Sunday, September 28, 2008
சரோஜா – காக்டெய்ல் வித் கிருஷ்ணா
போனவாரம் ஞாயிற்றுக்கிழமைதான் ‘சரோஜா’ போகும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே வெங்கட் பிரபு – சரண் கூட்டணியின் சென்னை-28 பார்த்து, அவர்களால் கவரப்பட்டதால் எனக்கு மிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. திருப்பூர் சக்தி தியேட்டருக்கு ஈவ்னிங் ஷோ போனால், வாட்ச்மேனிடம் தியேட்டர் முதலாளி என்னவோ சொல்லி அனுப்ப, அவர் என்னை உள்ளே விடவே இல்லை. பிறகுதான் தெரிந்தது அன்றைக்கு வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ், சிவா நான்கு பேரும் தியேட்டருக்கு வந்திருந்தார்களாம். நான் வேறு உள்ளே போனால் ரசிகர்களுக்கு யாரைப் பார்க்க என்ற குழப்பம் வரும், எனக்குக் கூடும் கூட்டத்தால் சரோஜா டீமின் கோபத்துக்கு தியேட்டர் முதலாளி ஆளாகநேரிடும் என்பதால் என்னை உள்ளே விடவில்லை என்று தெரிந்தது. ப்ச். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டேன். அடுத்தநாள் இரவுதான் பார்த்தேன்.
கலக்கலான படம். எந்த சந்தேகமும் இல்லை. த்ரில்லரில் காமெடி புதுசு.
விஜய் டி.வி.-யில் நேற்று சரோஜா டீமுடன் நேற்று காஃபி வித் அனு. வைபவ், சிவா, வெங்கட் பிரபு & பிரேம்ஜி நான்கு பேரும் அனுவுடன் சேர்ந்து ஒரே காமெடி பஜாராக இருந்தது. முதலில் வெங்கட் பிரபுவை அழைத்து, பிறகு சரோஜா ஹீரோ மூணுபேரும் வராங்க என்று வைபவ், சிவா & பிரேம்ஜியை அழைத்தார். வெங்கட்டுக்கு கோவம். ‘அதெப்படி இப்படி சொல்லலாம். ப்ரேம்ஜி கோவிச்சுப்பாரு.’ என்றார். என்னவென்று அனு குழம்ப, ‘ப்ரேம்ஜிதாங்க ஹீரோ. இவங்க ரெண்டு பேரும் ஹீரோவோட ஃப்ரெண்ட்ஸ்’ என்று சொல்ல ஒரே கலக்கல். சிவா குறுக்கிட்டு ‘ப்ரேம்ஜி இப்படித்தான் ஊரு பூரா சொல்லிகிட்டு திரியறாரு. இதாவது பரவால்லைங்க. சந்தோஷ் சுப்ரமணியத்துல நான்தான் ஹீரோ. என் ஃப்ரெண்ட்டா ஜெயம் ரவி நடிச்சிருக்காரு. என் ஃப்ரெண்டோட பாய்ஃப்ரெண்டா நான் நடிச்சிருக்கேன்’ன்னு சொல்றாரு’ என்று சொல்லி வயிறு வலிக்க வைத்தார்.
சிவாவின் காமெடி சென்ஸ் பிரமாதம். கொஞ்சம்கூட சிரிக்காமல் ஜோக்கடிக்கிறார். சமயத்தில் சீரியஸாகச் சொல்கிறாரா, காமெடி செய்கிறாரா என்று குழம்புமளவு! படத்தில் இவர் அதிகம் பேசிய வசனம் ‘சார்’.
அனு படம் பார்க்கவில்லையாம். ‘சென்னை 28 நான் பார்க்கல. படம் ஹிட். இதுவும் ஹிட் ஆகணும். அதுனாலதான் பார்க்கல’ என்று அனு சொன்னபோது, வெங்கட்பிரபுவை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு “‘உன்னைச் சரணடைந்தேன்’ நீங்க பார்த்திருக்க கூடாது” என்று சிவா சொன்னது சரவெடி!
இந்த நாலுபேரும் அனுவிடம் சரோஜா கதை என்று இல்லாத கதையை ரீல் சுற்றினார்கள். போதாக்குறைக்கு இவர்களுக்கு அடுத்து வந்த, ஜெயராம் (ஹ்யூமர் சென்ஸ்ல கிங்!) அவர் பங்குக்கு ஒரு சரோஜா கதை என்று ஒரு புதுக் கதை சொன்னார்! (எனக்கு ரெட்டைக் குழந்தை பிறக்கறதுலதான் கதை ஆரம்பிக்கறது..) வைபவை அவர் கலாய்த்த விதம் இன்னும் வயிறு வலிக்கிறது! ஒரு நாளாவது ஜெயராமுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது!
படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதால் தமிழில் எடுத்து, மறுபடி அதே சீனை தெலுங்கில் எடுத்திருக்கிறார்கள்.
ஷூட்டிங்கின் நடுவில் ஜெயராமின் ஹாபி பற்றி சொன்னார்கள். ஷாட் முடிந்ததும் சும்மா இருக்காமல் தூரத்தில் லைட்மேன், அல்லது அசிஸ்டெண்ட்ஸ் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதற்கு இவர் டப்பிங் கொடுப்பாராம்.. யாராவது லைட்மேன் இரண்டு பேர் நின்று ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் இவர் இங்கு நின்று கொண்டு அவர்கள் ‘படமெடுக்கறானுக பாரு. ஒரே ஷாட்டைப் போட்டு கொழப்பி, இப்பவே படத்தோட ரிசல்ட் தெரியுது. ஃப்ளாப்தான்யா’ என்று பேசுவாதாய் டப்பிங் கொடுப்பாராம். சரியான எண்டர்டெய்ன்மெண்டாக இருந்தது என்றார்கள். இன்றிலிருந்து நானும் இதை ட்ரை பண்ணலாம் என்றிருக்கிறேன்!
இதுவரைக்கும் உலக அளவில் த்ரில்லர் டைப் சினிமா ஒன்றில் காமெடியை படம் முழுக்க யாருமே கொடுத்ததில்லையாம். இதுதான் முதல் காமெடி த்ரில்லர் என்று சொன்னார் வெங்கட் பிரபு.
நிஜம்தானே சார்? காமெடி இல்லையே?
ப்ரகாஷ்ராஜ் படம் போட்டு அவர் பற்றிய செய்தி சொல்லாமலா?
தமிழில் ஷாட் எடுத்துவிட்டு, தெலுங்கு ஷாட்டுக்கு டக்கென்று ரெடியாகிவிடுவாராம் ப்ரகாஷ்! வசனத்தை தெலுங்கில் மட்டுமில்லாமல், ஒரியா, ஸ்பானிஷ் என்று பல பாஷைகளில் பேசிக்காட்டுவாராம்!
ப்ரகாஷ் சார், அபியும் நானும் தீபாவளிக்கா?
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
சரி பதிவு சரோஜா விமர்சமனமா இல்லை காப்பி வித் அணு பற்றியா?
நேற்று நானும் அந்த ப்ரொக்ராம் பார்த்தேன். ஜெயராம் கலக்கல். படம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கலாம் அடுத்த வாரமாவது முடிகிறதா என்று..
//பிறகுதான் தெரிந்தது அன்றைக்கு வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ், சிவா நான்கு பேரும் தியேட்டருக்கு வந்திருந்தார்களாம். நான் வேறு உள்ளே போனால் ரசிகர்களுக்கு யாரைப் பார்க்க என்ற குழப்பம் வரும்//
நகைச்சுவைக்கு எழுதினாலும் அந்த நாள் விரைவில் வரும் பரிசலாரே.. உங்கள் எழுத்து அதை பெற்றுத்தரும்..
ஜெயராமின் திறமை அவர் முதல் படமான சாணக்கியாவில் கமலுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கும்பொழுதே முடிவானது.
கலக்கல் பதிவு..
(காஃபி வித் அனு நல்லா இருக்கா? இல்ல ஹாசினி பேசும் படம் நல்லா இருக்கா? நான் ப்ரோகிராம கேட்டேன்..)
நர்சிம்
அது சரி காதலில் விழுந்தேன் பார்த்துட்டு உங்க கெஸ்ட் என்ன சொன்னாங்க>.
ஆஹா
காலையில் சந்தோஷமாக பதிவு
நன்றி பரிசலண்ணா
பரிசல்காரன்.com ற்கு வாழ்த்துக்கள்
சரி பதிவு சரோஜா விமர்சமனமா இல்லை காப்பி வித் அணு பற்றியா?
இவ்வளவு தூரம் சொல்றீங்க... உங்களுக்காக இந்த ஒரு தடவை (கஷ்டப்பட்டு) தியேட்டருக்கு போய் பார்த்து தொலைக்கிறேன்......
\\மங்களூர் சிவா said...
சரி பதிவு சரோஜா விமர்சமனமா இல்லை காப்பி வித் அணு பற்றியா?//
அதானே... அப்ப காபிவித் அனு நிகச்சியின் லிங்க் போட்டுருங்க.. :)
காபி வித் அனு நல்ல நிகழ்ச்சிதானே...
இதுல இவங்கல்லாம் வந்தா கேக்கவா வேணும்...:)
Post a Comment