Wednesday, December 10, 2008

ஒண்டிக்கட்டை உலகம் – சிபி.கே.சாலமன்

பேச்சிலர் அதிஷா தனிமையில் வாடியதைப் பதிவாகப் போட்டதன் விளைவாக தனிமை-கொலை-தற்கொலை என்றொரு சிறுகதை எழுதி, அதைப் பதிவிட்ட நாளில்தான் கிழக்கு பதிப்பகத்திலிருந்து இந்தப் புத்தகம் வந்தது. என்ன பொருத்தம்!!!

ஒண்டிக்கட்டை உலகம் (A COMPLETE GUIDE FOR BACHELORS) by சிபி.கே.சாலமன்.

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு, அதற்கென்று தனியாக இடம் ஒதுக்கப்பட்ட என் புத்தக அலமாரியில் ஏற்கனவே சாலமனின் மிஸ்டர் பாப்புலர், கவுண்ட் டவுன், 5S உட்பட சில புத்தகங்கள் உண்டு. கிழக்கு பதிப்பகத்தாரின் எல்லாப் புத்தகங்களுமே எதைச் சொன்னாலும் படிக்கறவனை உன் ஃப்ரெண்டா நெனைச்சு ஃப்ரீயா பேசற மாதிரி சொல்லு’ என்கிற ஃபார்மூலாவில்தான் இந்த ஒண்டிக்கட்டை உலகமும் இருக்கிறது.

அங்கங்கே நகைச்சுவை தெறிக்க புத்தகத்தை எடுத்தால் அப்படியே படித்துக்கொண்டே போகச் சொல்கிறது. (எங்க போக? எனக்குத்தான் குடும்பம் இருக்கே!)

சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு பெட்டியுடன் வந்திறங்கும் பேச்சிலர் பாய்ஸைக் கருத்தில் கொண்டே எழுதப்பட்டது இந்தப் புத்தகம். அவர்கள் ரூம் பிடிப்பது எப்படி, அறையில் பொருட்களை நண்பர்கள் சுட்டுவிடாமல் இருப்பது எப்படி, ஒத்துப் போகாத நண்பர்களை சமாளிப்பது (அ) அனுசரிப்பது எப்படி, செல்ஃப் குக்கிங், வீட்டு உரிமையாளரைச் சமாளிப்பது எப்படி (அவருக்கு சூப்பர் ஃபிகர் மகளாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூட கூறியிருக்கிறார்!!!), ஓய்வு நேரத்தை உபயோகமாக செலவழிப்பது எப்படி, பேச்சிலராக இருக்கும்போது என்னென்ன செய்தால் உங்கள் எதிர்காலத்துக்கு அது உதவும் என்பது உட்பட பலப்பல விஷயங்களை ‘வா மச்சி.. உன்னாண்ட ஒரு மேட்டர் சொல்லோணும்’ என்பது போல தோளில் கைபோட்டு விளக்கியிருக்கிறார் சிபி.கே.சாலமன்.

உங்களுக்கு மது, புகை பழக்கமில்லை. உங்கள் அறை நண்பர்களுக்கு இருக்கிறது எப்படி சமாளிப்பது?

‘நான் ரொம்ப நல்லவன் தெரியுமா’ என்று ஒதுங்கி இருந்தீர்களென்றால் உங்களுக்கு ஆப்புதான். ‘சரி.. எனக்கும் ஊத்துடா ஒரு பெக்கு’ என்றால் அப்புறம் உங்க லைஃப் சங்குதான். வேறென்னதாண்டா செய்யணும்கற? என்கிட்ட கேட்காதீங்க. சாலமன் சார் 56,57ம் பக்கங்களில் சொல்வதைக் கேளுங்க.

நீங்க ஒழுங்கா வாடகைக் கொடுக்கறீங்க. ஆனாலும் உங்க வீட்டுக் குழாய்ல தண்ணி வர்ல. உங்க வீட்டுக்காரரை என்ன வேணும்னாலும் கேட்க உங்களுக்கு உரிமை இருக்குன்னு அவரை டார்ச்சர் செய்தீங்கன்னா என்னாகும்? 63ம் பக்கம் படிங்க.

சரி, எப்படித்தான் சமாளிக்கறதுங்கறதுக்கும் ரொம்ப சிம்பிளான தீர்வு சொல்லியிருக்காரு.

