Saturday, January 30, 2010

தமிழ்ப்படம் - விமர்சனம்



ஒரு படத்தின் முதல் நாளிலேயே இத்தனை பேர் மனைவி, குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வருவதை வெகுநாட்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு தமிழ்ப்படம் டீம்!


இந்தப்படத்தின் பெயர் தமிழ்படம் என்றிருந்த. ‘ப்’இல்லாமலிருப்பது தமிழ்ப்படங்களை ஒரு வித நக்கல் செய்யும் பாணி என நினைத்தேன்.கடைசியாக ப் சேர்த்திருக்கிறார்கள்.. ஏனென்று தெரியவில்லை.

தியேட்டருக்குள் போகும்போதே பலர் ‘விளம்பரங்களைப் பார்த்தே வயிறு வலி வந்திடுச்சு. முழுப்படமும் எப்படி கலாய்ச்சிருப்பாங்கன்னு பார்க்கலாம்’ என்ற ஆவல் மேலீட்டோடு பேசிக் கொண்டே வந்ததைக் கேட்க முடிந்தது.

அவர்களின் ஆவலுக்கு சரியான தீனி போட்டிருக்கிறார்கள்!




கதை.?

தமிழ்ப்படங்களின் கதை என்ன? அதுதான் தமிழ்ப்படத்தின் கதையும்.

சினிமாபட்டி என்ற ஊரில் ஆண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்ல வேண்டுமென்பது நாட்டாமை தீர்ப்பு. (ஏன்..? படம் பாருங்கள்!) அதிலிருந்து பாட்டியால் தப்பித்து சென்னைக்கு வரும் ஹீரோ, சின்ன வயதில் மார்க்கெட்டில் மாமூல் வாங்கும் ஒரு கும்பலின் அக்கிரமத்தைப் பார்க்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. உடனேயே பெரியவனாகி (உடனேயா.. எப்படி? படத்தைப் பாருங்கள்!) போய் அந்த அக்கிரமக்காரர்களை அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவர்கள் அதே மார்க்கெட்டில், அதே டிரஸ்ஸுடன் லூட்டி அடித்தபடி இருக்கிறார்கள்!

ஹீரோ ஆயாச்சா? உடனே ஓபனிங் சாங், ஹீரோயின், லவ், அப்பா எதிர்ப்பு, முகம் தெரியா வில்லன், பழிவாங்கல், ஃப்ளாஷ் பேக், ஹீரோ அப்பாவைத்தேடி கிராமம் புகல், குடும்பப்பாட்டு, ஃபேமலி ஒன்று சேர்தல், வில்லன் கைது, கோர்ட்டில் வழக்கு, நீதிபதி தீர்ப்பு.. இத்யாதி.. இத்யாதி...

யப்பா சாமி! இப்படி படம் முழுக்க சிரிச்சு கைதட்டி ஒருத்தன் பார்க்க முடியுமா! பார்க்க வைத்திருக்கிறார்கள். சீன்களைச் சொல்வதினால் ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது.. ஆனால் அதை அவர்கள் காட்டியிருக்கும் விதம்... ..

எத்தனை சீன்களைச் சொல்லலாம்!

ஹீரோ சென்னைக்கு வந்ததைக் காட்ட - எழும்பூர் ரயில் நிலையத்தைக் காட்டுகிறார்கள். அப்போது கேமரா முன் ஒரு ஆட்டோக்காரர் வந்து வசவுகிறார் பாருங்கள்.. சான்ஸே இல்லை. இனி டைரக்டர்கள் அந்த இடத்தில் கேமரா வைப்பார்களா என்பது சந்தேகமே!

பச்சை மஞ்ச பாட்டின்போது ஒரு கீழே போடுகிறார்கள்: ‘இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா’ இரண்டு செகண்டில் அதன் கீழேயே வேறொரு வரி வருகிறது.. போய்ப் டத்தில் பாருங்கள்.

