Monday, December 29, 2008

சரியா... தப்பா?

அந்தச் சிறுவனுக்கு பதினோரு வயது. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். கூட்டுக் குடும்பத்தில் இருந்த அவனது மாமா, பெரியப்பா, அவரது மகன்கள் எனப் பலரும் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார்கள். இவனுக்கு அவர்களோடு அதிகாலை எழுவதும், குளிர்ந்த தண்ணீரில் குளித்து பெரியப்பா ஐயப்பன் கதைகளைச் சொல்லியபடி நடந்தே ஐயப்பன் கோவிலுக்குப் போவதும் மிகப் பிடித்துப் போக, அவர்கள் விரதமிருந்த நாற்பத்தெட்டு நாளும் இவனும் விரதமிருந்தான். விரதம் என்றால் எந்த வித்தியாசமும் இவனுக்கிருக்கவில்லை. ஆறுமணிக்கு பதில் ஐந்து மணிக்கு எழுந்ததும், அவர்களோடு சரணகோஷம் போட்டதும்தான் வித்தியாசம். வாரம் ஒரு முறை வீட்டில் நடைபெறும் பஜனையில் கஞ்சிராவை இசைத்தபடி இவன் பாடல்கள் பாட ‘அட’ என்று எல்லாரும் பார்ப்பார்கள். மற்றபடி மாதத்திற்கொரு முறை அவன் ஊரில் பிரபலமாயிருந்த நேரு கபே ஹோட்டலில் குடும்பத்தோடு சாப்பிடுவது அந்த மாதத்திற்கு மட்டும் கட்! (விரதம் என்றால் வெளியே சாப்பிடமாட்டார்கள்!)

இருமுடி கட்டும் விழா நடந்தது. பெரியவர்களுக்கு இணையாக இவன் சாமியே ஐயப்பா என்று கோஷம் போட்டதை எல்லாரும் வியப்பாய் பார்த்தனர். ராகத்தோடும், பாவத்தோடும் இவன் பஜனைப் பாடல்கள் பாடியதற்கும் பலரது பாராட்டுகள் கிடைத்தது. ஆயிற்று. எல்லாரும் காரில் ஏறப்போகும் சமயம் ‘நாம் போகப் போவதில்லை’ என்ற உண்மை இவனுக்கு உறைக்க அந்த அம்பாசிடர் காருக்கு முன் விழுந்து கதறி அழுதான். யார் சமாதானப்படுத்தியும் அது அடங்கவில்லை. அண்ணா ஒருத்தர் ‘அடுத்த வருஷம் உன்னை நிச்சயமா கூட்டிகிட்டுப் போறேன்’ என்று சொல்லியும் அழுகை நிற்கவில்லையெனினும் இவனை கட்டுப்படுத்தி காரை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்த வருஷம் மலைக்குப் போக யார் யார் என்ற லிஸ்ட் போடப்பட்டபோது முதலில் இவன் பெயர் எழுதப்பட்டது. ‘நாங்க போறப்ப ஐயப்பனை நெனைச்சதை விட இவனை நினைச்சதுதான் அதிகம்’ என்றார்கள் போய் வந்த குடும்பத்தார் எல்லாரும். அந்த வருஷம் அவன் எட்டாவது படித்துக் கொண்டிருந்தான். பக்தி சிரத்தையாய் கோவிலுக்குப் போவது, பூஜைகள் செய்வது எல்லாவற்றையும் செய்தான். (அவனுக்கு அப்போதும் பிடிக்காத ஒரு விஷயம் அவனை விட பெரியவர்கள் ‘சாமி’ என்று சொல்லி இவன் காலில் விழ வருவது. அதை மட்டும் அவனால் ஏற்கவே முடியவில்லை.) மிகுந்த உள்ளத்தூய்மையோடும், சந்தோஷத்தோடும் அவன் சபரிமலை சென்று வந்தான்.