‘இவர் நம்ம ஆளுப்பா’ இந்த பிம்பம் இருக்கிறதே, இதுதான் முக்கியம். அறையில் முரண்பட்ட மனிதர்களுடன் நாம் இருந்தாலும் நம் அணுகுமுறை, செயல்கள், பேச்சு எல்லாம் மற்றவர்களிடம் ‘இவன் நம்ம ஆளுப்பா’ என்ற பிம்பத்தையே தோற்றுவிக்க வேண்டும். நம் நடவடிக்கைகள் நம்மை எந்த விதத்திலும் அறை நண்பர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடாது. நம் கருத்துக்களுக்கும் குரலுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பு கிடைக்கும்’

இவர் சொல்லியிருக்கும் மேற்கண்ட பாரா (Paragraph – Not Writer PARA!) பேச்சிலர்களுக்கு மட்டுமல்ல, அலுவலகத்திலும், உறவினர்களிடத்திலும் ஏன் வலையுலகுக்கும்கூட பொருந்துகிறது.


பின்னிணைப்பாக முக்கியமான சில சமையல் குறிப்புக்களைக் கொடுத்திருக்கிறார். புத்தகம் முழுவதும் நகைச்சுவை நடை என்றேனல்லவா... அதற்குச் சில சாம்பிள்களை இந்த சமையல் குறிப்புகளிலிருந்து தருகிறேன்.

தோசையை வட்டமாகத்தான் வார்க்க வேண்டும் என்று சட்டமெல்லாம் இல்லை என்கிறார்.

உப்புமா செய்முறையில் ஐந்து நிமிடம் கழித்து என்பதற்குப் பதில் ‘உங்கள் கேர்ள் ஃப்ரெண்டுக்கு ரெண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு வந்துவிடுங்கள்’ என்கிறார்.

கேசரி செய்முறையில் சர்க்கரைக்கு இவர் சொல்லும் அளவு ‘அது உங்கள் நண்பனது நட்பின் இனிமையைப் பொறுத்த விஷயம்’

ரசம் செய்முறை சொல்லும்போது உப்பு சேர்க்கச் சொல்ல மறந்து விடுகிறார். கடைசியில் ‘உப்பு சேர்க்க மறந்துவிட்டது. இப்படித்தான் அடிக்கடி நிகழும் மறக்காமல் சேர்க்கவும்’ என்று சொல்வதன் மூலம் உப்பை மறக்காமல் சேர்க்கச் செய்து விடுகிறார்.


சென்னைக்கோ, வேறெந்த ஊருக்கோ போய் பேச்சிலராகத் தங்கப் போகிறவர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகத்தைக் கொடுத்து, அவர்களை கண்ணைத் திறந்து கொண்டு இதைப் படிக்கச் செய்தால் போதும். நிச்சயம் அவர்கள் 90% பிரச்சினைகளுக்கு இதில் தீர்வு உண்டு.


ஒண்டிக்கட்டை உலகம்
சிபி.கே.சாலமன்
Pages: 144
விலை: ரூ.70
ISBN: 978-81-8368-549-8
Category: Self Improvement

ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்குங்கள்.

18 comments:

கார்க்கிபவா said...

இந்த புக் முன்னாடியே வரக் கூடாதா????????? நல்ல அறிமுகம் சகா

நாடோடி இலக்கியன் said...

//இந்த புக் முன்னாடியே வரக் கூடாதா????????? நல்ல அறிமுகம் சகா//
repeateeeeee...!

Mahesh said...

அட... மேட்டர் நல்லாயிருக்கே...

நான் டெல்லில பேச்சிலரா இருந்தபோது நம்ம ரூம்ல ஒருத்தர் செயின் ஸ்மோக்கர், இன்னொருத்தர் ஸ்மோக்கர் + ட்ரங்கர்ட். பாத்ரூம் பக்கெட்ல எல்லாத்தையும் ஊட்டி ஒரு கலக்கு கலக்கி மக்குல மொண்டு குடிக்கிற அளவுக்கு !! ஆனாலும் நமக்கு என்னமோ ரெண்டு பழக்கமுமெ ஒட்டிக்கல...

Cable சங்கர் said...

நல்ல புத்தகத்துக்கு நல்ல அறிமுகம் பரிசல்..