நாயகியின் அப்பா, நாயகி மீது வைத்திருக்கும் அன்பைக் காட்ட - நாயகியின் புகைப்படத்தைக் கோணலாக மாட்டிய வேலைக்காரிக்கு ஒரு தண்டனை கொடுக்கிறார். என்ன தண்டனை என்பதையும் அதற்கு அந்த வேலைக்காரி காட்டும் எக்ஸ்ப்ரெஷனையும்... ப.பா!

அதே அப்பா, காபி கொண்டு வரும் வேலைக்காரனைத் திட்டி கோப்பையைத் தட்டி விடுகிறார். ‘கேட்டா அடுத்த நிமிஷம் வரணும்டா’ என்று. இந்த சீன் எதற்கு என்று பார்த்தால்---

பின்னொரு நாள் அவரிடம் ஹீரோ சவால் விடும்போது ‘ஒரு காபி கொண்டு வா’ என்கிறார். வெளியே போகும் ஹீரோ ஒரு குட்டிப் பாட்டுக்குப் பின் பணக்காரனாகி இவர் வீட்டுக்கு வருகிறான். அந்த ஹீரோ வரும்போது, அப்பாவுக்கு காபி வருகிறது! கைகுடுங்க டைரக்டர் சார்!

ஹீரோ பணக்காரனானால் என்னென்ன அவன் பேரில் வரும்? ஸ்கூல், காலேஜ், இண்டஸ்ட்ரீஸ்? ம்ஹூம்... இதில்.. ப.பா!

காவல்துறை ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறது. அங்கே டீ கொண்டு வருபவர்... ம்ம்ம்ம்.. அஸ்கு புஸ்கு.. படத்தை பாருங்க! அதேபோல அந்த மீட்டிங்கிலேயே ஒரு கருப்பு ஆடு இருப்பதை ஹீரோ கண்டுபிடித்து தோலுரிப்பதும் அருமை!

க்ளைமாக்ஸில் ஹீரோ மருத்துவமனையில் இருக்கிறார், ஹீரோயின் வில்லனால் சுடப்படுகிறார்.. ஹீரோ வந்து காப்பாற்றுவாரில்லையா? அப்படித்தான் இதிலும். ஆனால் அவர் வருவதற்கு நடுநடுவே ஒன்றைக் காட்டுகிறார்கள் பாருங்கள்...


ஹீரோவின் வீடு - அட்டகாசம்.

அப்பாவைத் தேடிப்போகும் ஹீரோவின் குடும்பப்பாடலாய் ஒரு பாடலைப் போடுகிறார்கள். தியேட்டர் அடங்க மறுக்கிறது. அவ்வளவு க்ளாப்ஸ்!

ஹீரோ ஒவ்வொருவரையும் கொல்ல போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் படு சுவாரஸ்யம்!

கஸ்தூரி - இவ்வளவு செக்ஸியாய் ஸ்லிம்மாய்.. ஒரு பாடலுடன் போகிறாரே என ஏங்க வைக்கிறார். ஓ மகஸீயா, பச்ச, குத்துவிளக்கு, ஒரு சூறாவளி எந்தப் பாடலும் தியேட்டரில் சொதப்பவில்லை. ஓ மகஸீயாவில் டாலாக்கு டோல் டப்பிமா வரிக்கு சிவாவின் எக்ஸ்ப்ரஷனுக்கு தியேட்டர் குலுங்குகிறது.

அதேபோல அந்த டூயட் முடிந்தபின், தோளில் பையுடன் வீட்டுக்கு வரும் சிவாவை ‘எங்கடா ரெண்டு நாளா ஆளைக் காணோம்’ என்று பாட்டி கேட்க, ‘ஒரு டூயட்டுக்கு கொழும்பு போயிருந்தேன் பாட்டி’ என்கிறார் பாருங்கள்.. அசத்தல்!