அடுத்த வருடம். அவன் ஒம்பதாவது படித்துக் கொண்டிருந்தான். வழக்கம்போலவே குடும்ப உறுப்பினர்கள் மாலை போடும்போது இவனும் போட்டுக் கொண்டான். ஆனால் முதல் நாள் சரணகோஷத்தின் போது, இவன் மனம் ஒன்றவில்லை. இவனுக்குள் என்னமோ மாற்றம். ஒட்டாமல் இருந்தான். ‘பல கேள்விகள். நான் ஏன் இப்படி இருக்கிறேன். போன வருஷத்தின் அமைதி இந்த வருஷம் என் மனதில் இல்லையே அது ஏன்’ எதற்கும் விடை கிடைக்கவில்லை. ஏதோ ஒப்புக்கு மாலை போட்டுக் கொண்டது போல ஆயிற்றே என்று வருந்திக் கொண்டிருந்தான். ஆனால்...

அவன் பெரியப்பா – குருசாமியாக எல்லாரையும் வழிநடத்தியவர் – காலமானார். இவன் மாலையைக் கழற்ற வேண்டியதாயிற்று. ‘மனம் ஒட்டாமல் இருந்த என்னை வரவேண்டாம் என்றான் ஐயப்பன்’ என்று மனதில் எண்ணிக் கொண்டான். அதற்குப் பிறகு இன்றுவரை அவன் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்ளும் வாய்ப்பே வரவில்லை.

அந்தச் சிறுவன்தான் இன்றைக்குப் பிரபலமாய் இருக்கும்..... சரி.. கோபப்படாதீங்க... நான்தான்!

அதற்குப் பிறகு இன்றுவரை பலமுறை சில ஐயப்ப சாமிகளின் பக்திப் பரவசத்தைப் பார்க்கும்போது, இவர்கள் வீட்டில் இழவு விழுந்து மாலையைக் கழட்ட மாட்டார்களா என்று நினைத்ததுண்டு. மன்னிக்கணும். கொஞ்சம் ஜாஸ்திதான் அப்படி நினைக்கறது. ஆனா அப்படி நினைச்சேன்-ங்கற உண்மையை உங்ககிட்ட மறைக்க விரும்பல.

ஒரு பெட்டிக் கடைல சிகரெட் வாங்கறாரு ஒரு சாமி. தீப்பெட்டி கேட்கறாரு. கடைக்காரர் ‘அங்க கயிறுல நெருப்பு இருக்கு சாமி’ங்கறாரு. அந்த சாமி கடைக்காரரை ஒரு முறைப்பு முறைச்சுட்டு (சாமி குத்தமாம்!) ‘மத்தவங்க பிடிச்சதுல பிடிக்கச் சொல்றியே சாமி. மாலை போட்டிருக்கேன்ல. தனியா தீப்பெட்டி குடு’ங்கறாரு.

அந்தப் பெட்டிக் கடைக்காரர்கிட்ட பேசிகிட்டிருந்தேன். டாஸ்மாக்ல இவங்களுக்கு தனி டம்ளராம். தண்ணி அடிக்கும்போது, போட்டிருக்கற மாலைல இருக்கற ஐயப்பன் டாலரை தூக்கி கைல பிடிச்சுட்டு சரக்கு அடிப்பாங்களாம். ஐயப்பன் டாலர் நெஞ்சோட ஒட்டி இருக்கும்போது சரக்கடிக்கடிக்கக் கூடாதுன்னு குருசாமி சொல்லியிருக்காம்.

என்னாங்கடா நெனைச்சுட்டிருக்கீங்க?

