Showing posts with label ஞாபகங்கள். Show all posts
Showing posts with label ஞாபகங்கள். Show all posts

Thursday, July 24, 2008

கொஞ்சம் கவிதைகள்…! கொஞ்சும் கவிதைகள்!!

நான் காதலிக்கும்போது அதிகமாகக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய கடிதங்களுக்கு நடுவே...


”உனக்காக
ஒரு ரோஜா கொடுத்தபோது
கேட்டாய்...
`இது எல்லா காதலர்களும்
அவரவர் காதலிக்கு கொடுப்பதுதானே’ என்று.

நான் சொன்னேன்..

`கொடுப்பது நானும்
பெறுவது நீயுமாதலால்
இது
தனித்துவம் வாய்ந்தது’ என்று”

இப்படி மொக்கையாக சில கவிதைகளும் இருக்கும். (இந்தக் கவிதையை படிச்சுட்டு மூணு நாள் என்கிட்ட உமா பேசவே இல்ல! அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவைக்க ரொம்ப சிரமப்பட்டேன். இனி ஒரு மூணு மாசத்துக்கு கவிதையே எழுதமாட்டேன் – ன்னு சொன்னப்பறம்தான் பேசவே சம்மதிச்சா!!)


அதுக்கப்புறம் சிலகவிதைகள் எழுதி, உமாகிட்ட கொஞ்சம் நல்லபேர் வாங்கினேன்னு வைங்க! `காதலுடன் சில கவிதைகளும்’ - ன்னு அதை பதிவுலகூட போட்டிருந்தேன். இப்போ... வேற சில ஜாம்பவானகள் எழுதின எனக்குப் பிடிச்ச சில காதல் கவிதைகள் உங்கள் பார்வைக்கு...

மரம் நடுங்கள்..
மரம் நடுங்கள்..
என் அவள்
இந்த வீதியில்தான் நடந்து போகிறாள்
மரம் நடுங்கள்!
-ராசி. அழகப்பன்

தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்.
நீ
நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?
-பழனி பாரதி

உன்னை
நினைவுபடுத்தும்
எல்லாவற்றையும்
எரித்துவிடச் சொல்கிறாய்
அப்படியானால்
நான்
தீக்குளிக்க வேண்டுமா?
-அ. சரவணராஜ்

புதைத்துப் பார்த்தேன்
முளைக்கிறது
எரித்துப் பார்த்தேன்
உயிர்க்கிறது
கரைக்கலாம் என்றால்
மிதக்கிறது
சுமக்கலாம் என்றால்
கனக்கிறது.
பாவி
என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.
-(என் ஃபேவரைட்) ரவி சுப்பிரமணியன்