Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Monday, February 9, 2015

சாருவுடன் ஒரு சந்திப்பு

12வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் இனிதே நிறைவுற்றது. திருப்பூர் போன்ற ஒரு தொழில்நகரத்தில் வாசிக்கும் பழக்கம் மிக மிக அவசியமாகிறது. எந்நேரமும் தொழில் குறித்த சிந்தனையும், கொஞ்சமும் ஓய்வில்லாத மனவோட்டமும் கொண்ட மனிதர்களிடையே வாசிப்பு குறித்த உணர்வை, ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி மூலம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் பின்னல் புத்தக நிலையத்திற்கு பாராட்டுகளும், அன்பும்.

***

நாசர், மனுஷ்யபுத்திரன், பூமணி, சாருநிவேதிதா என்று இந்த வருடம் விஐபிக்களின் வருகையால் மகிழ்வுற்றனர் வாசகர்கள்.
“நாம மீட் பண்றது இதான் மொத டைம்ல?” என்றார் சாருநிவேதிதா, என்னை நண்பர் அவரிடம் அறிமுகப்படுத்தியபோது. நான் ஏதேதோ உளறினேன் என்றாலும் இதுதான் முதல்முறை அவரை சந்திப்பது. ஆனால் அப்படி நினைக்காமல் இருக்க வைத்தது அவருடன் உரையாடிய நிமிடங்கள்.



நான் அப்படி ஒன்றும் பெரிய ஆளில்லையெனினும்,
“ஓ.. நீங்கதான் அவரா?” என்று ஒரு கெத்தாகக் கேட்டுவிட்டு போய்விடாமல், ஞாபகம் வைத்திருந்து உரையாடிய சாரு நிச்சயம் வித்தியாசப்பட்டுக் கவர்ந்தார்.


***



திருப்பூரின் எழுத்தாளர் லெனினின் பங்களிப்பு நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஸ்டால் போட குழி தோண்டிய நாளிலிருந்து, முடியும் நாள் வரை அவர் வீட்டுக் கல்யாணம் போல பாவித்துக் கொண்டிருந்தார். அறிந்த முகங்களை வரவேற்பது, விருந்தினர்களை உபசரிப்பது, கூட்டம் எத்தனை என்று அவ்வப்போது மேடை முன்னிருக்கும் பார்வையாளர்களை எண்ணிப் பார்த்துக் கொள்வது, யாருக்காவது ஏதாவது உதவி என்றால் முகத்தைப் பார்த்தே, ‘என்னாச்சுங்க’ என்று ஓடிப் போய்க் கேட்டு உதவுவது என்று அனைத்தனையும் புன்னகை மாறாத முகத்தோடு செய்து கொண்டிருந்தார்.

சனிக்கிழமை சாருவை காரில் அனுப்பிவிட்டபிறகு,  எழுத்தாளர்கள் பாரதி சுப்பராயன், செல்வகுமார் பழனிச்சாமி மற்றும் லெனினுடன் டின்னர். சுவையான அரட்டையோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், லெனின் மட்டும் கொஞ்சம் சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு கேட்டேன்:

“என்னாச்சுங்க.. என்னமோ மாதிரி இருக்கீங்க?”

“ஆமா பரிசல். கொஞ்சம் வருத்தமா இருக்கு”

“ஏன்?”

“கூட்டம் கொஞ்சம் கம்மி இன்னிக்கு. என்னான்னு தெர்ல. அதுபோக நாளையோட கண்காட்சி வேற முடியுது. இனி அடுத்த வருஷம்தான்” என்றார்.

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கண்காட்சி குறித்த சிந்தனையோடேதான் திரிந்தார்.

**

ண்பர் கவின் ஆசிரியராய் இருக்கும், “பாஷோ’ ஹைக்கூ இதழை திங்களன்று மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். போலவே சனிக்கிழமை ட்விட்டர் நண்பன் “செல்வு எஃபெக்ட்” புகழ் செல்வா அழைத்தான்.

“அண்ணே.. எங்கிருக்கீங்க?”

“ஆஃபீஸ்ல. என்னாச்?”

“என்னோட எலி நாவலை சாரு கொஞ்ச நேரம் முந்தி வெளியிட்டுட்டார். இங்க வருவீங்களா?”

“கொஞ்சநேரத்துல அங்கிருப்பேன்” என்று சென்றேன்.