நான் பெரும்பாலும் கோவிலுக்குப் போவது அங்கிருந்து கிடைக்கும் அமைதியை வேண்டித்தான். ஆனால் செயற்கையாக கோவிலில் டமடம என்று அடிக்கிற ஒரு மெஷினின் மூலம் இயற்கையான உடுக்கை சத்தத்தையோ, பெரிய மணியின் நாதத்தையோ கொடுக்க முடியவில்லை. ஐயப்ப பக்தர்களின் அன்னதான விழா என்று சிலர் நடத்தும் ஒரு வார ஆர்ப்பாட்டத்திலும், மைக்செட் போட்டு ஊரையே தூங்க விடாமல் குழந்தைகளைப் படிக்க விடாமல் இவர்கள் செய்யும் வீண் அலப்பறையை பக்தி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. என் நண்பன் சௌந்தர் ‘உங்களுக்காவது பரவால்ல. அவ்ளோ தூரம். என் வீட்டு வாசல்ல மைக்கை கட்டிருக்காங்க. நான் என் குழந்தைகள், மனைவிகிட்டகூட பேச முடியறதில்லை.’ என்று புலம்புகிறார். அவ்வளவு சத்தம். அதுவும் பாட்டு என்றால் ஏசுதாஸ், வீரமணி பாட்டில்லை. ‘முக்காலா முக்காப்பலா’- வை ஐயப்பனுக்காக ‘ஐயப்பா... ஐயா அப்பா வா வா.. நீ வா வா’ என்று மாற்றி.. ச்சே! (இது அந்த மைக் செட் கோபத்தால் எழுதிய பதிவல்ல. ஒரு மாதம் முன்பே எழுத ஆரம்பித்தது. நாளாக நாளாக கோபம் குறையாமல் அதிகரிக்கும் வண்ணமே சம்பவங்கள் நடக்கிறது!)

இன்னொரு பக்கம் குருசாமி என்ற பெயரில் நடக்கும் பிஸினஸ். ஒரு குருசாமிக்கும் இன்னொரு குருசாமிக்கும் ரேட் வித்தியாசம் ஏனென்றால் அவர் இருமுடி கட்டும்போது டிராக்டர் வண்டி வைத்து ஐயப்பன் படத்தை ஊர்வலமாக கொண்டுவந்து ஊரையே கலக்கு கலக்குவாராம். எந்த சாமி இதைக் கேட்டது?

இப்போதும் உண்மையான பக்தியுடனும் உள்ளத்தூய்மையுடனும் மாலை போட்டுக் கொண்டு, பக்திப் புராணங்களைப் படித்துக் கொண்டு மலைக்குப் போகும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் பலர் குறைந்து சிலராகாமலும், நான் குறிப்பிட்ட சிலர் அதிகரித்து பலராகாமலும் இருக்க எல்லாம் வல்ல இறைவன், கண்கண்ட தெய்வம், வில்லாளி வீரன், வீரமணிகண்டன், அரிகரசுதன், ஆனந்த சித்தன், ஐயன் ஐயப்ப ஸ்வாமிதான் அருள்புரியவேண்டும்!

36 comments:

Cable சங்கர் said...

நிஜம் தான் தலைவா.. இவனுங்க பண்ணுற அலப்பற தாங்க முடியல்ல.. போனவாரம் இப்படித்தான் எங்க ஏரியாவுல ஒரு பெரிய ரோட்டையே அடைச்சு பந்தல் போட்டு ஊரை சுத்தி போக வச்சுட்டாங்க.. இவனுங்க கோயிலுக்கு போறதுக்கு நாம கஷ்டபடணுமா..? நான் ஒன்றும் நாத்திகனில்லை.. ஆனால் இவர்கள் செய்யும் வீண் டாம்பீகங்களும், சாமி, சாமி என்று செய்யும் அல்டாப்புகளும் அப்பப்ப.. முன்பெல்லாம் விரதம் என்றால் கடும் விரதம் என்று இருந்தது போக, இப்போது எல்லா ரூல்ஸும் கொஞ்சம் கொஞ்சமாய் ரிலாக்ஸ் ஆகி நீர்த்து போய்விட்டது. இப்போது மாலை போடும் பலர் கொஞ்சநாட்களுக்கு முன்பு பக்காவான மொள்ளமாறி, முடிச்சவிக்கியாய் இருந்தவர்கள். ஊரில மனுஷனாய் கூட மதிப்பில்லாதவர்கள், இந்த நாப்பது நாட்கள் இவர்களுக்கு கிடைக்கும் அல்ப மரியாதையை பெரிதாய் எண்ணி ஊரையே அல்லோல, கல்லோல படுத்துகிறார்கள். இதில் தம், தண்ணி எல்லாம் உண்டு. கடவுளை கும்பிடுவது நம் மன அமைதிக்காகவும், விரதமிருப்பது, நம் உடலை அந்த நாட்களில் ஒரு சைக்கிளை சரிபடுத்த்தான் என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ..?

(ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டனோ..?)

பரிசல்காரன் said...

//(ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டனோ..?)//

இல்ல தல. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க!

Vadielan R said...

"நிஜம் தான் தலைவா.. இவனுங்க பண்ணுற அலப்பற தாங்க முடியல்ல.. போனவாரம் இப்படித்தான் எங்க ஏரியாவுல ஒரு பெரிய ரோட்டையே அடைச்சு பந்தல் போட்டு ஊரை சுத்தி போக வச்சுட்டாங்க.. இவனுங்க கோயிலுக்கு போறதுக்கு நாம கஷ்டபடணுமா..? நான் ஒன்றும் நாத்திகனில்லை.. ஆனால் இவர்கள் செய்யும் வீண் டாம்பீகங்களும், சாமி, சாமி என்று செய்யும் அல்டாப்புகளும் அப்பப்ப.. முன்பெல்லாம் விரதம் என்றால் கடும் விரதம் என்று இருந்தது போக, இப்போது எல்லா ரூல்ஸும் கொஞ்சம் கொஞ்சமாய் ரிலாக்ஸ் ஆகி நீர்த்து போய்விட்டது"



இருநூறு சதவீதம் உண்மை இவங்க அலப்பறை தாங்க முடியலை

பாபு said...

கேபிள் ஷங்கர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
ஒரு முறை என் நண்பர்களோடு போயிருக்கிறேன்.அதுவே கிட்டத்தட்ட ஒரு சரியில்லாத அனுபவமாகவே இருந்தது
ஆனால் நீங்கள் சொல்லியிருந்த மாதிரி நிறைய சிறுவர்கள் மிக ஆவலோடு கோஷம் செய்வதும்,மிக உற்சாகமாக மலை ஏறுவதும் பார்க்க சந்தோசமாக இருக்கும்.அதே போல மிக வயதானவர்களும் அமைதியாகவே இந்த யாத்திரைக்கு வருவார்கள்.

நாடோடி இலக்கியன் said...

உண்மை உண்மை.
முக்கியமா மைக்செட் பிரச்சினை,என் கல்லூரி நாட்களில் செமஸ்டர் நேரத்தில் இந்த மைக்செட் சத்தத்தாலேயே அரியர் விழுந்த சம்பவங்கள் உண்டு.மாகா கடுப்பா வரும்.எங்க கிராமத்திலே 10 வருஷம் முன்பு பொது இடங்களில் இருக்கும் மரங்களையெல்லாம் இவனுங்க வெட்டி வேட்டு விட்டிருக்கானுங்க, சாமியாம் அதனால யாரும் கேட்க மாட்டாங்க.

anujanya said...

பாதிக்கப் பட்டவர்களுக்குத் தான் தெரியும். அந்த உரத்த பஜனைகளையும், 'சாமி'களின் அலம்பல்களையும் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது! - என்ன அடிக்க வருகிறீர்களா? அரசியல் சரிநிலைப்பாடு நிமித்தம் நானும் என் 'கண்டனங்களை' தெரிவித்துக் கொள்கிறேன். :)

அனுஜன்யா

கார்க்கிபவா said...

மாலை போட்ட ஒருவன் கிகரெட் பிடித்தான். ஏன்டான்னு கேட்டா குருசாமியே பிடிக்கறாருன்னு சொல்றான்..

