Showing posts with label Law college. Show all posts
Showing posts with label Law college. Show all posts

Tuesday, November 18, 2008

பதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும்

“சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையப்போ போலீஸ்தான் அப்படி வேடிக்கை பார்த்ததுன்னா பத்திரிகையாளர்கள்கூடவா சும்மா இருந்தீங்க?”

“ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க. பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சாவி ஒரு மேடையில பேசிட்டிருக்கும்போது மயங்கி விழறாரு. அப்போ சன் டி.வி. கேமராமேன் அங்க இருக்கார். இயல்பிலேயே புத்தகம் வாசிக்கற பழக்கம் இருக்கற அவன் ‘ஐயையோ.. ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் மயங்கி விழறாரு’ங்கற உந்துதல்ல கேமராவைத் தூக்கிப் போட்டுட்டு அவரைத் தாங்கறார். ஆஃபீஸ் வந்தப்ப கேக்கறாங்க... ‘சாவி மயங்கி விழுந்த விஷூவல் எங்கே?’ இல்லை! ஒரு மாசம் சஸ்பெண்ட்! லாஸ் ஆஃப் பே. சோத்துக்கு என்ன பண்ணுவான்? அவன் அவனுக்கு அவன் அவன் வேலை. அடுத்தவன் வேலையை அவன் எதுக்கு செய்யணும்? இது வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுது. ஹிரோஷிமாவுல அந்த குழந்தை வெளில வர்ற விஷூவல் எடுக்கலைன்னா அந்தப் போரோட கொடுமை வெளிலயே தெரிஞ்சிருக்காதே”

“சரிதான். நீங்க சொல்ற மாதிரி பத்திரிகையாளர்கள் போய் உதவிசெஞ்சு இவங்க அடிவாங்காம இருந்திருந்தா.. இவ்ளோ பெரிய அட்டூழியங்கள் அங்க நடக்கறது வெளியவே வந்திருக்காது. இப்போ இப்படிக் கேக்கற வாய் ‘இவனுக போனமா, நியூஸ் கலெக்ட் பண்ணினோமான்னு இல்லாம எதுக்கு அந்த ரௌடிக் கூட்டத்துக்குப் போய் உதவணும்?’ன்னு கேக்கும்”

“இன்னொரு விஷயம்.. அப்படியும் போலீஸ்கிட்ட ‘என்னவாவது பன்ணுங்கய்யா’ன்னு வாக்குவாதம் பண்ணிகிட்டிருந்தது பத்திரிகையாளர்கள்தான்”

*****************************

“இத்தனை பேர் இந்த மாதிரி கூட்டம் போடக்கூடாதுங்க. என்னங்க நடக்குது இங்கே?”

“நாங்க ஃப்ரெண்ட்ஸ்ங்க. பேசிகிட்டிருக்கோம்”

“அதெல்லாம் கூடாதுங்க”

“சரிங்க. நாங்க உங்களை மாதிரி (போலீஸ்) இருக்கோம்க”

“போலீஸ் மாதிரின்னா?”

“சும்மா நின்னுகிட்டிருக்கோம்ன்னு சொல்ல வந்தேன்”

************************************

“தல.. என்ன இது? தமிழ்நாட்ல பேச்சுரிமை இல்லியா?”

“சட்டக்கல்லூரி ப்ரச்னைக்குப் பிறகு ஓப்பன் ப்ளேஸ்ல கூடக்கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போடப் பட்டிருக்கு. அதுவும் காந்திசிலை தலைவா. ஏதாச்சும் ஆச்சுன்னா சீனாய்டும்க. என்ன பேசுவீங்க? என்ன பேசினாலும் அது அரசுக்கு எதிராத்தான் இருக்கும். சொல்லியாச்சு. அங்க பீச் சைட்ல போய் வட்டமா உக்கார்ந்து பேசலாம்”

***********************************

“நம்ம பாரிஅரசு எல்லாருக்கும் சாக்லேட், பிஸ்கெட் வாங்கிட்டு வந்திருக்காரு. எல்லாரும் சாப்பிடுங்க”

“எல்லாரும் பாரிஅரசுக்கு ‘ஓ’ போடுங்க”

“சரி.. யாராவது ஆரம்பீங்கப்பா”

“45 பேருக்கு மேல வந்திருக்கீங்க. எல்லாருக்கும் வணக்கம். மீடியா முழுக்க அந்தப் பசங்க ரெண்டு பேர் அடி வாங்கினதைப் போட்டுப் போட்டு ஒரு சீனை க்ரியேட் பண்ணீட்டாங்க. முக்கியமா அந்த பாரதிகண்ணன் கடைசிவரைக்கும் கத்தியை சுத்திகிட்டிருந்தது சரியா காண்பிக்கப்படல. கீழ விழுந்து அவன் அடி வாங்கினதுதான் காட்டப்பட்டது. வன்முறை எப்படிப் பார்த்தாலும் தவறுதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் மிருகம் மாதிரி சித்தரிக்காங்க”

“மிருகம் மாதிரின்னு சொல்றதையே நான் எதிர்க்கறேன். புலி என்னைக்கும் புலியை அடிச்சதில்லை. இது காடுமிராண்டித்தனத்தையெல்லாம் மீறீன ஒரு செயல்”

“ஆனா அதுக்குப் பின்னாடி என்ன காரணம் இருக்கும்னு யோசிங்க?”