அப்புறம் நண்பா.. நீங்கள் போட்ட செக்ஸ் தான் காரணமா பதிவுக்கு ஏற்றார்போல் ஓரு சிறுகதை எழுதியிருக்கிறேன்
http://cablesankar.blogspot.com/2008/12/1.html

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

rapp said...

:):):)

pudugaithendral said...

நல்ல அறிமுகம்.

அந்தப் புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.

narsim said...

நல்ல அறிமுகம்.. நேர்த்தியான வார்த்தைகளில் விமர்சனம்..(800 வார்த்தைகள் இருக்கா??)

அறிமுகத்திற்கு நன்றி பரிசல்

பரிசல்காரன் said...

நன்றி டு All!

Sanjai Gandhi said...

//அவருக்கு சூப்பர் ஃபிகர் மகளாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூட கூறியிருக்கிறார்!!!//

அவருக்கு சொந்த வீடும் சூப்பர் ஃபிகரா ஒரு பொண்ணும் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க.. சென்னையில் இருக்கும் என் பேச்சிலர் நண்பர்களுக்கு இவர் டிப்ஸ் உதவலாம்.

Kumky said...

ஹூம் ... வாழ்க பேச்சிலர்ஸ்...சின்பைய்ங்க.

Kumky said...

கார்க்கி said...
இந்த புக் முன்னாடியே வரக் கூடாதா????????? நல்ல அறிமுகம் சகா
இது என்ன கலாட்டா..?

கணினி தேசம் said...

//அவர்கள் ரூம் பிடிப்பது எப்படி, அறையில் பொருட்களை நண்பர்கள் சுட்டுவிடாமல் இருப்பது எப்படி, ஒத்துப் போகாத நண்பர்களை சமாளிப்பது (அ) அனுசரிப்பது எப்படி, செல்ஃப் குக்கிங்.....//

ஏகப்பட்ட டிப்ஸ் கிடைக்கும்போல..! நமக்கு இனி பயன்படாது.. நண்பர்களுக்கு வேண்டுமானால் சொல்லலாம்.

நல்ல அறிமுகம், நன்றி.

anujanya said...

என்னைப் போன்ற இளைஞர்களுக்கான புத்தகத்தைப் படித்து அறிமுகமும் கொடுத்த பெரியவர் பரிசலுக்கு நன்றி. :))

அனுஜன்யா

- இரவீ - said...

மிக அருமையான முன்னோட்டம், மிக்க நன்றி.

சுரேகா.. said...

நல்லா எழுதி இருக்கீங்க!
நண்பர்களுக்கு உங்கள் பதிவையும்,
சி பி. கே சாலமன் நூலையும் பரிந்துரைக்கப்போகிறேன்.

வாழ்த்துக்கள்!

Thamira said...

தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், உதவி டைப் புத்தகங்கள் என்னைக்கவர்வதில்லை. ஆனால் உங்கள் அறிமுகம் சுவாரசியமாக இருந்தது, படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது என்பது உண்மை.

ராஜ நடராஜன் said...

//உங்களுக்கு மது, புகை பழக்கமில்லை. உங்கள் அறை நண்பர்களுக்கு இருக்கிறது எப்படி சமாளிப்பது?

‘நான் ரொம்ப நல்லவன் தெரியுமா’ என்று ஒதுங்கி இருந்தீர்களென்றால் உங்களுக்கு ஆப்புதான். ‘சரி.. எனக்கும் ஊத்துடா ஒரு பெக்கு’ என்றால் அப்புறம் உங்க லைஃப் சங்குதான். வேறென்னதாண்டா செய்யணும்கற?//

சிகரெட்,பெக்கெல்லாம் சின்னப் பசங்க விசயம்.கல்லூரிக் காலங்களில் கொடிகட்டிப் பறந்த விசயம் சரசு.சரசுகிட்ட சரசம் செய்யுற ரூம் மேட்டுக ரூம் முழுவதும் புகையப் பறக்க விட்டு அதிலும் ஒருத்தன்கிட்ட அந்த சூழ்நிலைக்கான நல்ல கலெக்சனா இருந்த ஆங்கிலப் பாடல்களுடன் ரூம் அப்படியே மிதக்கும்.நாம தெரியாத வார்த்தைகளின் ஆங்கிலப் பாடல்களுக்கு தலையாட்டிகிட்டி சரசுப் பக்கமே போனதில்லை.நண்பர்களும் எனக்கு எந்த ஆப்பும் வைக்கவில்லை.