நம்ம மக்களுக்கு Ecology பத்தி தெரியும்.. திரென்று பல லட்சம் மக்கள் ஒரு இடத்துல போய் பல டண் மலத்தை கொட்டிவிட்டு வந்தால் எப்படி சமமாகும்? எப்போதும் இப்படி என்றால் அது தானாக சமம் செய்யும்.. ஒரு சில மாதம் மட்டும் என்றால் இதை விட கேவலமான pollution வேறு எதுவும் கிடையாது

அத்திரி said...

சரியான நேரத்தில் சரியான கருத்துக்களை சொல்லியிருக்கீங்க... ஆன்மீகவாதிகள்!!!!!!!!!!!! கோபித்துவிடக்கூடாதே?????????????

Cable சங்கர் said...

//சரியான நேரத்தில் சரியான கருத்துக்களை சொல்லியிருக்கீங்க... ஆன்மீகவாதிகள்!!!!!!!!!!!! கோபித்துவிடக்கூடாதே?????????????//

மத்தவங்க கோபிச்சுப்பாங்கன்னு சொல்லாம இருக்க முடியுமா.. வேணும்னா இதையும் நாம் வெளிபடுத்துற கோபமா அவங்க எடுத்துக்கட்டும்..

narsim said...

சுடச்சுட இருக்கே.. சூடான ??

KATHIR = RAY said...

IPPA MAALAI PODURATHU ORU FASHION AVLOTHA ATHULA BAKTHI ELLAM ETHIPAARKA MUDIYATHU. KETTAVANGA NALALVANGALA KATTIKKA ORU VESAM. ILAINGARGAL THANGALODA LOVER KITTA NALLA PAYANNU PER EDUKKA. IPDI NERAYA DUBAKOOR VELAKAL THAN ATHIGAM PANDRANGA IPPO. ETHO KONJAM UNMAYA SAMY MALA POTTU PORAVANGALUM IRUKKANGAN. NALLAVANGA LA KANDUPIDIKKARATHU KASTAM APDI THA UNMAYA SAMYKKUNU MALA POTTU PORAVANGALA KANDUPIDIKKARATHUM KASTAM.

ENNA PANDRATHU. ITHELLAM ANTHA IYAPANTHAN PAATHUKKANUM.

- இரவீ - said...

மிக சரியான மனக்குமுறல், நிறையபேருக்கு இவ்வாறான கருத்து மனசுக்குள் இருக்கு - நீங்க வெளிப்படையா சொல்லியிருக்கீங்க. உண்மையானவர்கள் விலகி நிற்பதால் - தவறானவர்கள் கூட்டமாக கண்ணுக்கு தெரிய வாய்ப்புள்ளது.

உயிரோடை said...

மிக‌ ச‌ரியாக‌ சொல்லி இருக்கீங்க‌ ப‌ரிச‌ல். ந‌ல்ல‌ ப‌கிர்வு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குடிக்கிறதும் சிகரெட்டும் மத்தநாட்களில் தப்பா சரியா.. சரின்னா இவங்க சாமி யா இருக்கும் போது செய்துக்கட்டுமே .. 40 நாள் விரதத்துல விட்டிருந்தா மட்டும் நல்லது நடந்துடப்போதா..

Athisha said...

சாமீயேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ


சரணம் ஐயப்பா..

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் .....

பாசகி said...

நியாயமான கோபங்க. நீங்க இன்னுமே கூட தாக்கி எழுதலாம், ஏன்னா இந்த மாதிரி ஆசாமிகளால உண்மையான பக்தர்களுக்குதான் கெட்ட பேர்.

பரிசல்காரன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

குடிக்கிறதும் சிகரெட்டும் மத்தநாட்களில் தப்பா சரியா.. சரின்னா இவங்க சாமி யா இருக்கும் போது செய்துக்கட்டுமே .. 40 நாள் விரதத்துல விட்டிருந்தா மட்டும் நல்லது நடந்துடப்போதா.//

அதுவும் சரிதான்!

