‘சிறுகதை எழுதுவது எப்படி’ என்ற தலைப்பில் சுஜாதாவின் புத்தகம் ஒன்றை புத்தகப்பித்தன் வெளியிட்டிருந்தார். ‘ஆஹா’ என்று மிகவும் ஆவலாக வாங்கினால் அவர் நமக்கு எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. அந்தத் தலைப்பில் அவர் எழுதிய கதை ஒன்று உட்பட அவரது பல கதைகள் அடங்கிய தொகுப்பு அது!!!
சரி.. சிறுகதை எழுதுவது எப்படி?
நிச்சயமாக அனுபவங்களிலிருந்துதான் கதை பிறக்கும். அதிஷா தனிமையில் இருந்து அவர் வருந்தியமாதிரியே, அவரது பழைய நண்பர் யாராவது வருத்தப்பட்டிருக்கலாம் அல்லவா என்பதிலிருந்து பிறந்ததுதான் தனிமை-கொலை-தற்கொலை என்ற கதை. அனுஜன்யா சமீபத்தில் எழுதிய, என்னை மிகக் கவர்ந்த நடையில் அமைந்த மும்பை பயங்கரம் - சூஸன் ஜார்ஜ் கதையும் நிச்சயம் அவரது அனுபவம் கலந்ததாய்த்தான் இருக்கவேண்டும். சதவிகிதத்தில் நிஜம் எத்தனை, கற்பனை எத்தனை என்பதில்தான் எழுத்தாளனின் சாமர்த்தியம் இருக்கிறது.
சரி... இப்போது ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்...
********************
உடுமலைப்பேட்டை. லதாங்கி தியேட்டர்.
படம் தர்மதுரை என்றுதான் நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை. இரண்டாவது தடவை பார்க்கப் போயிருந்தோம். நானும் என் நண்பன் ஸஸியும். (ஆர்ட்ஸ் வைத்திருக்கிறான்.. சசியை ஸஸி என்றுதான் எழுதுவான்)
எப்பவுமே, படம் முடிந்து எல்லாரும் என்னென்ன கமெண்ட் அடித்தபடி எழுந்து போகிறார்கள், அவர்கள் முகம் படத்தைப் பற்றி என்ன ரியாக்ஷன் செய்கிறது என்று பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் என்பதால் எல்லாரும் போனபிறகு சாவகாசமாக எழுந்துபோவது வழக்கம். (அழகி படம் திருப்பூர் டைமண்டில் பார்த்தபோது, படம் முடிந்தும் ஒரு பெண்மணி ஏதோ மாதிரி அமர்ந்துகொண்டே இருக்க, கணவன் பக்கத்திலேயே அமர்ந்து தேற்றிக் கொண்டிருந்த காட்சி, படத்தைவிட கவிதை!)
அப்படி, கடைசியாக எழுந்து போகும்போது, ஒரு சீட்டில் இரண்டு புத்தகங்கள். ஸஸிதான் பார்த்தான். ‘டேய். இந்தா லைப்ரரி புக்ஸ் போலிருக்கு. நீதான் எல்லா லைப்ரரிக்கும் போவியே’ என்று என்னிடம் குடுத்துவிட்டான்.
ஒன்று தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார் என்பது ஞாபகமிருக்கிறது. இன்னொன்று ஞாபகமில்லை.
அன்றிரவே நண்பர்கள் கூடும்போது அந்தப் புத்தகங்களை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என்று கூட்டாலோசனை நடந்தது. நூலகத்திலேயே கொடுத்துவிடலாம் என்ற ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.
‘புக்கை தவற விட்டவர், தொலைஞ்சுடுச்சுன்னு எப்போ போய் சொல்லுவாரோ.. அதுவரைக்கும் நூலகத்துல இருக்கறவங்களும் அதை சம்பந்தப்பட்டவர்கிட்ட சொல்ல எந்த முயற்சியும் எடுத்துக்க மாட்டாங்க’ என்று நினைத்ததால் அந்த புத்தகத்தை நூலகத்தில் கொடுத்து கார்டை வாங்கிக் கொண்டு, அதிலிருக்கும் விலாசத்தில் சென்று அவரிடம் கார்டை கொடுத்தால்தான் அந்த உதவி முழுமைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அடுத்தநாள் அதேபோல, புத்தகத்தைக் கொடுத்து விலாசத்தைப் பார்த்தபோது ‘வி.ஜி.ராவ் நகர்’ என்றிருந்தது. அப்போதுதான் முளைத்திருந்தது அந்த நகர். பல பக்கம் விசாரித்து, ஈ.பி.க்கு எதிரில் என்று கண்டுகொண்டு, அந்த விலாசத்தில் போய் நின்றோம் நானும் இன்னொரு நண்பனும்.