வெளியிட்ட உடனே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. முன்னுரையை எழுதிக் கொடுத்திருந்தேன். என் புத்தகத்திற்கும், இதற்கும் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதாய்ப் பட்டது. முக்கியமான ஒற்றுமை எழுத்துப் பிழைகள். கிருஷ்ணகுமாரை, கிருஷ்ணக்குமாராக்கியது உட்பட சில. இதை ஜாலியாகத்தான் சொல்கிறேன் என்பதற்காக இங்கே ஒரு ஸ்மைலியை கற்பனை செய்துகொள்ளுங்கள். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் புத்தகத்தைப் பார்த்ததும் ஏற்கனவே வேறொருவர் மூலமாக இந்தப் புத்தகம் குறித்து அறிந்ததையும், புத்தகத்தின் ஃபாண்ட் உட்பட சிலது குறித்தும் அவர் உரையாடியது செல்வாவுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என அவதானிக்கிறேன்.

விஜய்யின் அடுத்தபடம் புலி. வடிவேலுவின் அடுத்தபடம் எலி என்கிற சூழலில் இந்த நாவல் வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாங்கி, ஊக்குவிக்குமாறு கே.கொ.

**

னவரி 30லிருந்து ஃபிப்ரவரி 8 வரை பத்து நாட்கள் நடைபெற்றாலும், நாசர் வந்த - கடந்த - ஞாயிறுதான் கூட்டம் என்றார்கள். சினிமா பிரபல்யம். இது குறித்து லெனினுடன் பேசிக் கொண்டிருக்கையில், ‘சினிமால மாஞ்சு மாஞ்சு புக் படிக்கற ஆளுக நிறைய இருக்காங்க. அடுத்தவாட்டி அவங்களையெல்லாமும் கூப்டணும்’ என்று பேச்சு வந்தது. ராஜேஷ், கரு. பழனியப்பன், கிட்டி, மிஷ்கின் என்று பல பேர் அடிபட்டது.

அடுத்தவருடத்திற்கு இன்னும் 365 நாட்களிருக்கிறது. அதற்குள் எப்படியாவது நயன்தாராவோ, நமீதாவோ நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சொல்லவில்லை.

**

Wednesday, May 11, 2011

திருப்பூரில் என்ன நடக்கிறது?

திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று விரிவாக எழுத நிறைய இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

சின்ன நிறுவனங்களெல்லாம் பூட்டுப் போடப்பட்டன. பெரிய நிறுவனங்கள் தங்கள் சில கிளைகளை நிறுத்திக் கொண்டன. சின்ன நிறுவனங்களுக்கு கொடுத்த ஆர்டர்களைக் குறைத்துக் கொண்டன. பல தொழிலாளர்கள் பணியிழந்தனர். இதுவரை லட்சத்துக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகள் முகவரி மாற்றத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பல பள்ளிகளில் இந்த ஆண்டு முடிந்ததுமே மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.

இதற்கெல்லாம் காரணம்?

ஒன்று: சாய ஆலைப் பிரச்சினை

சாய நீர்க்கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் பல விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக, நீராதாரம் பாதிக்கும் இச்செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததோடு சாயக் கழிவை முறையாக வெளியேற்றம் செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கோரியது. அது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை. சுத்திகரிக்கப்பட்ட சாயக்கழிவு நீரை கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு அரசைக் கோரியது. சுத்திகரிப்பை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு அதற்கான இயந்திரங்களைப் பொருத்தி தங்கள் வேலையை முடித்துவிட்டன. ஆனால் கடலில் கலப்பது என்ற திட்டம் கூட ஓகே.. ஆனால் ZERO DISCHARGE எனப்படும் எந்த நாட்டிலுமே இல்லாத திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறார்கள். ZERO DISCHARGE எனப்படுவது சாயக்கழிவை எங்கும் கலக்காமல் ஆவியாக்கும் திட்டம். கடலில் கலக்கும் திட்டத்திற்கு இரண்டாயிரம் கோடி செலவில் திட்டப்பணி தயாரான போதும் அரசு இதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை.

சாய ஆலைகள் பல மூடப்பட்ட நிலையில்- நிறுவனங்கள் பல, லூதியானா, ஃபரிதாபாத், அகமதாபாத், பாம்பே, கல்கத்தா, கூர்கான் போன்ற நகரங்களில் தங்கள் துணி சாயமிடும் பணிகளை மேற்கொண்டன. இதனால் திருப்பூரின் பல தொழிலாளர்கள் பணியிழந்தனர். துணி இல்லாததாலும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் சிலவும் பூட்டுப் போட்டன. பெரிய நிறுவனங்களும் நேரத்திற்கு துணி இல்லாததால், குறைவான பணி நேரத்தையே வழங்க முடிந்தது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் சொந்த ஊருக்கே புறப்பட்டனர்.