சிவாவைத்தவிர வேறு யாருமே இந்த கேரக்டருக்குப் பொருந்துவார்களா என்பது சந்தேகமே. ஹீரோக்களின் அலட்டலை தன் அலட்டாத நடிப்பில் காண்பித்து பின்னி எடுத்துவிட்டார். என்ன.. சில சீன்களில் ரொம்பவும் லோ வாய்ஸில் பேசுகிறாரா... தியேட்டர் சிரிப்பொலியில் ஒன்றுமே கேட்பதில்லை.

ஒவ்வொரு சீனிலும் இது எந்தப்படத்திற்கான கிண்டல் என்று சுவாரஸ்யமாக தியேட்டரில் பார்வையாளர்கள் பேசிக் கொள்வதிலிருந்தே படத்தின் வெற்றி கணிக்கப்பட்டுவிட்டது.

வசனம். கே. சந்துரு. (சொல்லியே ஆகணும். எனக்கு பின்னூட்டமெல்லாம் போட்டிருக்காரு இந்த மனுஷன்!) சூப்பர்! (இது பின்னூட்டம் போட்டதால இல்ல என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்வீர்கள்!) எல்லாமே டைமிங் காமெடி வசனங்கள்தானே என்றில்லாமல் மிகுந்த சிரத்தையோடு எழுதியிருக்கிறார். குறிப்பாக கிராமம் பற்றி சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள்.

இந்த ஹீரோ என்ற வகைதொகையில்லாமல் எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தாலும் எதுவுமே புண்படும்வகையில் இல்லாமலிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

தட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது. உள்ளே போகும்போதும் வரும்போதும் இவ்வளவு உற்சாக முகங்களைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது.

தமிழ்ப்படம் நல்லால்ல என்று இனி யாரும் சொல்ல முடியாது!


தமிழ்ப்படம் - சரவெடி சிரிவெடி!




.

Saturday, January 23, 2010

கனலி

அவர் என் பதினைந்து வருடகால நண்பர். முகம்மது உசேன் அவர் பெயர். உடுமலைப்பேட்டையில் வ.ஊ.சி. வீதியில் ‘கனலி கலைக்கூடம்’ என்ற பெயரில் ஆர்ட்ஸ் நடத்தி வந்தார். மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர். பெரியாரின் கொள்கைகளில் பிடிப்பானவர். கனலி என்றுதான் அவரை அழைப்போம்.

சின்னக் கடை. ஆனால் எங்கள் நட்பு வட்டாரத்திற்கு விசாலமான இடமாக அந்தக் கடை இருந்தது. கனலி நிஜமான ஒரு கலைஞன். மனிதன். ரசிகனாய் வாழ்க்கை நடத்தி வந்தார். நான், செந்தில், செந்தில்குமரன் என்று எங்களைச் சார்ந்த யாருக்கேனும் ஏதேனும் மன உளைச்சலோ, சங்கடங்களோ இருப்பின் அவரைத் தேடி ஓடுவோம்.

"வாங்க கிருஷ்ணா.. பாட்டு கேக்கலாமா?" என்பார். இரண்டு பெரிய ஸ்பீக்கர் கொண்ட அசெம்பிள் செய்யப்பட்ட ப்ளேயர் வைத்திருந்தார். எங்களுக்கென்றே ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்ட இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் வைத்திருப்பார். ‘ஆலோலம் பாடி..’ என்று இசைஞானியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தால் எங்கள் உலகம் வேறு திசை நோக்கி பயணிக்கும். இசை குறித்த கலந்துரையாடலில் ஆரம்பித்து உலகின் எல்லா சப்ஜெக்ட்டுகளையும் அலசி ஆராய்வோம். ஏதேனும் போர்டு வரைந்து கொண்டே எங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார் கனலி.

