நல்லவங்க எல்லாருக்கும் வணக்கம்.
தலைப்பை பார்த்த உடனே புரிஞ்சு தலை சொறிஞ்சிகிட்டு அசடு வழிஞ்சுகிட்டு இருக்கற உங்க எல்லார்கிட்டயும் பெரிசா ஸாரி கேட்டுக்கறோம். (றோம்? நானும் கார்க்கியும்தான்!)
கொஞ்சம் பழங்கதைகள் பேசுவோமா?
சார்லி சாப்ளின் ஒரு தடவை கார்ல போய்கிட்டிருக்கறப்போ மாறுவேடப் போட்டின்னு கேள்விப்பட்டு ஒரு அரங்கத்துக்கு உள்ள புகுந்தாராம். சார்லி சாப்ளின் மாதிரி யார் சிறப்பா வேடமிட்டு வர்றாங்க’ என்பதற்கான மாறுவேடப் போட்டி. இவரு போய் கலந்துகிட்டாராம். இவருக்கு மூணாவது பரிசுதான் கிடைச்சுதாம்.
கவிஞர் கண்ணதாசன் ஒரு கவியரங்கத்துல போய்க் கலந்துகிட்டப்போ ‘டக்’னு இவருகூட உட்கார்ந்திருந்த மற்றொரு கவிஞர்கிட்ட இவர் எழுதிட்டு போன கவிதைச் சீட்டைக் குடுத்துட்டு அந்தக் கவிஞரோடதை இவர் வாங்கிகிட்டாராம். மேடைல இவருக்கு கன்னாபின்னான்னு கைதட்டலாம். அவர் கவிதைக்கு அவ்வளவா வரவேற்பில்லையாம்!
சரி... புரிஞ்சுடுச்சுதானே என்ன சொல்ல வர்றேன்னு..
இப்படி வெறுமனே ப்ளாக் எழுதிட்டு இருந்தாலும் எப்படி வரலாறுல இடம்பிடிக்கறதுன்னு பாத்ரூம்ல உட்கார்ந்து சிந்திச்சிகிட்டிருந்தப்போ கணநேரத்தில் தோன்றிய யோசனைதான் அது. உடனே (வெளில வந்துதாங்க..) கார்க்கியை அழைத்தேன்.
“சகா.. நாம எழுதற மேட்டர் நல்லா இருந்தாலும் இல்லைன்னாலும் பாராட்டுவாங்களா?”
“அப்படி இல்ல சகா” – இது கார்க்கி “நல்லா இல்லைன்னா நம்ம வட்டாரத்துல சுட்டிக் காட்டுவாங்க”
“சரி... ஒரு தடவை சுஜாதா சொன்னார். அட்டையைக் கிழித்துவிட்டால் எல்லா பத்திரிகையும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு. அது மாதிரி நாம என்ன எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கா?” – இது நான்.
இதுக்கு நாயகன் கமல் பதில்தான் கார்க்கியிடமிருந்து வந்த்து. “தெரியலயேப்பா..”
“சரி.. சோதிச்சு பார்த்துடுவோமா?”
“எப்படி?”
“அடுத்தவார காக்டெயிலை என் மெயிலுக்கு அனுப்பு. நான் அவியலை உன் மெயிலுக்கு அனுப்பறேன். நீ காக்டெய்ல்ல என் அவியலைப் போடு. நான் அவியல்ல உன் காக்டெய்ல் மேட்டர்களைப் போடறேன். கண்டுபிடிக்கறாங்களான்னு பார்ப்போம்”
“ஒகே டன்”
கார்க்கி ஒப்புக்கொள்ள எக்சேஞ்ச் ஆஃபரில் ஆபரேஷன் அவியல் ஆரம்பமானது. அதன்படி ஞாயிறு இரவு அவர் எனக்கனுப்ப, நான் அவருக்கனுப்ப..
நேற்று நீங்கள் காக்டெயிலில் படித்தது என் அவியல். இங்கே அவியலில் படித்தது அவரது காக்டெய்ல்! (சரி.. சரி.. அசடு வழிஞ்சது போதும்...)