வால்பையன் said...

அதிக சப்தம் தரும் குழாய் உபயோகிக்க கூடாது என சட்டமே இருக்கிறது! ஆனால் ஈரோட்டில் இதை செய்தார்கள், அப்போது அரையாண்டு பரிச்சை வேறு நடந்து கொண்டிருந்தது.

இவர்கள் பக்தியின் அளவு குழாயின் சத்ததில் தான் இருக்கும் போல

அமுதா said...

நியாயமான கருத்துக்கள். இந்த முறை பல இடங்களில் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவதை பெரிய பேனர்களில் விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இப்பொழுது எல்லாம் எது எதற்கு விளம்பரம் என்று இல்லாது எல்லாம் ஆடம்பரமாக வேறு ஆகி விட்டது.

/*இப்போதும் உண்மையான பக்தியுடனும் உள்ளத்தூய்மையுடனும் மாலை போட்டுக் கொண்டு, பக்திப் புராணங்களைப் படித்துக் கொண்டு மலைக்குப் போகும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் பலர் குறைந்து சிலராகாமலும்,.... */
அதுவே தான் என் எண்ணமும்...

அபி அப்பா said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
குடிக்கிறதும் சிகரெட்டும் மத்தநாட்களில் தப்பா சரியா.. சரின்னா இவங்க சாமி யா இருக்கும் போது செய்துக்கட்டுமே .. 40 நாள் விரதத்துல விட்டிருந்தா மட்டும் நல்லது நடந்துடப்போதா..//

சபாஷ் முத்துலெஷ்மி! நான் சொல்ல நினைச்சுகிட்டே பின்னூட்டத்தை படிச்சுகிட்டு வந்தேன். சரியா சொன்னீங்க.

இப்படி சின்ன பசங்களுக்கு சபரிமலை பித்து பிடிக்க காரணம் சத்தியமா பக்தி இல்லை. போய் வந்தவங்க சொல்லும் காட்டுவழி பாதை கதைககKஉம், கூடவே சிங்கம், புலி ஜோடனை கதைகளும்,இன்ப சுற்றுலாவுக்காக ஏங்கி தவிக்கும் சின்ன உள்ளங்களும் இந்த போலி பக்தியில் மயங்கி போய் சரண கோஷம் எழுப்பி விடுவது தான் உண்மை.

அம்மா அப்பா எல்லாம் பசங்களை காட்டுக்கு டூர், அழைச்சுட்டு போவது இது போல பைத்தியகாரதன போலி பக்திக்கு ஒரு முற்று புள்ளியாக இருக்கும்.

Anonymous said...

பரிசல்,

மாலை போடுவதன் பின்னுள்ள நிர்பந்தம் என்னங்கிறதப் பத்தி 'சாமீ'ன்னு ஒரு கதை போன விகடன் இதழ்ல வந்திருக்கு பாருங்க.

மாலை போடுருக்கும்போதாவது லஞ்சம் வாங்காம இருப்பாங்களான்னா அதுவும் இல்லை.

இதுவும் ஒரு மேனியா வாகிவிட்டது அவ்வளவே.

காரின் டிக்கியிலேயே மதுபாட்டில்களும் இருமுடிகளும் ஒன்றாகப் பயணிப்பது நல்ல நகைமுரண்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆனாப் பாருங்க,.,,,,,,


இந்த குருசாமி ஊசிபோட்டுக்க கூடாது. மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு சொல்வாங்க......

சாமி குத்தம் ஆயிருமாம்....

SK said...

மு. க. & அபி அப்பா,

இதையே நான் கொஞ்சம் மாத்தி பாக்குறேன்.