படம் வரைவதிலோ, போர்டுகள் எழுதுவதிலோ இறங்கிவிட்டால் முழு மனதுடன் பணி புரிவார். எளிதில் திருப்திப்பட மாட்டார். அவரது சொந்தக் கடை விளம்பர போர்டு வைப்பதற்கு என்ன அக்கறை எடுப்பாரோ அதே அக்கறையை ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வரும் முகம் தெரியாத ‘திருவிழா வருதுங்க. நம்ம ரசிகர் மன்றம் சார்பா ஒரு தட்டி வைக்கணும்’ என்று வரும் ஆர்டர்களுக்கும் காட்டுவார். நான் குற்றங்கள் கண்டுபிடித்தே பழக்கப் பட்டவன். நான் போகும்போது என்ன எழுதி/வரைந்து கொண்டிருந்தாலும் சரி நான் ஏதாவது சொல்வேனா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்.

ரேட்டில் கறாராக இருப்பார். ‘மத்த பக்கம் இப்படி அப்படி’ என்று வாடிக்கையாளர்கள் சொல்லும்போது சின்ன புன்னகையோடு தலையாட்டுவார். சொன்ன நேரத்திற்கு ஆர்டரை முடிப்பது, பில் கொடுப்பது, ஒரு ஆர்டருக்கான படங்களுக்காக பழைய புத்தகக்கடைகளில் அலைந்து படம் தேர்வு செய்வது என சின்னத் தொழிலானாலும் ஒரு கார்ப்பரேட் அம்சங்களுடன் நடத்துவதில் அவருக்கு பிரியம் அதிகம்.

கடைக்கு காலை பத்து மணிக்குத்தான் வருவார். தனது டி.வி.எஸ்-சில் கூலிங்க்ளாசுடன் வந்து கடைதிறந்து அன்றைய வேலைகளைத்திட்டமிடுவார். தனது வண்டியை அப்படி பார்த்துப் பார்த்து வைத்திருப்பார். தினமும் துடைத்து பளபளப்பாயிருக்கும். வெளியில் வேலை என்றால் கடைமுன் வைத்திருக்கும் சின்ன கருப்பு போர்டு ஒன்றில் எங்கே வேலை செய்துகொண்டிருக்கிறார், எத்தனை மணிவரை அங்கிருப்பார் என்று எழுதிவைத்துவிட்டு தான் கிளம்புவார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கானது. கேரம்போர்டில் உட்கார்ந்தால் மாலை வரை விளையாடுவார். ஏதாவது படத்திற்கு ஈவ்னிங் ஷோ போகாமலிருக்க மாட்டார்.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன் "ப்ளக்ஸ் பேனரெல்லாம் வந்துடுச்சு கிருஷ்ணா. இனி இந்தத் தொழில்ல காலத்தை ஓட்டறது கஷ்டம்தான். நானும் திருப்பூர் வர்லாம்னு இருக்கேன்" என்றார். கடையை மூடிவிட்டு குடும்பத்தோடு திருப்பூர் வந்தார். சொந்தக்காரர் ஒருவரின் மீன் கடையில் இரவு பகல் பாராது வேலை செய்து வந்தார். ஒரு முதலாளியாக கடை நடத்திக் கொண்டிருந்தவரை கொதிக்கும் எண்ணைச் சட்டி முன் கரண்டியோடு தினமும் பார்ப்பது கொடுமையான விஷயம். அவருக்கு ஏற்ற வேலை தேடிக் கொடுக்க எனக்கு சிரமமாக இருந்தது. பெரிய நிறுவனங்களில் சேர்த்துவிட்டால் ஏதேனும் ஒரு இன்சார்ஜுக்கு கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சின்னதொரு கம்பெனியில் முதலாளிக்கு அடுத்து இவர் இருக்கும்படியான ஒரு போஸ்ட்டில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து மாறி இப்பொழுது சின்னதொரு பிரிண்டிங் யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

அவர் கடை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது `dr ஆர்ட்ஸ்' (இவரும் எங்கள் நண்பர்தான்!) நடந்துவருகிறது. கம்ப்யூட்டர் ஒன்று வைத்து, ப்ளக்ஸ் போர்டு டிசைன் செய்து வருகிறார் DR. கனலி இருக்கும்போது ரோட்டிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் ஒரு பெரியாரின் படத்தை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது மலேசியா முருகன் ப்ளக்ஸில் பிரம்மாண்டமாய் நிற்கிறார். (‘பில்லா படத்துக்கு வெச்சதுங்க’)

சில மாதங்களுக்கு முன் செந்திலுடன் வீட்டிற்கு வந்தார் கனலி. பேசும்போது அவரைப்பற்றி சொன்னார்..

