இன்னைக்கு குசேலன் ரிலீஸ். `காலைல நாலு மணி ரசிகர் ஷோவுக்கு டிக்கெட் இருக்கு வர்றியா’ன்னு ஃப்ரெண்டு கேட்டான். உமாவை அவங்க ஆஃபீஸ்ல விடணும், குழந்தைகள் ஸ்கூல்ன்னு இருக்கறதால `வேண்டாம்’ன்னுட்டேன். இரவு காட்சிக்கு டிக்கெட் வெச்சிருக்கேன். பாக்கணும்.
டிக்கெட் எடுத்து, என்னைக் கூப்பிட்ட நண்பன்கிட்ட “பாத்துப்போடா, எல்லா ஊர்லயும் குண்டு வெச்சுட்டிருக்காங்க. கூட்டம் கூடற இடத்துல வைக்கணும்ன்னா, குசேலன் தியேட்டர்தான் பெஸ்ட்’ன்னு எவனாவது வெச்சிருக்கப் போறான்” ன்னு சொன்னேன். “தலைவர் படம் பாக்கப் போய் செத்தா பெருமைதான்!” ங்கறான்! என்னத்த சொல்ல!
*****
நண்பர் கனலிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெரியாரின் பற்றாளர். மிகுந்த தமிழார்வலர். இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த அவர், தனது சொந்தங்களின் எதிர்ப்பை மீறி, முதல் பையனுக்கு `கபிலன்’ என்று பெயரிட்டார். இரண்டாவது பெண்தானென்று எதிர்பார்த்திருந்தார்கள். `இந்தக் குழந்தைக்கு நாங்கள் சொல்லும் பெயர்தான்’ என்று அவர் குடும்பத்தார்கள் வற்புறுத்தி வந்தார்கள். இவர் பெண் பிறந்தால் `சல்மா’ என்று பெயர் வைக்கலாம் என்று சொல்லி வைத்துவிட்டார். ஆண் பிறக்கவே, அவர்கள் ‘இதயத்துல்லா’வோ, என்னமோ சொல்ல, இவர் தடுத்து `அப்துல் கலாம்’ என்று பெயர் வைத்து விட்டார்! “அவர் ஒரு இஸ்லாமியராய் அடையாளம் காணப்படாமல், ஒரு தமிழனாய்த்தான் அடையாளம் காணப்படுகிறார்’ என்றார். நிஜமே!
*****
சுப்பிரமணியபுரம் டைரக்டர் சசிகுமாரின் பேட்டி காண நேர்ந்தது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கொடைக்கானலில் மியூசிக் டீச்சராக இருந்த போது, அவரது ஸ்டூடண்டாம் சசிகுமார். ஜேம்ஸ் வசந்தனிடம், தான் டைரக்டராக வேண்டும் என்று விருப்பத்தை சொல்வாராம்! அதற்கு ஜேம்ஸ் “நான் பெரிய மியூசிக் டைரக்டராகீடுவேன். யார்கிட்டயாவது சொல்லி சான்ஸ் வாங்கித்தர்றேன்” என்பாராம்! இப்போது, சசிகுமார் டைரக்டராகி, ஜேம்ஸூக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார்! (எனக்கு கோவி. கண்ணன் சாரின் வலைப்பூதான் ஞாபகத்துக்கு வந்தது! – காலம்!)
*****
சக்கரக்கட்டி, சரோஜா, சத்யம் – மூணு இசைத்தட்டும் வாங்கினேன். (அட.. மூணுமே `ச’!)
சக்கரக்கட்டி – ஏ.ஆர்.ரஹ்மான். சி.டி. யை ஏழெட்டு செல்லோ டேப் போட்டு ஒட்டிருந்தாங்க. பிரிக்கறதுக்குள்ள அவ்வளவு டென்ஷனாயிடுச்சு. இவ்ளோ செலவு பண்ணி படம் தயாரிக்கறவங்க நல்ல ப்ரசண்டேஷன் பண்ண முடியாதா? ச்சே! பாட்டு:– டாக்ஸி மட்டும் ஓக்கே ரகம்.
சத்யம் – சி.டி. நல்லா இருந்தது. பாட்டும். ஹாரிஸ் ஜெயராஜுக்கு 25வது படம். வழக்கம் போல பாம்பே ஜெயஸ்ரீ பாட்டு இருக்கு. அதுதான் கண்டிப்பா ஹிட் ஆகும்!
சரோஜா – சி.டி. வடிவமைப்பு சூப்பர். பாட்டு பொஸ்தகமெல்லாம் கொடுத்திருக்காங்க! பாடல்கள் –யுவன் சங்கர் ராஜா. ரெமோ ஸ்டைல்ல இருக்கு! மாடர்ன் ஜெனரேஷனுக்கு பிடிக்கலாம்! (விவாகரத்துக்கு அப்புறம் இவர் பாடல்கள் ஹிட்டடிக்கல. கஷ்டமா இருக்கு. யுவன், மறுபடி களத்துல இறங்குங்க!)
***
நேற்று பதிவு எழுதும்போது 14450+ ஹிட்ஸ்தான் இருந்தது. திடீன்னு நைட் பார்த்தா 15000த்தை தாண்டியிருந்தது. ஒரு நாளைக்கு 200, 300 தானே வரும். இதென்ன 500கிட்ட வந்துடுச்சுன்னு பார்த்தா, `உங்க பதிவை தமிலிஷ்.காம் ல ஒருத்தர் எடுத்துப் போட்டு, அது 20+ ஓட்டு வாங்கி இரண்டாவதா இருக்கு. அதான் 10 யூஸர்ஸ் ஆன்லைன்’ –ன்னு ஒருத்தர் சொல்லியிருந்தாரு. போய்ப் பார்த்தா 23 ஓட்டு வாங்கி முதலிடத்துக்கு வந்திருந்தது. மகிழ்ச்சியா இருந்தது. `தமிழ்ஸ்டார்’ன்னு ஒருத்தர் தான் அந்தப் பதிவை ரெகமெண்ட் பண்ணியிருந்தார். நன்றி சொல்லலாம்ன்னு போனா, முதுகுல அருவாளோட ஒரு ஸ்டில்! பயந்துபோய் திரும்பி வந்துட்டேன்! இங்க சொல்லிக்கறேன்... நன்றி!
*****
ஃப்ரெண்ட் ஒருத்தரை ரயிலேத்திவிட ரயில்வே ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க ஒரு அறிவிப்பை ரொம்ப நேரமா பாத்துட்டு இருந்தேன். நண்பன் கேட்டான்.
“என்னது, ரொம்ப நேரமா அந்த போர்டை பார்த்துட்டு இருக்க?”
”இல்ல. அந்த அறிவிப்பைப் பார்க்கும் போது ஒரு கவிதை வருது” -ன்னேன்.
என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துட்டு “சொல்லு”ன்னான்.
”எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைரயிலில் எடுத்துச் செல்லக் கூடாதாம்.அடியே..கண்களை மூடியபடி பயணி.
என் இதயம் பற்றி எரிகிறது” `நல்லாயிருக்கு’ன்னவன், ரயிலேறிட்டான். ஊருக்குப் போய் கூப்பிடறேன்னான். கூப்பிடவேயில்ல! ரொம்ப பயமுறுத்தீட்டேனோ?