Showing posts with label செக்ஸ். Show all posts
Showing posts with label செக்ஸ். Show all posts

Tuesday, November 11, 2008

செக்ஸ்தான் காரணமா?

அந்தப்பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஒரு மகள், ஒரு மகன். கணவன் திருப்பூரிலேயே ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்தவாரத்தில் ஒருநாள் மகளையும், மகனையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனக்குப் பிடித்தமான வேறொருவனோடு - அவனும் மணமானவன் - போய்விட்டாள் அவள்.

“குழந்தைக ரெண்டு பேரையும் தம்பி வீட்டுல விட்டிருக்கேன்ணா. தம்பி சம்சாரம் காலைல சாப்பாடு செஞ்சு வெச்சுட்டு வேலைக்குப் போகணும்னு போய்ட்டா. குழந்தைகளை ஸ்கூலுக்குக் கிளப்பறதுக்குள்ள ரொம்ப சிரமப்பட்டுட்டேன்ணா. சின்னவன் யூனிஃபார்மே போடமாட்டீங்கறான்” என்றான். 'பொண்டாட்டியைத் தேடலியா' என்றதற்கு.. “ஸ்டேஷன்ல கம்ப்ளெண்ட் பண்ணியாச்சு. அவ எனக்கு வேணாம். ஆனா என்னமாச்சும் ஆய்டுச்சுன்னா நான் பொறுப்பில்லன்னு தெரியறதுக்காக ஸ்டேஷன் போனேன்”

“குழந்தைகளை உங்க ஊர்ல விடலாமே”

“எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வயசாய்டுச்சு. கண்ணும் தெரியறதில்ல. அதுமில்லாம அவங்க ஊர்ல இருந்து வந்து இங்க இருக்க ஒத்துக்கவே மாட்டாங்க. நீங்க யோசிச்சு நான் என்ன பண்றதுன்னு சொல்லுங்கண்ணா” என்று அந்தக் கணவன் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனான். குழந்தைகளை ஹாஸ்டலில் தங்கவைக்கலாம் என்று விசாரித்ததில் சிறியவன் யூ.கே.ஜி. எங்கும் சேர்க்க மறுக்கிறார்கள். இப்போது மணி இரவு 12. இதுவரை என்னிடம் விடையில்லை.

திருப்பூர் என்றாலே இந்தமாதிரி சமாச்சாரங்கள் சர்வசாதாரணம் என்பது போலப் பேசுகிறார்கள் போலிஸ் ஸ்டேஷனில். இல்லை மற்ற ஊர்களிலும் இதே நிலைதானா எனத் தெரியவில்லை.

இங்கே வேலைக்கு வரும் பெண்களுக்கு ஆண் நட்பு எளிதில் கிடைத்துவிடுகிறது. படிப்பறிவு குறைந்த, வெளியுலகை அதிகம் பாராத பெண்கள் வெகு சுலபமாக ஆண்களின் வலைக்குள் விழுந்துவிடுகின்றனர். சொல்வதற்கும், கேட்பதற்கும் கஷ்டமாக இருந்தாலும் இன்னொரு முகத்தில் அறைகிற உண்மை, சில பெண்களும் சும்மாயிராமல் ஆண்களை சீண்டிவிடுவதும் நடக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் புகார்களை அவர்கள் எங்கே சொல்வார்கள்? எங்கள் நிறுவனம் உட்பட, பல நிறுவனங்களில் இதற்காக ANTI HARASSMENT COMMITTEE இருக்கிறது. செயல் ரீதியாகவோ (டிஃபன் பாக்ஸைப் பிடுங்குவது, தகாத இடங்களில் தொடுவது), சொல் ரீதியாகவோ (கமெண்ட் அடிப்பது..) வேறு வகையிலோ (விசில், சைகை) பெண்களை துன்புறுத்தும் ஆண்கள் குறித்து, அவர்கள் அந்தக் கமிட்டியில் புகார் அளிக்கலாம். அந்தக் குழுவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பெண்களும், தொழிலாளர்களைச் சார்ந்த பெண்களும் இடம் பெற்றிருப்பார்கள். அது மட்டுமின்றி, மாதம் ஒரு முறை மீட்டிங் நடத்தி நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் கலந்து பேசும்போதும் குறையிருப்பின் கூறலாம்.

ஆனால் சில உண்மைகள் வேறு மாதிரி முகத்தில் அறைகிறது.

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. ஒரு பிரிவில் பணி புரியும் 20 வயதுள்ள ஒரு பெண் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து ஒரு பெண்மணியின் பெயரைச் சொல்லி ‘அந்தம்மா இன்னைக்கு வேலைக்கு வந்திருக்காங்களான்னு பாருங்க சார்’ என்றாள். பார்த்தேன். இல்லை. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. காரணம் அந்தப் பெண்மணி எங்கள் நிர்வாகத்தின் பேருந்தில்தான் வருகிறார். விசாரித்ததில் அன்றைக்கும் பேருந்தில் ஏறியிருக்கிறார். ஆனால் உள்ளே வரவில்லை. மறுபடி அந்தப் பெண்ணை அழைத்துக் கேட்டபோது வேறொரு பிரிவில் பணிபுரியும் ஒரு ஆளின் பெயரைச் சொல்லி ‘அவரு இருக்காரான்னு பாருங்க’ என்றாள். இல்லை..

