அதுகுறித்த ஒரு விளக்கமான விபரம் இங்கே..
நேற்று வழக்கத்திற்கு மாறாக வேலை விஷயமாக வெளியில் செல்ல வேண்டி வந்தது.. ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நினைத்து மணி பார்த்தேன். மதியம் மூன்று! ( திருப்பூரில் இதுதான் வழக்கமான மதிய உணவு நேரம்!) உடனே நண்பர் வெயிலான் ரமேஷை அழைத்தேன்.
"ரமேஷ்.. எங்க இருக்கீங்க?"
"ஆபீஸ்ல சாப்பிட்டு இருக்கேன்"
"அட... உங்க கூட சாப்பிடலாம்ன்னு நெனச்சேனே.."
"அஞ்சு நிமிஷம் முன்னாடி கூப்பிட்டு இருக்கலாம்ல? சரி.. நீங்க அன்னபூர்ணா வந்து சாப்பிட்டுட்டு இருங்க.. நான் வந்து உங்களை பாக்கறேன்"
நான் உடனே உற்சாகமாகி அன்னபூர்ணா சென்று ஒரு ஆனியன் ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.
சற்று நேரத்தில் வெயிலான் வந்து.. என்னைத் தேடி கண்கள் அலைபாய செல்லில் அழைத்தார்.
ஒரே ஊரில் இருந்தாலும்.. தினமும் பேசிக் கொண்டாலும்..
நானும் அவரும் இதற்கு முன் சந்தித்துக் கொண்டதில்லை!
என் செல் ஒலிக்க, நிமிர்ந்து பார்த்த நான் ஒருத்தர் செல்லுடன் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு அழைத்தேன்!
வெயிலான்தான் நான் சந்திக்கும் முதல் பதிவர்!!
கை குடுத்துக்கொள்ள முடியாமல் என் கையை ஆனியன் ரோஸ்ட் ஆக்ரமித்திருந்தது! (பசி!!) என் முன்னே அமர்ந்ததும் ரொம்ப நாள் பார்த்துப் பழகிய நண்பரைப் போல பேச ஆரம்பித்தார்!
குழந்தை போல முகம், வெயிலான் என்றால் வெயிலில் கறுத்துப் போயிருப்பாரோ என்று நினைத்தேன்! அவர் என்னடாவென்றால் கொஞ்சம் உயரம் கம்மியான அஜித் போல சிவப்பாய் இருந்தார்!
வலையுலகம் பற்றி சகலமும் பேசுகிறார்.. (எனக்கு வலையுலகம் பற்றி ஒண்ணுமே தெரிலங்கறது அவர்கிட்ட பேசும்போதுதான் தெரிஞ்சது!)நடுநடுவே அலுவலக நிமித்தம் வரும் அழைப்புகளுக்கு பொறுமையாக, தெளிவாக பதில் சொல்கிறார்..
என்னைப் போல மொக்கைப் பதிவெல்லாம் போடாமல்.. கொஞ்சமாக என்றாலும் நல்ல பதிவுகளாக போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். வலைப்பூ ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே.. தமிழ்மணம் ஸ்டார்-ஆக இருந்திருக்கிறார்.
ஜூலை - 13 , கோவை வலைப் பதிவர் சந்திப்பில் மீண்டும் சந்திக்கலாம் என்று பேசிக்கொண்டு.. ஒரு நெடுநாள் நண்பரை சந்தித்த மகிழ்ச்சியோடு பிரிந்தேன். பிரிவதற்கு முன் கேட்டேன்..
"ஏங்க.. சிவாஜி வாயிலே ஜிலேபி-ன்னு எழுதி.. லக்கிலுக்-கை தொடரச் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்ல. நீங்களும் "காத்திருந்த காதலி" தொடரை தொடரவே மாட்டீங்கறீங்க"
"அடடே... சொல்ல மறந்துட்டேன்.. அந்தக் கதைல சங்கர்கிட்டேர்ந்து வர்ற மெசேஜை கௌரி பாக்கறா இல்லியா.. அதுல என்ன இருந்துதுன்னா.." என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்தவர் நிறுத்தி "வேண்டாம்" என்றார்.
"ஏங்க?"
"நீங்க என் பிளாக்-ல வந்து படிச்சுக்கோங்க!" என்று புன்னகையுடன் விடை பெற்றார்..
டிஸ்கி: தலைப்பை நல்லா படிச்சுட்டுதானே வந்தீங்க? "ஒரு" வலைப்பதிவர் சந்திப்புன்னுதான் குடுத்திருக்கேன்.. வேற எதுவும் நினைச்சு ஏமாரலியே?