தொலைத்த அந்த நபரின் பெயர் நினைவில் இல்லை. குமார் என்று வைத்துக் கொள்வோமே..
அங்கங்கே விசாரித்து, ‘குமார் வீடு எது.. 163ம் நம்பர் எது என்று அலைந்து அவர் வீட்டை அடைந்தோம்.
சிறிய கேட். திறந்து உள்ளே சென்று கதவைத் தட்டினோம்... அல்லது காலிங்பெல்லை அடித்தோம்.
பக்கத்திலிருந்த ஜன்னல்வழி ஒரு முகம் தெரிந்தது. சிறுவன். எட்டாவதோ, ஒன்பதாகவோ படித்துக் கொண்டிருக்கக் கூடும்.
“யார் வேணுங்க?”
“குமார் சார் வீடு இதுதானே?”
“ஆமா.. இருங்க அப்பாவைக் கூப்பிடறேன்”
உள்ளே சென்ற சிறுவன் இரண்டொரு நிமிடங்களில் திரும்ப வந்தான்.. அதே ஜன்னலில் முகம் காட்டி..
“என்னன்னு கேட்கறாரு..”
என் நண்பன் கடுப்பாகிவிட்டான்.
“கதவையே திறக்கமாட்டானுகளா? கார்டைக் குடுக்காதடா” என்று முணுமுணுத்தான். ‘ச்சும்மா இரு’ என்ற நான்...
“இல்லப்பா.. தியேட்டர்ல ரெண்டு புக்கை மறந்து வெச்சுட்டாரு உங்கப்பா. அத லைப்ரரில குடுத்து, இந்தக் கார்டை அவர்கிட்ட குடுத்துட்டுப் போகலாம்னு வந்தோம்” எனச் சொல்லவும்.. “எங்கே..” என்று அவன் ஜன்னல் வழி கைநீட்ட.. அந்த இரண்டு கார்டையும் அவன் கையில் கொடுத்தோம். வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினான்...
ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தவன்.. “அப்பா தேங்ஸ் சொல்லச் சொன்னாரு” என்று ஜன்னலைச் சாத்திவிட்டு உள்ளே ஓடிவிட்டான்!
*********************
அவ்ளோதான். இதுல என் நண்பர்கள் எல்லாரும் நீ குடுத்திருக்கக் கூடாது, அப்படி கதவையே திறக்காதவனுக்கு எதுக்கு நீ அதைக் குடுத்து உதவின?’ என்று திட்டினார்கள். எனக்கு அவர் கதவு திறக்காமல், வராமல் இருந்ததற்குப் பின்னால் என்ன இருக்கக்கூடும் என்று பலநாட்கள் சிந்தனை இருந்தது.
இதில் ஒரு சிறுகதை இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?
முயன்று பாருங்களேன்...
28 comments:
மீ த ஃப்ர்ஸ்ட்டு
நம்ம தலை மாதிரியே செஞ்சிட்டீங்க.. முயற்சி செய்றோம். ஆனா பதிவுல் போட மாட்டோம்..
//இதில் ஒரு சிறுகதை இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?//
தெரிகிறது,ஆனால் ஒன்றல்ல.
:)
\\ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தவன்.. “அப்பா தேங்ஸ் சொல்லச் சொன்னாரு” என்று ஜன்னலைச் சாத்திவிட்டு உள்ளே ஓடிவிட்டான்!\\
இந்த வரிகளை படிக்கும்போது அவருக்கு என்னவோ என்றுதான் எனக்கும் தோன்றியது.
\\தெரிகிறது,ஆனால் ஒன்றல்ல\\
repeattee
பரிசலாரே என்னை போன்ற புதியவர்களுக்கு சிறுகதை அல்லது கதை எழுத நீங்கள் சில அறிவுரைகள அல்லது tips கொடுக்கலாமே.
என்னடா, மூன்றாம் மட்ட நடிகரின் ஆறு மாதப் பழையப் படம் ஓடும் B சென்டர் தியேட்டர் போல காற்று வாங்கிக்கொண்டிருந்த என் வலைப்பூ திடீரென்று ரஜினி பட முதல் நாள் முதல் காட்சி போல கூட்டம் அம்முதே, எதோ தொழில்நுட்பக் கோளாரா அல்லது காட்சிப்பிழையா என்று யோசித்து, ஆராய்ந்தால் போக்குவரத்து நிலவரம் இது உங்கள் செயல் என்று காட்டிக்கொடுக்கிறது. செம்ம ரீச்தான் உங்களுக்கு. பிரபலம் என்பதின் முழுவீச்சையும் உணர முடிகிறது.