“அவரு தினமும் கம்பெனிக்கு முந்தின ஸ்டாப்ல நின்னுகிட்டு இந்தம்மாவை இறங்கச் சொல்லிகிட்டிருக்காரு. இன்னைக்கு இறங்கிடுச்சு. ரெண்டு பேருமா காங்கயம், சிவன்மலைன்னு சுத்தறாங்க’ என்றாள். கொடுமை என்னவென்றால் இருவரும் திருமணமானவர்கள். (தனித்தனியாக!)

இவள் பெயர் வரக்கூடாது என்று அடுத்தநாள் தனியாக விசாரணை நடத்தி, இருவரையும் பணியிலிருந்து நிறுத்தி விடுவது உத்தமம் என முடிவாகும் தறுவாயில் சம்பந்தப்பட்ட பெண்மணி என்னிடம் தனியாக எனக்கு தகவல் சொன்ன அந்த 20 வயதுப் பெண் பெயரைச் சொல்லி, ‘அவதான் வத்தி வெச்சிருப்பா. சிறுக்கி நாயி’ என்று திட்ட ஆரம்பித்தாள். எனக்கு கடும் கோபமாக வரவே ‘ஏம்மா, நீ கம்பெனி பஸ்ல வர்ற. இங்கெ வரேன்னு வேறெங்காவது போய் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்காளுக இங்க வந்துதானே கேள்வி கேப்பாங்க. நீ பஸ்ல வர்றது தெரியாதா எங்களுக்கு’ என்று திட்டினேன். பிறகு பேசிக்கொண்டே இருந்ததில் அவள் சொன்னாள்.. “அவன்கூட நான் ரெண்டு மூணு தபா போயிருக்கேன். இவளும்தான் கூட வருவா. கொஞ்ச நாளா என்னைத் தனியா கூட்டீட்டுப் போ’ன்னு இவன்கிட்ட கேட்டிருக்கா. இந்தாளு அவளை சும்மா துணைக்குத்தான் கூட்டீட்டுப் போவான். அவளைத் தனியா கூட்டீட்டுப் போகலைன்னு கோவத்துல வத்தி வெச்சுட்டா” என்றாள்.

பெண்கள் சிலரை விட்டு விசாரித்ததில் அது உண்மைதான் எனத் தெரியவந்தது. அந்தச் சின்னப் பெண் சொல்லியிருக்கிறாள்... “என்னையும் கூட்டீட்டுப் போவாங்க. சிவன்மலைல என்னைத் தனியா உட்கார வெச்சுட்டு அவங்க ரெண்டு பேரும் எங்காவது போய்ட்டு வருவாங்க. அதே மாதிரி சினிமா கூட்டீட்டுப் போகும்போது என்னைத் தள்ளி உட்காரச் சொல்லுவாங்க”


அந்தப் பெண்ணுக்கு முறையாக பெண்களை விட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டாள்.

இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

“செக்ஸ்தான்” என்கிறது ஒரு தரப்பு. தங்கள் வீட்டில் கணவனோ, மனைவியோ தராத சுகம் வேறு இடத்திலிருந்து கிடைக்கும்போது மனம் தாவுகிறது என்கிறார்கள்.

“அப்படியில்லை. கணவனால் கிடைக்காத ஆறுதலை வேறொருத்தன் தரும்போது அதை நட்பாக பாவிக்கத் தெரியாமல் அத்துமீறும்போதுதான் இது மாதிரியெல்லாம் நிகழ்கிறது” என்கிற சிலர் சொல்கிறார்கள்... “ரொம்ப கீழ்மட்டக் குடும்பங்கள்ல இதுமாதிரி அவன் பொண்டாட்டி கூட இவன், இவ புருஷன் கூட அவ – சமாச்சாரங்கள் நடந்தா அவங்க இதைக் கண்டுக்கறதே இல்ல. அதே மாதிரிதான் ரொம்ப மேல்மட்ட குடும்பங்கள்லயும். அதிகமா பாதிக்கப்படறது மிடில்க்ளால்-ங்கற நடுத்தரக் குடும்பங்கள்தான்.”

“ரெண்டு பேருக்கும் ஒத்துக்கல. அவங்களுக்குப் பிடிச்சவங்களோட போக வேண்டியதுதானே. எதுக்கு சமூகத்துக்காகன்னு பொய் வாழ்க்கை வாழணும்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

என்ன காரணம்? எது நியாயம்? என்ன தீர்வு?

ஆரோக்யமான ஒரு விவாதத்தை பின்னூட்டத்தில் நிகழ்த்துங்களேன்...