இரண்டு: நூல் விலையேற்றம்

விலையேற்றத்தில் நூல் - தங்கத்தோடு போட்டி போட ஆரம்பித்தது. நூல் விலையைக் காரணம் காட்டி பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு கேண்டி (356 கிலோ) நூல் 18000 ரூபாயிலிருந்து மூன்றே மாதத்தில் ரூ. 67000ஐத் தொட்டது. இதனால் நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஒப்புக் கொண்ட விலைப்புள்ளியில் பனியன் ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர் வெளியேற்றங்கள் நிகழ்ந்தன.

இப்போது நூல் விலை கீழிறங்கத் தொடங்கியுள்ளது. ஒரு கேண்டி ரூ.42000/- வரை எட்டியுள்ளது. இன்னும் குறையும். எனின், நூற்பாலை அதிகமுள்ள ஆந்திரா போன்ற இடங்களில் அதெப்படி நூல் விலையைக் குறைக்கலாம்? நாங்கள் நூல் நெய்வதற்கான மூலப்பொருட்களை வாங்கியாகி விட்டது ஆகவே பழைய விலையிலேயே கொடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றன. அதே நிறுவனங்கள் விலையேற்றத்துக்கு இந்த மாதிரிச் சொல்லவில்லை.

மூன்றாவதாக தொழிலாளர்கள் மனநிலையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். திருப்பூரின் இந்தச் சூழலிலும் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களது மனப்பாங்கு அந்த வாரத்திற்கான செலவுக்கு காசு கிடைத்தால் சரி என்பதிலேயே இருக்கிறது. நிறுவனங்கள் சம்பள உயர்வை அறிவித்து, உயர்த்திக் கொடுத்தாலும் அதன்மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொண்டு முன்னேறுபவர்கள் வெகு சிலரே. பலர், தேவையற்ற விடுப்பு எடுக்கவே சம்பள உயர்வைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் உற்பத்திக் குறைவு, பணத்தட்டுப்பாடு இரண்டையும் நிறுவனங்கள் சந்திக்கின்றன. தங்கள் திறன்பாட்டை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க ஒரு சில தொழிலாளர்கள் பாடுபட்டாலும், ஆயத்த ஆடைத் தயாரிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதால் அது எந்தப் பயனையும் தருவதில்லை.




உதாரணத்திற்கு, ஓர் உற்பத்தி வரிசையானது 24 தையல் கலைஞர்களைக் கொண்டது என வைத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வடிவிலான ஆடைத் தயாரிப்புப் பணியைத் தொடங்கி, அது முடியும் வரை அதிலுள்ள அனைவரும் விடுப்பின்றி வந்தால், ஒரே அளவிலான உற்பத்திப் பெருக்கம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட அளவு விடுமுறையோ, குறிப்பிட்ட அளவு சில தொழிலாளர்களின் பணிக்குறைவோ உற்பத்தியை பாதிக்காது. ஆனால் அந்த புதிய தயாரிப்பு ஆரம்பித்து முடிவடையும் இடைப்பட்ட காலத்தில் (ஆடை வடிவமைப்பைப் பொறுத்து ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை ஆகலாம்) தேவையற்ற விடுப்புகள், குறைந்த அளவிலான திறன்பாடு ஆகியவற்றால் தொழிலாளர்களை மாற்றி மாற்றி அந்த புதிய வரிசையில் அமர வைத்தால் ஒருவாரத்தில் முடிய வேண்டிய அத்தயாரிப்பு இரண்டு வாரங்களுக்கு நீள்கிறது. இதெல்லாம் தொழிலாளர்கள் மனநிலையால் நிர்வாகம் சந்திக்கிற பிரச்சினைகள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டியும் திருப்பூர் பிழைக்குமா?

நிச்சயம் எழும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். நிலைமை சீராகி, வெளிநாட்டு வர்த்தகர்கள் தாங்கள் கேட்கும் விலைபுள்ளியை ஏற்றுக் கொண்டு பணியைக் கொடுக்குமென்கிறார்கள். அப்போது திருப்பூருக்கு மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்வது உறுதி என்கின்றனர்.