நன்றி பரிசல் உங்கள் வார்த்தைகளுக்கு. கார்க்கி, முரளி கண்ணன் மற்றும் நாடோடி எல்லோரிடமும் நிச்சயம் ஒரு நல்ல கதை இருக்கிறது. தனி மடலில் கேட்டு வாங்கி, பின்னொரு நாளில் பதிவாகப் போடுங்கள்.
அனுஜன்யா
//இதில் ஒரு சிறுகதை இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?
//
ஆமுங்... தெரீதுங்...
என்ன இருந்தாலும் நீங் குடுக்காமத் திலிம்பி இருக்கோனுங்.... புஸ்தகத்தைக் குடுத்துப் போட்டு வந்து நாயத்தப் பாரு!
நன்றி கார்க்கி
@ நாடோடி இலக்கியன்
ஒன்றல்ல. உண்மைதான். எழுதுங்கள்...
(அழகி படம் திருப்பூர் டைமண்டில் பார்த்தபோது, படம் முடிந்தும் ஒரு பெண்மணி ஏதோ மாதிரி அமர்ந்துகொண்டே இருக்க, கணவன் பக்கத்திலேயே அமர்ந்து தேற்றிக் கொண்டிருந்த காட்சி, படத்தைவிட கவிதை!)
//////////////////////////////////
இதே கணவன் அழுதிருந்தால் வீட்டில் ரகளையாகி இருக்கும்.
அப்படி, கடைசியாக எழுந்து போகும்போது, ஒரு சீட்டில் இரண்டு புத்தகங்கள். ஸஸிதான் பார்த்தான்.
//////////////////////////////
சினிமா தியேட்டருக்கு புத்தகத்தை தூக்கிட்டு போறவர் புத்தகத்துக்கு என்ன மரியாதை கொடுக்கப் போகிறார்.
எனக்கு அவர் கதவு திறக்காமல், வராமல் இருந்ததற்குப் பின்னால் என்ன இருக்கக்கூடும் என்று பலநாட்கள் சிந்தனை இருந்தது.
/////////////////////////////////
பல நூறு கதைகள் ரெடி.
// அதிரை ஜமால் said...
பரிசலாரே என்னை போன்ற புதியவர்களுக்கு சிறுகதை அல்லது கதை எழுத நீங்கள் சில அறிவுரைகள அல்லது tips கொடுக்கலாமே.//
இந்தப் பதிவே ரொம்ப ஓவரோன்னு தோணுது எனக்கு. நான் அறிவுரை தர்றதா... என்னங்ணா..
வேணும்னா வாராவாரம் அவியல்ல சிறுகதை பற்றி சிலதைப் பகிர்ந்துக்கறேன். அதை அறிவுரையா எடுத்துக்காம உங்க நண்பன் உங்ககிட்ட பேசறதா நெனைச்சுக்கங்க.. ஓக்கே?
@ மு.க,
எப்ப எழுதுங்க..
@ அனுஜன்யா
என் மீது வைத்திருக்கும் அன்பின் கொஞ்சம் ஓவர்டோஸகப் பாராட்டுகிறீர்களோ...
:-)
நன்றி. அவரவர்கள் அவரவர் பதிவிலேயே எழுதட்டுமே சார்...
@ பழமைபேசி
:-)))))))
நன்றி சுரேஷ்!
\\தெரிகிறது,ஆனால் ஒன்றல்ல\\
ரிப்பீட்டேய்
//இந்த வரிகளை படிக்கும்போது அவருக்கு என்னவோ என்றுதான் எனக்கும் தோன்றியது.//
ரிப்பீட்டுக்கிறேன்.
இதில் ஒரு சிறுகதை இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?
கதை என்ன கவிதையே தெரிகிறது..
ஆனால் கதவுக்கு பின்னால் மறைந்து உள்ளது ;)))
பதிவை பாராட்டாம இருக்க முடியல.. ஆனா ஒரு சிறப்பான பதிவுக்கான வரவேற்பு என்னைப்பொறுத்த வரைக்கும் அதுக்கு கிடைக்கற பின்னூட்ட கணக்க பொறுத்துங்கறத ஏத்துக்க முடியாது. படிக்கறவங்க சிந்தனைய எழுத்து எப்படி தூண்டுதுன்னு வேணும்னா வச்சுக்கலாம்.