இப்படி கெட்ட பழக்கம் இருக்கறவங்க கொறைஞ்சது இந்த நாப்பது நாளாவது குடிக்காமலும், புகைக்காமலும் இருந்தா அவுங்களுக்கு என்னாலையும் இருக்க முடியும்னு ஒரு எண்ணம் வரும். இது கெட்ட பழக்கத்தை விடறதுக்கு ஒரு ஆரம்பமா இருக்கும்.

ஆனா மாலையும் போட்டு எல்லாத்தையும் செய்யுறவங்களை நான் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை.

பரிசல்

நல்ல குமுறல்.

சின்னப் பையன் said...

சரியா... தப்பா???

தெரியாதப்பான்னு யாரும் தப்பிக்க முடியாது..

எழுதினது சரி..
(அவங்க) செய்றது தப்பு...

பரிசல்காரன் said...

//
காரின் டிக்கியிலேயே மதுபாட்டில்களும் இருமுடிகளும் ஒன்றாகப் பயணிப்பது நல்ல நகைமுரண்.//

நெஜமா அண்ணாச்சி..?

படிக்கும்போதே ஷாக்காக இருக்கிறது :-(

Mahesh said...

நானும் இந்த காரணத்துக்காகத்தான் 2 முறை போய் வந்ததும் போவதை நிறுத்தி விட்டேன்.

மலை இப்போது மிக மிக மிக மிக அசுத்தமாக இருப்பதாக போய் வந்தவர்கள் சொன்னார்கள். கோவிலுக்கு இவ்வளவு வருமானம் வருகிறது. நல்ல கழிவறை வசதிகள் கிடையாது.

பக்தர்களின் அட்டகாசங்கள் தவிர்த்து கோவில் நிவாகத்திலும், மேல்சாந்தி நியமந்த்திலும் அரசியல், லஞ்சம் போன்றவை இருப்பதாக படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

திருமூலர் சொன்னதுதான் சரி.

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைத்துங் காளா மணி விளக்கே"

Thamira said...

திருமூலர் சொன்னதுதான் சரி.

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைத்துங் காளா மணி விளக்கே"

பிரமாதம்.!

கொஞ்ச கேப் விட்டு வந்தாலும் ஹாட் டாப்பிக், தல.!

selventhiran said...

செமஸ்டர் நேரத்தில் இந்த மைக்செட் சத்தத்தாலேயே அரியர் விழுந்த சம்பவங்கள் உண்டு.//

நாடோடி நீங்க மற்ற நாட்களிலும் கொஞ்சம் படிக்க முயற்சித்திருக்கலாம்.

பக்தி மனத்தூய்மையோடு தொடர்புடையது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். ஆனால், மனமது செம்மையானால் மார்க்கங்கள் தேவையில்லை. செம்மையாகாததன் விளைவுகளைத்தான் தினம் தினம் எதிர்கொள்கிறோம்.

இடுப்பில் பான்பராக்கோடு திருஆவினன்குடியிலும், திருச்செந்தூரிலும் பூஜை செய்கின்ற எத்தனையோ அந்தணர்களைக் கண்டிருக்கிறேன். இந்த ஐயப்பசுவாமிகள் எவ்வளோ பரவாயில்லை.

மு.வேலன் said...

ஆழமான கருத்தை இவ்வளவு எழிய நடையில் பதிவிட்டிருப்பது உங்களின் தனி சிறப்பு. வாழ்த்துக்கள்!

லதானந்த் said...
This comment has been removed by the author.
Jenbond said...