பஸ்ஸின் பின்னால் விளம்பரம், பிரபுவின் நடிப்பு, ஞானக்கூத்தன் கவிதை, ரயில்வே ஸ்டேஷன் ரசனை, ஐ.பி.எல்லின் மாஸ், குருவியார் கேள்விகள் – எல்லாம் என் படைப்பு.
ஆனா...
படு சுவாரஸ்யமா போச்சுங்க நேத்து!
7 மணிக்கு அப்லோடு பண்ணீட்டு அலுவலகம் வந்து பார்த்தா எனக்கு 21 கமெண்ட். கார்க்கிக்கு வெறும் அஞ்சு கமெண்ட்.
பதினோரு மணிக்கு கார்க்கிகிட்டேர்ந்து ஃபோன்..
“சகா ஒரு ஹேப்பி நியூஸ்”
“என்னப்பா?”
“உங்க அவியல் சூடான இடுகைக்கு போட்ட ரெண்டே மணி நேரத்துல வந்துடுச்சு”
“காக்டெய்ல்?”
“ம்ஹூம்” - இதச் சொல்லும்போது அவ்ளோ சந்தோஷம் அவருக்கு.
நானும் பார்க்கறேன்.. பார்க்கறேன்.. யாராவது என் ஸ்டைலை வெச்சு கண்டுபிடிச்சு (அப்படின்னு ஒண்ணு இருந்தாத்தானே???) காக்டெய்ல்ல ஏதாவது கமெண்ட் போடுவாங்கன்னு பார்த்தா ம்ஹூம்..
கார்க்கி வேணும்னே அஜீத் மேட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தார். நானும் பின்னூட்டங்கள்ல சிற்சில க்ளூ குடுத்திருந்தேன். அப்படியும் யாரும் கண்டுபிடிக்கல.
இதுல நர்சிம் கூப்ட்டு பேசும்போது வேற “காக்டெய்ல் படிச்சீங்களா”ன்னு கேட்டேன். “அருமையா எழுதிருக்கான் பார்த்தீங்கள்ல.. எழுத்துல ஒரு மெச்சூரிட்டி வந்துடுச்சு. ஆஹா.. ஒஹோ” ன்னு ஒரே புகழ்ச்சி. உடனே கார்க்கிக்கு கான்ஃப்ரென்ஸ் போட்டு அவனையும் கேட்க வெச்சு, நர்சிம் சந்தேகப்பட்டப்போ (யோவ்.. என்ன..ஏதோ உள்குத்து போல இருக்கு.. இன்னைக்கு நான் மாட்டினேனா) சமாளிச்சு...
கார்க்கி நேத்து பெங்களூர்ல இருந்த்தால ப்ளாக் பக்கம் வரமுடியல. அவியலுக்கு (அதாவது கார்க்கியோட படைப்புகளுக்கு) வந்த கமெண்ட் எதுவும் பார்க்க முடியல. அவருக்கு (அதாவது என் படைப்புகளுக்கு) வந்த கமெண்ட்ஸ்-ஐ மெய்ல் மூலமா பார்த்துகிட்டிருந்தாராம்! அவருக்கும் அப்பப்போ எனக்கு வந்த கமெண்ட்ஸையெல்லாம் சொல்லி...
இன்னொண்ணும் தோணிச்சு...
எழுத்துல இன்னும் எவ்ளோ தூரம் போகவேண்டியிருக்குன்னு. நம்ம எழுத்தை தனித்து அடையாளம் காண்கிறாற்போல எழுதுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன? (சீரியஸா யோசிக்கறேனோ? சரி.. விடுங்க!)
வழக்கமாவே இருந்தா அதுல என்ன சுவாரஸ்யம்க? அப்பப்போ இப்படி சின்னச் சின்ன குறும்புகள் செஞ்சு லைவ்லியா வாழறதுதான் எனக்கு இஷ்டம்.
அந்த வகையில இந்தத் திட்ட்த்துக்கு ஒப்புக்கொண்ட கார்க்கிக்கு நன்றியும்,
ஏமாத்தீட்டியேன்னு கோவிச்சுகிட்டீங்கன்னா ஸாரியும்,
‘ஏய்ய்ய்.. யூ’ன்னு செல்லமா குத்து விட ஆசைப்படறவங்களுக்கு என் தோள்களும்...