவன் இருந்தால் நாளைக்கும் அவன் பிச்சைக்காரனாகவே இருப்பானா? நாளைக்கு உங்கள் இருவரின் சந்திப்பு நடைபெறுமா? அப்படியே நடைபெற்றாலும் பிச்சை போடுவீர்களா? எவ்வளவு நிச்சயமாய் இத்தனை கேள்விகளின் சாத்தியங்களை உணர்ந்து நாளை அவனை வரச் சொன்னீர்கள்? அப்படியானால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்? என்னை விடுங்கள். இப்போதோ இதை ஊராருக்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இந்த கணத்தை நான் தவறவிட்டால் அடுத்த கணம் நிச்சயமாய் என் வசமில்லை. அதனால்தான் இப்போதே அறிவிக்கிறேன் என்று அவசரப்படுகிறேன்” என்றான் பீமன்.

“பொறு தம்பி. தவறுதான். அவனை அழை. இப்போதே உதவுகிறேன். நாளை என்ன அடுத்த நிமிஷமே நிஜமில்லைதான்” என்று சொல்கிறார் தருமர்.


ஆக.. நல்லதை அன்றே அப்போதே செய்துவிடுங்கள். இந்த நிமிஷம் மட்டுமே நிஜம்!