அந்த வகையில இன்னிக்கு உங்க பதிவுல பிடிச்ச அழகான கலாய்ச்சல் பின்னூட்டம்...
/SUREஷ் said...
(அழகி படம் திருப்பூர் டைமண்டில் பார்த்தபோது, படம் முடிந்தும் ஒரு பெண்மணி ஏதோ மாதிரி அமர்ந்துகொண்டே இருக்க, கணவன் பக்கத்திலேயே அமர்ந்து தேற்றிக் கொண்டிருந்த காட்சி, படத்தைவிட கவிதை!)
//////////////////////////////////
இதே கணவன் அழுதிருந்தால் வீட்டில் ரகளையாகி இருக்கும்.
//
ஒரு பிரமாதமான பதிவராக வருவதற்கான அத்தனை அறிகுறிகளும் கொண்ட பதில் இது...
வாழ்த்துக்கள் சுரேஷ்..
(என்னடா பரிசல் பதிவுல கமெண்டு போடறவங்கள பாராட்டுறேனேன்னு யோசிக்காதீங்க.. பரிசலும் அப்படி பிரண்டானவர்தான் எனக்கு.. என்ன பரிசல் சார்!)
நன்றீ கணிணிதேசம், அத்திரி & சிம்பா
@ சென்ஷி
//என்ன பரிசல் சார்!)//
என்னது... சாரா?
ங்கொய்யால... கேப் விட்டுப் போனா, இப்படி தள்ளிவெச்சு பேசுவீராய்யா நீர்?
சிறுகதை எழுதுவது இப்படி.. யா???னு இதுக்கு ஒரு கதை எழுதியாச்சு தல..பயமா இருக்கு என்னா சொல்லுவீங்களோனு??
அருமையான (உண்மைக்) கதை பரிசல்.. நல்ல உதாரணம்..
நன்றி நர்சிம் & வெண்பூ!!!
//(அழகி படம் திருப்பூர் டைமண்டில் பார்த்தபோது, படம் முடிந்தும் ஒரு பெண்மணி ஏதோ மாதிரி அமர்ந்துகொண்டே இருக்க, கணவன் பக்கத்திலேயே அமர்ந்து தேற்றிக் கொண்டிருந்த காட்சி, படத்தைவிட கவிதை!)
//////////////////////////////////
இதே கணவன் அழுதிருந்தால் வீட்டில் ரகளையாகி இருக்கும்.
//
இப்போ பூ படம் பாத்துட்டு பெண்கள் அழுதாலும் அப்டித்தானா?
என்னைப் பொருத்தவரைக்கும் அது தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்களையும், தம்பதிகளுக்குள்ள இருக்கிற புரிதல்களையும் பொறுத்தது. அழகி பாத்து அழுற பெண்களையும் நந்திதாதாசாக்கி வம்படிக்கலாம்ல. இங்க பரிசல் சார் சொல்லவர்றது, அப்டியே ஆட்டோகிராப்பா இருந்தாலும் அதிலென்ன தப்பிருக்குன்னு புரிஞ்சிக்கிட்டு ஆறுதலாயிருந்த கணவன்னு நான் எடுத்துக்கறேன்:):):)
Y comment moderation?
பரிசல்
முதலில் நன்றி.... உள்ளத்தினுள்ளே ஒளிந்திருக்கும், உணர்வு திரளை உயிர்ப்பித்து, அதில் உயிர்த்திருக்கும் கலைஞனை உருவாக்குவது எளிதல்ல... அதற்கு ஒரு சபாஷ்....
கவிதை எழுதுவதோ, கதை எழுதுவதோ, சாதிக்க முடியாத உயரம் அல்ல.. ஆனால் சாதித்தவர்கள், பிறர் மனதில் இடம் பிடித்தவர்கள் மிக்குறைவே... .அது பாடம் அல்ல, மனப்பாடம் செய்ய, உணர்வு..... அந்த உணர்வில் தோன்றும் சுயம்பு...
உங்களுடைய எழுத்தால் இன்று.. நானும் எழுதினேன்... உங்கள் பார்வைக்காக, இதோ இந்த பின்னூட்டத்திலேயே அதை வெளியிடுகிறேன்...
முதலில் சைக்கிள் பழகும் போது கீழே விழுவதும், நீச்சல் பழகும் போது நீரில் முழுகுதலும், முதலில் திருமணம் செய்யும் போது மகிழ்வடைவதும் மனித இயல்புதானே! அதே போன்றே, முதல் முறை முயற்சிக்கிறேன்... பிழை இருந்தால் பொறுக்கவும்.....