ஏன் அனைவரும் ஐயப்பா பக்தர்களை(!?) மட்டும் சொல்றீங்க. இவங்க எல்லாம் வருஷம் ஒரு ஸிசன் (40-60 நாள்) மட்டும் தான். "மைக்செட் சத்தம்" யாருங்க இப்ப மைக்செட் வைக்கில "கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள், அரசியல் மீட்டிங்,........ ஏன் செத்து போன கூட வைக்கிறாங்க". நீங்க எல்லாம் சொல்லுறத பாத்தா எனக்கு மிகவும் காமெடியாக உள்ளது. "கிகரெட், தண்ணி" பழக்கம் இல்லாதவங்க எத்தனை பேர் இருக்காங்க. அவங்க மாலை போடும் பொழுது இதையெல்லாம் கடைபிடிக்கணும் என்று எதிர்பார்கின்ற நாம கோவிலுக்கு செல்லும் பொது கடைபிடிகின்ரோமா??????. இதனால அவங்க செய்யறது சரின்னு சொல்லுல. "குடிக்கிறதும் சிகரெட்டும் மத்தநாட்களில் தப்பா சரியா.. சரின்னா இவங்க சாமி யா இருக்கும் போது செய்துக்கட்டுமே" என்று கயல்விழி கூரியது சரியே என்பது எனது (நண்பர்களால் நாத்திகன் என்று அழைக்கபடும்) கருத்து. பக்தி மார்க்கங்கள் அனைத்தும் பணத்தினை பெருக்கும் வழியில் செல்வதால் பக்திமான்கள்(?) "மான் தோல் போர்த்திய புலி போல" (situationக்கு ஏற்ற மாதிரி) வலம் வருகின்றனர். தான் ஒரு பக்திமான் என்பதை இந்த சமுதாயத்திற்கு உணர்த்த அவர்கள் போடும் காட்டு கூச்சல்கள், கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் கணக்கிலடங்கா. இத்தகைய போலிகள் அனைத்தும் மதங்களிலும் உள்ளனர். இதை பற்றி எழுவது என்றல் எழுதிகொண்டே போகலாம் அவங்களா திருந்தின தான் உண்டு விடுங்க பாஸ்." வியதியாகளை பற்றி மட்டும் பேசாமல் அதற்குரிய மருந்து எதாவது இருந்தா சொல்லுங்கோ". வழக்கமான "அவியல்" "புதிர்கள்" எதிர்பார்க்கிறேன்.

Jenbond

Unknown said...

காலம் கலி காலம் ஆகி போச்சுடா

நான் நரேந்திரன்... said...

பக்தி ஒருவரை திருத்தும் என்று நம்புகிறீர்களா? கடவுள் நம்பிக்கையைப் போலத்தான் இதுவும், ஏன்னா 100 -க்கு 90 பேர் கடவுளை நம்புகிற இந்த நாட்டில், அதிலையும் பாதி பேருக்கு தீவிரமான நம்பிக்கை, எத்தனை பேர் யோக்கியமானவர்கள்? கடவுள் பேரைச் சொல்லி எத்தனை பேர் எத்தனை குடும்பங்களை அழித்திருக்கிறார்கள்? அட போங்க சார்

Sundar சுந்தர் said...

உங்கள் குமுறல் புரிகிறது - என்ன செய்ய, மனசாட்சி இல்லாதோரிடம் எந்த நம்பிக்கை இருந்தாலும் அடிப்படை மனிதத்தன்மையையோ, நேர்மையையோ எதிர்பார்க்க முடியாது.

ரமேஷ் வைத்யா said...

பரிசல்,
கட்டுரையாசிரியரின் குரலில் தொனிக்கும் ஆத்திகத்தை நீக்கி விட்டால் இது நான் எழுதிய கட்டுரை.
பாராட்டுகள்.

அது வில்லாளி வீரன்.

பாச மலர் / Paasa Malar said...

சரியான நேரத்தில் வந்த பதிவு..அதிலும் நீங்கள் மாலை போட்ட அனுபவத்தையும், அது தொடர்பான உணர்வுகளையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டதற்குப் பாராட்டுகள்..

இது மட்டுமில்லை..இது போன்ற பாதயாத்திரைப் படலங்கள் எரிச்சலைக் கிளப்புகிற அளவு வண்ண வண்ண உடையில் வருடந்தோறும் நிறைய சாமிகளுக்காய் மாலை போட்டுக்கொண்டு ...

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்...நல்ல முன்னேற்றம்!!!!