விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.
ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
போட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்!) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.
சென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.
அதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.
தடங்கலுக்கு வருந்துகிறோம்
வீட்டில் இருப்பதென்னவோ
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.
மின்சாரம் இல்லாததால் அது
கறுப்பாகவே இருக்கிறது.
அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.
சங்ககாலம் பொற்காலம்
எல்லாம் அந்தக்காலம்
வெளிச்சமில்லாமல்
வகுப்புகளெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டதே
இதுதான் இருண்டகாலம்.
இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.
வ.உ.சி. கப்பல்களை
ஒட விட்டார்.
இன்று வ.உ.சி.வீட்டில்கூட
மிக்சி, க்ரைண்டர்
எதுவுமே ஓடுவதில்லை.
குழந்தைகளின்
பிறப்பைத் தடுப்பது
கருத்தடை.
குழந்தைகளின்
சிரிப்பைத் தடுப்பது
மின்தடை.
அதிகாரிகளே...
சீக்கிரம்
எங்கள் வீடுகளுக்கு
சிம்னி விளக்காவது தாருங்கள்.
அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்
சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.
மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது.
சபாஷ் ராஜ்மோகன்.
அருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.
விஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.
குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ
பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?
என்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..
காவிரிப்பிரச்னை
காவிரிப்ப்ரச்னை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு.
எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன். இந்த நேரத்தில் நமது சகபதிவர் கிழஞ்செழியன் எத்தனையோ வருடங்களுக்கு முன் ‘அதானே’ என்ற தலைப்பில் ஒரு நாளிதழில் தினமும் எழுதி வந்துகொண்டிருந்த குட்டிக்கவிதைகள் சில...
என் காதல் கைகூடுமா
வேலை கிடைக்குமா என்றெல்லாம்
உள்ளூர் ஜோசியர் மூலம்
தகவல் சொல்வதற்காகவே
அகண்ட வானில்
சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களே
உங்கள் மற்ற வேலைகள்தான்
என்னென்ன?
*
தருமம் குறைந்தால்
தண்டிக்கவென்றே
தொடர்ந்து
அலை ஒற்றர்களை அனுப்பி
வேவு பார்த்துக்கொண்டேயிருக்கிறது
கடல் கடவுள்
(ஒரு ஆச்சர்யமான உண்மை:- இந்தக்கவிதை சுனாமி வருவதற்கு முன்பே எழுதியது!)
*
எங்கள் டிவியில்
எண்பது சேனல்
சாட்டலைட் கொடுக்கும்
தகவல் தொடர்பில்
உலக முகங்கள் பரிச்சயமாச்சு
உறவினர் முகங்கள் மறந்துபோச்சு
*
கடல் கரையில்
வாங்கிய சுண்டலில்
உப்பே இல்லை
*
கல்லுக்குள் இருக்கும்
தேரைக்கும் உணவு வைத்தான்
சரீ
கல்லுக்குள் கொண்டுபோய்
தேரையை ஏன் வைத்தான்?
*
புத்தரும் மகாவீரரும் கூட
நடுராத்திரியில்
சொல்லாமல் கொள்ளாமல்தான்
வெளியேற வேண்டியிருந்தது
எவ்வளவு பெரிய ஆளுக்கும்
கஷ்டம்தான் மனைவியை
கன்வின்ஸ் செய்வது
*
என் தெருவில் மெஸ் வைத்தாள்
கிட்டுமாமி
முதலிரவில் புருஷன் செத்த
கிட்டுமாமி
தோல்சிவந்த, உடல் திமிர்ந்த
கிட்டுமாமி
எவனெவனோ முயற்சி செய்தும்
புருஷனுக்காய் பொட்டுவைக்கும்
கிட்டுமாமி எவனுக்கும்
கிட்டாமாமி
*
பன்பட்டர் ஜாமும் பாலுகடை டீஒன்றும்
ஃபில்டர்கிங் கோல்ட்ஃப்ளேக்கும் நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகனே மேன்ஷன்லைஃப் கொல்லுதே நான்செட்டிலாகப் பெண்பார்த்துத் தா
*
நேரம் காலம் கிடையாது
எப்போ வருமோ தெரியாது
என்றாலும்
மழையின் வருகையை
மயில் அறியும்
மெட்ரோ வாட்டர் வருவது
என்
மனைவிக்குத் தெரியும்
*
திரியும் வண்டெல்லாம்
திருட்டு வண்டுகள்தான்
அதில்
சில வண்டுகள் மட்டும் ஏன்
சிறைப்படுகின்றன
கொட்டைக்குள் வண்டுபோல்
குடைகிறது கேள்வி
*
மொத்தமாய் அமைந்தால்
சிறகு
ஒத்தையாய்க் கிடந்தால்
இறகு
முன்னது பறக்க உதவும்
பின்னதால் காது குடையலாம்
*
அவளை
திங்கள் கிழமை பார்த்தான்
செவ்வாய்க் கிழமை கவனித்தான்
புதன்கிழமை சபலப்பட்டான்
வியாழக்கிழமை தீர்மானித்தான்
வெள்ளிக்கிழமை கடிதம் கொடுத்தான்
சனிக்கிழமை அவளுடைய அண்ணனிடம்
அடிவாங்கி அவமானப்பட்டான்
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை...
*
எத்தனை ஓட்டைகள் இருந்தாலும்
புல்லாங்குழலிலிருந்து
ஒழுகித் தீர்ந்துவிடுவதில்லை
இசை
(அபாரம் கவிஞரே..!)
*
'யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்"
''யாரிங்கே வரப் போகிறார்கள்?"
இதே வசனம் கேட்டு
நுரைப்புன்னகை பூக்கிறது
நூறுகோடி நூறுகோடி
காதலரைக் கண்ட கடல்!