“என்ன?”

“டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி-ங்கறது பேரு. அந்தக் கல்லூரில விடுதி இருக்கு. அந்த விடுதி இல்லைன்னா, அந்த மாணவர்கள் எங்கயும் தங்கி படிக்கற அளவுக்கு பொருளாதாரப் பிண்னணி இல்லாதவங்க. ஆனா அந்த கல்லூரி குறிப்பிட்ட அந்த சமூகத்துக்கு எதிரான டீஸிங், அவங்களுக்கு ஏதாவது ஸ்காலர்ஷிப் சம்பந்தமா சர்குலர் வந்தா ஒரு மாதிரியா ட்ரீட் பண்றதுன்னு, அந்த சமூகத்து பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்ன்னு தொடர்ந்துட்டே இருக்கு. அப்பட்டமா தீண்டாமைதான்”

“இதுக்கு வெளி அரசியல்வாதிகளோட சப்போர்ட்....”

“இருக்கு. வெறும் முப்பது மாணவர்களே இருக்கற ஒரு பிரிவைச் சார்ந்த அவங்களுக்கு, ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் பின்புலமா இருக்கறாரு”

“ம்..”

“அன்னைக்கு காலைல சித்திரைச்செல்வன்-ங்கற மாணவரை இந்த ரெண்டு பசங்க சேர்த்து காதை வெட்டிருக்காங்க. அது எந்த மீடியாவும் பெரிசா காமிக்கல. அவனை எந்த அரசியல்வாதியும் பார்க்கல. அடிவாங்கின ரெண்டு பேரையும் பாவம் மாதிரி, தியாகி மாதிரி காமிக்கறாங்க..”

“சரி... இந்த இடத்துல ஒரு கேள்வி. போலீஸின் கடமை என்ன? அவங்க வேடிக்கை பார்த்தது தப்பா இல்லையா?”

“போலீஸ்மீது தப்பு, பத்திரிகையாளர்மீது தப்புங்கறது அவங்க அவங்க புரிதல். இங்கே அப்பட்டமான மனித உரிமை மீறல் நடந்திருக்கு. நான் சொல்றது ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டுமே தாக்குதல் நடந்திருக்குங்கறது மாதிரி காட்டறாங்க. அது தவறுன்னுதான் சொல்றேன். இரு சமூக மாணவர்களும் பாதிக்கப் பட்டிருக்காங்க. ஆனா ஒரு சமூக மாணவர்கள் கண்டுகொள்ளப் படாமலே இருக்காங்க. அவங்க உரிமைக்காக இவங்க போராடி, இப்போ இந்த அரசியல்வாதிகளோட திட்டமிட்ட காய்நகர்த்தலால் அவங்க உரிமை முழுமையா கிடைக்காம போவதற்கான வாய்ப்புகள் உருவாகிட்டிருக்கு. அம்பேத்கர் பேரை எடுக்கணும், விடுதியை மூடணும்கறதெல்லாம் அதோட விளைவுதான். இது தீண்டாமை அல்லவா?”

“இதுக்கெல்லாம் காரணம் சாதிவெறிதானே?”

“ஆமா. அடிவாங்கி மரத்துல தொங்கின ஆறுமுகம் மேல 17 கிரிமினல் கேஸ் இருக்கு. பாரதிகண்ணன் கல்லூரிலயே சாதி அமைப்பு நடத்தி லீடரா இருந்திருக்கான். இதெல்லாம் சரியா?”

“’இவன்’ படத்துல பார்த்திபன் ஒரு வசனம் எழுதியிருப்பாரு. ‘படிக்காதவன் பண்ற எல்லாத் தப்புமே அவன் படிக்காதவன் –ங்கற தப்புலயே அடங்கீடுது’ன்னு. ஆனா படிச்சவன் இப்படிப் பண்ணினா நம்ம எஜூகேஷனல் சிஸ்டம் அப்படித்தான் இருக்கா?”


“இதுக்கு வலைப்பதிவர்களாகிய நாம என்ன பண்ணணும்?”

“ஏதாவது நடந்தா அதோட பின்புலத்தை தெரிஞ்சுகிட்டு அப்புறமா எழுத்துல கோவத்தைக் காட்டலாம்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்”

“என்னோட ஒரு வேண்டுகோள் இருக்கு”

“என்ன?”

“பசிக்குது. போய் ஒரு டீயோ, பாதாம்பாலோ சாப்பிடலாம் வாங்க”