"எப்படி இருந்தேன் கிருஷ்ணா நான்? ஒரே மாசத்துல புரட்டிப்போட்ட மாதிரி ஆய்டுச்சு என் வாழ்க்கை. நான் சொல்றத மட்டும்தான் நான் கேட்டுட்டு இருந்தேன். இப்போ அப்படி முடியல கிருஷ்ணா. எல்லார்கிட்டயும் பொறுமையா இருக்கவேண்டியதாயிருக்கு. இதுதான் வாழ்க்கை. பிரிண்டிங் ஆர்டர் எடுத்துட்டு அம்பது கிலோ, அறுபது கிலோ மூட்டையை என் வண்டில வெச்சுட்டு ஓட்ட முடியாம ஓட்டி, இந்த ரெண்டு வாரத்துல மூணு தடவை விழுந்துட்டேன். வண்டி எப்படி வச்சிருந்தேன்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க. முன்னாடி டயர்ல உள்ள இருக்கற ட்யூப் தெரியுது. மூட்டையை சுமந்துட்டு மாடில இருக்கற பிரிண்டிங்குக்கு தனி ஆளா ஏறி கொண்டுபோறேன்.. மூவாயிரத்தி ஐநூறு ரூபா சம்பளம். அதுல எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வாழ்ந்துட்டிருக்கேன். சினிமாக்கு போறதில்லை, பாட்டு சி.டி. வாங்கறதில்ல, புத்தகமெதுவும் வாங்கறதில்லை, மனைவி, குழந்தைகளை வெளில கூட்டிப் போறதில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட எனக்காக ஒதுக்க முடியல. ஒரு கலைஞனா இருந்த நான், இப்படி இருக்கேன். மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்."

செந்திலும், நானும் அவருடன் கிளம்பி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கனலியை அனுப்பிவிட்டு வரும்போது எப்போதும் கண்ணில் படும் சில ப்ளக்ஸ் பேனர்கள் கண்ணில் பட்டது.

இப்போது அவை வேறு மாதிரி தெரிந்தது.


.

Friday, January 22, 2010

க்ரிக்கெட்டும் நானும்

நேற்று (இன்றெழுதப்பட்ட (21 ஜன. ‘10) இந்தப் பதிவு நாளை (22 ஜன) வருமானால் இந்த நேற்றை ‘நேற்று முன்தினம்’ என திருத்தி வாசிக்கவும்!) ஜெயா ப்ளஸ் சேனலில் க்ரிக்கெட் பற்றிய ஓர் அலசலில் ச.நா.கண்ணனுடன் நண்பர் முரளிகண்ணனும் பங்கேற்று சிறப்பாகப் பேசினார். முதலில் அவருக்கு வாழ்த்துகள்.

அழைத்துப் பாராட்டி ‘ஏங்க என்கிட்ட சொல்லவேல்ல? கார்க்கி சொல்லித்தான் தெரிஞ்சது’ என்றபோது உங்களுக்கு க்ரிக்கெட் பிடிக்குமான்னு தெரியல அதான் சொல்லல’ என்றார்.

இந்தா பிடி, அடுத்த பதிவுக்கான மேட்டரை என்று சொல்வது போல இருந்தது அவர் பதில். அதனால் இதோ எனக்கும் க்ரிக்கெட்டுக்குமான ஸ்னானப்ராப்தி:




ன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.

விளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன்? அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல!) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.

அடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்!) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்?’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)

டிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா!)

அதுக்கப்பறமா நான் டிவில கிரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.

அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ!) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.

அதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.

இன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா?’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.

அவ்ளோதான் நம்ம புராணம்!


.