சிறுகதை
சிறுகதை....
ராப்.. சூப்பர்ப்பா! நெசமாவே நன்றி என்னைப் புரிஞ்சுகிட்டதுக்கு!!!
@ Natty
அருமையான சிறுகதைங்க. புல்லரிச்சுபோச்சு எனக்கு!!!
இதே மாதிரி, கவிதை, ஜோக்ஸ், கட்டுரை-ன்னெல்லாம் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புங்க. நல்ல ‘சன்மானம்' தருவாங்க!
சிறுகதை அல்லது கதை எழுத நீங்கள் சில அறிவுரைகள அல்லது tips கொடுக்கலாமே.//
இந்தப் பதிவே ரொம்ப ஓவரோன்னு தோணுது எனக்கு. நான் அறிவுரை தர்றதா... என்னங்ணா..///
அறிவுரை சொல்றதுக்குன்னே தனியா ஒரு வலைப்பூவே இயங்கிக்கொண்டிருக்கிறதே.. சிறுகதை எழுதுறதப்பத்திதானே தனியா சொல்லிட்டா போச்சுது.!
நட்டி :முதலில் திருமணம் செய்யும் போது மகிழ்வடைவதும் மனித இயல்புதானே! // யோவ் என்ன சொல்ல வர்றீங்க.?
அப்புறம் அந்த வீட்டுக்குள் ஒக்காந்துகிட்டு பையனை உட்டு பதில் சொல்லச்சொன்னது நாந்தான். ஹாயா டிவி பாத்துக்கினுருந்தேன்.. அதான் டீசன்டா தேங்க்ஸ் சொன்னோமில்ல..
பரிசல் சார் என் கதையை படிச்சிட்டு ஓகே உங்க லின்ங்ல சேர்த்துக்கோங்க உங்கல வைச்சி கொஞ்சம் பெரிய ஆள் ஆக முடியுமா பார்க்கறேன்
http://minnalpakkam.blogspot.com/2008/12/blog-post.html
பரிசல்.. இப்படியும் கூட கதையை முடிக்கலாம்....
//உள்ளே சென்ற சிறுவன் இரண்டொரு நிமிடங்களில் திரும்ப வந்தான்.. அதே ஜன்னலில் முகம் காட்டி..
“என்னன்னு கேட்கறாரு..”
என் நண்பன் கடுப்பாகிவிட்டான்.
“கதவையே திறக்கமாட்டானுகளா? கார்டைக் குடுக்காதடா” என்று முணுமுணுத்தான். ‘ச்சும்மா இரு’ என்ற நான்...
“இல்லப்பா.. தியேட்டர்ல ரெண்டு புக்கை மறந்து வெச்சுட்டாரு உங்கப்பா. அத லைப்ரரில குடுத்து, இந்தக் கார்டை அவர்கிட்ட குடுத்துட்டுப் போகலாம்னு வந்தோம்” எனச் சொல்லவும்.. “எங்கே..” என்று அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.
”என்னைக்கு கிடைச்சது அங்கிள்?”
‘நாலு நாள் இருக்கும்..!’
“அப்பாவுக்கு ஒரு வாரமா கம்பெணியில வேலை அதிகம்னு லேட்டா வராறே.. இது தான் காரணமா? இப்பவே அம்மா கிட்ட சொல்லுறேன். அந்த கார்டை கொடுங்க அங்கிள்” என்று அவன் கையை நீட்ட.. நாங்களும் கொடுத்து விட்டு நடையைக் கட்டினோம்.
இரண்டு வீடுகள் தாண்டி இருக்க மாட்டோம்.. அந்த குமாரின் வீட்டில் இருந்து பாத்திரங்கள் விழும் சத்தம் கேட்டது.
--------------
இவ்வளவு தான். இப்படி பல கோணங்களில் எண்ணங்கள் எழுந்தாலும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்க என்னால் தற்போது இயலவில்லை. இதுவும் ஒரு கோணம். என்பதை நினைவூட்டவே இந்த பின்னூட்டம்.
திரும்பி வரும் வழியெல்லாம்.. அந்த குமாரி
@ மின்னல்
வர்றேன்!
@ யெஸ்.பாலபாரதி
வெகு வெகு நாட்களுக்குப் பிறகு தலையிடமிருந்து பின்னூட்டம்!
க்ளைமாக்ஸ்...
சிம்ப்ளி சூப்பர்ப் தல!
Post a Comment