இந்த இடத்தில் ஒரு சம்பவம்.


சென்ற வாரத்தில் ஒரு நாள். சாலையில் சென்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னே ஒருவர் பைக்கில் மிகவும் மெதுவாக இடதுபுறக் கடைகளை நோட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்தார். பார்த்தால் பல வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த (பழைய)நிறுவனத்தில் தையற்கலைஞராக பணியில் சேர்ந்து, பின் காண்ட்ராக்டராக இருந்தவர்.

என்னைப் பார்த்ததும் ‘சார்.. நல்லா இருக்கீங்களா’ என்றபடி பைக்கை நிறுத்தினார். நானும் நிறுத்தினேன்.

“எப்படி இருக்கீங்க.. என்ன கடையைத் தேடிட்டிருக்கீங்க?” என்றேன்.

“இல்லைங்க.. ஆறேழு கிலோமீட்டர் வந்துட்டேன். நகை அடகுக் கடை எதாவது இருக்கான்னு பார்த்துட்டு. ஒண்ணும் இல்லை” என்றார்.

அன்றைக்கு சனிக்கிழமை. சம்பள நாள். காண்ட்ராக்டர்கள் தங்களிடம் பணி புரியும் 25-30 பேருக்கான சம்பளத்திற்காக அல்லாடும் நாள். அதுவும் சமீபத்திய நிலையில் நிறுவனங்கள் வாரச் சம்பளத்தை தாமதமாகவே தருகின்றன. ஆக அதைச் சமாளிக்க அடகுக் கடை தேடி அலைகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

‘ஒண்ணும் நிலைமை சரியில்லை இல்லியா? எப்படியாச்சும் இன்னைக்கு நீங்க சம்பளம் குடுத்துதானே ஆகணும்?’ என்று கேட்டேன்.

அவர் சொன்னார்: “இல்ல சார்.. நான் இப்ப காண்ட்ராக்டை விட்டுட்டேன். ஒரு வருஷமாச்சு.”

“ஓ…” – அப்ப வேலை இல்லாததால குடும்பத்தை சமாளிக்க அடகுக் கடை தேடறாரோ..?

என் எண்ணத்தில் இடைமறித்த அவர் சொன்னார்: ‘உங்களுக்குத் தெரிஞ்சு இந்த ஏரியாவுல எங்க அடகுக்கடை இருக்கு சார்?’ என்று கேட்டார்.

நான் சொன்னேன். “பானு மெடிக்கல் பக்கத்துல ஒண்ணு பார்த்தேன். அத விட்டா KVB தாண்டி ஒரு கடை பார்த்தமாதிரி ஞாபகம்”

“சரிங்க சார்.. அதே மாதிரி பார்த்தீங்கன்னா – உழவர் சந்தைக்கு எதிர்ல டாஸ்மாக் இருக்கு. பக்கத்துல எந்த புரோட்டா கடையும் இல்லை இல்லீங்களா?:” என்றார்.
இது சம்பந்தமில்லாத கேள்வியாகப் பட்டது எனக்கு. அடகுக் அடை தேடிக் கொண்டிருந்தவர் திடீரென்று புரோட்டாக் கடை பற்றி விசாரிக்கிறாரே என்று.

“தெரியலைங்க.. ஆமா.. எதுக்கு அடகுக்கடையும், புரோட்டா கடையையும் தேடறிங்க?”

“இல்ல.. திருப்பூர் டௌனாய்ட்டு வருது சார்.. இந்த காண்ட்ராக்ட் வேலையெல்லாம் ஆகாது இனி நமக்கு. இந்த ஏரியாவுல ஒரு அடகுக்கடையும், டிஃபன் ஸ்டாலும்நானும் அண்ணனும் சேர்ந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் சார்.. அதுதான் தேடறேன்”

ஆறேழு வருஷத்துக்கு முன் இரு சக்கர வாகனம் கூட இல்லாமல் திருப்பூர் வந்தவர். ‘சான்ஸ் கிடைச்சா போதும் சார்.. வேலையைக் கத்துகிட்டு நான் என் வாழ்க்கைல நல்ல இடத்துக்கு போவேன்’ என்றவர். இன்றைக்கு சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.

இவரைப் போல உழைப்பாளர்களை கொண்டாடும் நகரம் திருப்பூர். இவரைப் போன்றவர்களால் முன்னேறியதுதான் திருப்பூர். ஆகவே இதற்கு அழிவில்லை.


.